in

வைராக்கியம் ❤ (பகுதி 2) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

வைராக்கியம் ❤ (பகுதி 2)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1

தன் சிறு வயதிலிருந்தே சினிமாவின் மீதும், கேமராவின் மீதும் தீராத தாகம் கொண்டவன். அவர்கள் வீட்டின் ஓர் அறையை திரைகள் கொண்டு முழுதும் இருட்டாக்கி, கேமராவின் உதவியோடு ஃபிலிம் ரோல்களை ஓடச் செய்து, அதற்கு பின்னாலிருந்து டார்ச்சின் வெளிச்சம் கொண்டு வெள்ளைச் சுவற்றில் ஒளியூட்டி, எல்லா குழந்தைகளுக்கும் ஒளிப்படங்களை ஓடவிட்டு காண்பிப்பான் மதன்.

மதனின் பெற்றோரும் அவன் ஆர்வத்தைத் பார்த்துவிட்டு, ஏதோ நல்ல விஷயத்தை முயற்சி செய்கிறான் என்று விட்டு விட்டார்கள். எல்லோரிடமும் அதற்கென ஐந்து பைசா என வசூல் செய்து, படம் போட்டு காண்பிப்பதற்குத் தேவையான ஃபிலிம் ரோல்கள், டார்ச் செல் போன்றவற்றை வாங்கிக் கொள்வான் மதன்.

இருவரும் ஓடி வருவதைப் பார்த்த ரகு, “எங்கே போய்ட்டு சுத்தீட்டு வரீங்க?” என்று கேட்க, திருதிருவென புவனா நந்தினியைப் பார்த்தாள்.

“மதன் வீட்டுக்கு போயிருந்தோம்ப்பா. நிறையபேர் சேர்ந்து தான் போனோம். அவனே ஃபிலிம்ரோல்’லாம் ரெடி பண்ணி படம் காமிப்பான்னு எல்லாரும் சொன்னாப்பா. அதுதான் புவனாவுக்கும் சினிமான்னா பிடிக்குமேன்னு கூட்டீண்டு போனேன்” என்று பயப்படாமல் சொன்னாள் நந்தினி.

நந்தினி, ரகுவின் நான்காவது மகள். எப்போதும் தாவணிப் பாவாடையில் நேர்த்தியாய் இருக்கும் நந்தினி, நேர் வகிடு எடுத்து அழகாய்ப் பின்னிய கூந்தலில், வீட்டில் பூத்த குண்டு மல்லிப்பூவை அளவாய்ச் சூடிக்கொண்டு, மஞ்சள் பூசிய முகத்தில் வட்ட நிலவாய் அரக்குக்கலர் சாந்துப் பொட்டும், நெற்றியில் அழகாய் சந்தனக் கீரலும், காதில் ஜிமிக்கியும், காலில் கொலுசுமாய் எப்போதும் கலகலவென இருப்பாள்.

எதையும் மனதுக்குள் வைத்துக் கொள்ளும் பழக்கம் இல்லாதவள். நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் அப்படியே எல்லோரிடமும் பேசி விடுவாள். நல்லவள், ஆனால் பிடிவாதக்காரி.

“எதுக்கு இன்னொருத்தர் வீட்டுக்குப் போய் விளையாடப் போனேள்? வீட்டுக்கு வெளிய தான் விளையாடனும்னு சொல்லி இருக்கேனா இல்லையா?” என்று கோபத்துடன் ரகு கேட்க

“மதன் ரொம்ப நல்ல பையன்பா. இங்க நிறைய பசங்களுக்கு படம் போட்டு காமிப்பான். எங்களுக்கும் படம் பாக்க ஆசையா இருந்தது. அது தான் நீ நொறுக்குத்தீனி வாங்கிக்க குடுத்த காசில் படம் பாக்க போனோம். அதுவும் நீ கூப்பிடவும் பாதியில் அப்படியே வந்துட்டோம்” என்றாள் நந்தினி.

“குழந்தைங்க பாவமேன்னு நொறுக்குத்தீனி வாங்கிக்க காசு குடுத்தா, படமா பாக்கறீங்க?” என்று கண்டித்த ரகு, “என்னவாவே இருந்தாலும் ஆத்துக்குள்ள விளையாடுங்கோ. இன்னொருத்தர் ஆத்துக்குப் போய் விளையாடுறது, அடுத்தவா வாயில விழுந்து ஏந்துக்கறது, இதெல்லாம் வேண்டாம். புரிஞ்சுதா?” என்று கடிந்து கொண்டவர்

பின்பு கொஞ்ச நேரம் கழித்து மனது கேட்காமல், “மைதிலி, வாங்கின வாழைக்காயில குழந்தேளுக்கு பஜ்ஜி போட்டு குடு” என்று சொல்ல

“பஜ்ஜியும் வேண்டாம். ஒன்னும் வேண்டாம். தப்பு பண்ணாம நீ திட்டுவ. நான் வாங்கிக்கணுமா? நீ எனக்குன்னு குடுத்த காசுல தான செலவு பண்ணினேன். அதுல என்ன தப்பு? எனக்கு செலவு பண்ண உரிமையில்லையா? எவ்வளவு பெருசா வளர்ந்தாலும் திட்டுவயா? உன்னை கேள்வி கேட்கக் கூடாதா? நான் கேட்பேன்” என்று அப்பாவைக் கேள்வி கேட்டாள் நந்தினி.

“என்ன பெருசா வளந்துட்ட? முழுசா முளைச்சு மூணு இலை விடலை. தப்பு பண்ணினா கண்டித்ததான் செய்வேன். நாளை பின்ன உங்களை யாராவது ஏதாவது சொன்னா என்ன பண்றது? கல்யாணம் ஆகறவரைக்கும் இப்படித்தான் இருக்கணும்னு இருக்கு. இப்படிதான் வாழனும்னு வாழறது ஒரு வாழ்க்கை. எப்படி வேணாலும் நாம வாழலாம்னு வாழறது ஒரு வாழ்க்கை. நான் முதல் ரகம். என் குடும்பம் என் பேச்சைக் கேட்டு என்னோடபடிக்கு கௌரவமா இருக்கணும்னு நெனைக்கிறேன்” என்ற ரகு,

“உம்பொண்ணுக்கு கொஞ்சம் புத்தி சொல்லு” என்று மைதிலியிடம் சொல்லி விட்டு, கோபமாக தன் தோளிலிருந்த ஈரழைத்துண்டை உதறி ஈஸி சேரில் போட்டுவிட்டு உடையை மாற்றிக் கொண்டு வெளியே கிளம்பிப் போய் விட்டார்.

“ஏன் நந்தினி இப்படி பண்ற? கொஞ்சம் பொறுமையா தான் உங்க அப்பாகிட்ட பேசேண்டி. என்னைக்கு தான் உனக்கு பொறுமை வருமோ? உங்கப்பா என்ன சொல்ல வர்றார், எதுக்கு சொல்ல வராருன்னே புரிஞ்சுக்காமக் கூட விதண்டாவாதம் பேசீண்டே இருக்கயே” என்ற மைதிலி “சரி சரி… முதல்ல ரெண்டு பேரும் சாப்பிட வாங்கோ” என்று நந்தினியையும் புவனாவையும் அழைத்தாள் மைதிலி.

“எனக்கொன்னும் பசிக்கல, நீயே சாப்பிடு” என்று சொல்லி விட்டுரூமிற்குள் சென்ற நந்தினி, படாரென்று கதவைச் சாத்திவிட்டு படுத்துக் கொண்டாள்.

நந்தினி பிடிவாதக்காரி என்பது மைதிலிக்கு நன்றாகவே தெரியும், எனவே புவனாவிற்கு சாப்பிடக் கொடுத்துவிட்டு அவளை படுக்கச் சொன்னாள் மைதிலி.

சிறிது நேரம் கழித்து வெளியிலிருந்து வீடு திரும்பிய ரகுவிற்கு சாப்பிட பரிமாறிய மைதிலி “ஏன்னா உம்னு இருக்கேள்? நந்தினியப் பத்தி உங்களுக்குத் தெரியாததா? தெரியாம பேசீட்டா, விடுங்கோண்ணா. மனசுல எதையும் வச்சுண்டு பேச மாட்டா” என்று நந்தினிக்கு பரிந்து பேசி, பிரச்சினைக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைத்தாள்.

“அது சரி. நமக்குத் தெரியும். வெளியில் போய் இப்படி பேசீண்டு இருந்தா, எப்படி பொழப்பா. இவளை நீ கண்டிக்கலன்னா பின்னாடி ரொம்ப கஷ்டப்படுவா பாரு. கொஞ்சம் நல்லதனம் சொல்லிவை” என்றவர், தூங்கச் சென்றார்.

சாப்பிட்டு விட்டு எல்லா பாத்திரங்களையும் தேய்த்தவள், படுக்கப் செல்லும் முன், “நந்தினி… நந்தினி… இந்த பாலையாவது குடிச்சுட்டு தூங்கு” என்று எழுப்பி பாலைக் கொடுக்க, பாலைக் குடித்து விட்டு தூங்கினாள் நந்தினி.

குழந்தைகள் வளரும் வரை குவார்ட்ஸில் குடும்பத்துடன் வசித்து வந்த ரகு, பிறகு கம்பெனிக்கு மூன்று கிலோமீட்டர் தூரத்திலேயே ஒரு வீடு விற்பனைக்கு வர, கஷ்டப்பட்டு அந்த வீட்டை சொந்தமாக வாங்கி சந்தோஷமாகக் குடும்பத்துடன் அந்த வீட்டில் குடியேறினார்.

தன் சேமிப்பு மற்றும் கடன் வாங்கிய பணத்தில் முதல் மூன்று பெண்களுக்கும் திருமணத்தை நல்லபடியாக முடித்திருந்தார் ரகு. பெரிய மகள் ஜானகியைக் கோவையிலும், இரண்டாவது மகள் லலிதாவை சேலத்திலும், மூன்றாவது காயத்ரியை சென்னையிலும் திருமணம் செய்து கொடுத்தார்.

பள்ளிப்படிப்பை மேட்டூரில் முடித்த கணேஷ், கோவையில் தன் பெரிய அக்கா ஜானகி வீட்டில் தங்கி, தன் கல்லூரிப் படிப்பை படித்து முடித்தான். படித்து முடித்தவுடன், கோவையில் ஒரு கம்பெனியில் அத்திம்பேரின் சிபாரிசில் வேலைக்குச் சேர்ந்தவன், மேட்டூரில் அப்பா வேலை செய்யும் கம்பெனியிலேயே அதிகாரிப் பணிக்கு ஆள் எடுப்பது தெரிய வர, தன் சொந்த முயற்சியில் பணியில் சேர்ந்தான்.

மகன் தான் வேலை செய்த கம்பெனியிலேயே அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்தது ரகுவுக்கு பெருமையாகவும், மகன் தலையெடுத்துவிட்டான் வந்துவிட்டான் என்ற நிம்மதியையும் அளித்தது.

கணேஷ், நந்தினி, புவனா மூவருக்கும் இடையே தலா மூன்று வயதே இடைவெளி இருந்தது. கணேஷ் எப்போதும் அவன் படிப்பு, வேலை, நண்பர்கள், வீடு என அமைதியாக இருப்பான். ஆனால் நந்தினியும், புவனாவும் எப்போதும் ஒன்றாக கடைக்கு போவது, விளையாடுவது என இருவரும் சேர்ந்தே இருப்பார்கள்.

மூன்றாவது பெண் காயத்ரியின் புகுந்த வீட்டு சொந்தத்தில் ஒரு திருமணத்திற்காக, ரகுவும், மைதிலியும் சென்னை சென்றார்கள்.

அங்கே காயத்ரியின் மாமனார், “என் தங்கை பையனுக்கு கல்யாணத்துக்கு வரன் பாக்கறா. நம்ம நந்தினிக்கு வரன் பாக்கற எண்ணமிருந்தால் சொல்லுங்கோ. ரெண்டு பேரோட ஜாதகத்தையும் பாத்தூட்டு, மேற்கொண்டு பேசலாம்” என எதேச்சையாக ரகுவிடம் சொல்ல

“இதுவரை நந்தினி கல்யாணத்தைப் பத்தி நெனைக்கல சம்பந்தி. ஆனாலும் உங்களுக்கு இந்த வரன் நன்னா வரும்னு தோணித்துன்னா நானும் ஆத்துல மைதிலி, குழந்தேள்ட்ட பேசீட்டு சொல்றேன்” என்று ஒரு சிறு புன்னகையுடன் சொன்னார் ரகு.

“ஒன்னும் அவசரம் இல்லை. நீங்க ஊருக்குப் போய் நந்தினியின் ஜாதகத்தை அனுப்புங்கோ. இவாளுக்கு இவாதான்ங்கறது கடவுள் போடற முடிச்சு. நம்ம கைல என்ன இருக்கு? நடக்கும்னு ப்ராப்தம் இருந்தா கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கும் ஓய்…” என்றார் காயத்ரியின் மாமனார்.

ஊருக்குத் திரும்பி வந்தவுடன் நடந்த விஷயத்தை கணேஷிடம் சொன்ன ரகு, “நீ என்ன நினைக்கற?” என்று கணேஷிடம் கேட்டார்.

“உங்களுக்கு எது சரின்னு படறதோ, அது மாதிரியே பண்ணிக்கலாம்ப்பா” என்றான் கணேஷ்.

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை. ரகுவும், மைதிலியும் குலதெய்வம் திருப்பதி ஏழுமலையானுக்கு உண்டியலில் காணிக்கையயைப் போட்டு விட்டு எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும் வேண்டிக் கொண்டு, ஜோசியர் சுப்பிரமணியன் வீட்டிற்கு நந்தினியின் ஜாதகத்தை எடுத்துச் சென்றனர்.

“வாங்கோ…” என்று வரவேற்ற ஜோசியர் மனைவி பிரேமா, மைதிலியைப் பார்த்ததும், “நன்னா இருக்கேளா? குழந்தைகள் எல்லோரும் எப்படி இருக்கா?” என்று கேட்க

“ம்… எல்லோரும் சௌக்யமா இருக்கா. நம்ம நந்தினிக்கு ஒரு வரன் வந்துருக்கு. அதுதான் அண்ணாவ பாத்து அது விஷயமா பேசீட்டு போலாம்னு வந்தோம்” என்றாள் மைதிலி.

சுப்ரமணியன் ரகுவின் நண்பரும் கூட. அவரின் பூர்வீகமும் மேச்சேரிக்கு அருகிலுள்ள நங்கவள்ளி கிராமம் தான். இருவரின் பெற்றோரும் அக்ரஹாரத்தில் ஒரே தெருவில் தான் குடியிருந்தார்கள். அதனால் தன் முதல் மூன்று பெண்களின் திருமணத்திற்கும் அவர்களின் ஜாதகங்களை ரகு அவரிடமே பார்த்திருந்தார்.

“வாப்பா… எப்படி இருக்க?” என்ற சுப்ரமணியிடம்

“எல்லாரும் சௌக்யம். நீங்க சௌக்கியமா இருக்கேளா?” என்று நலம் விசாரித்த ரகு

சென்னையில் நடந்ததைப் பற்றி விலாவரியாக அவரிடம் சொல்லி விட்டு, “நந்தினிக்கு கல்யாண யோகம் வந்தாச்சா என்னன்னு உன்னப் பாத்து கேட்டூட்டு போலாம்னு தான் ரெண்டு பேருமா வந்தோம்” என்றார் ரகு.

“நல்லபடியா பாத்துட்டா போச்சு. நம்ம பொண்ணுக்கு பாக்காம யாருக்கு பாக்கப் போறேன்” என்றவர் நந்தினியின் ஜாதகத்தை கைகளில் வாங்கியவுடன், ஸ்வாமியின் பாதத்தில் வைத்து வணங்கி விட்டு எடுத்து ஜாதகத்தைப் பார்த்தார்.

அதற்குள் கொண்டு வந்திருந்த வெற்றிலை, பாக்கு, பழம் தட்சணையைத் தட்டில் வைத்து ரகுவும், மைதிலியும் கொடுத்தார்கள்.

தம்பதிகளாய் தட்டை வாங்கிக் கொண்டவர்கள், “எதுக்கு இதெல்லாம்?” என்று கேட்க

“இது என் நண்பனோட வித்யைக்கான மரியாதை, சரஸ்வதிக்கான மரியாதை. நாம நண்பர்ங்கள்’ங்கறது அப்பறம்” என்று ரகு சொல்ல

“ஆமாமா… ஏதோ ஒரு காரணத்த வச்சுப்ப போ” என்ற சுப்பிரமணியன், “பிரேமா, நாங்க பேசீண்டு இருக்கோம். நீ போய் காஃபி எடுத்துண்டு வா” என்று சொல்ல

“சரிண்ணா…” என்றவள் சமையற்கட்டுக்குச் செல்ல, “நானும் மன்னியோட அஞ்சு நிமிஷம் பேசீட்டு வந்துடறேன்” என்று மைதிலியும் பின் சென்றாள்.

“பெரியவ ஜானகி, கோயமுத்தூர்ல தான இருக்கா?” என்று பிரேமா மாமி கேட்க

“ஆமாம், இப்ப நம்ம கணேஷ் மேட்டூர்லயே வேலை கிடைச்சு இங்கேயே வந்தூட்டான்” என்றாள் மைதிலி.

மைதிலியும் அவர்களின் மூன்று பெண் குழந்தைகளைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள். பிரேமா மாமிக்கு கணேஷை மிகவும் பிடிக்கும். சிறு வயதிலிருந்தே தெரிந்த பையன். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத, பெற்றோரை மதிக்கும் பண்புள்ள கணேஷூக்கு தங்கள் பெரிய மகளைத் திருமணம் செய்துதர வேண்டும் என்று மனதளவில் சுப்ரமணியம் வீட்டில் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அதற்கான வேளை வரும் வரை பொறுத்திருந்து கேட்க முடிவு செய்திருந்தனர்.

பிரேமா, எல்லோருக்கும் காஃபியைக் கொண்டு வந்து கொடுக்க, சிறிது நேரம் ஆசுவாசமாய் பழைய கதைகளை நால்வரும் பேசிக் கொண்டிருந்தனர்.

பிறகு, சுப்ரமணியன் “நேரம் நன்னாயிருக்கு. ஜாதகத்தைப் பாத்தூடலாம் வாங்கோ” என அழைக்க, ஒருபுறம் ரகுவும், மைதிலியும் உட்கார, எதிரில் சுப்ரமணியன் உட்கார்ந்து ஜாதகத்தைப் பார்த்தவர், சில நிமிடங்கள் கைகளை அசைத்து மனதில் கணக்குகளை ஆழமாக அசை போட்டுக் கொண்டவர், தான் வைத்திருந்த காகிதத்தில் அதை எழுதிக் கொண்டார். பிறகு ரகுவைப் பார்த்து தான் கணித்ததைச் சொல்ல ஆரம்பித்தார்.

”பொண்ணுக்கு குருபலன் வந்தாச்சு. மனசுக்கு பிடித்த மாதிரி கணவன் அமைவான். ஆனா எப்பவும் கலகலன்னு வீட்டை சந்தோஷமா வச்சுக்கும் அவளோட வாழ்க்கை நிறைய போராட்டங்கள் நெறஞ்சதா தான் இருக்கும்” என ஜோசியர் சொல்ல

“அப்போ… இப்போதைக்கு கல்யாணம் பண்ணாம இருந்துட்டா, அந்த கஷ்டத்திலிருந்து எம்பொண்ணு தப்பிச்சுடுவால்ல?” என்று அப்பாவியாய் ஒரு அப்பாவின் ஸ்தானத்திலிருந்து கேட்டார் ரகு.

(தொடரும் – ஞாயிறு தோறும்)  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    டீ தட்டை (சிறுகதை) – ✍ சுதா திருநாராயணன்

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 2) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை