in

வெள்ளை தேவதை (சிறுகதை) – ✍ விடியல் மா. சக்தி

வெள்ளை தேவதை (சிறுகதை)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ரோடு பேருந்து நிறுத்தத்திலிருந்து கோவைக்குச் செல்லும்  பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். எனது முன் இருக்கையில் அவளின் காதோரக் கம்மல் என்னைப் பார்த்து கண்சிமிட்டியது.

நடத்துனர் வந்ததும் பயணச்சீட்டு எடுத்து விட்டு அவளை பார்க்க, அவளும் பயணச்சீட்டை வாங்குவதற்கு அவளது கையை நீட்ட, அந்த சிவந்த நிறத்தில் எனை மெய்மறந்தேன்.

பேருந்து பெருந்துறையை எட்டியது.

“அக்கா… அண்ணா வெள்ளரி வாங்கிக்கங்க”

வெள்ளரிக்காய் விற்கும் சிறுமியின் குரல்.

முன்னிருக்கையின் அந்த வளைக்கரம் வெளியே பணத்தை நீட்ட, சிறுமியோ வெள்ளரியை திணித்து விட்டு அடுத்த வியாபாரத்தை கவனித்தாள்.

என் மனம் முழுவதும் அவள் வளைய வந்தாள். அவளின் கூந்தலோடு காற்று காதல் மொழி பேச நான் காற்றாய் மாறினேன்.

பேருந்து அவினாசி நிறுத்தத்தை அடைந்திருந்தது.

அங்கேயும், “அண்ணாச்சி ஒரு புத்தகம் வாங்குங்க, இருபது ரூபாய் தான்”

குரல் கொடுத்த சிறுவனை நான் பரிதாபத்தோடுப் பார்க்க, அவளோ மீண்டும் ரூபாயை நீட்டி ஐந்து புத்தகங்களை வாங்கினாள். என் மனதிலும் அசையா இடத்தில் ஏறிக்கொண்டாள்.

அவளை என் தேவதையாக கற்பனை செய்து கொண்டேன்.

பேருந்து கோவையை அடைந்ததும், இறங்கிய நான் முகமறியா அவளின் முகம் காணத்துடித்தேன்.

அங்கே பூ விற்கும் பெண் என்னைப் பார்த்து,  “அண்ணா பூ வாங்கிட்டு போங்க வீட்டுக்கார அக்காவுக்கு” என்றாள்.

பூக்காரிப் பெண்ணை முறைத்த நான் விலகினேன். ஏனெனில் என் மனம் முழுவதும் அவள் மட்டுமே நிறைந்திருந்தாள். எப்படியாவது முகம் கண்டுவிட படியருகே காத்திருந்தேன்.

இறங்கிய அவளிடமும் அந்த பூக்கார பெண் சென்று அவளின் முகத்தை மறைத்தபடி நின்றாள். எனக்கோ பதட்டம், மீண்டும் முன்னாடி சென்று முகமறியா அவள் முகம் காண முயன்றேன்.

அப்போதும் அவளை மறைத்தபடி ஒரு வயதான மனிதரும், அவளும் பேசிக் கொண்டிருந்தனர்.

“ஏம்மா கயல்… இப்படி வரவங்க போறவங்க கிட்ட எல்லாம் பொருள வாங்குறியே,  எதுக்கும்மா?”

“அதில்லண்ணே… பாவம் இந்த பசங்கெல்லாம் நம்மள நம்பித்தான பொழப்பு பன்றாங்க, இவங்களுக்கு உதவாம போனா கெட்டுப் போயிடுவாங்கண்ணே”

“என்னம்மா சொல்ற?”

“ஆமாண்ணே… பெரிய கடைகளிலிருந்து வாங்கி இவங்க ரெண்டு ரூவா லாபம் வச்சு விக்கறாங்க. அதனால, இவங்ககிட்ட வாங்கினா இவங்களுக்கு அந்த ரெண்டு ரூவா கெடைக்குமுல்ல அதான். இப்படி நாமெல்லாம் வாங்காம போனா அந்த விரக்தியில தப்பான முடிவுக்கு போயிடுவாங்க. இந்த மாதிரி விரக்தியில போற பசங்களத்தான் சில சமூக விரோதிகள் ரவுடிகளாகவும், தீவிரவாதிகளாகவும் மாத்திடுறாங்க. அதான் இப்படி செய்றேன்”

“ஏம்மா இந்த அஞ்சு பத்து பணத்துலதான் அவங்க பொழைச்சிடுவாங்களா?”

“அப்படி சொல்லாதீங்கண்ணே, சிறுதுளி பெருவெள்ளம். அந்த ரெண்டு ரூவா லாபம் அவங்களுக்குள்ள ஒரு தன்னம்பிகையை ஊட்டும்”

சொல்லி விட்டு, வாங்கிய பூவை தலையில் வைத்துக் கொண்டு ‘வாக்கிங் ஸ்டிக்’ உதவியுடன்  நடந்தாள் கயல்.

அவளைப் பார்த்து பின்னிலிருந்த நான் வெட்கி தலை குனிந்து நின்றேன். முகமறியா அந்த தேவதையின் முகம் காண இனி அவசியமில்லை! ஏனெனில் கண்ணிருந்தும் குருடனாய் நான்!

கண்கள் இழந்த அவளோ, தெருவோரத்தில் இருக்கும் சிறுவர், சிறுமியர்களின் ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற அவர்களின் எண்ணங்களை மதித்து அவர்கள் மனதில் நல்ல தன்னம்பிக்கையை விதைக்கிறாள்!

அந்த முகமறியா தேவதை என் மனதில் ஈரமாய் ஒட்டிக் கொண்டாள் ஆனால், இம்முறை அவள் உருவம் ‘வெள்ளை தேவதையாய்’  உருமாறிக் கொண்டது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 3) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    வாழ்க்கை எனும் கவிதை ❤ (நாவல் – அத்தியாயம் 4) – ✍ ”எழுத்துச் செம்மல்” இரஜகை நிலவன், மும்பை