in

வாழ்க்கை எனும் கவிதை ❤ (நாவல் – அத்தியாயம் 1) – ✍ ”எழுத்துச் செம்மல்” இரஜகை நிலவன், மும்பை

வாழ்க்கை... ❤ (அத்தியாயம் 1)

டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

அத்தியாயம் 1 – மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்

தவன் முழுவதுமாக விழித்தெழாமல் கொஞ்சம் சோம்பல் முறித்து தன்னுடைய கதிர்களை பூமி மேல் பரப்ப முயற்சித்துக் கொண்டிருந்தான்.

நாகர்கோயில் மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் மெதுவாக திருநெல்வேலி ரயில் நிலையத்துக்குள் நுழைந்தது. மூன்றாவது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. மும்பை செல்லும் பயணிகள் அவசர அவசரமாக ரயிலுக்குள் நுழைந்து தங்கள் இடங்களில் பெட்டி படுக்கைகளை அடுக்கி வைக்க ஆரம்பித்தனர்.

சிவாவின் குடும்பத்தினர் ரயிலில் ஏறிக் கொள்ள, பின்னால் சிவாவின் மைத்துனன் திவாகர் ஒரு மூட்டை தேங்காய் கொண்டு  வந்து இருக்கையின் கீழே வைத்து விட்டு, வேகமாக இறங்கி வந்து இன்னொரு கோணியில் இருந்த முருங்கைகாயை எடுத்து வந்து எதிர் இருக்கையின் கீழே வைத்து விட்டு வியர்வையை துடைத்துக் கொண்டான். 

சிவா தன்னுடைய உடைமைகள் எல்லாம் வந்து விட்டதா என்று சரி பார்த்துக் கொண்டிருந்தான். சிவாவின் மனைவி கையில் இருந்த திவ்யாவை மடிக்கு மாற்றி விட்டு ஜன்னலருகே நின்று கொண்டிருந்த அம்மாவை கொஞ்சம் வருத்தத்துடன் பார்த்தாள்.

‘‘அசடு, ஏன் அழுகிறாய்?’’ என்றாள் அம்மா.

‘‘அம்மா, எனக்கு இந்தக் குழந்தை திவ்யாவை நினைத்தால் தான் மிகவும் பயமாக இருக்கிறது’’ என்றாள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.

‘‘புவனா, இந்தப் பிள்ளையை நீ நல்லமுறையில் பாதுகாப்பாய் என்ற நம்பிக்கையில் தான் சிவா உன்னை கல்யாணம் பண்ணிக் கொண்டான். பாரு சின்னக் குழந்தை, விரலை சூப்பிக் கொண்டு தூங்குகிறது. நீ தான் எல்லாமாக இருந்து பார்த்துக்கணும். நம்ம நிலைமை உனக்கு நல்லாத் தெரியும். உன் தங்கச்சியை இனி எப்படி கரையேற்றப் போறோமுன்னு நினைக்கும் போது தான் இப்பவே வயற்றில் புளியை கரைக்குது. நல்லா நடந்துக்கோ, சிவா மனம் கோணாமல் பார்த்துக்கோ. திவ்யா என்றால் அவனுக்கு எவ்வளவு உயிருன்னு உனக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும்’’

ஜன்னல் வழியாக புவனாவின் அம்மா பிரசங்கம் செய்து கொண்டிருந்தாள். 

திடீரென்று விழித்த திவ்யா ‘‘அத்தா, அப்பா எங்கே?’’ என்றது.

‘‘பாரும்மா, இப்பவும் அத்தானு தான் கூப்பிடுது, குரங்கு. அம்மானு கூப்பிடச் சொன்னா, அம்மா கடவுள்கிட்ட பொம்மை வாங்கப் போயிருக்கா. நீ ஒன்னும் அம்மா இல்லேங்குது’’, கண்ணில் தெறித்த நீரை துடைத்துக் கொண்டாள் புவனா.

‘‘புவனா நீ ஒண்ணும் சின்னப் பெண் இல்லே. இருபத்தாறு வயசில தான், எங்களால் அதுவும் உனக்கு சிவாவைத் தான் கல்யாணம் பண்ணி வைக்க முடிஞ்சுது. நீ தான் நல்லமுறையில் குடும்பம் நடத்தப் பழகிக் கொள்ளணும். அழக்கூடாது புவனா. அழுது அழுது வீணாக சோகப்படுகிறதை விட எது வந்தாலும் என்னால் சமாளிக்க முடியும்ணு மனசை திடப்படுத்திக் கொண்டு, வர்றதை எதிர்த்து நின்னேன்னு வச்சுக்கோ, அப்புறம் வாழ்க்கையும் கூட உன் காலுக்கு முன்னாலே முட்டிப் போடும்”

‘‘அது சரி தாம்மா. நம்ம சித்தி மகள் தேவகி இறந்தவுடன் நான் துடிச்சுப் போன போது கூட, இப்படி சிவா அத்தானை கட்டிக்குவேன்னு நான் நெனைக்கலே. சரி, இது தான் எனக்கு அமைஞ்சதுன்னு சந்தோசமா வாழ்க்கையை தொடங்கலாம்னு நெனச்சா இந்த திவ்யாவை என்னாலே சமாளிக்க முடியலை’’

‘‘என்ன புவனா இப்படி பேசற? இந்தச் சின்னப் புள்ளையை சமாளிக்க முடியலைன்னு சொல்றியே. குழந்தைகள் பாசத்துக்கு ஏங்குறவங்க, அன்பைக் கொட்டு, ரௌத்திரம் காட்டுவதை மறந்திடு’’

‘‘அம்மா, நான் என்ன சொல்ல வர்றேனா…’’

‘‘நல்லா புரியுது புவனா, புதுப்பொண்ணா வாழ்க்கையைத் தொடங்கப் போற நேரத்துலே ஒரு பிள்ளைக்கு அம்மாவா அதை சாந்தப்படுத்திக் கொண்டு, அதோடு போராடி ஜெயித்து, அதன் மூலம் புருஷனை ஜெயிக்க வேண்டிய சூழ்நிலையை மற்ற பெண்கள் மாதிரி இல்லை புவனா நீ. தேவகி இடத்தை நிரப்பப் போறவ, நிறைய விஷயங்களை எதிர் கொண்டாகணும். எது நடந்தாலும் சிவா என்ன சொன்னாலும், கோபப்படாமல் அதே சமயத்திலே தன் மானம் போகாமல், அசிங்கப்படாமல் நடந்துக்கணும்’’

‘‘நீ சாதாரணப் பொண்ணாக மும்பைக்குப் போய் குப்பை கொட்டப் போகவில்லை புவனா. எதிர்நீச்சல் போடும் வீராங்கனையா மாறணும். அப்பத்தான் நீ மாட்டிக் கொண்டிருக்கிற இந்த வாழ்க்கை வேஷத்துலே ஜெயித்துக் காட்ட முடியும்’’

‘‘அம்மா, என் முதுகிலே பெரிய பாராங்கல்லை தூக்கி வைச்சி சுமந்துண்டு போன்னு சொல்றியே, நான் தாங்கிக்குவேனா?’’

‘‘கல்யாணத்துக்கு முன்னாலே உன்னிடம் எத்தனை முறை கேட்டேன் புவனா. நல்லா யோசிச்சுக்கோ, அப்புறம் வருத்தப் படக்கூடாது. நம்ம நிலையிலே ஒரு ஏழை பையனுக்கு வேணும்னா உன்னை கல்யாணம் பண்ணி வைக்கவா? ஏற்கனவே அந்த பால்கார அம்மா பையன் செல்வனுக்கு உன்னை கேட்குறாங்கனு சொன்னப்ப கூட, நீ என்ன சொன்னேன்னு நினைச்சுப் பாரு. நீயா விரும்பிப் போட்டுக் கொண்ட விலங்கு இது. சிவாவைத் தானே கட்டிகிறேன்னு சொன்னே. இப்ப இப்படிக் கேட்டா என்ன நியாயம்?’’

திரும்பவும் புவனாவின் கன்னத்தை பிடித்துக் கொண்டு ‘‘அத்தா, அப்பா எங்கே?’’ என்றாள் திவ்யா.

‘‘என்னம்மா வேணும்? நான் தர்றேன். அப்பா பெட்டியெல்லாம் எடுத்து வச்சிக்கிட்டிருக்காங்க. அவங்களை தொந்தரவு பண்ணக் கூடாது பார்’’ என்றாள் புவனா.

சிவாவை பார்த்த திவ்யா, புவனாவின் மடியிலிருந்து இறங்கி வேகமாக வந்து ‘‘அப்பா தண்ணி’’ என்றாள்.

‘‘என்னம்மா வேணும் குட்டிப் பெண்ணுக்கு?” என்று கேட்டவாறு பெட்டியை அடுக்குவதில் மும்முரமாக இருந்தான் சிவா.

“அப்பா, தண்ணி வேணும்’’

‘‘பாரு அம்மா… என்னிடம் தண்ணீர் கேட்டால் கொடுக்காமலா இருப்பேன்? போய் அவரை தொந்தரவு செய்யறது பாரேன்’’ என்றாள் புவனா குசுகுசுப்பாக.

‘‘புவனா இந்த மாதிரி விஷயங்களிலே நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திவ்யாவிற்கு அவளுடைய அப்பா மூணு வருடப் பரிச்சயம். நீ இன்று முழுசா மூணு வாரம் கூட அவளோடு இருக்கவில்லை’’ என்றாள் புவனாவின் அம்மா.

‘‘அதுக்காக?’’

‘‘கோபப்படாமல் கூப்பிட்டு தண்ணீர் கொடு’’

‘‘அப்பா, தண்ணி கொடு”

‘‘வா கன்னுக்குட்டி, தண்ணீர் தர்றேன்’’ என்று மடியில் தூக்கி வைத்துக் கொண்டு புவனா அவளுக்கு தண்ணீர் கொடுக்க முயல

‘‘நீ எங்கிட்ட தா, நான் அப்பாகிட்டே கொடுத்து தண்ணீர் குடிச்சுக்கறேன்’’ என்று தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு இறங்கி சிவாவிடம் சென்றாள் திவ்யா.

முந்தானையை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு திரும்பவும் அழ ஆரம்பித்தாள் புவனா.

“புவனா, சும்மா அழறது புத்திசாலித்தனமில்லே. இது வாழ்க்கை. எதிர்நீச்சல் போட்டுத் தான் ஆகணும். கண்ணைத் துடைத்துக்கொள், பார் சிவா பார்க்கிறார்’’ என்றாள் அம்மா.

‘‘என்னாச்சு?’’ குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு வந்தான் சிவா.     

தொடரும் (புதன் தோறும்)                    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இந்த எண் உபயோகத்தில் இல்லை (சிறுகதை) – ✍ ரமணி

    காத்திருக்கும் முதலைகள் (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி