in

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 2) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

நீ எனதின்னுயிர் ❤ (பகுதி 2)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1

“நானா?” என்று தயங்கியவள், எதற்காகத் தன்னை அவன் காரில் ஏறச் சொல்கிறான் என்று புரியாமல் திகைத்தாள். யோசித்துக் கொண்டே காரில் ஏறினாள்.

“ஏன் இவ்வளவு தயக்கம்? நான் ஒன்றும் உங்களைச் சாப்பிட்டு  விட மாட்டேன்” என்றான் லேசாகச் சிரித்துக் கொண்டே.

ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தவள், காரில் ஏறி கதவோரம் ஒட்டினாற் போல் உட்கார்ந்தாள்.

“எங்கே போக வேண்டும்? ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டலில் தங்கியிருக்கிறீர்களா?” என்றான் சபரீஷ் .

“ஆம்… தி.நகரில் ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டலில் தான் தங்கியிருக்கிறேன். ஆனால் இப்போது நான் அண்ணா நகர் போக வேண்டும். நீங்கள் உங்களுக்கு வசதியான இடத்தில் நிறுத்தினால் நான் இறங்கிக் கொள்வேன்” என்றாள் கிருத்திகா .

“ஹோட்டலில் காபி மட்டும் சாப்பிட்டு விட்டுப் போகலாமா? என் வீடு கூட அண்ணா நகர் தான். நீங்கள் எங்கே போக வேண்டுமோ அங்கேயே உங்களை இறக்கி விடுகிறேன்”

“சரி” என்றாள் கிருத்திகா

“உங்களால்  தான் எனக்கு தலைவலி வந்தது, அதனால் தான் நீங்கள் என்னோடு காபி சாப்பிட வேண்டும்” என்றான் சபரீஷ் குறும்பாக சிரித்துக் கொண்டு .

“என்னால் தலைவலியா? நான் என்ன சார் செய்தேன்?” என்றாள் புருவத்தை சுருக்கிக் கொண்டு அவனைப் பார்த்தபடி.

“ஆம், நீங்கள் கொடுத்த இளங்கோ ஆபிஸின் ஆடிட் ரிப்போர்ட். அதைப் பார்த்த பிறகுதான் தலைவலியே தொடங்கியது”

“வெரி ஸாரி சார். இன்ஸ்பெக்‌ஷன் என்று போனால் கரெக்டான ரிப்போர்ட் கொடுக்க வேண்டியது தானே ஆடிட் பார்ட்டியின் வேலை”

“அது சரி, உங்கள் ஹாஸ்டல் தி. நகரில், ஆனால் நீங்கள் ஏன் அண்ணா நகர் போகிறீர்கள் என்று  நான் தெரிந்து கொள்ளலாமா?” என்றான் சபரீஷ் .

“ஆபீஸ் முடிந்து உடனே ஹாஸ்டலுக்குப் போனால் ரொம்ப போர் அடிக்கிறது சார். அதனால் ஒரு கோச்சிங் கிளாஸில் சேர்ந்திருக்கிறேன்” என்றாள் கிருத்திகா, அவனைப் பார்த்து லேசான புன்னகையுடன்.

“நீங்கள் ஏற்கெனவே பி.காம். முடித்துவிட்டு எம்.ஏ. மாலை நேரக் கல்லூரியில் படித்தீர்கள் இல்லையா?”

“ஆமாம் சார் எம்.ஏ. ஹிஸ்டரி” என்றாள் கிருத்திகா. அவள் இறங்க வேண்டிய இடமும் வந்தது.

“இந்தக் கட்டிடம் தான் சார்” என்று கூறினாள் கிருத்திகா.

இன்ஸ்டிடியூஷன் பார் ஐ.ஏ.எஸ்.அகாடமி என்று ஒரு பெரிய போர்ட் தொங்கியது.

“அருகிலேயே ஒரு காபி ஷாப் இருக்கிறது. உங்களுக்கு இன்னும் நேரமாகவில்லையென்றால் ஒரு காப்பி சாப்பிட்டு விட்டுப் போகலாமா?” என்றான் சபரீஷ்.

“இன்னும் நேரமாகவில்லை. காரில் அழைத்து வந்ததற்கு மிகவும் நன்றி, அதனால் சீக்கிரமே வந்து விட்டோம். காபி சாப்பிட்டு விட்டே போகலாம் சார்” என்றாள்.

இருவருக்குமாக காப்புச்சீனா காபி ஆர்டர் செய்தான்.

“நீங்கள் ஐ.ஏ.எஸ். கோர்ஸிற்காகத்தான் கிளாஸ் போகிறீர்களா?”

“ஆமாம் சார், பிரிலிமினரி எக்ஸாமிற்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது, எக்ஸாம்  பீஸ் கூட கட்டிவிட்டேன்”

“பரீட்சை மிகவும் கடினமாக இருக்கும் என்கிறார்களே?”

“தேர்விற்குப் போய் பார்த்தால் தான் தெரியும் சார் . நானும் ஒன்றும் ரொம்ப கஷ்டப்பட்டுப் படிக்கிறேன் என்று சொல்ல முடியாது. மாலை ஆறு மணிக்கு மேல் ஏதும் வேலை கிடையாது. பொழுது நல்ல மாதிரி போக வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் படிக்கிறேன்” என்றாள் லேசாக சிரித்துக் கொண்டே.

லிப்ஸ்டிக் போடாமலே ரோஜாவின் நிறமாக மின்னும் அவள் இதழ்களையும், சிரித்தால் பளீரிடும் முத்துக்கள் போன்ற பற்களையும் பார்த்து ஆச்சர்யப்பட்டான் சபரீஷ்.

காபி சாப்பிட்டு விட்டு இருவருமாக வெளியே வந்தவுடன், அவனுக்கு கையசைத்து விடை கொடுத்து விட்டு, வகுப்பு நடக்கும் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தாள் கிருத்திகா.

  நிறையப் பெண்களும், பிள்ளைகளும் மாறி மாறி அக்கட்டிடத்திற்குள் போவதும்  வருவதுமாக இருந்தார்கள். காரில் ஏறி உட்கார்ந்த சபரீஷ் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

காதில் இரண்டு தங்க வளையங்கள், பிளாட்பாரத்தில் விற்கும் ஒரு இரட்டைச் சர முத்துமாலை,  ஒரு கையில் வாட்ச், இன்னொரு கை வெறுமையாக இருந்தது. முகத்திற்கு, ஆபிசிலிருந்து கிளம்பும் போது லேசாகப் பௌடர் போட்டிருப்பாள் போல் இருக்கிறது. 

சிவப்பு நிறத்தில் சிறிய ஸ்டிக்கர் பொட்டு, அவளுடைய வெள்ளை நிற நெற்றியில் அந்த சின்னஞ் சிறிய பொட்டு இன்னும் அழகாகத் தெரிந்தது.

‘இவள் குழந்தையில் எவ்வளவு அழகாக இருந்திருப்பாள் !  தங்க நிறம், கரிய பெரிய விழிகள். அந்த இமைகள் மூடித் திறக்கும் போது சாமரம் கொண்டு வீசுவது போல் இருக்கிறது.  எந்த பியூட்டி பார்லருக்கும் போய் ‘ட்ரிம்’ செய்யாமலே வில்லைப் போல் வளைந்த புருவங்கள், சங்கு கழுத்து. இப்படி ஒரு அழகான குழந்தையை எப்படித்தான் தூக்கிப் போட மனம் வந்ததோ?’ என்று நினைத்துக் கொண்டே வீட்டிற்கு காரை ஓட்டிச் சென்றான்.

வீட்டில் பெரியப்பா, சித்தப்பா குடும்பங்கள் என்று நிறைய ஆட்கள் இருந்தாலும், யாரும் இவனோடு நேரம் செலவிட மாட்டார்கள். அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போவார்கள். இவனும் யாரையும் எதிர்பார்க்க மாட்டான்.

ஆனால் இன்று தனிமையை மிக உணர்ந்தான். அவன் சிறு வயது முதலே அந்த வீட்டில் சமையல்காரராக இருந்த சாம்பசிவம் இப்போது சாம்பு தாத்தாவாகி அந்த வீட்டில் உழைத்துக் கொண்டு இருக்கிறார். அவர் தான் வந்து பரிமாறினார்.

“சாம்பு தாத்தா, எல்லாம் தான் டைனிங் டேபிளில் ஹாட் பேக்கில் இருக்கிறதே. நானே எடுத்து சாப்பிட்டுக் கொள்வேன். நீங்கள் போய் படுத்துக் கொள்ளுங்கள்” என்றான் சபரீஷ்.

“இருக்கட்டும் தம்பி, உங்கள் உழைப்பில் நாங்கள் இத்தனை பேர் சாப்பிடுகிறோம், செய்து வைத்த சமையலை உங்களுக்குப் பரிமாறினால் ஒன்றும் கஷ்டப்பட்டு விட மாட்டோம்”

“தாத்தா, நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா?” என்று கேட்ட சபரீஷ் அந்தப் பெரியவரின் கையைப் பிடித்துக் கொண்டான்.

“நாங்கள் எல்லோரும் சாப்பிட்டு விட்டோம் தம்பி, நீங்கள் சாப்பிடுங்கள்” என்றார்  அவர் குரல் கம்ம.

“தாத்தா, இன்று என் அறையில் வந்து என்னுடன் படுத்துக் கொள்கிறீர்களா? எனக்கு இன்று உங்களோடு பேசிக்கொண்டே தூங்க வேண்டும் போல் இருக்கிறது” என்றான் சபரீஷ்.

இப்படி சபரீஷ் கூப்பிடுவது அவருக்குப் புதிதல்ல. சில நேரம் கருத்திருமனையும் அழைத்து வந்து பேசிக்கொண்டே தூங்குவது வழக்கம். அதனால் அவன் அறையில் இவன் கட்டிலோடு, சற்றுத் தள்ளி இன்னும் ஒரு ஒற்றை ஆள் கட்டிலும் இருக்கும்.

சாம்பசிவம் தன் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு  “தம்பி, நான் ஒன்று சொன்னால் தப்பாக நினைக்க மாட்டீர்களே. சமையல்காரனை நம்மோடு சமமாகப் படுக்க வைத்தால்  அவன் நமக்கே புத்தி சொல்கிறானே என்று நினைக்க மாட்டீர்களே?”  என்றார். 

தன் அறைக் கதவைத் தாளிட்ட சபரீஷ்வர், “உங்களைப் போய் தப்பாக நினைப்பேனா தாத்தா. நான் எப்போதுமே உங்களை சமையல்காரராகப் பார்த்ததில்லை. என் அம்மாவின் மேல் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்தவர் நீங்கள் .நீங்கள் எனக்கு சாப்பாடு போடும் போது, என் அம்மாவைத் தான் பார்க்கிறேன். நீங்கள் மனம் திறந்து பேசுங்கள் தாத்தா” என்றான்.

“தம்பி, நீங்கள் சீக்கிரம் நல்ல பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும். இவ்வளவு பெரிய செல்வந்தரான நீங்கள் யாருமற்ற அனாதை போல் ஏன் வாழ வேண்டும்?”

திருமணம், அநாதை என்ற வார்த்தைகள் கேட்டவுடன், அவன் மனம் கிருத்திகாவை நினைத்தது.

‘கிருத்திகா தன் மனைவியாக இருந்து, அவளைப் போல ஒரு அழகான குழந்தை, அதுவும் பெண் குழந்தை தன் வாழ்வில், வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?’ என்று எண்ணினான்.

கல்யாணமே இல்லை, மனைவியுமில்லை. அதற்குள் குழந்தைக்கு ஆசைப்படும் தன்னைப்போல் முட்டாள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று தனக்குள் நினைத்து சிரித்து கொண்டான்.

கொஞ்ச நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்து விட்டுப் பிறகு இருவரும் தூங்கினர்.

மறுநாள் காலை எழுந்து கொள்ளும் போதே மிக உற்சாகமாக இருந்தான் சபரீஷ்.

பெரியப்பாவும், சித்தப்பாவும் அவர்களுக்கு ஏதாவது தேவையென்றால் தான் இவனிடம் வருவார்கள், மற்றபடி போய்க் கொண்டே இருப்பார்கள். சில நேரங்களில் சபரீஷ்வரனுக்கே அது மிக விந்தையாக இருக்கும். நம் வீட்டில் இருந்து கொண்டு  நம்மைப் பற்றித் துளியும் கவலைப்படாமல், அக்கறைக் கொள்ளாமல் எப்படி இருக்க முடிகிறது என்று ஆச்சர்யப்படுவான்.

சாம்புத் தாத்தா காலை ஏழு மணிக்கெல்லாம் சூடாக ஆவி பறக்கும் இட்லியும், பொங்கலும், சாம்பாரும், சட்னியும்  கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்தார்.

டிபன் சாப்பிட்டு விட்டு காலை எட்டு மணிக்கெல்லாம் கிளம்பும் சபரீஷ்வரை, எல்லோரும் அவரவர் அறையிலிருந்து ஆச்சர்யத்துடன் கவனித்தனர்.

வழியில் சில முக்கியமான நபர்களுடன் புளூ டூத் மூலம் போனில் பேசிக் கொண்டே கிண்டி எஸ்டேட்டில் உள்ள தன் அலுவலகத்திற்குப் போய் சேர்ந்தான். மணி எட்டரை தான் ஆகியிருந்தது.

வழக்கமாக காலை ஒன்பது மணி முதல் பதினோரு மணிக்குள் வரும் தங்கள் முதலாளி எட்டரை மணிக்கே வந்தது அந்த ஆபீசில் உள்ள கீழ் மட்டத் தொழிலாளிகளுக்கு  மிகுந்த வியப்பைத் தந்தது.  கொஞ்ச நேரத்தில் கருத்திருமனும் வந்து அமர்ந்து கொண்டார்.

மேலும் சற்று நேரத்திற்கெல்லாம் தனித்தனிக் கார்களில் கம்பெனி ஆடிட்டர்கள் மூவரும், வக்கீலும் வந்தனர். இன்று ஏதோ விசேஷம், என்னவென்று  தெரியவில்லையே  என்று நினைத்துக் கொண்டனர் மற்ற அலுவலர்கள்.

அலுவலகத்தில் வேலை செய்யும் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக வந்து பத்து மணிக்கு ஆபிஸ் நிறைவாக இயங்கத் தொடங்கியது. கிருத்திகாவும் வந்து ரெஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டு விட்டுத் தன் இருக்கையில்  அமர்ந்தாள்.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் எம்.டி. சபரீஷ்வரின் அறையிலிருந்து இன்டர்காம் மூலம் அவளுக்கு அழைப்பு. வழக்கமாக சுடிதரில் வரும் அவள் அன்று புடவையில் வந்திருந்தாள்.

கடல் பச்சை நிறத்தில் மெல்லிய ஜார்ஜெட் புடவை. உற்றுப் பார்த்தால் மட்டும் தெரியும் அதே நிறத்தில் செல்ப் டிசைன்ட் புடவை. அதே நிற ஜாக்கெட். ஜாக்கெட்டின் கைகளின் ஓரங்களில் முத்தாலும், மணியாலும் அலங்காரம்.

சுருண்ட அவள் தலைமுடியை அடக்கி, இழுத்து ஒற்றைப் பின்னலாய் போட்டிருந்தாள். அதன் அடர்த்தி தாங்காமல் இவள் ஒடிந்து விழுந்து விடுவாள் போல் இருந்தாள்.

கிருத்திகாவின் பக்கத்து ஸீட்டில் இருந்த வயலட் அவள் பின்னலைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். பின்னல் இழுத்துப் போடப்பட்டிருந்தாலும் அடங்காமல் நெற்றியிலும், இரண்டு காதுகளின் பக்கங்களிலும் முடி சுருளாகத் தொங்கிக் கொண்டிருந்தது. 

பின் கழுத்திலும், பின்னலின் இரண்டு பக்கங்களிலும் ஸ்பிரிங் போல் முடி தொங்கிக் கொண்டிருந்தது. அந்த முடியின் கருமையினால் அவள் கழுத்தின் வெள்ளை நிறம் இன்னும் தூக்கலாகத் தெரிந்தது. போதாததற்கு மல்லிகைப் பூச்சரம் வேறு ஹேர் பின்னிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது.

“ஹேய், ஜி.எம். ரூமிலிருந்து கால் வந்திருக்கிறது. ஓடாதே, புடவைத் தடுக்கி கீழே விழுந்து விடுவாய்” என்று மற்றொரு தோழி மும்தாஜ் கலாட்டா செய்தாள். எல்லோருக்கும் சிரிப்பையே விடையாக்க் கொடுத்து சபரீஷ்வர் அறைக்குள் நுழைந்தாள் கிருத்திகா.

அவள் சிரித்த முகமும், கட்டியிருந்த புடவையும், இழுத்துப் போடப்பட்டிருந்த பின்னலும், அதிலிருந்து தொங்கும் ஸ்பிரிங் போன்ற சுருண்ட முடியும், மல்லிகைப்பூவும் சபரீஷைப் பைத்தியமாக அடித்தது.

அவளையே உற்றுப் பார்த்தவன், தன் உணர்ச்சிகளை வெளியில் காட்டாது, “இன்று காலை  பதினோரு மணிக்கு ஒரு மீட்டிங், ஞாபகம் இருக்கிறதா?” என்றான்.

“எஸ் ஸார், எல்லா ரெஜிஸ்டரகளையும் ஆடிட் செக்‌ஷன் இன்ஸ்பெக்‌ஷன் ரிப்போர்ட்டையும் எடுத்து வைக்கட்டுமா ஸார்?”  என்றாள் பணிவான குரலில்.

கருத்திருமன் மட்டும் வியப்புடனும், லேசான புன்னகையுடனும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார். எல்லா ரெகார்டுகளையும் எடுத்து அவன் டேபிள் மேல் வைத்தவள், இளங்கோவின் அலுவலகத்தின் லாபக்கணக்கு காட்டிய பதிவேடுகள் ஒருபுறமும், நஷ்டக்கணக்கு காட்டிய பதிவேடுகள் மற்றொரு பக்கமுமாக வைத்தாள்.

அவளுடைய இன்ஸ்பெக்‌ஷன் ரிப்பொர்ட்டையும் தனித்தனி பேடில் வைத்து டேபிள் மேல் வைத்து விட்டு ஓர் ஓரமாக நின்றாள்.

“நாங்கள் இதைப் படித்து டிஸ்கஸ் செய்து விட்டுப் பிறகு கூப்பிடுகிறோம். அதுவரை நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று நாசுக்காக அவளை அவள் இருக்கைக்குப் போகச் சொன்னான்.

கிருத்திகாவும் வந்து தன் இருக்கையில் அமர்ந்தாள். சபரீஷின் நடவடிக்கையும், கூட இருந்த ஆடிட்டர்கள், வக்கீல் ஆகியோரின் நடவடிக்கைகளும் கிருத்திகாவிற்கே மிகவும் டென்ஷன் உண்டாகியது.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ‘டக் டக்’கென்று ஷூக்கள் ஒலிக்கக் கோட்டும், சூட்டுமாய் உள்ளே நுழைந்தான் இளங்கோ. எரித்து விடுவது போல் கிருத்திகாவைப் பார்த்துக் கொண்ட சபரீஷின் அறைக்குள் நுழைந்தான்.

(தொடரும் – திங்கள் தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வைராக்கியம் ❤ (பகுதி 2) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

    எங்கிருந்தோ வந்தான் (குறுநாவல்) – ✍ நாமக்கல் எம்.வேலு