in

வைராக்கியம் ❤ (பகுதி 3) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

வைராக்கியம் ❤ (பகுதி 3)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2

சிரித்த ஜோசியர், “எல்லாமும் மனுஷனே முடிவு பண்ணி வாழ்ந்துட்டா, கடவுள் எதுக்கு சொல்லு? அவாஅவா வாழ்க்கைய அவாஅவா தான் வாழணும். கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு உங்க கடமையை நீங்க பண்ணுங்கோ. மத்தத அவர் பாத்துப்பார்” என்று சொன்னார்.

கடைசியில் கிளம்பும் முன், “வர பையனோட ஜாதகத்தைப் பொறுத்து நம்ம பொண்ணோட பலனும் மாறும். அதனால, ரெண்டு பேர் ஜாதகத்தையும் வச்சு பாத்து தான் நம்ம பொண்ணோட வாழ்க்கையை சரியா கணிக்க முடியும். எதைப் பத்தியும் கவலைப்படாதீங்கோ. அதுக்கும் மேலே கடவுள் இருக்கார்” என்று சொன்ன ஜோசியர், “சந்தான பாக்யம் நந்தினிக்கு ரொம்ப நன்னா இருக்கு. அதனால குழந்தைகளால நந்தினி வாழ்க்கை பிரகாசமா இருக்கும். இதை நான் உங்க சமாதானத்துக்கான சொல்லல. நிஜமான ஒரு ஜோசியனா சொல்றேன்” என்றார்.

எல்லாவற்றையும் கேட்ட ரகு, ‘நந்தினியின் வாழ்க்கை எப்படி அமையுமோ’ என்று நினைத்துக் கொண்டு, “சரி… கடவுள் மேல் பாரத்தைப் போட்டூட்டு நந்தினிகிட்ட இந்த வரனைப் பத்தி பேசுவோம்” என்று மைதிலியிடம் சொன்னார்.

“ஏன்னா… இவர் நந்தினிக்கு நிறைய போராட்டங்கள் இருக்குன்னு சொல்றாரே?” எனக் கேட்க

“கடவுள் ஒவ்வொருத்தருக்கும் ஒரு வாழ்க்கையை குடுப்பான். அதை அவாஅவாதான் வாழணும்” என்ற ரகு, வீட்டுக்கு வந்தவுடன் நந்தினியிடம் வரன் பற்றிய விவரத்தைச் சொன்னார்.

சில நாட்களிலேயே நந்தினியின் அக்கா மாமனாரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அவரின் தங்கை குடும்பத்துக்கு ரகுவின் குடும்பத்தை ஏற்கனவே தெரியுமென்பதால் கல்யாணத்துக்கு மனப்பூர்வமான சம்மதத்தை தெரிவித்தவர்கள், ரகு வீட்டின் முடிவைத் தெரிந்து கொண்டு திருமணம் குறித்து மேற்கொண்டு பேசலாம் என்று தெரிவித்ததாகக் கடிதத்தில் எழுதியிருந்தார். ஜாதகத்தையும் அனுப்பியிருந்தார்கள்.

கடிதத்தை படித்துவிட்டு “நீ என்ன நினைக்கிற மைதிலி?” என்று ரகு கேட்க

“எல்லாம் சரின்னா, ஆனா கல்யாணத்த நல்ல முறைல செஞ்சு தரணும்னு மாப்பிள்ளை ஆத்துல எதிர்பார்ப்பான்னு ஆரம்பத்துலயே அந்த மாமா சொன்னாரே, கவனிச்சேளா?” என்ற மைதிலி, “பணத்துக்கு என்ன பண்ணப் போறோம்னு தான் கவலைய இருக்குன்னா” என்றாள்.

“நமக்கு நம்ம குழந்தைங்க வாழ்க்கை தான் முக்கியம். அதனால ஒரு முடிவெடுத்திருக்கேன் மைதிலி. ஆனா அதுல உனக்கு சம்மதமான்னு மனசார எங்கிட்ட சொல்லணும்” என்றார் ரகு.

“இந்த வீட்டை வித்துடலாமான்னு நெனக்கறேன். வர காசுல நந்தினி கல்யாணத்தை முடிச்சு மீதி பணத்தை கணேஷ்கிட்ட குடுத்து புவனா கல்யாணப் பொறுப்பை ஏத்துக்கச் சொல்லப் போறேன். நீ என்ன சொல்ற?” என்று கேட்டார் ரகு.

“உங்க முடிவு என்னைக்கும் தவறாது. உங்க முடிவு தான் என் முடிவு” என்று சிறிதும் யோசிக்காமல் சொன்னாள் மைதிலி.

வீட்டை விற்பது குறித்த முடிவு மைதிலிக்கு வருத்தமாக இருந்தாலும், குடும்ப சூழ்நிலையை நன்றாக புரிந்தவள் மைதிலி. ரகு, தன் கையிலிருந்த சேமிப்பு, மேலும் கொஞ்சம் கடன் வாங்கி என இருந்த பணத்தில் முதல் மூன்று பெண்களுக்குத் திருமணத்தை முடித்திருந்தார்.

கெமிக்கல் கம்பெனியில் தொடர்ந்து டெக்னீஷியனாக உழைத்ததில் ரகுவின் கண்பார்வையும் குறைந்து கொண்டே வந்தது. எனவே இன்னும் இரண்டு ‌பெண்களுக்குத் திருமணம் செய்து கணேஷுக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்றால் கணவனின் முடிவே சரியாக இருக்கும் என எண்ணியவள், “நீங்க எடுத்த முடிவு சரியானதுதான்னா. ஆனா அதை பக்குவமா பசங்ககிட்ட சொல்லணும்” என்றாள்.

இருவரும் சேர்ந்து தாங்கள் எடுத்த முடிவை கணேஷ், நந்தினி மற்றும் புவனாவிடம் சொல்ல, “எப்படிப்பா வாழ்ந்துண்டு இருக்கற வீட்டை விக்கறது? அப்படி எனக்கு இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம்? இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம்ப்பா” என உணர்ச்சிவசப்பட்டாள் நந்தினி.

“அவசரப்படாம நிதானமா யோசிம்மா. அப்பா ரிடையர் ஆயாச்சு. இருந்த பணத்துல உங்க எல்லாலோரையும் படிக்க வச்சு, உன்னோட மூணு அக்காவுக்கு கல்யாணமும் பண்ணிக் கொடுத்துட்டேன். அடுத்து உங்க மூணு பேருக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணினால் தான எங்க கடமை முடியும். கணேஷும் இப்பதான் வேலைக்கு வந்திருக்கான். மொத்த பாரத்தையும் அவன் மேல் திணிக்க முடியாது. இந்த வீட்டை வித்து உனக்கு கல்யாணம் பண்ணீட்டு, செலவு போக மீதி இருக்கும் பணத்தில் புவனாவுக்கும், கணேஷுக்கும் கடனை உடனை வாங்கி கல்யாணம் பண்ணினாத்தான, நாங்க நிம்மதியா இருப்போம்” என்ற ரகு,

“அப்ப தான் எங்க கடமை முடியும். பண்ற காரியங்களை காலாகாலத்துல பண்ணினா தான் நீங்க எல்லாரும் நன்னா இருப்பேள். அப்பறம் கணேஷ் சம்பாதிச்சு சொந்தவீடு வாங்காமலா போகப் போறான். ஆசை தீர அந்த வீட்டில் வாழ்ந்தா போறது” என மகளை சமாதானப்படுத்தினார் ரகு.

எல்லாவற்றையும் கேட்ட கணேஷ், “நீங்க சொன்னபடியே பண்ணீடலாம்ப்பா” என்றான். வீட்டை விற்று வந்த பணத்தினை வைத்து நல்ல முறையில் நந்தினியின் திருமணத்தை நடத்திக் கொடுத்த ரகு, மீதி பணத்தை அப்படியே கணேஷிடம் கொடுத்து “இனி புவனா கல்யாணத்தை பாத்துக்க வேண்டியது உன் பொறுப்புப்பா” என்றார் ரகு.

“நான் பாத்துக்கிறேம்பா. கடைசிவரை உங்களையும் அம்மாவையும் பாத்துக்க வேண்டியது என் பொறுப்புப்பா. நீங்க ரெண்டு பேரும் கவலைப்படாதீங்கோ” என்றான் கணேஷ்.

சேலத்தில் நந்தினியின் திருமணத்தை நன்றாக முடித்துக் கொண்டு மேட்டூருக்கு வேனில் வந்தவர்கள், மணமக்களுக்கு செய்ய வேண்டிய சம்பிரதாயங்களைச் செய்துவிட்டு, அன்றிரவு முதலிரவுக்கான ஏற்பாட்டினைச் செய்து கொண்டிருந்நனர். மைதிலியின் தங்கை வீடு பக்கத்தில் இருந்ததால், மற்றவர்கள் அங்கே தங்கிக் கொண்டனர்.

ரகுவின் தங்கை செளந்திரா அத்தையும், அக்காமார்கள் மூவரும் நந்தினிக்கு அலங்காரம் செய்து கார்த்திக் ரூமிற்கு அனுப்ப, ரூமிற்குள் செல்ல நந்தினிக்கு தயக்கமாக இருந்தது. அப்பாவைத் தவிர யாரையும் தொட்டு கூட பேச அனுமதிக்காதவளுக்கு ஒரு ஆணுடன் திருமணமான ஒரே காரணத்துக்காக அவனுடன் அன்றே தங்கச் சொல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அவள் தயக்கத்தைப் புரிந்து கொண்டவர்கள், “இப்ப அப்படித்தான் இருக்கும். எல்லாம், இன்னும் கொஞ்ச நாள் தான். அப்பறம் அவரில்லன்னா நான் இல்லன்னு சொல்லுவ நந்தும்மா” என்று சிரித்துக்கொண்டே சொல்லி சூழ்நிலையை இலகுவாக்கினர்.

“அம்மா, அப்பாவோட பொறந்ததுலருந்து இருக்கோம். பாசம் இருப்பது நியாயம். ஆனால் கணவன் அப்படி இல்லை. ஆனால் அவனில்லன்னா நமக்கு உலகமே இல்லைன்னு ஒரு நெனப்பு வரும் பாரு. அப்ப, இன்னைக்கு நீ நடந்தத நெனச்சுண்டா உனக்கே சிரிப்பு வரும்” என்றாள் பெரியவள் ஜானகி.

“எது என்னவானாலும் உன் பாசத்தால மட்டும் தான் ஒருத்தர் மனசுல இடம் பிடிக்க முடியும். அதை மட்டும் மனசுல வச்சுக்கோ. புகுந்த வீட்டில் எல்லார்கிட்டயும் நல்லபேர் வாங்கி, நன்னா சந்தோஷமா இருக்க எங்களுடைய மனதார்ந்த வாழ்த்துகள்” என்று வாழ்த்தியவர்கள் நந்தினியை கார்த்திக் அறைக்கு அனுப்பிவிட்டு மற்ற அறைகளில் தங்கிக் கொண்டனர்.

ரூமிற்குள் வந்த நந்தினி, கையிலிருந்த பாலை டேபிளில் வைக்க, “பக்கத்தில் வந்து உட்காரு நந்தினி” என்றவனிடம் சிறிது தயக்கத்துடன்

“எனக்கு… இந்த…. இப்படி… தப்பா எடுத்துக்காதீங்கோ. உடனே இந்த ஏற்பாடெல்லாம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பழகினாத் தான் என்னால இயல்பா உங்ககிட்ட பேசவே முடியும். அதனால…” என கார்த்திக்கிடம் நந்தினி ஏதோ சொல்ல வர

“கவலைப்படாத நந்தினி. நீ என்ன சொல்லவறன்னு புரியறது. நானும் அம்மா, அப்பா கம்ப்பல்ஷன்ல தான் இந்த கல்யாணத்துக்கே ஒத்துண்டேன்” என்று கார்த்திக் சொல்ல, அவனை ஒரு வித கலக்கத்துடன் பார்த்தாள் நந்தினி.

“அச்சச்சோ… தப்பாவெல்லாம் நினைக்காத நந்தினி. எனக்கு ஸ்கூல் ப்ரண்ட்ஸ் அதிகம். பொறந்து வளர்ந்தது எல்லாம் காஞ்சிபுரம் தான். ஸோ… எப்பவும் காஞ்சி மடத்துக்கும் போவேன். பொதுப் பிரச்சினைக்கும் போவேன். வீட்டுல எங்கண்ணாமார்கள் எல்லோரும் அப்பா சொன்னபடி கேட்டுண்டு பொறுப்பா இருப்பா. ஆனா நான் எப்பவும் என்னோடபடிக்கு தான் இருப்பேன். அதனால என்னை அடங்காம சுத்தீண்டு இருக்கன்னு சொல்லுவா. எனக்கு வீடும் முக்கியம். என் ஃப்ரெண்ட்ஸும் முக்கியம்” என்ற கார்த்திக்,

“எனக்கு எதைப்பத்தியும் கவலை இல்லை. நான் நானா இருக்கதான் ஆசைப்படறேன். என்னைக்கு நம்ம ரெண்டு பேருக்கும், ஒருத்தருக்கொருத்தர் மனசார சேர்ந்து வாழனும்னு தோன்றதோ, அன்னைக்கு நம்ம வாழ்க்கையை ஆரம்பிப்போம்” என்றதோடு,

“ரெண்டு நாளா நம்மள தூங்க விடாம ஃபங்ஷனுக்கு எல்லா ஃபார்மாலிட்டீஸும் பண்ணி ரொம்ப டையர்டு ஆயிடுத்து. அதனால் கொண்டு வந்த பாலை வேஸ்ட் பண்ணாம ரெண்டு பேரும் குடிச்சிட்டு தூங்கலாம், சரியா?” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

“ம்…” என்ற நந்தினிக்கு, மனதிலிருந்து வெளிப்படையாக பேசிய கார்த்திக்கை அந்த நொடியிலேயே சக மனிதனாக பிடிக்கவே செய்தது.

பெற்றவர்களிடம் சொல்லாததைக் கூட தன்னிடம், மனைவி என்ற முறையில் கூறியது அவன் மீதான நம்பிக்கையை அவள் மனதில் விதைத்து. ஆனால் அந்த அதீத நம்பிக்கையே அவள் வாழ்க்கையைப் பாழாக்கி, புரட்டிப் போடும் என்று அப்போது அவள் கனவிலும் நினைக்கவில்லை.

அடுத்த நாள் காலை பெரியவர்கள் ரூமிற்கு வெளியே விளக்கேற்றி கும்மி பாடி எழுப்ப, ரூமிலிருந்து வெளியே வந்தவளை அக்காமார்களும், அத்தையும் சேர்ந்து கிண்டலடித்தார்கள்.

சமையல்கட்டிலிருந்து வந்த அம்மா, வாஞ்சையுடன் தலையைத் தடவிவிட்டு, “வெந்நீர் போட்டு வச்சுருக்கேன். மொதல்ல நீ போய் தலைக்கு குளிச்சூட்டு, அப்பறமா மாப்பிள்ளய எழுப்பி வெந்நீர்ல குளிக்கச் சொல்லு” என்று சொன்னாள்.

“அவளைச் சுற்றியிருந்தவர்கள் அவளைக் கிண்டலடித்து விட்டு நகர

“ஒன்னும் பிரச்சினை இல்லையேடா கண்ணம்மா. எதா இருந்தாலும் அம்மா எங்கிட்ட சொல்லு. வேற யார்கிட்டேயும் எதையும் வெளிப்படையாக பேசாதே. புக்காதுக்கு போனாலும் ஜாக்கிரதையா இரு. கொஞ்சநாள் ஆச்சுன்னா யாரு எப்படி, என்ன குணம்னு தெரிஞ்சுடும். எப்பவும் யாராலயும் ரொம்ப நாள் அவங்க சுயகுணத்தை மறைச்சுண்டு நடிக்க முடியாது. அப்புறம் உனக்கு எல்லார்கிட்டயும் பழக சௌகரியமாயிடும்” என்று பி.ஹெச்.டி. பட்டம் படித்து சொல்லும் ஒரு மனோதத்துவத்தை எதார்த்தமாக சொல்லிவிட்டாள் அம்மா.

(தொடரும் – ஞாயிறு தோறும்)  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கடவுள் அமைத்த மேடை (சிறுகதை) – ✍ பீஷ்மா

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 3) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை