in

வைராக்கியம் ❤ (பகுதி 4) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

வைராக்கியம் ❤ (பகுதி 4)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2    பகுதி 3

முதன்முறையாக மறுபேச்சு பேசாமல் “சரிம்மா” என்றவளுக்கு, அம்மா சொன்ன வார்த்தைகள் மனதில் வந்து போனது.

‘கல்யாணம் ஆகற வரைக்கும் அப்பாவ நெறைய நெனச்சுப்போம். ஆனா கல்யாணம் ஆன பின்னாடிதான் அம்மாவோட அருமை புரியும். நெறைய நெனச்சுப்போம். உண்மைதான்’ என்று நினைத்துக் கொண்டே கார்த்திக்கை எழுப்பப்போனாள்.

கார்த்திக்… இப்பொழுதுதான் அவனை ஆழமாக பார்த்தாள். மாப்பிள்ளை ஃபோட்டோ என்று அப்பா காண்பிக்கும் போது கூச்சமாக இருந்ததால் அதிக நேரம் ஃபோட்டோவை பார்க்கவில்லை. இப்போதுதான் ஆசை தீர பார்க்கிறாள்.

களையான முகம். அலைஅலையாய் அடர்வாய் தலைமுடி. ஐந்தரை அடிக்கு குறையாதிருந்தான்.

“நான் நானாக இருக்க விரும்புகிறேன்” என்ற எதார்த்தமான அந்த பேச்சு, ஏனோ அவளுக்கு அவனை பிடித்தே போனது.

எதேச்சையாக சோம்பல் முறித்து முழித்தவன், அவள் அவனையே உற்று நோக்குவதைப் பார்க்கவும், கையிலிருந்த டவலை கீழே போட்டவள், “அ…ம்..மா…இல்ல…நா…ன்…உங்களை… எழுந்து குளிச்சுட்டு சாப்பிட வரச் சொன்னா” என்று ஒருவாறு உளறியபடி சொல்லி முடித்தாள்.

“ம்….” என்றவன், “என்ன?” என்றான்.

“ம்…. ஒண்ணுமில்லை…. டவல்” என்று கீழே விழுந்த புதுடவலை அவனிடம் கொடுத்து விட்டு நிற்காமல் ஓடிவிட்டாள் நந்தினி.

காதலித்து திருமணம் செய்தவர்கள், பெரியவர்கள் பார்த்து திருமணம் செய்வதில் என்ன திரில் இருக்கிறது என்கிறார்கள்.

பேசிப்பழகி விட்டால் கூட திருமணத்தில் ஒருவருக்கொருவர் புதுமுகமாகத் தெரியாது. ஆனால் பெற்றோர் பார்த்து செய்யும் திருமணங்களில், உங்களுக்கென ஒருவரைப் பார்த்து நிச்சயம் செய்து திருமணம் செய்யும் போது, அறிமுகமாவதிலிருந்து பழகும் வரை இருக்கும் நாட்களே கனிந்து வரும் காதல் நாட்கள்.

வித்தியாசமான குணங்கள் கொண்ட இருவரும் விட்டுக் கொடுத்து வாழ்க்கையில் கடைசிவரை ஒன்றாக பயணிப்பதே இல்லறம். அதை எல்லோரும் எப்படி கையாள்கிறார்கள் என்பதில் தான் அது இனிக்கும் இல்லறமா, இல்லையா என்பது தீராமானிக்கப்படுகிறது.

நல்லபடியாக எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் தாம்பூலம் கொடுத்து, மணமக்கள் இருவரையும் எல்லோரும் ஆசீர்வாதம் செய்து அவர்கள் புகுந்த வீட்டு சொந்தங்களுடன் வேனில் அனுப்ப, பிறந்த வீட்டு பக்கம் சார்பாக நந்தினியின் அத்தை சௌந்திராவும், அவள் கணவரும் உடன் சென்றனர்.

கிளம்பும் முன் கண்ணீரோடு எல்லோரையும் ஆரத்தழுவிக் கொண்டவள், புகுந்த வீட்டு சொந்தங்களுடன் வேனில் ஏறிக் கொள்ள, மேட்டூரை விட்டு அதுவரை வெளியே செல்லாத நந்தினிக்கு, வாழ்வில் பல திருப்பங்கள் காத்திருந்தன.

சுந்தரேசன், சீதாலட்சுமி தம்பதி பையனையும், மாட்டுப் பெண்னையும் ஆரத்தி எடுத்து வரவேற்க தயாராக இருக்கச் சொன்னதால், சேலத்தில் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்த கையோடு, மண்டபத்திலிருந்து பெரிய மகன் பாலுவும், நாட்டுப்பெண் மதுவும் மணமக்களை வரவேற்பதற்கான ஏற்பாட்டைச் செய்ய உடனே சிதம்பரம் சென்று விட்டனர்.

வயலில் இருந்து ஒரு நாற்றை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ஊன்றியது போல பள்ளிக்கூடம், வீடு, கடைத்தெரு என இதைத்தாண்டி, அங்குள்ள மக்களைத் தாண்டிப் போகாத நந்தினிக்கு, திருமணம் முடிந்து மேட்டூரிலிருந்து வேனில் சிதம்பரம் சென்று இறங்கியதும், இவர்கள் இருந்த அக்ரஹார அமைப்பே வித்தியாசமாகத் தோன்றியது.

புதுப்புது சொந்தங்கள். நலம் விசாரிப்புகள். அக்ரஹாரத்தில் எல்லோரும் இவர்களை வரவேற்க காத்திருந்தார்கள். நந்தினிக்கு எல்லாமே புதிதாக இருந்தது.

பெரிய நாட்டுப்பெண் மது, ஆரத்தி கரைத்து எடுத்து வர, ஆரத்தித் தட்டை கைகளில் வாங்கிய மாமியார் சீதாலட்சுமி ஒரு பக்கமும், மற்றொரு பக்கம் பெரிய நாட்டுப்பெண் மதுவும் ஆரத்தி எடுத்து வரவேற்று, இருவரையும் வலது கால் எடுத்து வைத்து வீட்டிற்குள் வரச் சொன்னார்கள்.

உடனே சீதாலட்சுமி மாமி, தன் இரண்டாவது மாட்டுப்பெண் ஆர்த்தியிடம், “நந்தினி, கார்த்திக் இருவரையும் ஹாலில் இருக்கும் ஊஞ்சலில் உட்காரவை ஆர்த்தி. அதுக்குள்ள நான் சமையல்கட்டுக்குப் போய் பாலும், பழமும் எடுத்துண்டு வரேன்” என்று சமையற்கட்டுக்குச் சென்றாள்.

பொண்ணு மாப்பிள்ளையைப் பார்க்க வந்தவர்களை வரவேற்று, ஜமக்காளத்தில் உட்கார வைத்தாள் ஆர்த்தி.

மணமக்கள் இருவரும் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டிருக்க, “பொண்ணு ரொம்ப இலட்சணமா இருக்கா. பையன் விளையாட்டுதனமா இருந்தாலும், சீதாமாமி நல்ல பொண்ணா பார்த்து வலைபோட்டுதான் புடிச்சுருக்காடி” என்று அக்ரஹார அக்கம்பக்கத்து மாமிகள் பேசிக் கொண்டனர்.

அக்ரஹாரத்தில் சீதா மாமியைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். சொந்தமாக ஹோட்டல் தொழில் செய்து கொண்டு, ஒரு நல்ல மதிப்புள்ள குடும்பமாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

சுந்தரேசன், சீதா மாமிக்கு மூன்று மகன் மற்றும் ஒரு மகள். மகள் இந்து, திருமணமாகி நெய்வேலியில் குடித்தனம் பண்ணிக் கொண்டிருக்க, பெரியவன் பாலு, இரண்டாமத்தவன் சீனு இருவரும் தந்தையோடு சேர்ந்து ஹோட்டலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

டிகிரி முடித்த கார்த்திக், தனியாகத் தொழில் செய்யப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு ஃப்ரெண்ட்ஸுடன் சேர்ந்து அரிசிக்கடையும், பூஜை பொருட்கள் கடையும் நடத்தி வந்தான்.

எப்படியாவது கார்த்திகை நல்லநிலைக்கு கொண்டு வந்துவிடவேண்டும் என பெற்றோர்கள் நினைத்துக கொண்டிருந்தார்கள்.

ஆனால் கார்த்திக்கின் கூட்டுத் தொழில் நஷ்டமானதால், கார்த்திக் ஆசைப்பட்டபடி தனியாக, ஒரு பூஜைக்கடை ஒன்றை ஆரம்பித்து வைத்துக் கொடுத்தவர்கள், “நல்லா தொழில கவனிச்சு அப்படியே அரசாங்க உத்தியோகத்துக்குப் போற வழியைப் பாருப்பா” என்றார் அப்பா சுந்தரேசன்.

கடையை நல்லபடியாக கார்த்திக் நடத்தி வர, கையோடு பெண் பார்த்து கல்யாணத்தை செய்து வைத்து கார்த்திக்கைப் பொறுப்புள்ளவனாக மாற்றவே உடனடியாக கல்யாணத்தையும் பேசி முடித்தனர்.

ஊஞ்சலில் இருவரையும் கல்யாணக் கோலத்தில் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரேசனுக்கு மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

‘இனியாவது வெளியே அடிக்கடி சுத்தாமல் வீடு, பெண்டாட்டின்னு பொறுப்பா இருந்தா சரி’ என மனதில் வேண்டிக் கொண்டவர், “சீத்தம்மா, வந்தவா எல்லோரும் பசங்களுக்கு பாலும், பழமும் கொடுத்ததுக்கப்பறம் ரெண்டு பேருக்கும் ஆரத்தி எடுத்தூடு” என்று சொல்ல, “சரின்னா” என்றாள்.

வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், ரவிக்கை என மது வந்தவர்கள் எல்லோருக்கும் தாம்பூலம் எடுத்து வைக்க இந்துவும், ஆர்த்தியும் அதனைத் தாம்பூலக் கவரில் போட்டு உதவி செய்ய, பத்து நிமிடத்தில் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு மூவரும் ஹாலுக்கு வந்தனர். 

முதலில் சீதாலட்சுமி இருவருக்கும் பாலும், பழமும் கொடுக்க, பின் இந்து, மது, ஆர்த்தி மற்றும் வந்திருந்த அனைவரும் மணமக்களுக்கு பாலும், பழமும் கொடுத்தனர்.

கூட்டத்தில் இருந்தவர்களில் ஒரு மாமி “பாக்யாத லட்சுமி பாரம்மா” என வீட்டுக்கு வந்த மகாலட்சுமி நந்தினியை வரவேற்று பாடிக் கொண்டிருந்தாள்.

எல்லோரும் பாலும் பழமும் கொடுத்தவுடன் மங்களம் பாடி ஆரத்தி எடுக்க, வந்திருந்த அனைவரும் தாம்பூலம் வாங்கிக் கொண்டு கிளம்பினார்கள்.

“இந்து, நீ நந்தினியை கார்த்திக் ரூமிற்கு கூட்டீண்டு போய் ரெஸ்ட் எடுக்கச் சொல்லு. மீதி வேலையை அப்பறமா பாத்துக்கலாம்” என்றாள் சீதா மாமி.

சுந்ததரேசனும், சீதாலட்சுமி மாமியும் தன் பெண்ணையும், மாட்டுப்பெண்களையும் ஒன்று போல் பார்ப்பவர்கள். அதனால் தான் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தாலும் தொழிலையும் பார்த்துக்கொண்டு, குடும்பத்தையும் பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொள்ள முடிந்தது.

நந்தினி ஐவரோடு பிறந்திருந்தாலும், அவள் வளர்ந்த, வாழ்ந்த சூழ்நிலை வேறு. கம்பெனி குவார்ட்டர்ஸ் வாழ்க்கை. வீடு சின்னதாக இருந்த போதும் வசதிகள் அதிகம். நிறைய வீடுகள். எல்லோரும் அப்பாவுடன் வேலை செய்தவர்கள். பிறகு இருந்தவீடோ சொந்த வீடு. தனி வீடு.

இங்கு இவர்களின் வீடு, அக்ரஹாரத்தின் நடுவே இரண்டு கட்டு வீடு. கொல்லைப்புறத்தில் கிணறு இருந்தது. வாசல் திண்ணையைத் தாண்டி தாழ்வாரத்தின் வழியே உள்ளே வந்தால், வீட்டின் நடுவே முத்தம், இடது பக்கம் கூடம், கூடத்திலிருந்து நேராய் உள்ளே சென்றால், ஸ்வாமி அறை அதைத் தாண்டி சமையற்கட்டு.

வலது பக்கம் மூன்று மகன்களுக்கான அறைகள், கூடத்திலிருந்து ஒரு பக்கம் சுந்தரேசன், சீதா மாமியின் அறை என தனித்தனி அறைகள் இருந்தன. முத்தத்திற்கு நேர் பின்பக்கம் கொல்லைப்புறம் போகும் வழி. பின்னால் வீட்டிற்கான கிணறு ஒரு புறம், ஒரு புறம் தண்ணீர் தொட்டி. வாழை மரங்கள், மருதாணிச்செடி, கருவேப்பிலைச் செடிகள். அப்படியே நடந்தால் வரும் மரக்கதவுக்குப் பின்னால் குறுகலான பத்தடி. பின்பு அடுத்த தெருவிற்கான ரோடாக இருந்தது.

நந்தினிக்கு வீட்டின் அமைப்பும், புதிய சொந்தங்களும் சற்று வித்தியாசமாகவே இருந்தது.

சுந்தரேசன் என்றும் போலில்லாமல் மிகவும் சந்தோஷமாக இருக்க, “ஏன்னா, ரொம்ப சந்தோஷமா இருக்கேள் போலிருக்கே?” என சீதா மாமி கேட்க

“சின்னவனைப் பத்தின கவலை தான் இவ்வளவு நாளா இருந்தது. அது கொஞ்சம் குறைஞ்சாப்புல இருக்கு. இவனும் நல்லபடியா செட்டில் ஆயிட்டா, நாம நிம்மதியா இருக்கலாம் சீதா” என்றார் சுந்தரேசன்.

“கல்யாணமாயிடுத்துல்ல. எல்லாம் கொஞ்சநாளில் சரியாயிடும்” என்று சீதா மாமி சொல்லவும்

“என்னமோ நீ சொல்றமாதிரி நடந்தா சரிதான். இல்லண்னா அந்த குழந்தை நந்தினி தான் பாவம். நல்ல பொண்ணு. பெரிய குடும்பத்துல இருந்து வந்திருந்தாலும், இடம் மனுஷா எல்லாம் புதுசு. கொஞ்சம் பாத்துக்கோ சீதா” என்றார் சுந்தரேசன்.

“சரின்னா. நான் பாத்துக்கிறேன்” என்ற சீதாலட்சுமி மாமி நந்தினியின் ரூமிற்கு வந்தாள். தன் துணிகளை கார்த்திக்கின் பீரோவில் அடுக்கிக் கொண்டிருந்தாள் நந்தினி.

“வாங்கோம்மா” என்ற நந்தினி, “கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பேனேம்மா” என்றாள். 

