in

எங்கிருந்தோ வந்தான் (குறுநாவல்) – ✍ நாமக்கல் எம்.வேலு

எங்கிருந்தோ வந்தான் (குறுநாவல்)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

கார் திருச்சியை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. பின் சீட்டில் அமர்ந்திருந்தான் மணிகண்டன். சென்னையில் இருக்கும் சில பெரிய மரக்கடைகளில் அவனுடையதும் ஒன்று. மொத்த வியாபாரம் சில்லறை வியாபாரம் இரண்டும் உண்டு.

பெயருக்குத்தான் மரக்கடை. ஆனால் மரச்சாமான்கள் தவிர ஓடு, கண்ணாடி, டைல்ஸ் என்று ஒரு வீடு கட்டுவதற்குத் தேவையான அனைத்து சாமான்களும் இருந்தன அங்கே.

எம்.ஜி.ஆர் நகரில்தான் கடை. கடையை ஒட்டிய குடோன். அதே காம்பவுண்டிற்குள் ஒரு இரண்டடுக்கு மாடி வீடு. அம்மாவுடன் தங்கி வியாபரத்தை முழுதாக கவனித்துக் கொண்டிருக்கிறான்.

வயது இருபத்தெட்டு ஆகிறது. அம்மாவும் எத்தனையோ முறை “ஒரு கல்யாணத்தை செய்து கொள்ளப்பா, எனக்கும் வயசாகுதில்லையா” என்று சொல்லிப் பார்த்துவிட்டாள்.

ஆனால் அவன்தான் கல்யாணத்திற்கு,  “இப்போது என்ன அவசரம்” என்று மறுத்து தள்ளி தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறான்.

பின் சீட்டில் அமர்ந்திருந்த மணிகண்டனுக்கு நினைவுகள் பின்னோக்கிப் போக ஆரம்பித்தன.

ப்பாவும் அம்மாவும் ஜீயபுரத்தில் வசித்து வந்தார்கள். ஐந்து ஏக்கர் காவிரி நீர்பாயும் நஞ்சை.  ஊருக்கு மத்தியில் மெத்தை வீடு. அப்பா விவசாயம் பார்த்து வந்தார். அதே ஊரில் அரசு பள்ளியில் படித்து வந்தான் மணிகண்டன். அவன் மூன்றாவது படித்துக் கொண்டிருக்கும் போது அம்மா ஜன்னி வந்து இறந்து போனார்கள். 

அம்மா இருந்து பராமரித்த வீடு. இப்போது வெறுமையாய் போனது. வயலைக் கவனிக்கவும், வீட்டை கவனிக்கவும் முடியாமல் தவித்தார் அவனது அப்பா. இவன் சின்ன பையனாக இருந்ததால் அப்பாவுக்கும் அவனால் அதிகமாய் உதவ முடியவில்லை.  

திடீரென்று ஒரு நாள் டாக்சியில் கழுத்தில் ரோஜாமாலையுடன் வந்து இறங்கினார் அவர். பின்னாலேயே கழுத்தில் ரோஜாமாலையுடன் இன்னொரு பெண்.  அவளை முன் பின் அவன் பார்த்ததுமில்லை.

திகைப்புடன் பார்த்த மனிமண்டனை, “மணி, இவங்க உனக்கு சித்தி. அம்மா இல்லாத இடத்தை இவங்கதான் இனிமே பூர்த்தி பண்ணுவாங்க” என்றவர், கொஞ்சம் குரலைத் தாழ்த்தி சைகையுடன்,  “நீ அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்க” என்றார் புன்முறுவலுடன்.

கதவுக்கு பின் ஒதுங்கி நின்று கொண்டவன், வெளியே வர மறுத்தான். கொஞ்சம் பயம் உண்டானது. செய்வதறியாது அப்படியே நின்று கொண்டிருந்தான்.

முதலில் கொஞ்சம் தயங்கி தயங்கி வளைய வந்தவள், பின்னர் சரளமாக நடமாட ஆரம்பித்தாள். வீட்டை சுத்தம் செய்தாள், வாசலில் சாணம் தெளித்து கோலங்கள் போட்டாள்.

அம்மா கூட அவ்வளவு பெரிய கோலங்கள் போட்டதில்லை. இவள் சிக்குக்கொலங்கலாகப் போட்டாள். துணிமணிகளைத் துவைத்துப் போட்டாள். அம்மாவின் சேலைகளை எடுத்து அவள் கட்டும் போது மட்டும்  இவனுக்கு கண்கள் கலங்கின. 

பள்ளிக்கூடம் செல்லும்போது, “உனக்கு சித்தி வந்துட்டாங்களாமே” என்று அவனுடன் கூட படித்த பையன்கள் கேலி செய்தனர். அப்போது இவனுக்கு கோபம் கோபமாக வந்தது.

நாட்கள் நகற நகற பையன்கள் அப்படி கேட்பதை நிறுத்திக் கொண்டனர் அல்லது மறந்து போயினர்.

அப்பா கூட்டி வந்தவளை எப்படி கூப்பிடுவது என்று தடுமாறினான் மணிகண்டன். சித்தி என்றா அல்லது சின்னம்மா என்றா அல்லது அம்மா என்றேவா.   ஆனாலும் அவளோ அவனை மணிகண்டா என்று முழு பெயர் சொல்லித்தான் எப்போதும் கூப்பிடுவாள். இவன்தான் முழித்துக்கொண்டு நிற்பான்.

அதைக் கவனித்த அவனது அப்பா ஒருநாள், “சித்தின்னு கூப்பிட ஒருமாதிரியா இருந்தா அம்மான்னு கூப்பிடுடா” என்று சொன்னார்.

ஆனால் தனக்கு ஒரே அம்மாதான், அவளும் இறந்து விட்டாள், இவள் ஸ்கூல் பையன்கள் சொன்னது போல சித்திதான் என்று அவனது உள்மனம் சொல்லியது.

எப்போதாவது சித்தி என்று சொல்லிப் பார்ப்பான். அதற்கும் கூட வாய் வராது முழுதாய். அவள் எந்த வித்தியாசமும் இல்லாமல் அவனை கவனித்துக் கொண்டாள். அப்பா மட்டும் எப்போதாவது,
“அம்மா கூப்பிடறா” என்பார்.

சித்தி அவனைக் குளிப்பாட்டுவாள். இவன் கூச்சப்படுவான். சிலசமயம் அவள் கவனிக்காத சமயம் தானாகவே மடமடவென குளித்து வந்துவிடுவான். சட்டை போட்டுவிட வருவாள். இவன் தானாகவே போட்டுக் கொள்வான். சாப்பாடு போட்டுக் கொடுப்பாள். மத்தியான சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்து விடுவான்.

ஒரு வருடத்தில் சித்திக்கு ஒரு பையன் பிறந்தான். சித்தியின் அதிகபட்ச கவனம் புதியதாய் பிறந்த தன் குழந்தையின் மேல் விழுந்தது. பிறகு மெல்ல மெல்ல தனது தேவைகளை தானே கவனித்துக் கொள்ள ஆரம்பித்தான் மணிகண்டன்.

அது அவ்வளவு ஒன்றும் கஷ்டமாகவும் தெரியவில்லை அவனுக்கு. சித்தி முழு நேரமும் தனது குழந்தையை மட்டுமே கவனித்துக் கொள்ள ஆரம்பித்தாள்.  அப்பாவும் அவனை கண்டுகொள்ளவில்லை.  

சிலசமயம் அவனுக்கு பழைய சாம்பார்தான் கிடைக்கும். குளிக்க துண்டு சோப்புகள்தான் கிடைக்கும். அப்பா கடையில் இருந்து வாங்கிவரும் தின்பண்டங்களில் கொஞ்சம் மட்டும்தான் கிடைக்கும். தனது பிள்ளைக்கு மறுக்க மறுக்க ஊட்டியும் திணித்தும் விடுவாள்.

துக்கம் தாளமுடியாத சமயங்களில் காவிரிக்கரைக்குப் போய், அம்மாவை நினைத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் அழுவான் மணிகண்டன். 

அடுத்த வருடம் இன்னொரு குழந்தை பிறந்தது. அது பெண் குழந்தையாகப் போயிற்று. முதலில் பிறந்த பையனை எப்போதாவதுதான் தூக்கிய அப்பா,  இந்தப் பெண்குழந்தையை அடிக்கடி தூக்கிக் கொஞ்சினார்.

அவனிடமும், “சிந்தாமணி, இதோ உன் அண்ணன்” என்று உரக்கச் சொன்னார். ஆனாலும் அதில் கொஞ்சமும் ஆர்வமில்லை மணிகண்டனுக்கு.

சித்திக்கும் அப்பாவுக்கும் நாளடைவில் சண்டை சச்சரவு ஆரம்பமானது.  குடிக்க ஆரம்பித்தார் அவர். சில சமயம் மணிகண்டனையும் திட்ட ஆரம்பித்தார்.  ஆனால் அடித்ததில்லை.

ஒருநாள் ஆற்றங்கரையில் போய் உட்கார்ந்து கொண்டு ஓ’வென்று அழுதான். அம்மா இருந்திருந்தால் இந்த நிலைக்கு நாம் ஆளாகியிருந்திருப்போமா என்று நினைத்துக் கொண்டான்.

“ஏம்மா என்னை விட்டுட்டு செத்துப் போனே” என்று அழுதான். அவன் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது அம்மாவை வாசலில் கட்டில் போட்டு படுக்க வைத்து மாலை போட்டிருந்தார்கள். எல்லோரும் கூடி அழுது கொண்டிருந்தார்கள். திடீரென்று அந்த காட்சிகள் நினைவுக்கு வந்து மறைந்தன.

ஆற்றைப் பார்த்தான். இரண்டு கரைகளையும் முட்டி ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரை பார்த்தான். ஆங்காங்கே பாதி மூழ்கி பாதி வெளியே தெரியும் திட்டுக்களைப் பார்த்தான். 

கரையோரம் வளர்ந்து ஆற்றைத் தொடுவது போல வளைந்து மேல் எழுந்து போகும் மரங்களைப் பார்த்தான். அவைகளில் தொங்கும் தூக்கணாங்குருவிக் கூடுகளையும் பார்த்தான்.

ஒரு முடிவுக்கு வந்தான். வேகமாய் எழுந்தான்.

வேகமாய் எழுந்து வீட்டிற்கு வந்தவன் துணிக்கடைகளில் கொடுக்கும் புது கட்டைப்பை ஒன்றைத் தேடி எடுத்தான். யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்று உறுதி செய்துகொண்டு தனது துணிமணிகளை அள்ளிப் பைக்குள் போட்டுக் கொண்டான்.

அப்பாவின் துண்டு ஒன்றை மட்டும் அவரது ஞாபகார்த்தமாக எடுத்து வைத்துக் கொண்டான்.  ஜீயபுரம் ரயில் நிலையத்துக்கு வந்தான்.  அப்பாவின் சட்டைப்பையில் இருந்து எடுத்துக் கொண்டு வந்திருந்த பணத்தை எண்ணிக் கொண்டான். தொள்ளாயிரத்து முப்பது ரூபாய் இருந்தது.

எந்தப் பக்கம் போகலாம் என்று யோசித்தான்.  இடதில் போனால் கரூர், கோயம்பத்தூர் என்று போகலாம், வலதில் போனால் திருச்சி போகலாம்.

கவுண்ட்டரில் போய் ஒரு டிக்கட் எடுத்தான். தானாகவே திருச்சி என்று வந்தது வாயில். டிக்கட் வாங்கிக் கொண்டு போய், சிமென்ட் கட்டையில் உட்கார்ந்து கொண்டான். 

திடீரென்று அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அடக்க முடியாமல் போனதும் அழுது முடித்து, முள்வேலியோரம் இருந்த குழாயடியில் போய் முகத்தை கழுவிக் கொண்டான்.

ரயில் வரப் போகிறது என்று அறிவித்தார்கள். வந்தது. ஓடிப்போய் எறி ஜன்னலோரமாய் பார்த்து உட்கார்ந்து கொண்டான். 

திருச்சிக்கு டிக்கட் எடுத்தாகி விட்டது. ஆனால் அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. ரெயில் ஓடியது. அவனது எண்ணச்சிறகுகள் தடுமாறின, தடம் மாறின.

திருச்சி சென்ட்ரலில் இறங்கியவனுக்கு பசி எடுத்தது. இருபது ரூபாய் கொடுத்து பிளாட்பாரத்தில் பொட்டலம் விற்றுக் கொண்டிருந்தவனிடம் ஒரு எலுமிச்சை சாதம் வாங்கி சாப்பிட்டான். குழாயடியில் தண்ணீரைக் குடித்தான்.

திருச்சியிலேயே தங்கிவிட்டால் வீட்டிற்கு தெரிந்துவிடும், யாராவது பார்த்து வீட்டில் போய் சொல்லிவிடுவார்கள், அதை தவிர்க்க வேண்டுமானால், வேறு எங்காவது கண்காணாத தேசத்திற்கு போய் விட வேண்டும் என்று நினைத்தான்.  இந்தப் பணம் போதுமா, அங்கே போய் சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று யோசித்தான்.

சென்னைப் போகும் எக்ஸ்பிரஸ் ரயில் முதலாவது பிளாட்பாரத்திற்கு வரப் போகிறது என்று அறிவித்தார்கள்.  சென்னைக்கு போகலாமா என்று திடீர் யோசனை வந்தது. அங்கே போய் என்ன செய்வது, யாரைப் பார்ப்பது என்பதைப் பற்றியெல்லாம் அந்த நேரத்திற்கு யோசிக்கவில்லை. 

ரெயில் வரப் போகிறது என்பது மட்டும் அவனை உந்தித் தள்ளியது. ஓடிப் போய் சென்னைக்கு ஒரு டிக்கட் எடுத்தான். ரயில் வந்ததும், ஓடிப் போய் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

இப்போது அழுகை வரவில்லை. கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போனான். கிடைத்ததை வாங்கி சாப்பிட்டான். சென்னையில் போய் இறங்கினான். ஜீயபுரம் திருச்சி போல அல்லாமல் ரொம்பவும் ஜனசந்தடியும் இரைச்சலும் அதிகமாய் இருந்தன. நேரே போய் சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்தான்.

கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. ஒரு வேகத்தில் வந்தாகி விட்டது. எங்கு போவதென்று தெரியவில்லை.  சென்னையோ புதிய ஊர். யாரையும் தெரியாது. மெல்ல நடந்து வெளியே வந்தான். நடந்தான், நடந்தான், நடந்துகொண்டே இருந்தான்.

பசியில் லேசாய் மயங்கி விழுந்தான். அங்கே பிளாஸ்டிக் பேப்பர் பொறுக்கிக் கொண்டிருந்த ஒரு பெண்மணி இவனைப் பார்த்து முகத்தில் தண்ணீர் தெளித்து குடிக்க தண்ணீர் கொடுத்து எழுப்பி உட்கார வைத்தாள். மலங்க மலங்க விழித்தான் மணிகண்டன்.

யார் என்ன என்று விசாரித்தாள். சொன்னான். ஊருக்கு புதிது, வீட்டை விட்டு ஓடி வந்து விட்டவன் என்று அறிந்து கொண்டாள்.

“என்னுடன் வருகிறாயா, என்னோடு சேர்ந்து பிளாஸ்டிக் பேப்பர் பொறுக்கு, என் குடிசையிலேயே தங்கிக் கொள், சாப்பாடும் போடுகிறேன்” என்று சொன்னாள்.

எதுவும் சொல்லத் தெரியாமல் உட்கார்ந்திருந்தவனை அரவணைப்பாய் தன்னுடன் கூட்டிக் கொண்டு போனாள் அவள். பெரிய நெடுஞ்சாலையிலிருந்து மண்ணை வெட்டி உண்டாக்கிய படிக்கட்டில் கீழே இறங்கினார்கள். எதிரே காளான்கள் முளைத்தது போல சிறிதும் பெரிதுமாய் குடிசைகள் தெரிந்தன. கீற்றும் தகரமும் வேய்ந்திருந்தன. ஒன்றுக்குள் அவனைக் கூட்டிக்கொண்டு போய் நுழைந்தாள். 

“தம்பி இதான் நம்ம வூடு, நீ இங்கேயே தங்கிக்கா. சோறு தர்றேன், சாப்பிட்டிட்டு தூங்கு. காலைல உன்னை வேலைக்கு இட்டிக்கிட்டு போறேன்” என்றுவிட்டு நகர்ந்தாள். மோர்கலந்த சாதத்தை சாப்பிட்டுவிட்டு அப்படியே தூங்கி விட்டான்.

காலியில் எழுந்தான். பள்ளிக்கூடம் போகும் பையன்கள் சீருடையில் போய்க் கொண்டிருந்தனர். சட்டென ஜீயபுரம் அரசு பள்ளிகூடம்  ஞாபகத்திற்கு வந்தது. சீருடையில் அவன் நடந்து போனதை நினைவுப்படுத்திக் கொண்டான்.

மறுபடியும் பள்ளிக்கூடம் போனால் எப்படி இருக்கும் என்றும் யோசித்தான். இப்போது அப்படி படிக்க முடியாது என்பதை உணரும்போது லேசாய் கண்கள் கலங்கின. கண்களைத் துடைத்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான். திறந்த வெளியில் குளிக்கச் சொன்னாள். சாப்பிட்டுவிட்டு, பிளாஸ்டிக் பொறுக்க அந்தப் பெண்மனியுடன் கிளம்பிப் போனான்.

ருநாள் பிளாஸ்டிக் பொறுக்கி கொண்டே போகிற வழியில்,  புல்லட் ஒன்று கீழே சாய்ந்து கிடப்பதையும் அதற்கடியில் ஒருவர் ரத்தம் சொட்டிக் கொண்டிருந்ததையும் பார்த்துவிட்டான். அந்தப் பெண்மணி அருகில் இல்லை, வேறு திசையில் போயிருந்தாள்.

உடனே ஓடிப்போய் தன்னுடன் கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து அவரது முகத்தில் தண்ணீரைத் தெளித்தான். மயக்கம் தெளிந்து மெல்ல எழுந்தார் அவர்.

அவனது பாக்கெட்டில் இருந்து ஒரு துணியை எடுத்து அவரது ரத்தத்தை துடைத்து விட்டிருந்தான். அதையும் பார்த்தார். எதிரே உட்கார்ந்திருந்த பையனைப் பார்த்தார்.

யார் என்ன என்று விசாரித்தார். ஊரையும் பெயரையும் சொன்னான். “நல்ல நேரத்துல வந்து என்னைக் காப்பாத்துனப்பா” என்றுவிட்டு நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார் அவர். வாங்க மறுத்துவிட்டான். 

யோசித்தார். “சரி, உனக்கு எப்போ என்ன உதவி வேணுமானாலும்  என்னை வந்து பாரு” என்று சொல்லியபடி ஒரு கார்டை எடுத்து அவனிடம் நீட்டினார். அமைதியாய் வாங்கிக் கொண்டான்.

தள்ளாட்டத்துடன் எழுந்து புல்லட்டை நிமிர்த்தினார், தள்ளிக் கொண்டே நடந்தார்.  அவர் நடக்கும் விதம் அவனது அப்பா நடப்பது போலவே இருந்தது. ஆனால் முகஜாடை மட்டும் வேறாக இருந்தது. 

எதிரே வந்தவரிடம், “பக்கத்தில் எங்கேயாவது கிளினிக் இருக்குமா” என்று கேட்டுக் கொண்டே போய் விட்டார்.

அந்தக் கார்டை திருப்பித் திருப்பிப் பார்த்தான். ஆர்.கே.வுட் மார்ட் என்று போட்டிருந்தது. இரண்டு மூன்று நாட்கள் அந்த கார்டை எடுத்து பார்ப்பதும் திருப்பி பத்திரப்படுத்தி வைப்பதுமாய் இருந்தான்.

வெயிலிலும் மழையிலும் பேப்பர் பொறுக்குவதற்கு பதிலாக மரக்கடையில் போய் எதாவது ஒரு வேலை கொடுங்கள் செய்கிறேன் என்றால் கொடுக்கமாட்டாரா என்ன. வெயிலுக்குப் பதிலாக நிழலில் வேலை செய்யலாமே என்று தோன்றியது. அப்படியே முடிவும் செய்து கொண்டான். அவனுக்கு அடைக்கலம் கொடுத்த அம்மணியிடம் தனது முடிவைச் சொன்னான்.  சந்தோசமாய் அனுப்பி வைத்தாள் அவள்.

ஒருநாள் அந்த முகவரித் தேடி கிளம்பினான். பஸ் ஏறிப் போனான்.  கே.கே.நகர் ஒட்டி இருந்தது அந்த மரக்கடை. பார்த்ததும் புரிந்து கொண்டார் அவர். கார்டில் பார்த்திருந்தான் அவரது பெயர் சுப்பிரமணியன் என்று. அவனது பார்வைக்கு அவர் அந்த சுப்ரமணிய கடவுளாகவேத் தெரிந்தார்.

அவனைப் பார்த்ததும் அருகில் இழுத்து அரவணைனைப்பாக நிறுத்திக் கொண்டார்.  ஒரு சேரில் உட்காரச் சொன்னார். அங்கே வேலை செய்யும் பையனிடம் சொல்லி ஓடிப்போய் ஒரு டீ வாங்கி வரச் சொன்னார். டீ வந்ததும் கொடுத்து குடிக்கச் சொன்னார்.

“பணம் ஏதும் வேணுமா தம்பி?” என்றார்.

முழித்தான்.

“வேலை தர்றேன் செய்றியா?” என்றார்.

உடனே தலையை ஆட்டினான். முகத்தில் சந்தோஷம் அவருக்கு. அவனுக்கும்.

“சரி முதல்ல வேலைகளை கத்துக்கோ… சம்பளத்தை பத்தி அப்புறம் பேசிக்கலாம்” என்று சொல்லி அவனைத் தட்டிக் கொடுத்தார்.

டீ காபி வாங்கி வருவது, ஆபீஸை துடைத்து சுத்தமாக வைப்பது, கடையை பராமரிப்பது என்று படிப்படியாக வேலைகளை கற்றுக் கொண்டான்.

தினமும் வீட்டிலிருந்து கடைக்கு வந்து போக கஷ்டமாக இருப்பதாக உணர்ந்தான்.  அதை உணர்ந்து கொண்ட கடை முதலாளி புதிதாக ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்.  

கொஞ்ச காலத்தில் அது மொபெட்டாக மாறியது. இன்னும் கொஞ்ச காலத்தில் அது புல்லட்டாகவும் மாறியது. இப்போது அவன் இருபத்திரெண்டு வயது வாலிபன். 

ஒருநாள் குடோனில் ஒருபகுதியை தங்குமிடமாக மாற்றி சாவியை அவனிடம் கொடுத்தார் முதலாளி. அவனை அங்கேயே தங்கிக் கொண்டு வேலை பார்க்கச் சொன்னார்.

குடிசயிளிருக்கும் அந்தப் பெண்மணியையும் கூட்டிவந்து அங்கேயே தங்கவைத்துக் கொள்ளச் சொன்னார்.  சந்தோசமாக சாவியை வாங்கிக் கொண்டான். அப்போது எல்லோரும் ஆபீஸ் ரூமை நோக்கி ஓடினார்கள். 

திடீரென்று மேனேஜர் மாரியப்பன் ஆபீஸ் சேரில் உட்கார்ந்த நிலையிலேயே மாரடைப்பு வந்து இறந்து போனார்.

முதலாளி மணிகண்டனைக் கூப்பிட்டார்.

“மணிகண்டா, மாரியப்பன் பார்த்த வேலையையும் சேர்த்துப் பார்” என்றார்.  தட்டிக் கழிக்காமல் உடனே ஒப்புக் கொண்டான் அவன்.  

அதுவரை மாரியப்பனுக்கு உதவியாய் வேலை பார்த்துக் கொண்டிருந்த மணிகண்டனை, மாரியப்பனின் சீட்டிலேயே உட்காரச் சொன்னார் முதலாளி. அவன் முழித்தான்.

அவர் “நீதான் இனிமே மேனேஜர்” என்று சொல்வது போல சைகை செய்தார்.

சந்தோசத்துடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான் மணிகண்டன்.  அவனுக்கு கீழே வேறொரு ஆளையும் அவனது ஒப்புதலுடனேயே நியமித்தார்.

மிகவும் கவனமாய் வேலை செய்தான் மணிகண்டன்.  மாரியப்பன் எப்படி வாடிக்கையாளர்களை திறம்பட கையாண்டார், ஆபீஸை எப்படி நிர்வகித்தார், குடோனை எப்படி வைத்துக் கொண்டிருந்தார் என்பதையெல்லாம் உற்று கவனித்திருந்தான் அவன்.  அதே போல எல்லாவற்றையும் அவனும் திறமையாய் கையாண்டான்.

அடுத்த வருடம் கணக்கு வழக்குகளைப் பார்த்த கம்பெனியின் ஆடிட்டர், கம்பெனியின் லாபம் முதல் முறையாக இருபது சதவிகிதத்தைத் தாண்டி  இருக்கிறது என்பதை முதலாளியிடம் சந்தோசமாய் பகிர்ந்து கொண்டார்.

அவர் மணிகண்டனைப் பார்த்தபடி, “அதுக்கு முழுக்காரணம் மணி தான்” என்று அவனைக் கைகாட்டினார்.

அதற்கடுத்த வருடம் லாபம் முப்பது சதவிகிதம் தொட்டது. அவன் மேனேஜராக பொறுப்பேற்ற பிறகு நிறைய லாபம் கிடைப்பதை உணர்ந்த முதலாளி, கிட்டத்தட்ட எல்லா பொறுப்புகளையும் அவனிடமே ஒப்படைத்தார்.

சாமான்களுக்கு ஆர்டர் கொடுக்கும் கம்பெனிகளுக்கு அவர்தான் எப்போதும் நேரில் போவார். இப்போது அவனையும் கூட்டிக்கொண்டு போனார்.

பெரிய பெரிய கட்டிடங்களில் ஆர்டர் பிடிக்க அவரே போய்க் கொண்டிருந்தார். இப்போது மணிகண்டனையும் கூட்டிக்கொண்டு போனார். ஆபீஸ், குடோன், விற்பனைத் தவிர மெல்ல மெல்ல கொள்முதல் செய்வதையும் ஆர்டர் பிடிப்பதையும் கற்றுக் கொண்டான்.  

அந்த கடையை அவர் நிர்வாகித்தாலும் அதன் உரிமையாளர் அவரது மனைவிதான். ஆனாலும் வங்கிக்குப் போய் வரும் வேலையையும் அவனுக்கே கொடுத்தார்.  பேங்க் மேனேஜரிடம் அவனை அறிமுகம் செய்து வைத்தார். 

அவசர காலங்களில் ஓ.டி. கொடுத்து உதவுவார் மேனேஜர். அதையெல்லாம் மணிகண்டன் பார்த்துக் கொள்வான் என்று மேனேஜரிடம் சொல்லி வைத்தார் முதலாளி.  சில மாதங்களில் செக்கில் கையெழுத்துப் போடும் அதிகாரத்தையும் அவனுக்கு எழுத்து பூர்வமாகக் கொடுத்தார்.  

அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் மணிகண்டனை தனது மகன் போலவே நடத்தினார். அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார்.

தீபாவளி சமயம் எல்லோருக்கும் போனஸும் புதுத்துணிகளும் எடுத்துக் கொடுப்பது வாடிக்கை.  இவனுக்கு கொஞ்சம் அதிகமாகவே  எடுத்துக் கொடுத்து மகிழ்ந்தார்.

அவனது அம்மாவுக்கும் புடவை வாங்கிக் கொடுத்தார். அவரது மனைவியும் மணிகண்டனிடம் ரொம்பவும் அன்புடனும் மரியாதையுடனுமே நடந்து கொண்டார்.

கொஞ்ச நாட்களில் அவரது மனைவிக்கு உடல் சரியில்லாமல் போனது. அடிக்கடி காய்ச்சல் சளி வந்தது.  அவள் படுக்கையில் கிடக்க வேண்டிய சூழல் வந்தது. மணிகண்டன் கம்பெனியை மட்டுமல்லாது  ஆஸ்பத்திரி வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தான்.

எப்போதும் காலையில் குளித்து முடித்து சாமிப் படத்தின் முன் பத்து பதினைந்து நிமிடங்கள் உட்கார்ந்து தியானம் செய்துவிட்டுத்தான் அன்றைய வேலைகளை ஆரம்பிப்பார் முதலாளி.

அப்படி ஒருநாள் தியானம் செய்யும்போது, மணிகண்டனை தனது கம்பெனிக்கு பார்ட்னராக சேர்த்துவிடலாமா என்ற யோசனை வந்தது. எழுந்து போய் படுக்கையிலிருக்கும் மனைவியிடமும் ஒரு வார்த்தை கேட்டார்.

அவள் அவரது கையைப் பற்றிக்கொண்டு, “சின்னக்கடையா ஆரம்பிச்சு இன்னிக்கு கோடிக்கணக்குல வியாபாரம் ஆகுது. எல்லாமே உங்க சாமர்த்தியம்தானேங்க. நான் வெறுமனே செக்குல கையெழுத்து மட்டும்தானேங்க போடறேன்… உங்களுக்கு எதுசரின்னு தோணுதோ அப்படியே பண்ணுங்க” என்றாள்.

ஒருநாள் ஆபீசிற்கு கம்பெனி ஆடிட்டரையும் வக்கீலையும் அழைத்தார்.  கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அவர்களுடன் தனித்தனியாகவும் சேர்த்தும் விவாதித்தார்.  

தொண்ணூறு சதவிகிதம் பங்குகளை மணிகண்டன் பெயருக்கு மாற்றினார்.  அதற்குண்டான பத்திரங்களை தயார் செய்து அவனிடம் ஒப்படைத்தார்.  

முதலில் தயங்கினாலும், முதலாளி எது செய்தாலும் ஒரு காரணத்துடன் செய்வார் என்று அறிந்திருந்த அவன் மறுக்க முடியாமல் ஏற்றுக் கொண்டான்.

தனது மனைவிக்கு உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேற்றம் ஏற்பட்டது.  எழுந்து நடமாட ஆரம்பித்தாள்.  

ஒரு நாள் மணிகண்டனை அழைத்தார். சில வருடங்களாகவே வடஇந்திய டூர் போக எண்ணியிருந்தும் போக முடியாமலேயே போய்விட்டது. வியாபாரம் தன்னை எங்கும் போகவிடாமல் தடுத்து விட்டது. இப்போது முழுப் பொறுப்பையும் மணிகண்டனே ஏற்றுக்கொண்டதால், தன்னுடைய மனைவியையும் அழைத்துக் கொண்டு  வட இந்திய டூர் போவதாக சொன்னார் முதலாளி. 

மணிகண்டனால் மறுத்து பேசமுடியவில்லை.

கொஞ்ச காலமாக முதலாளியம்மா உடம்புக்கு முடியாமல் இருந்து இப்போதுதான் கொஞ்சம் தெளிவுடன் இருக்கிறார். இந்த மாதிரி நேரத்தில் அவர்களுக்கும் ஒரு மாற்றம் தருவது நல்லதுதானே. ரொம்ப காலத்து ஆசையை அவர்களும் நிறைவேற்றிக் கொள்ளட்டுமே என்று யோசித்து அவர்களை அனுப்பி வைத்தான்.

ஏதாவது பேசவேண்டுமானால், தயங்காமல் போனில் கூப்பிடு என்று சொல்லிவிட்டிருந்தார் அவர். ஆனாலும் அவருக்குத் தெரியும், மணிகண்டன் அவரை கூப்பிடும் வேலையே இருக்காது என்று.  அந்தளவுக்கு நிர்வாகத்தை இதுவரையுமே நன்றாகவே கவனித்துக் கொண்டிருந்தான் அவன். 

சில சமயங்களில் ஒரு முடிவை தானே எடுத்துவிட்டு பிறகே அவரிடம் வந்து சொல்லுவான்.  புன்னகையுடன், “மணிகண்டா… இதையெல்லாம் என்கிட்டே சொல்லனுமா… நீதான் இப்போ இந்த கம்பெனிக்கே முதலாளி. தன்னிச்சையா நீ முடிவு எடுக்கலாம், என்கிட்டே கேட்கவே வேண்டாம்” என்பார்.

கிளம்பும் முன்பாக கம்பெனி சாவிக்கொத்தை மணிகண்டனிடம் ஒப்படைத்தார் முதலாளி. “உன் கண்ட்ரோல்ல வச்சுக்கப்பா, இனிமே இதெல்லாம் உன் பொறுப்பு” என்றார்.

அவர் அப்படிச் சொன்னது வேறு விதமாய் உருவமெடுக்கும் என்று அப்போது யாரும் அறியவில்லை.  ஒருவாரம் கழித்து போலீஸ் ஜீப் அந்த கம்பெனிக்குள் நுழைந்தபோது தான் அது தெரிந்தது.

ண்டி கிரீச்சிட்டு நின்ற சத்தம் கேட்டு தன் பழைய நினைவுகள் கலைய நிமிர்ந்து உட்கார்ந்தான் மணிகண்டன். டிரைவர் காரை விட்டு அவசரமாய் இறங்கி ஓடினான்.

“என்னப்பா ஆச்சு?” என்று மணிகண்டன் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே, டிரைவர் குனிந்து யாரையோ தூக்கிவிட்டுக் கொண்டிருந்தான்.  ஜன்னலை இறக்கி பார்த்தபோது தான் தெரிந்தது, ஒரு பெண்மணி கீழே விழுந்திருக்கிறார் என்று.  மணிகண்டன் காரை விட்டு இறங்கவில்லை. 

விறகுக் குச்சிகளுடன் போய்க் கொண்டிருந்தவள் தடுமாறி விழுந்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டான் மணிகண்டன். டிரைவர் விறகுக் கட்டையை தூக்கிக் கொடுக்க, சேலைத் துணியை உருளையாய் சுற்றி தலையில் வைத்துக் கொண்டு விறகு கட்டை தலையில் வாங்கி வைத்துக் கொண்டு கொஞ்சம் தள்ளாடி தள்ளாடி நடந்து அவள் போக,  காரை மறுபடியும் கிளப்பிக் கொண்டு போனான் டிரைவர்.

“ஹாரன் அடிச்சுக்கிட்டேதான் சார் வந்தேன், சட்டுன்னு அந்தம்மா உள்ளே வந்திடுச்சு. விறகு கட்டையை போட்டுக்கிட்டு விழுந்திடுச்சு, நல்லவேளை அடி ஏதும் படலை. லேசாய் சிராய்ப்புதான்” என்றான் டிரைவர்  கொஞ்சம் படபடப்புடன்.

கொஞ்ச தூரம் சென்றிருக்கும். கார் நின்று போனது. டிரைவர் பானட்டைத் திறந்து என்னென்னவோ செய்து பார்த்தான். கார் ஸ்டார்ட் ஆகவே இல்லை.

“என்ன ஆச்சு?” என்று கேட்டான் மணிகண்டன்.

“கார் ஸ்டார்ட் ஆகவில்லை, பக்கத்தில் ஏதாவது மெக்கானிக் ஷெட் இருந்தால் காட்டலாம்” என்று கைகளை பிசைந்து கொண்டு நின்றான் அவன்.

அப்போது அந்த வழியாய் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த ஒரு பையன் யோசனையுடனேயே அருகில் வந்து நின்றான். டிரைவருடன் பேசினான். கதவு கண்ணாடியை இறக்காமலேயே கவனித்துக் கொண்டிருந்தான் மணிகண்டன்.

சைக்கிளை நிறுத்திவிட்டுப் போய் பேனட்டுக்குள் கை விட்டான் அந்தப் பையன். என்னென்னவோ செய்தான். அடுத்த பத்து நிமிடங்களில் கார் உறுமிக்கொண்டு கிளம்பத் தயாரானது.

அந்தப் பையனை அழைத்தான் மணிகண்டன்.  யார், என்ன விவரம் என்று கேட்டான்.  அவன் பக்கத்து ஊர் என்றும் ஐ.டி.ஐ.யில் ஒரு வருட டீசல் மெக்கானிக் கோர்ஸ் படித்து முடித்திருக்கிறான் என்றும் தெரிய வந்தது. 

நூறு ரூபாயை எடுத்து அந்தப் பையனிடம் கொடுத்தான் மணிகண்டன்.  முதலில் வாங்க மறுத்தவனிடம்,  “தம்பி வாங்கிக் கொள்” என்று அவனது கையில் திணித்தான்.

பின்னர் தனது விசிடிங் கார்ட் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தான். “உனக்கு ஏதாவது அவசியம் தேவைப்பட்டா என்னை போனில் கூப்பிடு” என்றான்.

கார் மேற்கொண்டு பறந்தது.

திடீரென்று மணிகண்டன் முதலாளியை முதல்முறையாக பார்த்தபோது நடந்தவைகள் அப்படியே திரும்பவும் தனக்கு நடப்பதாகக உணர்ந்தான். ஆனால் இன்று அந்த முதலாளியே இந்த உலகத்தில் இல்லை என்று நினைத்தபோது கண்கள் குளமாகின.  மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்கினான்    

போலீஸ் ஜீப் காம்பவுண்டிற்குள் வருவதைக் கண்ட மணிகண்டன் கொஞ்சம் பதறிப் போனான்.  ஒரு போலீஸ் காரர் மட்டும் உள்ளே வந்தார். 

“இதுதான் சுப்ரமணியன்ங்கரவறோட கம்பெனியா? நீங்க யார்?” என்றார்.

“அவர் எங்க முதலாளி. என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சினையா?” என்றான் மணிகண்டன்.

தொப்பியைக் கழற்றியபடி, “அவருக்கு பசங்க இருக்காங்களா?” என்றார்.

தவிப்புடன், “யாரும் இல்லை சார்… அவங்க பூர்வீகம் தூத்துக்குடி. அம்பது வருசத்துக்கு முன்னேயே இங்கே வந்து செட்டிலாயிட்டாங்க.  அவருக்கு அண்ணன் தங்கைன்னு கூட யாருமில்லை… அதுசரி என்ன ஆச்சு?” என்று படபடத்தான்.

“ஒரு பஸ் ஆக்சிடென்ட்டுல நிறைய பேர் இறந்துட்டாங்க. அதுல இருந்த ஒரு பாடில இருந்து கிடைச்ச தடயத்துல இந்த கம்பெனி பெயர் இருந்துச்சு. எங்களுக்கு ஹிமாச்சல் பிரதேசத்துலர்ந்து விவரம் சொன்னாங்க. நாங்க பதில் சொன்னதுக்கப்புறம்தான் பாடியை அனுப்புவாங்க” என்றார்.

“அய்யையோ” என்று அழவாரம்பித்துவிட்டான் மணிகண்டன்

“கொஞ்சம் கூட உயிரே இல்லையா சார்… அவரோட சம்சாரமும் கூடப் போனாங்களே சார்”

“சாரிப்பா… பெரிய மலைச்சரிவுல பஸ் தடுமாறி உருண்டிருக்கு. மொத்தம் முப்பது பாடிங்க… யாருமே தப்பலை”

“உடனே நான் வந்து பார்க்கணுமே சார்” என்றான்.

“தம்பி, நீங்க அங்க போயி எந்த பிரயோஜனமும் இல்லை. நாங்க இங்கேயிருந்து Confirmation அனுப்பிச்சதும் பாடிகளை அவங்களே அனுப்பிச்சிடுவாங்க. நீங்க கையெழுத்து மட்டும் போட்டு வாங்கிக்கலாம். நீங்க பாஷை தெரியாத ஊர்லே போயி கஷ்டப்பட வேண்டாம். போலீஸ்காரங்க நாங்க எதுக்கு இருக்கோம்”

“அவங்க ரெண்டு பேரோட ஆதார் கார்டோ வேற ஏதாவது ப்ரூபும் போட்டோவும் மட்டும் கொடுங்க” என்று கேட்டு வாங்கிக்கொண்டு ஜீப் கிளம்பியதும், கம்பெனி ஆடிட்டருக்கும், வக்கீலுக்கும் போன் போட்டு விசயத்தைத் தெரிவித்தான்.

அவர்கள் வந்து அவனிடம் துக்கம் விசாரித்து விட்டு போயினர்.  மறுநாள் பேப்பரில் அந்த கோர விபத்து பற்றி பேப்பர்களில் நியூஸ் வந்தது. சுப்ரமணியனின் போட்டோவும் அவரது மனைவியின் போட்டோவும் பிரசுரமாகியிருந்தன.   

பாடி வந்து சேர்ந்தது.  மிக முக்கியமான பத்து பேர்களை மட்டும் வைத்துக் கொண்டு இறுதி காரியங்களை நடத்தி முடித்தான் மணிகண்டன்.

ஒருநாள் கம்பெனி வக்கீல் சில பேப்பர்களுடன் வந்தார். கூடவே ஆடிட்டரும் வந்தார். வக்கீல் மெல்ல ஆரம்பித்தார்.

“மணிகண்டன்… உங்க முதலாளி டூர் போறதுக்கு முன்னால எங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு பேசினார். அப்போ இந்த இடம், வீடு, கம்பெனி மொத்தத்தையும் உன் பேருக்கு ஒரு உயில் எழுதி வைக்கனும்னு கேட்டுக்கிட்டார்.  நாங்க பத்திரத்தை தயாரிச்சு பதிவும் பண்ணிட்டோம்.  அவங்க ரெண்டு பேரோட இறப்பு சான்றிதழ் நேத்துதான் கிடைச்சது. அதையும் இதுல சேர்த்து வச்சிருக்கோம்.  உங்க பேருக்கு சொத்தை மாத்தி எழுதி வைக்க என் பேருக்கு ஒரு பவர் எழுதி கொடுத்திருக்கார். அதையும் பதிவு பண்ணித்தான் வச்சிருக்கோம்.  நீங்க ஒரு நாள் பத்திர ஆபீஸ்க்கு வந்தீங்கனா, எல்லா வேலைகளையும் முடிச்சிடலாம்” என்று வாக்கில் சொல்லி முடிக்க நெஞ்சை குமுறிக்கொண்டு அழுகை முட்டியது மணிகண்டனுக்கு. 

அங்கேயிருந்த முதலாளியின் போட்டோவைப் பார்த்தான். 

“முதலாளி, இப்படி பண்ணிட்டீங்களே முதலாளி, என்னை அனாதையா விட்டிட்டு போயிட்டீங்களே” என்று அழுதான்.

நாட்கள் நகர்ந்தன. எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து பத்திரங்கள் அவன் பெயருக்கு மாறி வந்து சேர்ந்தான்.

ஒரு நாள் உட்கார்ந்து அப்போதுதான் யோசிக்க ஆரம்பித்தான்.  ஊரை விட்டு வந்து பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டன. இன்று வரை ஒருமுறை கூட ஊர்ப்பக்கம் போனதே இல்லை. அப்பாவையும் ஊரையும் பார்த்துவிட்டு வரலாமா என்று யோசித்தான். முடிவு செய்துகொண்டு நாளும் குறித்தான். 

ரொம்ப நாட்களாக யோசித்து யோசித்து தனது சொந்த ஊருக்கு போக முடிவு செய்து கிளம்பி விட்டான்.  புதியதாய் கார் வாங்கிக் கொண்டான். டிரைவரையும் போட்டன். முதல் பயணம் சொந்த ஊர் பயணமானது.

டிரைவர் காரை ஓட்ட பின்னால் அமர்ந்து போய்க் கொண்டிருந்தவன், கார் ஒரு விறகு சுமந்து போனவளை உரசி மறுபடியும் நின்றுபோய், ஒரு பையன் வந்து சரி செய்து மறுபடியும் கிளம்பி போய்க் கொண்டிருக்க, மனது ஆர்ப்பரித்தது அவனுக்கு… முதல் முதலாக ஊரைப் பார்க்கப் போகிறோமென்று.

சென்னையில் இருக்கிறோம் என்பதை இதுவரயிலுமே ஊருக்கு அவன் தெரிவிக்கவில்லை.  மனதை கல்லாக்கிக் கொண்டு ஊருக்கும் போகவுமில்லை.  எதேச்சையாகக்க் கூட அவனது ஊர்க்காரர்கள் அவனை சந்திக்கவும் நேரிடவில்லை.

இப்போது ஊர் எப்படி இருக்கிறதோ, வீட்டில் எப்படி இருக்கிறார்களோ என்று யோசித்துக் கொண்டே வந்தான். கிட்டத்தட்ட பதினைந்து பதினாறு வருடங்கள் கழித்து அந்த ஊருக்கு வருகிறான்.

“ஸார், ஜீயபுரம் வந்துட்டோம், அதோ போர்டு இருக்கு” என்றான் டிரைவர்.

கரூர் திருச்சி ரோடில் கார் போய்க் கொண்டிருந்தது.  நிறைய மாற்றங்கள் தெரிந்தன. பெரிய பெரிய கட்டிடங்கள் புதியதாய் முளைத்திருந்தன.

கார் ஊருக்குள் நுழைந்தது. ரோட்டை ஒட்டி இருக்கும் சந்திரசேகர சுவாமி கோவில் வாசலில் காரை நிறுத்தச் சொன்னான். உள்ளே போய் சாமி கும்பிட்டுவிட்டு  வந்தான்.

அதற்கு பின்புறம் கொஞ்ச தூரம் போனால் காசி விஸ்வநாதர் கோவில் வரும். அங்கேயும் போய் சாமி கும்பிட்டுவிட்டு  வந்தான்.

அப்பொழுதெல்லாம் அடிக்கடி அந்த கோவில்களுக்கு அம்மாவுடன் வந்திருக்கிறான். சிறு சிறு கோவில்களுக்கெல்லாம் கூட அவனை அழைத்துக் கொண்டு போவாள் அம்மா.

அடிக்கடி விரதமெல்லாம் இருப்பாள்.  வெள்ளி செவ்வாய்களில் மஞ்சள் தேய்த்துக் குளிப்பாள். நெற்றியில் அழகாய் சிவப்பு குங்குமத்தை வைத்து சிறிதாய் விபூதியும் வைத்துக் கொள்வான். கோவிலுக்கு வரும்போதெல்லாம் குங்குமம் வாங்கி நெற்றி வகிடிலும் தாலியிலும் இட்டுக் கொள்வாள்.

அந்த ஞாபகங்கள் வர, கண்ணீர் கண்களில் திரையிட்டு மறைத்தது. பிறகு காரை சொக்காண்டி அம்மன் கோவிலுக்கு விடச் சொன்னான்.

வழி கேட்டுக் கொண்டே காரை விட்டான் டிரைவர்.  வெளியில் இருந்தபடியே கன்னத்தில் போட்டுக் கொண்டான் மணிகண்டன்.

புதிது புதியதாய் கட்டிடங்கள், கடைகள், வீடுகள்.  மண் ரோடாய் இருந்ததெல்லாம் போய், இப்போது தார் ரோடை மின்னின.  

அம்மன் கோவிலின் பின்புறம்தான் அவர்களது வீடு இருந்தது. மிகவும் பழைய வீடு.

“உங்க பாட்டன் கட்டின வீடுடா” என்று அடிக்கடி சொல்லுவார் அவனது அப்பா. 

கார் கோவில் வாசலிலேயே நின்றிருக்க மணிகண்டன் பொடி நடையாய் நடந்தான். அந்தத் தெருவில் இரண்டு முறை அப்படியும் இப்படியுமாய் நடந்த பிறகு முகவரி தப்பாக வந்து விட்டோமோ என்று தோன்றியது. நிறைய வீடுகள் வந்துவிட்டதால் அடையாளம் தெரியவில்லை.

எதற்கும் யாரையாவது கேட்கலாம் என்று நினைத்து அந்தப் புறமாய்  பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி, “இங்கே ஒரு  கெட்டிமெத்தை வீடு இருந்தது, மாரிசாமினு ஒருத்தர் இருந்தார். விவசாயம் பார்த்துட்டு இருந்தார், காரை வீடு இருக்கும். பெரிய காம்பவுண்டு இருக்கு. எங்கேயிருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

கொஞ்சம் யோசித்து சிரித்த முகத்துடன், “சார்… கரெக்டாதான் சார் நிற்கிறீங்க. இதோ இந்த காம்பவுண்டுதான் நீங்க சொல்றது. ஆனா இப்போ எல்லாம் உடைஞ்சு கிடக்கு. நீங்க சொல்றது ஒரு பதினஞ்சு இருபது வருசத்துக்கு முன்னாடி இருந்தது. இங்கே ஒரு காரை வீடு இருந்துச்சு. அப்போவே அது இடிஞ்சு விழுந்து எல்லாத்தையும் அள்ளிக் கொட்டிட்டாங்க. அதோ தெரியுது பாருங்க ஒரு சின்ன ஓலைக் குடிசை அதுலதான் அவங்களாம் இருக்காங்க.  ஆமா நீங்க யாரு?” என்று கேட்டார்.

அதற்குள், “ரொம்ப வருஷமாச்சா, அடையாளம் தெரியலை, தேங்க்ஸ்ங்க” என்று சொல்லிக் கொண்டே, உடைந்து போன மூங்கில் கேட்டைத் திறந்து கொண்டு காம்பவுண்டிற்கு உள்ளே போனான்.

பைக்கில் வந்து நின்று அடையாளம் காட்டியவர், மேற்கொண்டு ஏதோ சொல்ல முயன்று இவன் போய்க் கொண்டே இருந்ததைப் பார்த்து முனகிக் கொண்டே கிளம்பிப் போய்விட்டார்.

அதற்குள், மெல்ல மெல்ல காரை ஒட்டிக்கொண்டு வந்து அந்த காம்பவுண்டு ஓரமாய் கொண்டுவந்து நிறுத்திவிட்டு வெளியே இறங்கி வந்து நின்று காத்திருந்தான் டிரைவர்.

யோசித்துக் கொண்டே நடந்தான் மணிகண்டன். அப்போது வடக்கு பார்த்து மெத்தை வீடு இருந்தது. அது தரைமட்டமாகி இப்போது தெற்குப் பார்த்து அந்த குடிசை இருந்தது. 

யோசித்துக் கொண்டே நடந்தான். குடிசையின் முன்பக்கம் வந்தான். ஒரு பழைய மரக்கதவு சாத்தியிருந்தது.  யாரும் இல்லையோ என்று நினைத்தபடி கதவை தட்டப்பார்த்தான். அப்போதுதான் தெரிந்தது கதவு வெளிப்புறம் தாழிடப்படவில்லை, உள்புறம் தாழ் போடப்பட்டிருக்கிறது என்பதை.

மெல்லத் தட்டினான். “யாருங்க வீட்டிலே?” என்று குரல் கொடுத்தான்.

கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண் வந்து நின்றாள். ஏதோ ஸ்கூல் யூனிபாரம் போல மெரூன் கலர் பாவடையும் வெள்ளை ரவிக்கையும் போட்டிருந்தாள். ஆனால் ரொம்பவும் பழையதாக தெரிந்தது. 

எண்ணெய் காணாத தலை. அழுக்குப் படிந்த உடல். அயர்ந்த கண்கள். வயது எப்படியும் பதினேழு இருக்கும். சித்திக்குப் பிறந்த பெண் குழந்தையாக இருக்குமோ என்று தோன்றியது. நெஞ்சுக்குள் ஒரு நெருடல்.  

‘சிந்தாமணியா?’ என்று கேட்க நினைத்து சட்டென நிறுத்திக் கொண்டான். ஏற்கனவே தான் யார் என்று காட்டிக் கொள்ளக் கூடாதென்று முடிவு செய்து கொண்டுதான் கிளம்பி வந்திருந்தான்.

“வீட்டிலே யாரும் இல்லையாமா?” என்று சட்டென பேச்சை மாற்றினான்.

வீட்டிற்குள்ளேயே நின்றபடி, பாதி கதவை மட்டும் திறந்து கொண்டு கதவைப் பிடித்துக் கொண்டே, “அம்மா வெளியே போயிருக்கு” என்றாள். 

“உன் பேர் என்னம்மா?” என்றான் மறுபடியும்.

“எம்.சிந்தாமணி… நயன்த் படிக்கறேன்” என்றாள் நிதானமாய். ஆள்தான் பார்க்க அழுக்கை தெரிந்தாள், பேச்சில் ஒரு தெளிவு தெரிந்தது.  

“ஒன்பதாவது படிக்கறியா?” என்றான் கொஞ்சம் வியந்து.

நெஞ்சு கனத்தது மணிகண்டனுக்கு. கொஞ்சமாய் திறந்திருந்த கதவு வழியாய் உள்ளே பார்த்தான். அவனது அப்பாவின் படம் சுவற்றில் தொங்கியது, ஒரு காய்ந்து போன மாலைக்கு நடுவே.

திகீர் என்றது. “அப்பா” என்றபடி அப்படியே  நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அப்படியே திண்ணையில் உட்கார்ந்தான். 

உடனே ஓடிப்போய் ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து வந்து அவனிடம் கொடுத்தாள் அந்த சிறுமி.  “தண்ணிய குடிங்கண்ணா” என்றாள்.

“அண்ணா” என்று அந்தப் பெண் சொன்னதைக் கேட்டதும் மறுபடியும் நெஞ்சை என்னவோ செய்தது. இப்போது கதவை நன்றாக திறந்திருந்தாள். ஒரு பழைய வாடாமல்லி மாலை தொங்கிக் கொண்டிருந்தது அப்பாவின் போட்டோவில்.

கண்களை துடைத்துக் கொண்டான். ஆனாலும் அவனது கண்கள் அலை பாய்ந்தன.  அம்மாவின் படமும் அங்கே எங்காவது தொங்குகிறதா என்று கண்கள் தேடின.  காணவில்லை.

“பயப்படாதம்மா… நான் உங்கப்பாவுக்கு பிரண்டு தான். அந்த போட்டோவுல இருக்கறது உங்கப்பாவாம்மா?” என்றான்.

லேசாய் கசிந்த கண்களுடன் தலையை மட்டும் ஆட்டி “ஆமா” என்றாள்.  “பத்து வருசத்துக்கு முன்னேயே செத்துப் போச்சு… மஞ்ச காமாலை வந்து செத்து போச்சு. நெறைய சாராயம் குடிப்பார்னு அம்மா சொல்லும் மெலிதான குரலில் நிதானமாய் அவள் சொன்னாள். அவள் பேசுவது அளந்து அளந்து பேசுவது போல இருந்தது.

“யாரெல்லாம் இருக்கீங்க வீட்டிலே?” என்று தொடர்ந்து கேட்டான்.

“நானு.. எங்கம்மா, எங்க அண்ணன். எங்கண்ணன் வெளியே போயிருக்கு, அம்மா….” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மறுபடியும் திகீர் என்றது அவனுக்கு.

ஒருவேளை வருகிற வழியில் கார் உரசி தடுமாறி விழுந்த அந்தப் பெண்மணி சித்தியாக இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டான்.

 “உங்க அண்ணன் என்ன பண்றான்? காலேஜ்ல ஏதும் படிக்கறானா?” என்றான் மணிகண்டன்.

“யாரு செந்திலா? எங்கேயாவது சைக்கிள்ல சுத்திக்கிட்டிருப்பான். போன மாசம்தான் ஐ.டி.ஐ. முடிச்சான். டீசல் மெக்கானிக் முடிச்சான்.  வேலை ஒன்னும் கிடைக்கலை. தேடிட்டிருக்கான்… நேத்துக் கூட ஒரு வேலைக்கு லெட்டர் வந்திச்சு” என்று சொல்லிக் கொண்டே ஓடிப்போய் ஒரு லெட்டரை எடுத்து வந்து பரவசத்துடன் காண்பித்தாள்.

திருச்சியிலிருந்து ஒரு கார் கம்பெனிக்கு நேர்முகத் தேர்வுக்கு வரச்சொல்லி போட்டிருந்தார்கள்.

“அவன் நல்லா படிப்பான். எங்கம்மா சொல்லும், அவன் எங்கப்பா மாதிரின்னு. நாந்தான் ரெண்டு மூணு தடவை பெயிலாகி பெயிலாகி இப்போ ஒன்பதாவது வந்திருக்கேன். எங்கம்மா படிக்கலை” என்றாள்.

அப்போதுதான் அவளது வயதுக்கும் படிப்பிற்கும் உள்ள வித்தியாசத்திற்கு காரணம் புரிந்தது மணிகண்டனுக்கு.

சட்டென ஞாபகம் வந்தவனாய் எழுந்து அங்கிருந்தபடியே டிரைவரை கூப்பிட்டான். இருநூறு ரூபாய் பணம் கொடுத்து, “ஒரு சம்பங்கி மாலை வாங்கிட்டு வாப்பா” என்று சொல்லி அனுப்பினான்.

அதே நேரம் தலையில் விறகுக்கட்டுடன் ஒரு அம்மா அங்கே வந்தார்.  மணிகண்டனுக்கு புரிந்து போனது, வருகிற வழியில் காரில் மோதி கீழே விழுந்த அதே பெண்மணிதான் அது. அவனையும் அறியாமலேயே அவனது வாய் “சித்தி” என்று முணுமுணுத்தது.

கிழிந்தும் அழுக்குமான சேலை. வெறும் நெற்றி. எண்ணெய் காணாத செம்பட்டை கேசம். பழைய பளபளக்கும் சித்தி எங்கே… இளைத்துப் போய் கருத்த மேனியுடைய இந்த சித்தி எங்கே.

அவன் முன்னே வந்து நின்ற அவள் அணிச்சையாய்  கையெடுத்து கும்பிட்டாள்.  கூடவே கதவைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த மகளையும் பார்த்தாள்.

கொஞ்சம் கலவரத்துடனேயே, ”நீங்க யாரு?” என்றாள்.

சட்டென குறுக்கிட்ட சிந்தாமணி, “அம்மா… அப்பாவுக்கு பிரெண்டாம், அப்பாவைப் பார்க்க வந்திருக்கார்” என்றாள்.

சட்டென கண் கலங்கினாள் சித்தி. உள்ளே போனவள் போட்டோவை எடுத்து சேலை முந்தனையால் துடைத்து… “ரொம்ப வருஷம் ஆச்சுங்க அவர் எங்களை விட்டுப் போயி. குடிக்காத குடிக்காதன்னு சொன்னா கேட்டாத்தானே… இருபத்தி நாலு மணிநேரமும் குடிச்சிக்கிட்டேதான் இருப்பாரு. மஞ்சக்காமலையும் வவுத்துலே புத்துநோயும் வந்து ஏழெட்டு வருஷத்துக்கு முன்னேயே போய்ட்டாரு. அதே வருஷம் வீடும் விழுந்துடுச்சு, எங்க பொழப்புலயும் மண்ணு விழுந்துடுச்சு” கண்கலங்கினாள்.

அவள் கண்கலங்க, சிந்தாமணியும் அழுதாள். கொஞ்சநேரம் கனத்த மவுனம். மணிகண்டனுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. 

அதற்குள் டிரைவர் மாலையுடன் வந்தான். அதை வாங்கி, “அந்த பழைய மாலைய தூக்கிப் போட்டுட்டு இதைப் போடுங்கம்மா” என்று அந்த மாலையை கொடுத்தான்.  

சட்டென ‘அம்மா’ என்று சொல்லி விட்டோமே என்று யோசித்தான். சரி அம்மாதானே என்றது உள்மனம். புது மாலையைப் போட்டுவிட்டு ஒருநிமிடம் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

திண்ணையில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த மணிகண்டனுக்கும் நெஞ்சு குலுங்கியது. ஆனாலும் பொங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு காத்திருந்தான்.

சீவி சிங்காரித்து, தளதளக்க புடவைக் கட்டி வலம் வந்த சித்தி எங்கே… இந்த சித்தி எங்கே…. என்று யோசித்தான்.

“அவருக்கு கொஞ்சம் வயல் இருந்துச்சே… அதுல ஒண்ணும் விளையறதில்லையா?” என்றான்.

“எங்க? சாகறதுக்கும் முன்னேயே நிலத்தையெல்லாம் வித்தாச்சு. இலச்ச லச்சமா அவருக்கு செலவு செஞ்சதுதான் மிச்சம்.  இந்த வீட்டு பத்திரத்தை கூட ஒரு இந்திகாரர்கிட்டே கொடுத்து கடன் வாங்கி… எல்லாத்தையும் குடிச்சும் ஆஸ்பத்திரிக்கு செலவு செஞ்சும் அழிச்சுட்டார். கொஞ்ச நாளைக்கி முன்னே அந்தாளு வந்திச்சு… சீக்கிரம் குடிசையை காலி பண்ணிட்டு கிளம்புங்கம்மா… அபார்ட்மென்ட் கட்டப் போறேன்னு பயமுறுத்திட்டு போனார். அவர் பாட்டுக்கு போய் சேர்ந்துட்டார். போக வழி தெரியாம நாங்கதான் அல்லாடிக்கிட்டு இருக்கோம்” 

மறுபடியும் கண்களை கசக்கினாள். கூடவே சிந்தாமணியும் கண்களை கசக்கி கொண்டாள்.

“அவருக்கு நீங்க ரெண்டாவது தாரம்னு….” என்று இழுத்தான் ஒன்றும் அறியாதவன் போல.

கொஞ்சம் யோசித்தாள். பிறகு, “ஆமா, முதல் சம்சாரம் ஜன்னி வந்து செத்து போச்சுன்னு சொல்லியிருக்கார். அப்புறமாத்தான் என்னை தாலி கட்டி இங்கே கூட்டிட்டு வந்தாங்க. அப்போ மெத்தை வீடெல்லாம் இருந்துச்சு. அவங்களுக்கு ஒரு பையன் இருந்தான். என்ன காரணமோ தெரியல, வீட்டை விட்டு ஓடிட்டான். பதினஞ்சு வருஷம் இருக்கும். எங்கே போனான், இப்போ எங்கே இருக்கான்னும் தெரியாது… நாங்க மட்டும்தான் இருக்கோம். பையன் ஒருத்தன் இருக்கான். இவளுக்கு மூத்தவன். ஐ.டி.ஐ. முடிச்சிருக்கான். ரொம்ப நல்லா படிச்சான். திருச்சில யாரோ ஒரு கார் கம்பெனில கூப்பிட்டிருக்காங்களாம். போறேன்னு சொல்லிட்டிருக்கான், இன்னும் போகலை” என்றவள் முகத்தை தன் முந்தானையால் துடைத்துக் கொண்டு, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “சரி, இவ்வளவெல்லாம் கேட்கிறீங்க, நீங்க யார்னு இன்னும் சொல்லலையே” என்றாள்.

ஏற்கனவே முடிவு செய்து கொண்டு வந்திருந்தான் மணிகண்டன், தான் யார் என்பதை காட்டிக் கொள்ள வேண்டாம் என்று. அதனால், ஒரு பெருமூச்செறிந்தபடி சொன்னான்.

“அவருக்கு தெரிஞ்சவர்தாங்க… ரொம்ப வருசத்துக்கு முன்னே அவசர செலவுக்கு எங்கப்பா அவர்கிட்டே அம்பதினாயிரம் கடன் வாங்கியிருக்கார். நோட்டுல குறிச்சி வெச்சுருந்தார், அதான் பணத்தை திருப்பி கொடுத்துடலாமேனு தேடிப்பிடிச்சு வந்தேன்” என்றவன், கையில் வைத்திருந்த தோல்பையில் இருந்து ஒரு ஐநூறு ரூபாய் கட்டை எடுத்து நீட்டினான்.

“இதை வெச்சுக்கங்கம்மா… பணத்தை திருப்பி வாங்கிக்க அவர் இல்லேனாலும், கஷ்டப்படற உங்களுக்கு இது கொஞ்சம் உதவியா இருக்குமில்லையா” என்று சொல்லியபடியே பணத்தை நீட்டினான்.

வாங்கிக் கொள்ளத் தயங்கினாள் அவள். சிந்தாமணி அம்மாவையும் மணிகண்டனையும் திகைப்புடன் மாறி மாறிப் பார்த்தாள். பிறகு திடீரென்று தன் முந்தானையை விரித்து பணத்தை போடச் சொல்லி வாங்கிக் கொண்டாள் அவள்.

மகளைப் பார்த்து, “ஐயா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்க” என்றாள். உடனே மறுத்தான் மணிகண்டன்.

அந்த சிறுமி உடனே அவனது காலில் விழுதாள். பர்சிலிருந்து ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை எடுத்து அவளிடம் கொடுத்து, “நன்றாகப் படி” என்றான்.

ஒரு பெருமூச்சு விட்டபடி மறுபடியும் அப்பாவின் போட்டோவைப் பார்த்துவிட்டு வாசலுக்கு வந்தான்.

“முதல் தாரத்து பையன்னு சொன்னேனே… மணிகண்டன்னு அவன் பேரு. இருந்தா இந்நேரம் உங்களை மாதிரிதான் பெரிய்ய ஆளா இருப்பான். எங்கே இருக்கானோ, என்ன பண்றானோ?” என்றாள் அவள்.

தானாகத்தான் அவனைப் பற்றிச் சொன்னாளா, இல்லை தன்னை அடையாளம் கண்டுகொண்டு நாமாகவே நான்தான் மணிகண்டன் என்று சொல்வேன் என்று எதிர்பார்த்து அப்படிச் சொன்னாளா என்று புரியவில்லை அவனுக்கு. ஆனாலும் திரும்பிப் பார்க்காமல் கலங்கிய கண்களுடன் மடமடவென  காருக்கு திரும்பிவிட்டான்.

அவனையுமறியாமல் அழுகை நெஞ்சை முட்டித் தள்ளியது. கார் சென்னையை நோக்கிப் பறக்க ஆரம்பித்தது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 2) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    வாழ்க்கை எனும் கவிதை ❤ (நாவல் – அத்தியாயம் 3) – ✍ ”எழுத்துச் செம்மல்” இரஜகை நிலவன், மும்பை