in

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 3) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

நீ எனதின்னுயிர் ❤ (பகுதி 3)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2

எம்.டி.யிடமிருந்து வந்த அழைப்பினால்  கிருத்திகாவும் ஒரு நோட்புக், பென்சிலுடன் அவன் அறைக்குள் நுழைந்தாள்.  இளங்கோவின் ஆபீஸில் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளை ரெகார்ட் செய்து வைத்திருந்த ஐபேடையும் எடுத்துக் கொண்டு சென்றாள்.

உள்ளே காரசாரமான விவாதம் தொடங்கியது. கம்பெனி  ஆடிட்டர்கள் கிருத்திகா கொடுத்த ஸ்டேட்மென்ட் தான் சரியானது என்றார்கள்.

“கிருத்திகா சரியான முட்டாள், இடியட், மரியாதை தெரியாதவள். என் ஆபீசில் நான் இல்லாதிருக்கும் போது எப்படி ரெஜிஸ்டர்களை என் அனுமதியில்லாமல் எடுத்து வரலாம்?” என்று விவாதம் செய்தான் இளங்கோ.

ஆடிட்டர்களும், வக்கீலும் கிருத்திகாவின் விடையை எதிர்பார்த்தனர்.

“பதினைந்து நாட்களுக்கு முன்பே ஆடிட் விங் இன்ஸ்பெக்ஷனுக்காக வரப் போகிறது என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. என் செல்போனில் அவருக்கு வாடஸ்அப்’பில் மெஸேஜ் அனுப்பி, அதற்கு அவர் அனுப்பிய பதிலும் பதிவாகியுள்ளது.

மிஸ்டர் இளங்கோ நான் ஆபீஸில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தன் உதவியாளர் சுந்தரம் மொத்த பொறுப்பும் ஏற்பார் என்று தெரிவித்துள்ளார். திரு.சுந்தரத்தின் ஒப்புதலோடு தான் இந்தப் பதிவேடுகள் இங்கே கொண்டு வரப்பட்டன.

அதுவுமல்லாமல் ஒரு அலுவலகத்தில் இன்ஸபெக்‌ஷனுக்குச் செல்லும் போது முன்னதாகத் தகவல் தர வேண்டிய அவசியமில்லை. சர்ப்ரைஸ் இன்ஸ்பெக்‌ஷன் தான் நமக்கு உண்மை நிலையை அறிவுறுத்தும். நான் முட்டாளா, இடியட்டா என்பது வேறு  விஷயம். வருமான வரித்துறையை ஏமாற்றி நஷ்டக்கணக்கு காட்டுவது ஒன்றும் புத்திசாலித்தனமில்லை.

இவர் கீழ் இருக்கும் நான்கு கம்பெனிகளில் கிடைத்த லாபம் இந்த ஒரு வருடத்தில் மட்டும் குறைந்தது ஒரு கோடிக்கு மேல் இருக்கும். அந்தப் பணம் எங்கே போயிற்று? ஏன் வருமான வரித்துறையை ஏமாற்ற வேண்டும்? இதனால் வரும் அவமானத்தினால் பாதிக்கப்படுவது நம் கம்பெனியின் பெயரும் நம் எம்.டி.யும் தானே?”

மெதுவான குரலில் தொடங்கியவள், போகப் போக கோபத்துடன் பேசினாள். இப்படி ஒரு நீண்ட கோபமான பேச்சை அவளிடமிருந்து யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. நீதி தேவதையே வந்து நின்று கேள்வி கேட்பது போல் தோன்றியது சபரீஷவரனுக்கு.

கம்பெனி ஆடிட்டர்கள், “நாங்கள் இந்தக் கம்பெனி ஆடிட்டர்கள் இருக்கும் போது வேறு ஆடிட்டர்களை வைத்து கணக்கு காட்டுவதேன்?” என்று இளங்கோவைக்  குற்றம் சாட்டினர்.

“கம்பெனியை ஏமாற்றிய தொகை மொத்தமாகத் திருப்பித் தர வேண்டும்” என்றார் வக்கீல்.

“நீங்கள் இதற்கு என்ன சொல்கிறீர்கள் மிஸ்டர் இளங்கோ?”

“நான் என்ன சொல்வது? கணக்குகளைப் பார்ப்பவர்கள் என் சக ஊழியர்களே, அவர்களிடம் தான் விசாரிக்க வேண்டும்“ என்றான் விட்டேத்தியாக.

அப்போது சபரீஷின் பெரியப்பாவிடமிருந்து போன்.

“சொல்லுங்கள் பெரியப்பா” என்றான் சபரீஷ்.

இளங்கோவின் பெற்றோர், “இன்று காலை நம் வீட்டிற்கு இன்னும் சில உறவினர்களோடு வந்திருக்கிறார்கள். இன்று மாலையே நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்”

“ஏன் அவ்வளவு அவசரம்? சரி பெரியப்பா, நான் இன்று மாலை நான்கு மணிக்கு வீட்டில் இருப்பேன். பெரியம்மா, ஷீலாவின் சம்மதத்துடன் நீங்கள் உங்கள் ஏற்பாடுகளைச் செய்யவும். நான் ஒரு மீட்டிங்கில் இருக்கிறேன்” என்று கூறி போனை வைத்தான்.

இளங்கோவின் முகத்தில் லேசான சிரிப்பைப் பார்த்தாற் போல் இருந்தது சபரீஷ்வருக்கு.

“இந்த மீட்டிங் இத்துடன் முடித்துக் கொள்ளலாம்” என்ற சபரீஷ்வர், “மிஸ் கிருத்திகா, நீங்களும் மிஸ்டர் கருத்திருமனும் மட்டும் ஒரு பத்து நிமிடம் இருங்கள்” என்றான்.

கிருத்திகாவின் முகம் எந்த உணர்ச்சிகளையும் காட்டவில்லை, கருத்திருமனும் அவ்வாறே இருந்தார். மற்றவர்கள்  அறையை விட்டு வெளியேறினர்.

“மிஸ் கிருத்திகா, இளங்கோவின் வரம்பு மீறியப் பேச்சிற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த ரெஜிஸ்டர்களையும், உங்கள் ரிப்போர்ட்டையும் நான் என் லாக்கரில் வைத்துக் கொள்ளுகிறேன். ப்ளீஸ், நீங்கள் உங்கள் இருக்கைக்குச் செல்லுங்கள்” என்றான் மிக மிருதுவான குரலில்.

இதுவரை யாரிடமும் அவன் ‘ப்ளீஸ்’ போட்டுப் பேசி கிருத்திகா பார்த்ததில்லை. அந்த மென்மையான குரலில் அவன் பேசியும் கேட்டதில்லை. அதன் பிறகு கருத்திருமனிடம் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தான்.

திடீரென்று வெளியே பலமான இரைச்சல் கேட்கவும், சபரீஷும், கருத்திருமனும் வெளியே ஓடி வந்தனர். அங்கே பார்த்த காட்சி அவர்களுக்கே கோபத்தை உண்டாக்கியது.

இளங்கோ, கிருத்திகாவிடம் அடிக்குரலில் மிரட்டிப் கொண்டு காட்டுக் கத்தலாகக் கத்திக் கொண்டிருந்தான். கிருத்திகாவின் பக்கத்தில் பாதுகாவலர்கள் போல் அவளுடன் ஆடிட்டிற்குச் சென்ற இரண்டு ஜூனியர் ஆடிட்டர்களும் அவனுக்கு பதில் குரல் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். கிருத்திகா அமைதியாக நின்றிருந்தாள்.

நேரே அங்கு வந்த சபரீஷ், “இளங்கோ, நீங்கள் எந்தக் கேள்வியாக இருந்தாலும் என்னிடம் தான் கேட்க வேண்டும். என்னுடைய ஸ்டாப்’பிடம் அதட்டிப் பேசும் அதிகாரம் உங்களுக்கு யார் கொடுத்தது? கெட் லாஸ்ட் ஃப்ரம் மை‌ ஆபிஸ்” என்று பலமாகக் கத்தினான்.

“சபரீஷ், நான் உங்கள் உறவினன். உங்கள் பெரியப்பாவின் மாப்பிள்ளையாகப் போகிறவன். ஹோமில் வளர்ந்த ஒரு அநாதைக்காக என்னிடம் மரியாதையில்லாமல் பேசுகிறீர்களே?” என்றான் இளங்கோ.

“முதலில் நீங்கள் மரியாதையோடு பேசக் கற்றுக் கொள்ளுங்கள். இது ஆபிஸ், இங்கே நான் எம்.டி., நீங்கள் என் கிளை அலுவலகத்தில் மேனேஜர், தட்ஸ் ஆல். இங்கே யாருடைய பர்சனல் லைஃப் பற்றியும் டிஸ்கஸ் செய்ய வேண்டியதில்லை. நீங்கள் இதோடு இரண்டு மூன்று முறை அநாதை என்று மிஸ்.கிருத்திகாவைக் கூறி விட்டீர்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது, வரம்பு மீறியப் பேச்சு.

அவர் இந்த அலுவலகத்தில் முக்கியமான ஒரு பொறுப்பில் இருக்கிறார். இந்த நிலையில் நான் தான் அவருக்கு கார்டியன். ஆகவே மைண்ட் யுவர் டங். வேலையில் உண்மையாக இருந்தால் தான் இந்தக் கம்பெனியில் நீடிக்க முடியும், அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் போகலாம்” என்றான் கோபமாக.         

இளங்கோ வேகமாக வெளியேறினான். சபரீஷ் கிருத்திகாவைப் பார்த்தான். கருமேகம் சூழ்ந்த நிலவாக அவள் முகம் ஒளியிழந்திருந்தது. அவள் முகத்தில் தெரிந்த சோகம், சபரீஷ்வருக்கு இளங்கோவின் மேல் கோபம் இன்னும் அதிகமாகியது

மதியம் ஒரு மணிக்கு எல்லோரும் அவரவர் இருக்கையிலேயே உட்கார்ந்து லஞ்ச் சாப்பிடுவது வழக்கம். ஆனால் வயலட், மும்தாஜ், கிருத்திகா மூவரும் மட்டும் ஒன்றாக ஒரே டேபிளில் அதன் உட்காருவார்கள். லஞ்ச் நேரத்தில் அவர்கள் டேபிள்  ஒரே சிரிப்பாக அமர்க்களப்படும்.

ஆபீஸில் பெருக்குபவரோ, பியூனோ இல்லை யாரோ  சாப்பாடு கொண்டு வரவில்லையென்றால் இம்மூவரும் தங்கள் உணவை அவர்களுடன் பகிர்ந்தி கொள்வது வழக்கம். இதெல்லாவற்றையும் சபரீஷ் தன் அலுவலக அறையிலிருந்தே பார்த்துக் கொண்டிருப்பான். லஞ்ச் டைமில் அவர்கள் சந்தோஷத்தில் குறுக்கிட மாட்டான்.

ஆனால் இன்று அம்மூவரும் அவரவர் இருக்கையிலே அமர்ந்து, சாப்பாட்டு டப்பாக்களைத் திறந்து  கோழி குப்பையை கிளறுவது போல் கிளறிக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் யாருடனோ பேசுவதற்காக வந்தவன் போல் வெளியே வந்த  சபரீஷ்வர், கிருத்திகா சாப்பிடாமல் மொத்த சாப்பாட்டையும் குப்பையில் கொட்டியதைப் பார்த்தான். கவனிக்காதவன் போல் தன் அறைக்குத்  திரும்பி விட்டான்.

அன்று மாலை வழக்கம் போல் ஐந்தரை மணிக்கு ஆபிஸிலிருந்து கிளம்பி அருகிலிருந்த பஸ் ஸ்டேண்டில் நின்றிருந்தாள் கிருத்திகா. தன் பென்ஸ் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிய சபரீஷ்வர், முதல் நாள் போல் அவள் அருகில் நிறுத்தி அவளை வண்டிக்குள் ஏறச் சொன்னான்.

தயங்கியவாறு அவனைப் பார்த்துக் கொண்டே காருக்குள் ஏறினாள் கிருத்திகா.

கார் கொஞ்ச தூரம் சென்ற பிறகு கிருத்திகா மெதுவாக சபரீஷிடம் “சார், நான் சொல்கிறேனென்று தவறாக நினைக்காதீர்கள். நாளை முதல் இந்த பிக்அப், டிராப் எல்லாம் வேண்டாமே. வழக்கம் போல் நான் பஸ்ஸிலேயே போய் கொள்கிறேனே” என்றாள்.

“ஏன், என் காரில் வந்தால் என்ன தவறு?”

“தவறுதான். உங்களோடு சமமாக உங்கள் காரில் வருவது தவறு. நான் ஒரு அனாதை என்பதை மறக்க முடியுமா? ஏதோ உங்களாலும், கருத்திருமன் சாராலும் உங்கள் கம்பெனியில் எனக்கு இவ்வளவு அதிக சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்திருக்கிறது. அதனால் நான் என் தகுதிக்கு மேல் எதற்கும் ஆசைப்படக் கூடாது”

திரும்பி அவளைப் பார்த்தான் சபரீஷ்.  அவன் பார்வையை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தலை குனிந்தாள். அவள் கன்னங்கள் ஜிவ்வென்று ரோஜாப்பூக்களாக மாறிய அதிசயத்தை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அம்மா அப்பா இல்லாததால் நீங்கள் அனாதை என்றால் நானும் அனாதை தான். இனிமேல் அந்த வார்த்தையை சொல்லாதீர்கள். என்னாலும் , கருத்திருமன் அங்கிளாலும் இந்த வேலை உங்களுக்குக் கிடைக்கவில்லை. உங்கள் கல்வித்தகுதி, மதிப்பெண்கள், திறமை இவற்றால் மட்டுமே உங்களுக்கு இந்த வேலை கிடைத்தது” என்றவன், தன் காரை ஒரு ஸ்டார் ஹோட்டலின் வாசலில் நிறுத்தினான்.

“என்ன சார், இங்கு நிறுத்துகிறீர்கள்?” கிருத்திகா திகைப்புடன் கேட்டாள். இதுவரை அந்த ஹோட்டலையும், அங்கே நிற்கும் செக்யூரிட்டியையும் வெளியில் இருந்து தான் பார்த்திருக்கிறாள்.

“மத்தியானம் சாப்பிடவேயில்லை, லஞ்ச் முழுவதும் கொட்டி விட்டீர்கள். இளங்கோவின் பேச்சு உங்கள் மனதை மிகவும் காயப்படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன். இனிமேல் அவ்வாறு நடக்காது.  நீங்கள் பசியோடு எப்படிப் படிக்க முடியும்?” என்றவன், இருவருக்கும் ஆளுக்கொரு நெய் மசாலா தோசையும், காபியும் ஆர்டர் செய்தான்.

‘இவன் ஏன் தன்னிடம் இத்தனை அன்பாக இருக்கிறான்? இது நல்லதா, கெட்டதா? இவனுடைய இந்த கனிவு தன் மேல் ஏற்பட்ட பரிதாபத்தாலா, அல்லது அன்பாலா? இது தன்னை எங்கே கொண்டு போய் விடும்?’ என்று மனதிற்குள் பலவும் யோசித்தவாறு சாப்பிட்டாள்.

அவ்வளவு பசியிலும், அவசரமாக அலைந்து கொண்டு சாப்பிடாமல் நாசுக்காக, நாகரிகமாக சாப்பிடும் அவள் அழகை ரசித்துக் கொண்டே சாப்பிட்டான் சபரீஷ்.

சாப்பிட்டதற்கான பில்லைக் கொடுத்து விட்டு இருவரும் காரில் ஏறிய பின், “சார், மீட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது உங்கள் பெரியப்பாவிடமிருந்து போன் வந்து பேசினீர்களே. அப்போது மாலை நான்கு மணிக்கு வீட்டில் இருப்பேன் என்றீர்களே, இப்போது மணி ஆறாகிவிட்டதே” என்றாள் லேசான பதற்றத்துடன்.

“அதற்கு நீங்கள் ஏன் பதறுகிறீர்கள்? அவர்களும் என்னை ஒப்புக்குத் தான் கூப்பிடுவார்கள், நானும் வருவதாக சொல்வேன். நான் வந்த பிறகு தான் பங்க்‌ஷன் நடக்க வேண்டுமென்பதில்லை. இந்நேரம் அவர்கள் எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு, அதை ஸெலிபரேட் பண்ண எங்காவது வெளியே சென்றிருப்பார்கள்” என்றான் ஒரு கசப்பான சிரிப்புடன்.

காரை அவள் படிக்கும் இன்ஸ்டிடியூஷன் எதிரில் நிறுத்தினான்.

“கிருத்திகா, வகுப்பு எத்தனை மணிக்கு முடிகிறது?”

“ஒன்பது மணிக்கு முடியும் சார்.  வெகுஅருகில்  தான் பஸ் ஸ்டேண்ட், வரட்டுமா சார்” என்றவள், வாட்ச்சைப் பார்த்து விட்டு, “தேங்க் யூ சார், பை” என தன் வெண்ணிறப் பற்கள் தெரிய சிரித்து கையசைத்து விடை பெற்றாள்.

கொஞ்ச நேரம் காரிலிருந்தபடியே  அவள் போவதைப்  பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அண்ணா நகர் தாண்டி முகப்பேரில் இருந்தது அவன் பங்களா.

ஒன்பது கிரௌண்ட், பெரிய லான், தென்னை மரங்கள், மா மரங்கள், வாழை மரங்கள்  என்று பெரிய தோட்டம்.

வழக்கத்திற்கு மாறாக எல்லோரும் வீட்டிலிருந்தனர். அவன் பெரியப்பா பெண் ஷீலாவிற்கும், இளங்கோவிற்கும்  நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்பதை பூ மணமும் நெய் மணமும் காட்டியது. இளங்கோவும் ஷீலாவும் பட்டு வேட்டியிலும், பட்டுப் புடவையிலும் மின்னினர். இவனை யாரும் கண்டு கொள்ளவில்லை.

அவன் பெரியப்பா சித்தப்பா கூட அவனைப் பார்த்தார்களே தவிர, தட்டில் ஏதோ வைத்து  சாப்பிட்டுக் கொண்டே இவனைப் பார்த்துத் தலையசைத்தார்கள். இவனும் பதிலுக்கு தலையசைத்து விட்டு மாடியில் தன் அறையில் ஓய்வெடுக்கச் சென்றான்.

ஏ.சி. ஆன் செய்து கதவைத் தாளிட்டான். அப்போது  சமையல்கார்ர் சாம்பு தாத்தா கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தார்.

அவர் முகமெல்லாம் வீங்கி கண்கள் சிவந்து காணப்பட்டது. அவரை அந்த நிலையில் இதுவரை சபரீஷ்வர் பார்த்ததில்லை.

“தம்பி, நான் ஒன்று சொன்னால் தப்பாக நினைக்க மாட்டீர்களே” என்றார் குரல் கம்ம.

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வைராக்கியம் ❤ (பகுதி 3) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

    வெள்ளை தேவதை (சிறுகதை) – ✍ விடியல் மா. சக்தி