அதெல்லாம் ஒண்ணும் இல்ல. சும்மா தான் வந்தேன் என்ற சீதாலட்சுமி மாமி, ”நீ உன் வீட்டில இருக்கிற மாதிரியே நிம்மதியா இரு நந்தினி. பிறந்த வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு வந்து பழகுவது ரொம்ப கஷ்டம் தான். பொறந்தாத்துல எல்லாரோட ஞாபகமும் வந்துண்டே இருக்கும். கார்த்திக்கிற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்காத்துக்கு கூட்டீண்டு போகச் சொல்றேன், சரியா?” என்றவள்

“ஒரு வாரம் போனா நம்மாத்து வீட்டு விதம், வேலை எல்லாம் உனக்கு பழகிடும். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பொறந்தாத்துக்குப் போனா, வீட்டை விட்டுட்டு வந்தா அவருக்கு கஷ்டமா இருக்கும்ன்னு நீயே உன் அம்மாகிட்ட சொல்லுவ. பெண்ணின் படைப்பு அப்படி. சரி சரி… நீ துணியை எடுத்து வை நந்தினி. நான் அப்பறம் வரேம்மா” என்று சொல்லி விட்டு சீதா மாமி கிளம்பினாள்.

எல்லோரிடமும் சகஜமாக நந்தினி பேசுவாளே தவிர, மனதுக்கு பிடித்தால் மட்டும் தான் ஆத்மார்த்தமாக பேசுவாள்.

இங்கு வந்து எல்லோரிடமும் பழகியதில் நாத்தனார் இந்து, தங்கை புவனாவைப் போல ஆத்மார்த்தமாக பழக, நந்தினிக்கு நெருக்கமானாள்.

கார்த்திக் திருமணத்திற்கு ஒரு வாரம் லீவு போட்டு விட்டு வந்திருந்த இந்துவும், மாப்பிள்ளையும் மூன்று நாட்கள் இருந்து விட்டு லீவு முடிந்து கிளம்பத் தயாராக, “இந்து…. நீ இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு ஊருக்கு போயேன்” என்றாள் நந்தினி.

“சரி… நீ நந்தினியோடு ஒரு வாரம் இங்க இருந்துண்டு வா. நான் ஒரு வாரம் பாத்துக்கிறேன்” என்ற சுரேஷ் இந்துவிடம் சொல்லிக்கொண்டு நெய்வேலிக்கு கிளம்பிப் போனார்.

மூன்று மாட்டுப்பெண்களும் ஆளுக்கொரு வேலை என பிரித்துக்கொண்டு மாமியார் வீட்டில் வேலை செய்ய, நந்தினியின் தினசரி வாழ்க்கை அழகாக நகர்ந்து கொண்டிருந்தது.

வெளிப்பார்வைக்கு எல்லோர் முன்னும் சந்தோஷமாக இருந்தாலும், கார்த்திக்கும், நந்தினியும் பேரளவுக்கே அந்யோன்ய தம்பதிகளாக இருந்தார்கள்.

காலையில் எழுந்ததும் காஃபி, டிபன் சாப்பிட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் மூன்று மணி போல சாப்பிட வருவான் கார்த்திக். வர லேட்டானால் நந்தினிக்கு ஃபோன் பண்ணி சொல்லி விடுவான். 

‘சரி… கடையில் வேலை இருப்பதால் வர லேட்டாகிவிடும்’ என நினைத்துக் கொள்வாள் நந்தினி. பொதுவாக அவன் வெளியே நடப்பவற்றை நந்தினியிடம் பெரிதாக சொல்லிக் கொள்ளமாட்டான். இவளும் வீட்டிலிருக்கும் வேலைக்கு நடுவே அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

(தொடரும் – ஞாயிறு தோறும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அதெல்லாம் பார்த்தா முடியுங்களா? (ஒரு பக்க கதை) – ✍ வளர்கவி, கோவை

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 4) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை