in

வாழ்க்கை எனும் கவிதை ❤ (நாவல் – அத்தியாயம் 3) – ✍ ”எழுத்துச் செம்மல்” இரஜகை நிலவன், மும்பை

வாழ்க்கை ❤ (அத்தியாயம் 3)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2

தேவகியின் இழப்பு திடீரென்று வீட்டின் பூகம்பமாகவே தெரிந்தது. இடையிலே கொஞ்ச நாள் அவள் இல்லாதது மறந்து போன மாதிரி இருந்தது. இந்தச் சின்னப் பெண் அடம்பிடித்தது எனக்கு அவளைத் திரும்பத் திரும்ப நினைவூட்டுகிறது.

‘தேவகி… உன்னோடு வாழ்ந்த மூன்று வருட வாழ்க்கை… அந்த இனிமையான கணங்கள். இனியும் எனக்கு புவனா மூலம் கிடைக்குமா?”

புவனாவும் நல்ல பெண்தான். மனம் கோணாமல் இன்னொருத்தி பெற்ற பெண் என்றும் பாராமல் திவ்யாவை தூக்கிக் கொண்டாட ஆசைப்படுகிறாள். வர வர அவளுடைய குணம் மாறுமோ என்று தெரியவில்லை.

மறுமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகவில்லை. இத்தனை நாளாக அம்மா அப்பாவுடன் ஊரில் இருந்த பெண்ணை பெயர்த்தெடுத்து என்னோடு என் வாழ்க்கையின் இன்னொரு இடத்திற்கு கொண்டு போகிறேன்.

மொழி, மனிதர்கள், பழக்கவழக்கம், உணவுபழக்கம் எல்லாமே மாறுபட்ட இடத்திற்கு அவளை பழக்கிக் கொண்டாக வேண்டிய சூழ்நிலைக்கு இழுத்துப் போகிறேன்.

திவ்யாதான் ஒத்துப் போக மறுக்கிறது. தேவகியின் இழப்பை எத்தனை முறை பொய் சொல்லி ஏமாற்றுவது, இந்தச் சின்னக் குழந்தையிடம்.

தேவகி நம்மை விட்டு மறைந்து போனதை சொன்னால் இந்தச் சின்னப் பூவிற்கு புரியுமா? புரிந்தால் வாடி வதங்கிப் போய் விடாதா? எப்படி புரிய வைப்பது?

புவனாவும் உனக்கு அம்மாதான் என்றால், “அம்மா ஆண்டவன்கிட்டே பொம்மை வாங்கி வர போயிருக்கிறாள். இது அம்மா இல்லை, இது அத்தா” என்கிறது.

இவளுக்குப் புரிய வைக்கப் போவது யார்? காலமா? கூட இருக்கும் மனிதர்களா? கடக்கப் போகிற வாழ்க்கைத் தடமா? கேள்விகள் சிவாவின் மூளைக்குள் துளைத்துக் கொண்டிருந்தன.

“அப்பா நான் அத்தா கிட்டே போகிறேன்” என்று இறங்கி ஓடியது குழந்தை.

புவனாவும் அம்மாவும் பேசிக் கொண்டிருந்ததை அது தொந்தரவு செய்ததும், புவனா எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு அவளை மடியில் தூக்கி வைத்துக் கொண்டாள்.

“அத்தா… அம்மா எனக்கு எப்போது பொம்மை வாங்கிக் கொண்டு வருவாள்” என்று புவனாவின் முகத்தைப் பிடித்துக் கொண்டுக் கேட்டது.

புவனா வெளியில் நின்ற தன் அம்மாவைப் பார்த்தாள். அவள் கண்களில் பொங்கிய நீரைத் துடைத்து விட்ட குழந்தையிடம், “திவ்யா அம்மா சீக்கிரம் பொம்மை கொண்டு வருவா. அதுவரைக்கும் நீ புவனா அம்மாவிடம் சமத்தா நடந்துக்கணும். என்ன?” என்றாள்.

‘’சரி பாட்டி, அத்தா எனக்குப் பசிக்குதே”

“சோறு தரட்டுமா? என் குட்டிக்கண்ணுக்கு இட்லி தரட்டுமா?” என்றாள் புவனா.

“அய்யே எங்கம்மா உடனே பிரட்டுதான் கொடுக்கும். உனக்குத் தெரியலே… நான் அப்பாக்கிட்டே போய் பிரெட்டும் ஜாமும் வாங்கிக்கிறன்” இறங்கிக் கொண்டாள் திவ்யா.

“புவனா குழந்தையென்றால் அப்படித்தானிருக்கும்” என்றாள் அம்மா.

“என் அறிவுக்கு எட்டுகிறது அம்மா. ஆனால் மனசுதான் ஒத்துக் கொள்ள மறுக்கிறது.

சிவா எத்தனை முறை சொல்லியும் சிவாவின் அம்மா கோகுலம்மாள் மறுத்து விட்டாள்.

“சிவா, நீ  உனக்காக இல்லை என்றாலும் உன் குழந்தைக்கு ஒரு தாய் வேண்டும் என்றாலும் கண்டிப்பாக திரும்பவும் நீ கல்யாணம் கட்டிக்கொள்ள வேண்டும்”

“அம்மா, இந்தக் குழந்தையை தேவகி மாதிரி யாராலும் பாத்துக்க முடியாதே”

“என்ன இருந்தாலும் தேவகி உன் பொண்ணோட அம்மாடா. நீ காய்கறிக் கடை வியாபாரத்தை கவனிப்பியா? இல்லை இந்தப் பொண்ணைத் தூக்கிக் கொண்டு திரிவியா. தேவகி இடத்தை இன்னொரு பொண்ணு நிரப்ப முடியாதுண்ணாலும், இவளை வளர்க்க, உனக்கு ஆக்கி எடுத்துப் போடவாவது நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொண்டேதான் தீரணும்”

“சரி கொஞ்ச நாள் போகட்டும்மா பார்க்கலாம்”

உடனே அருகிலிருந்த அப்பா கோவிந்தன், “சிவா, நீ கொஞ்ச நாள் போகட்டும்ணு சொல்லி விட்டு லீவு முடிஞ்சதும் திரும்ப மும்பைக்கு போயிடுவே. எங்களாலே நீ தனியா கிடந்து அல்லாடறதை நெனச்சிக்கிட்டு சாப்பிடக் கூட முடியாதப்பா” என்றார்.

“சரி அம்மா என்னோட வந்து என் குழந்தையை கவனிச்சிக்கட்டும்”

“என்னடா புரியாம பேசற… உங்கப்பாவை கவனிச்சுகிறது யாரு? காலேஜுக்குப் போற உன் ரெண்டு தம்பிகளுக்கும் சாப்பாடு போடுறது யாரு. எல்லாம் போக இங்கேயாவது பொங்குற நேரம் தவிர பக்கத்திலே எங்கேயாவது போக முடியும். காடு கழனியை சுற்றிப் பார்த்து விட்டு வரலாம். அங்கே உன் கூட வந்தால் வீட்டுக்குள்ளேயே தான் சுற்றிச் சுற்றித்தான் வரணும்.

எனக்கு பேசுவதற்கு பாஷை தெரியாது. பக்கத்து வீட்டுக்காரி வேற மொழி பேசும்போது நான் பார்த்துண்டு சும்மாதான் நிக்கணும். இந்தப் பிரச்சினை எல்லாம் வேண்டாம்ணு திவ்யாவை வளர்க்கறதுக்காகவாவது ஒரு பொண்னைக் கல்யாணம் பண்ணிக்கோனு சொல்கிறேன்”

“சிவா வெறும் மூணு வருஷ வாழ்க்கையோட எல்லாம் முடிந்து விட்டது என்று இப்ப உனக்கு தோணும். தேவகி நல்லவதான். அவ உன்னோட நல்ல முறையில் குடித்தனம் பண்ணியிருப்பாள். ஆனால் அவள் இப்போது இல்லையே. என்னோடு கூட மாமி மாமினு எத்தனை முறை இழைஞ்சுகிட்டு ஓடியாடி வேலை செய்திருக்காள். ஆனால் அதற்காக அவளையே நெனைச்சுகிட்டிருந்தா, மற்றபடி நடக்க வேண்டிய வேலைகள் நடந்து தானே ஆக வேண்டும்”

“யாரு? புவனாவா… வா… வா… உட்கார்”

“வீட்டிலே யாரும் இருக்காங்களா?”

“எல்லோரும் வெளியே போயிருக்காங்க”

“உங்க குழந்தை திவ்யா?”

“அம்மா கூட கோயிலுக்குப் போயிருக்கா”

“உங்களுக்கு விஷயம் தெரியுமா?”

“என்ன விஷயம்?”

“தெரிந்து வைத்துக்கொண்டு தான் தெரியாத மாதிரி என்ன விஷயம் என்று கேட்கிறீர்களா?”

“……..”

“ஏன் மௌனமாகிட்டீங்க?”

“கேள்வியும் நீயே கேட்டுக் கொண்டு பதிலும் நீயே சொன்னால் நான் என்ன பேசட்டும்?”

“சரி நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்”

“சொல்லு”

“என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள உங்களுக்கு விருப்பம் தானே?”

“ஏன் அப்படிக் கேட்கிறாய்?”

“இரண்டாம் தாரமாகத் தானே கட்டிக்கப் போகிறேன். இது போதும்ணு யாராவது உங்களை யாராவது கட்டாயப்படுத்தினார்களா? நான் திருப்பிச் சில கேள்விகள் கேட்பது உங்களுக்கு சங்கடமாக இருக்கா?”

”எல்லாம் தெரிஞ்சுகிட்டுத் தானே சம்மதிச்சே?”

“அதனால தானே கேட்டேன், என்னைக் கல்யாணம் பண்ண உங்களுக்கு விருப்பமா என்று?”

“எனக்கு முழு சம்மதம், ஆனால் இரண்டாம் தாரம் என்பது…”

“அத்தான் உங்களுக்கு விருப்பம் எனும் போது நான் கொடுத்து வச்சிருக்கேன்னு தான் அர்த்தம்”

“புவனா இதைப் பற்றி உன்னிடம் தனியாகப் பேச வேண்டுமென்று நினைத்திருந்தேன், கும்பிட போன சாமி குறுக்கே வந்தாப்பல நீயே வந்து விட்டாய்”

“நானும் கூட உங்களிடம் முதலில் பேச வேண்டும், உங்கள் மனதைத் தெரிந்து கொண்ட பிறகு தான் மேலே மனதைத் திறந்து விருப்பம் சொல்ல வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன்”

“திரும்ப கொஞ்சம் யோசித்துப் பார்”

“என்னைக் கல்யாணம் செய்து கொள்வதில் உங்களுக்கு விருப்பம் என்று சொன்ன பிறகு வேறு பிரச்சினையேயில்லை”

“புவனா இப்போது சரியென்று சொல்லி விட்டு நாளைக்கு ஐயோ ஏன் இவனுக்கு இவரைக் கல்யாணம் செய்து கொண்டு ஏன் இந்தச் சின்னக் குழந்தையோடு அல்லாட வேண்டும் என நீ நினைக்கக் கூடாது”

“கண்டிப்பாக அப்படி ஒரு நிமிசம் கூட நினைப்பு வராது… அதை நான் மகிழ்வாக… ஏன் விரும்பியதாகவே எடுத்துக் கொள்ளலாமே”

“ஏன்? வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம் என்ற எண்ணம் உள்ளதா?”

“சீ… சீ…”

“அப்படியானால் என்னைப் பிடிக்கவில்லையா?”

“அப்படியெல்லாம் இல்லை புவனா. எனக்கு உன்னை மிகவும் பிடித்திருப்பதால் தான் ஒரு இளைஞனைக் கட்டிக் கொண்டு சுகமாக இரு என்கிறேன்”

“ஏன் நீங்கள் கிழவராகி விட்டீர்களா?”

“அப்படியில்லை பெண்ணே. நீ எனக்குத் திருமணமான மறுநிமிடம் இங்கே என் பெண்ணின் தாயாக நீ மாற்றிக் கொள்ள வேண்டிய கஷ்டம் ஏன் உனக்கு?”

“சிவா அத்தானுக்காக நான் திவ்யாவின் அம்மாவாகிறதிலே எந்தப் பிரச்சினையுமில்லை”

உள்ளே ஓடிவந்த திவ்யா, “ஹாய் அத்தா… எப்ப வந்தே?” மடியில் ஏறி புவனாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

கோகுலம்மாள் பிரசாதம் எடுத்துக் கொடுத்து விட்டு “எப்படியிருக்கே புவனா, சௌக்கியம் தானே?” என்றாள்.

”ஆமாம்” என்று தலையாட்டினாள் வெட்கத்தோடு.

“பாரு இப்பவே அண்ணிக்கு வெட்கம் வந்து விட்டது” என்றான் சிவாவின் தம்பி

“……” சிரித்துக் கொண்டே ஓடினாள் புவனா.

 

“அம்மா நான் சிவாவைக் கட்டிக்கிறதிலே எனக்கு மிக்க சந்தோசம்”

“அப்படீன்னா சரி, நான் கோகுலம்மாளிடம் பேசுகிறேன்” என்றாள் ராணி.

“அம்மா… அதற்கு முன்னாலே ஒரு சின்ன விஷயம்”

“என்னடி?”

“அந்தத் திவ்யாகிட்டே பேசணும்”

“அந்தக் குழந்தைக்கு என்னடி தெரியும், அதுகிட்ட போய் என்ன பேசப் போறே?”

“நீ போய் அந்தக் குழந்தையை கொஞ்சம் தூக்கிண்டு வாயேன்”

“சரிம்மா, ஆனால் நீ பேசறது அந்தப் பொண்ணுக்கு என்னப் புரியப் போகுது?’

“நீ போய் அந்தக் குழந்தையைக் கொஞ்சம் தூக்கிண்டு வாயேன்”

திவ்யா வந்ததும், “அத்தா… சாக்லேட் குடு” என்று கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

சாக்லேட் எடுத்துக் கொடுத்து விட்டு, “உனக்கு இந்தப் புவனா அத்தாவைப் பிடிக்குமா?” என்று கேட்டாள்.

“ஓ”

“எவ்வளவு பிடிக்கும்”

கையை விரித்து இவ்வளவு பிடிக்கும் என்றது.

“என்னை அம்மானு கூப்புடறியா?”

“எதுக்கு?”

“கூப்பிடுவிடுயா?”

“ம்கூம்… எங்கம்மா கடவுள்கிட்ட பொம்மை வாங்க போயிருக்காங்க”

“இல்லேடி கண்ணு, இனி நான் தான் உன் அம்மா”

“ம்கூம் நீ அத்தா, எங்கம்மா பொம்மை வாங்க போயிருக்கா”

“சரி என்னை ஒருக்கா அம்மான்னு கூப்பிடேன், சாக்லேட் தர்றேன்”

“ம்கூம்… வேணும்னா சாக்லேட் குடு”

“புவனா அது சின்னக் குழந்தை, அதுகிட்ட போய் நீ பேசிக்கிட்டிருக்கே. கொஞ்சமா நீதான் அவள்கிட்ட எடுத்துச் சொல்லணும்” என்றாள் ராணியம்மை.

“பாரேன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குதே, அடிவயிற்றைக் கலக்குதே”

“அப்படீன்னா சிவாவிற்கு வேறே பொண்ணு பார்க்கச் சொல்லிடுவோமா?” அம்மா சூசகமாக புவனாவின் மனத்தை அறிவதற்காக கேட்டாள்.

“திவ்யா சின்னப் பொண்ணு, அவளுக்கு என்ன தெரியும். நீ கல்யாணத்துக்கு நாள் பார்க்கச் சொல்”

“நல்ல பொண்ணு, இப்படித்தான் முழுசா முடிவெடுக்கப் பழகிக் கொள்ளணும். நான் இன்றைக்கே கோகுலம்மாவிடம் பேசுகிறேன்”

“சரிம்மா” என்று திவ்யாவை அம்மாவிடம் கொடுத்து சிவாவிடம் கொண்டு விடச் சொன்னாள்.

“திவ்யாவை நம் வீட்டிலே வைத்துக் கொள்வோமா?”

“வேண்டாம், திருமணத்திற்கு பிறகே அவள் என்னோடு இருப்பது நல்லது போல தோன்றுகிறது.”

“ஏன் புவனா அப்படிச் சொல்கிறாய்”

“அவளுக்கு நான் இப்போது அத்தாவாகத் தான் தெரியும்?

“இப்போதே அவளைக் கொஞ்சம் கொஞ்சம் உன் பக்கம் சேர்த்துக் கொள்ளலாமே. அவள் மனசில் நீ பதியும் போது அவளுக்கு அம்மா நினைவு மறைந்து போகும். அவள் உன்னை அம்மானு சொல்லவும் தயாராகிடுவா”

“இல்லம்மா, சின்னக் குழந்தை மனசை அவ்வளவு எளிதில் மாற்றுவது கடினம். அதுவும் அம்மாவைப் பற்றிய எண்ணங்களை மாற்றுவது கடினம். அத்தோடு திருமணத்திற்கு முன்னால் திவ்யாவை நம் வீட்டில் வைத்திருந்தால் சிவா வேற மாதிரி நினைக்கக்கூடும்”

“பரவாயில்லே, ரொம்பா தீர்க்கமாயிருக்கே” என்று திவ்யாவைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள் ராணியம்மாள்.

“இந்தச் சின்ன ராட்சசியை எப்படிச் சமாளிக்கப் போகிரோம்” தலையை சிலுப்பிக் கொண்டாள் புவனா.

தொடரும் (புதன் தோறும்)                        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எங்கிருந்தோ வந்தான் (குறுநாவல்) – ✍ நாமக்கல் எம்.வேலு

    சங்கமம் ❤ (சிறுகதை) – ✍ டாக்டர். பாலசுப்ரமணியன், சென்னை