in

சங்கமம் ❤ (சிறுகதை) – ✍ டாக்டர். பாலசுப்ரமணியன், சென்னை

சங்கமம் ❤ (சிறுகதை)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“அம்மா சாலமி, கொஞ்சம் தண்ணி குடுமா. தல சுத்தறாப்டி இருக்கு” என தன் ஏழை விதவைத்தாய் சாந்தம்மா கேட்க,  தாசில்தார் அலுவலகத்தில் மனுக்களுடன் காத்திருந்த கூட்டத்தில் புகுந்து, குடி தண்ணீருக்கு தேடி அலைந்து, ஒருவழியாக தாயின் தாகம் தணிக்கிறாள் சாலமி. 

அது கோடைகாலம் என்பதால், அனைவரும்  வியர்த்து கொட்டியபடி, தத்தம் குறைகளை மனுவில் நிரப்பி வட்டாட்சியர் வருகைக்காக தவம் கிடந்தனர். 

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு காலமான தன் கணவனின் சொந்த தம்பியே, அரசு வழங்கிய “நத்தம் புறம்போக்கு” நிலப்பட்டாவை, தில்லுமுல்லு செய்து, தன் பேருக்கு லஞ்சம் கொடுத்து மாற்றிக்கொண்டு, ஆதரவற்ற அந்த தாயும் மகளையும் நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டான்.

தன் ஒரே சொத்தான அந்த வீடும் பறிபோனதால் மனசுடைந்து போய், தாங்கள் இதுகாலம் வரை செலுத்திய, பீம்வரி, வீட்டுவரி, தண்ணீர் வரி, மின்சார கட்டணம், ஆகியவற்றின் ரசீதுகளையும், மேலும் பல  ஆவணங்களையும் திரட்டி கொண்டு, தமக்கு நீதி கேட்டு, தாசில்தாரை சந்திக்க காத்திருக்கிறார்கள்.

ஒருசில தினங்களுக்கு முன்னர், பணியில் சேர்ந்த அந்த புதிய தாசில்தார் சூர்யா, இளமை எழிலுடன் மிடுக்காக நடந்து வருவதைக் கண்ட அனைவரும் எழுந்து நின்று வணங்கினர்.

ஆனால் சாலமியோ அவரை பார்த்த அடுத்த நொடி மிகவும் பதற்றமுற்று, ‘சூர்யா! நீங்களா?’ என சத்தம் போட்டு அழைக்க முயல, சொற்கள் ஏனோ வெளிவர முரண்டு பிடித்தது. 

அவள் மெல்ல தன் தாயிடம் சென்று, “வாம்மா வீட்டுக்கு போயிடலாம், இந்த தாசில்தார் நமக்கு உதவி செய்ய மாட்டார்” என கண்ணில் நீர்பெருக கூற

பக்கத்தில் இருந்த பெரியவர் நேச பாவத்துடன், “தாயி, அப்டி சொல்லாதம்மா. புதுசா வந்த இந்த தாசில்தார் தம்பி தங்கம்மா, சொக்க தங்கம். எல்லாரிடமும் அன்பா பேசி நம்ம குறை எல்லாம் பொறுமையா கேட்டு உதவி செய்றார்மா. 10 வருஷமா நாயா பேயா, அலஞ்சி திறிஞ்சி லஞ்சம் கொடுத்து கஷ்டப்பட்ட இந்த அனாதை, ஒரே ஒரு முறை அவரை சந்திச்சு என் குறைய சொன்னதும், உடனே தீத்துவச்சி எனக்கு ஆதரவற்ற முதியோர் பென்ஷன் தொகையை வாங்கி கொடுத்த தெய்வம்மா அவரு.  அவரப்பாத்து மனசார நன்றி சொல்லத்தாம்மா வந்திருக்கேன். அவரை போய் பாரும்மா உங்க கஷ்டம் எல்லாம் நிச்சயமா தீரும்” என்று தெய்வ வாக்கு போல் கூற, சுற்றி இருந்த அனைவரும் அதை ஆமோதித்தனர்.

ஆனாலும் சாலமிக்கு துளியும் நம்பிக்கை பிறக்காமல், தன் பழைய கல்லூரிக்கால நினைவுகள் அவள் மனதில் நிழலாட நின்றாள்.

சிலபல ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சியில் உள்ள பிரபல கலை கல்லூரியில் சூர்யாவும், சாலமியும் ஒரே வகுப்பில் பி.காம் படித்து கொண்டிருந்தனர். சூர்யா நடுத்தர வர்கத்தை சேர்ந்த அமைதியான அறிவார்ந்த மாணவன். 

சாலமி ‘கல்லூரி குயின்’ என்று மாணவர் வட்டத்தில் பிரபலமான, அமைதியான அடக்கமான சுபாவம் கொண்ட பேரழகி! (படிப்பு சுமார்தான்)! 

தான் எப்படியாவது கஷ்டப்பட்டு நன்றாக படித்து முன்னேறி, தன் நோய்வாய்ப்பட்ட தந்தையையும் ஏழ்மை நிறைந்த குடும்பத்தையும் நல்லநிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன், தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இருந்தவள் சாலமி. 

கல்லூரி இறுதி ஆண்டு பிரிவு உபசார விழாவில், சூர்யா மெல்ல தயங்கி தயங்கி  சாலமியை நெருங்கி பயத்துடன், “ஐ லவ் யூ சாலி, நீ என்னுடன் வாழ்க்கையின் இறுதிவரை பயணித்தால்… நான் மகிழ்ந்து மரணிப்பேன்” என்று ஏதோ ஒரு குருங்கவிதையை உளறி வைக்க

அவள் கோபம் தலைக்கேற, “மிஸ்டர்! உன்ன ஒரு கெட்டிகார மாணவன் என்றல்லவா இதுநாள் வரை நம்பி இருந்தேன். இப்ப உங்க நன்மதிப்பை நீங்களே கெடுத்துக்கிட்டீங்களே. எனக்கு இந்த காதல் கத்தரிக்காய் இதிலெல்லாம் துளியும் நம்பிக்கையும் இல்லை, விருப்பமும் இல்லை. குட் பை” என்று முகத்தில் அறைந்தார்போல் பொறிந்து தள்ளி விருட்டென்று அகன்றுவிட, சூர்யா ஏதோ இழக்க கூடாத ஒன்றை இழந்து விட்டது போல் வெறுமையாய் உணர்ந்தான்.

அன்று இரவு மெயின் கார்டு கேட், அருகில் உள்ள சிங்கார தோப்பில் சாலமி செல்வதை எதேச்சையாக அவன் காண, பாவம் அவன் கஷ்டகாலமோ என்னமோ தெரியவில்லை? அவளிடம் மீண்டும் ஒருமுறை தன் காதலை வெளிப்படுத்த ஆசைகொண்டு, அவளை பின் தொடர்ந்தான்.

மிக ஜனநெருக்கடியான அந்த தெருவில் அவளை நெருங்கி, அவள் தோளை தொட, அவள் சட்டென திரும்பி பார்க்க, “சாலமி ஐ லவ் யூ சோ மச். நீ இல்லாம என்னால வாழவே முடியாது, பிளீஸ் புரிஞ்சிக்க” என ஏதோ பதட்டத்தில் கூற, அவனை எரித்துவிடுவது போல் பார்த்து விட்டு விடுவிடுவென அவள் வேகமாக நடந்தாள்.

“சாலமி ப்ளீஸ் நில்லுங்க, போகாதீங்க” என அவளை பின் தொடர்ந்த வேகத்தில், அவள் செருப்பை அவசரத்தில் தெரியாமல் மிதித்துவிட அவள் நிலைகுலைந்து கீழே விழுந்து, தலையில் லேசான காயம் ஏற்பட, அவள் கைப்பை தரையில் விழுந்து உள்ளிருந்த பொருட்கள் சில்லறை காசுகள் அனைத்தும் வீதியில் சிதறியது.

இதை சற்றும் எதிர்பாராத அவன், “சாரி சாலமி, வெரிவெரி சாரி சாலமி, தெரியாம மிதிச்சிட்டேன்” என அச்சத்தில் உறைந்து போய் நிற்கிறான்.

இதற்குள் அங்கு கூட்டம் கூட, அவள் சுதாரித்து எழுந்து நின்று கோபத்துடன் அவனை நெருங்கி, “சீ நாயே, நீ எல்லாம் ஒரு மனுஷனாடா. உன்னல்லாம்…” என  வலிதந்த கோபத்தால் ஏதேதோ சொற்களால் திட்டி தீர்க்க, ஸ்தம்பித்து நின்றான் சூர்யா.

கூட்டத்தில் இருந்த ஒருவன் “இவன எல்லாம் சும்மா விடக்கூடாது. இந்த பொம்பள பொறுக்கிய நய்ய புடைக்கணும், அப்பதான் புத்தி வரும்” என முஷ்டியை உயர்த்தியபடி அர்ச்சனையை ஆரம்பித்து வைக்க

ஒரு வயதான பெண்மணியோ, “ஏங்க எல்லோரும் சும்மா வேடிக்கை பாத்துகிட்டு  நிக்கறிங்க. அவன் தோலை உரிச்சி, போலீஸ்ல ஒப்படைங்க” என தண்டனைக்கான வழிமுறைகளை வகுக்க, கூட்டம் சந்தோஷமாக  தர்ம அடி கொடுக்க தயாரானது.

சூர்யா பயத்தில் வெடவெடத்து வேர்த்துக்கொட்டி, கண்ணில்  நீர்வழிந்தபடி நிற்க… சாலமியோ, கீழே சிந்திய பொருட்களை ஒரு பரோபகாரி எடுத்து தர, விருட்டென நடக்க முற்பட்டாள்.

ஆனால் சூர்யாவின் வெளிறிய முகமும், அவன் கண்ணீரும்  அவள் மனதை  ஏனோ ஒரே நொடியில் மாற்றியது.

முதல் தர்மஅடியை துவங்க கையை ஓங்கிய கர்ண வள்ளல், அதை அவன்மேல் பிரயோகிக்கும் முன், சூர்யாவின் அருகில் சென்று, “இவர் என் கணவர்… எங்களுக்குள் வாய்த்தகராறு வந்துவிட்டது. இது எங்கள் குடும்ப பிரச்சனை, தயவு செய்து நீங்கள் யாரும் இதில் தலையிட வேண்டாம். ப்ளீஸ்… நீங்க எல்லோரும் கலஞ்சி போய்டுங்க” என கை எடுத்து கும்பிட

அதுவரை யாரையுமே அடித்திராத ஒரு அப்பாவி அம்மாஞ்சியோ,  “சே நல்ல சான்ஸ் மிஸ் ஆயிட்ச்சே… வட போச்சே” என ஏமாற்றத்துடன் முணுமுணுத்தபடி விலகி சென்றான்.

அந்த பெரியம்மா, “ஏம்மா புண்ணியவதி, உங்க குடும்ப சண்டையை இனிமே ஊட்டோட வச்சிக்கங்க. நடுரோடுக்கு கொண்டு வந்து எங்க உசிர வாங்காதீங்க” என்று ஒரு உபதேச பிரசங்கம் செய்ய கூட்டம் கலைகிறது.

சூர்யா வெட்கி தலைகுனிந்து கூனி குறுகி நிற்க, அவள் “ஏய் மிஸ்டர்… உன்ன இவங்ககிட்ட இருந்து காப்பாத்தவே இந்த பொய்ய சொன்னேன். அவ்வளவே… வேற எந்த மனக்கோட்டையையும் கட்டிடாதே. எனக்கு இந்த காதல் கீதல் இதல எல்லாம் கொஞ்சம் கூட விருப்பம் கிடையாது. தயவு செஞ்சு நாம வாழ்க்கைல முன்னேகறுகிற வழிய பாக்கலாம். என் குடும்பத்த காப்பாத்ர பெரிய பொறுப்பு இப்போ எனக்கு இருக்கு” என வெடுக்கென்று கூறியபடி, எதுவுமே நடக்காதது போல் வேகமாக நடந்து மறைந்தாள்.

சூர்யா சோகமயமாகி மெல்ல தள்ளாடி நடக்க, அவனுள் ஆயிரம் கம்பளி பூச்சிகள் ஊர்வது போல் ஒரு குற்ற உணர்வே மிஞ்சுகிறது.

“அம்மா சாலமி! என்னாச்சு இப்டி மௌனமாயிட்ட. இதோ நம்பள உள்ள கூப்புட்ராங்க வா போலாம்”என அவள் தாய் உசுப்ப, அவள் நினைவுகள் கலைந்தன.

உள்ளே சென்ற அவள், சூர்யாவின் முகம் பார்க்க திராணியின்றி, மெல்ல தலைகுனிந்தபடி மனுவையும், ஆவணங்களையும் அவனிடம் சமர்ப்பித்தாள்.

“ஐயா வணக்கமுங்க, பங்காளி எங்க வீட்ட புடுங்கிகிட்டு எங்கள நடுத்தெருவுல நிக்க வச்சுட்டான். டியூசன் எடுத்து எங்கள கப்பாத்தற இந்த கல்யாண வயசு பொண்ண வச்சிக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம தவிக்கிறோமுங்க, நீங்கதான் ஐயா நல்ல வழி காட்டோணும்” என தன் மகளை பற்றி கூறி சாந்தம்மா கண்ணீர் விட

அவன் எல்லாவற்றையும் நன்கு ஆராய்ந்து பார்த்து, “உங்க ஆவணங்கள் எல்லாம் பக்காவா இருக்குங்க அம்மா. ஏதோ தப்பு நடந்து போச்சு. மன்னிச்சிக்கங்க… ஒண்ணும் பயப்படாதீங்க, நான் மேல் நடவடிக்கைகள் எடுத்து உங்க  வீட்டை கூடிய விரைவில் உங்களிடமே ஒப்படைக்கிறேன்” என ஆறுதல் மொழி கூற

சாந்தம்மா அழுதபடி “ஐயா ரொம்ப நன்றிங்க, உங்க புள்ள குட்டிங்க எல்லாம் நல்லா இருக்கணும்” என்று கை எடுத்து கும்பிட்டாள்.

ஆனால் அவனோ சோகத்துடன் “எனக்கு ஏதும்மா கல்யாணம் குழந்தை குட்டிகள்? நான் விரும்பிய பெண் ஒருத்தி, என்ன பிடிக்கலன்னு மூஞ்சில அறஞ்சமாரி சொல்லிட்டு போய்ட்டா. அன்னியோட என் கல்யாண ஆசை காலாவதி ஆயிடுச்சிம்மா” என விரக்தியுடன் கூறி அவன் கண்கள் பனித்ததை கண்டு தலைகுனிந்தாள் சாலமி.

அவள் அம்மாவோ, “இவ்ளோ நல்ல புள்ளைய வேணாம்னு சொன்ன அந்த அதிசய பிறவி யாருங்க ஐயா? சரி விடுங்க, அவளுக்கு குடுத்து வச்சது அவ்ளோதான், கவலைப்படாதீங்க ஐயா. கடவுள் உங்களுக்கு நிச்சயம் நல்வழி காட்டுவார்” என ஆறுதல் கூறிவிட்டு, மகளுடன் வெளியே வந்தாள்.

திடீர் என சாலமி என்ன நினைத்தாளோ தெரியவில்லை… “இரும்மா இதோ வர்றேன்” என்று கூறியடி மீண்டும் அவன் அறையில் நுழைந்த வள் அவன் கண்ணீர் உகுத்தபடி இருப்பதை கண்டு, மனம் கலங்கிப் போனாள்.

“என்ன மன்னிச்சிடு சூர்யா, உன் ஆத்மார்த்த அன்பை நான் உதாசீனப்படுத்திட்டேன்” என்று கூறி, அது ஆபீஸ் என்றும் பாராமல் அவனை ஆரத்தழுவி விம்மல் மேலிட விழிநீர் பெருக்க… சம்சார சாகரமாய் சங்கமம் ஆகியது!

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாழ்க்கை எனும் கவிதை ❤ (நாவல் – அத்தியாயம் 3) – ✍ ”எழுத்துச் செம்மல்” இரஜகை நிலவன், மும்பை

    திசையறியா பயணம் (நாவல் – அத்தியாயம் 2 ) – ✍ ராஜதிலகம் பாலாஜி, ஹங்கேரி