in ,

தாத்தா தந்த வண்டி (கதைப்பாடல்) சிறுவர்க்கானது – வளர்கவி, கோவை

கோடை விடுமுறை கொண்டாட

குடும்பத் தோடு எல்லாரும்

குடிசை வீட்டில் குடியிருக்கும்

தாத்தா வீடு தான்சென்றோம்!

தாத்தா மேனி கருப்புத்தான்

எலும்பும் தோலும் வெளித்தெரியும்

பொக்கை வாய்க்குள் புகையிலையை

அதக்கிச் சிரிப்பதே அழகுதான்!

பாட்டி தாத்தா நல்லவர்கள்

பாசம் காட்டும் வல்லவர்கள்

தாத்தா பனைமரம் ஏறிடுவார்.,

‘பொத்து’னு நொங்குகள் போட்டிடுவார்!

நொங்கைக் குடைந்து தின்றவுடன்

நூதன மாக ஒரு வண்டி

தங்கத் தாத்தா செய்திடுவார்

தரையில் ஓட்டத் தந்திடுவார்!

குடைந்த நொங்கைக் கோலினிலே

குத்தி  இருபுறம் செருகிவிட்டு

கவட்டைக் கம்பால் உந்த்தித்தள்ளி

கச்சித மாக ஓடவைப்பார்!

கவட்டை குச்சி அதைத்தள்ள

குச்சியில் மாட்டிய நொங்கிரண்டும்

உருண்டு ஓடும் ஊர்முழுதும்

உல்லாச மெல்லாம் எங்களுக்கே!

பெட்ரோல், டீசல் கேட்காது.,

பேட்டரி சார்ஜும் இல்லாது.,

உருட்ட,  ஓடும் நொங்குவண்டி

உலகில் அதற்கு ஈடேது??

அக்கம் பக்கம் உள்ளவர்கள்

ரிமோட்’ வண்டிகள் ஒதுக்கிவிட்டு

அதிசய மாகப் பார்த்திருக்க

அழகாய் ஓடுது  என்வண்டி!

தின்று நொங்கை எறியாமல்,

தெருவில் குப்பை சேர்க்காமல்

நொங்கால் செய்து தந்தவண்டி

நூதன மானது என்வண்டி!

தாத்தா செய்து தந்தவண்டி

சகலரும் வியந்து பார்த்தவண்டி

தாத்தா சாக தான்செத்து

தரணியை விட்டுப் போனதின்று!

கவட்டைக் கம்பைப் பார்க்கையிலும்,

காய்ந்த நொங்கைக் காண்கையிலும்

தாத்தா நினைவு எனைவாட்டி

தவிக்க வைக்குது இன்றைக்கும்!

பாசம் ஊட்டி வளர்த்தவரை

பண்பை அன்பைத் தந்தவரை

மீட்டுப் பெறஒரு வழியின்றி

மாயுது நோகுது என்மனமே!!!

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    என்னதான் ரகசியமோ (நகைச்சுவை கதைப்பாடல்) – வளர்கவி, கோவை