எழுத்தாளர் மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வேப்பமரத்து நிழல் காய்ந்த வெயிலுக்குஆறுதலாக இருந்தது. செல்லி ஜவுளிக்கடைக் கட்டைப் பையிலிருந்துஎவர்சில்வர் டப்பாக்களை எடுத்தாள்.அருகில் நின்றிருந்த ஆறுவயது மகனை உட்காரச்சொல்லி , “சிவா சாப்பிடுடா.”
“ இட்டிலியா வேணாம்மா.”
“ஏண்டா, பசிக்கலையா?”
“எனக்கு பரோட்டா வாங்கித் தா”
“டேய் ,இங்ஙன பரோட்டா கடையே இல்லடா. கீழ போனதும் வாங்கித் தரேன், இப்ப சாப்பிடு.”
ருசிக்குப் பிறகு பார்த்துக் கொள்வோம் என்று டப்பாவை வாங்கிக் கொண்டான் சிவா. தானும் டப்பாவைத் திறந்தாள் செல்லி.
புதினாச் சட்டினி கிழவியின் கைமணத்தில் நன்றாக இருந்தது. அவள் அம்மியில் தான் அரைப்பாள், மிக்சி போடத் தெரியாது. எல்லாம் தயார் செய்து வைத்தாலும் செல்லியாவது மிக்சியில் அரைக்கலாம் ஆனால் செய்ய மாட்டாள். அம்மியில் அரைக்கட்டும் என்று விட்டு விடுவாள்.
சில நேரங்களில் கணவன் மாதையன், “நீ மிக்சியில் போடக்கூடாதா?” என்று கேட்டுவிட்டு கண்டும் காணாமல் இருந்து விடுவான்.
செல்லியின் கணவன் மாதையன் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரெவின்யூ இன்ஸ்பெக்டராக இருக்கிறான். செல்லி உதவியாளராக இருக்கிறாள். அன்பான, கணவன், இரண்டு பிள்ளைகள். மூத்தவன் பத்தாவதும், இளையவன் இரண்டாவதும் படிக்கின்றனர்.
செல்லியின் அம்மாவும், அப்பாவும்தான் இவளோடு இருக்கிறார்கள். அப்பா போஸ்ட் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவர். வீட்டு வேலைகள், பிள்ளைகளை வளர்ப்பது, மளிகை, அரிசி, காய்கறி, பால் செலவுகள் என அத்தனையையும் அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அக்கா வீட்டிற்கோ, லக்னோவில் இருக்கும் தம்பி வீட்டிற்கோ அவர்கள் சென்றாலும் ஒரு வாரம் கூடத் தங்க விடமாட்டாள்
“ அப்பா சின்னவன் இன்னக்கி சாப்பிடவே இல்ல,”
“அம்மா பெரியவன் நீ எப்போ வருவேன்னு கேக்கறான்.” என்று ஏதாவது சொல்லிக் கலங்குவாள்.
இந்த முறை காசி ஹரித்துவாரெல்லாம் பார்த்து விட்டு ஓய்வெடுத்த பின்தான் திரும்புவார்கள் ஒரு மாதமாகும் என்று தம்பி சொல்லியே அழைத்துச் சென்றிருக்கிறான். அதனால்தான் ஊரிலிருந்து மாமியாரும் சொந்த அத்தையுமான கிழவியை அழைத்து வந்திருக்கிறாள்.
“அம்மா எப்போ வீட்டுக்குப் போவலாம்.”
“ டேய், வைத்தியர் காட்டுக்கு மூலிகை பறிக்கப் போயிருக்காராம்.”
“எப்போ வருவாரு?”
“இதோ வந்துடுவாரு_ இத்தனை பேரு அவுருக்காகதான் காத்துட்டு இருக்காங்க டா.”
இந்த மலைக்கிராமத்தில் இந்த வைத்தியர் குடும்பம் பரம்பரை பரம்பரையாக இலவசமாக மருத்துவம் செய்து வருகிறார்கள். மருந்துக்கு மட்டும்தான் விலை. இந்த வட்டாரத்தில் நல்ல பெயர். தீராத நோயெல்லாம் கூடக் குணமாகிறது என்பார்கள். மாதையனுக்கு ரெண்டு வருஷத்திற்கு முன்னர் ஒரு விபத்தில் வலது கால் எலும்பு முறிந்து போனது. முதலில் எலும்பு மருத்துவரிடம் காட்டி கட்டுப் போட்டார்கள். முழுவதும் சரியாகவில்லை. இந்த வைத்தியரிடம் வந்த ஒருவாரத்தில் குணமானது.
இப்போது பெரியவனுக்கு இருபது நாட்களாக நெஞ்சு சளியும், ஓயாத இருமலும் அரசு மருத்துவமனையில் காட்டியதற்கு எக்ஸ்ரே எடுத்து, எல்லாப் பரிசோதனையும் செய்து மருந்து கொடுத்தார்கள். போன வாரம் இங்கே அழைத்துக் கொண்டு வந்தாள் .வைத்தியர் பார்த்து விட்டு தந்த மருந்தில் பாதியளவு குறைந்திருக்கிறது. ஒரு வாரத்தில் இன்னொரு மூலிகையில் மருந்து தயாரித்து தருவதாகச் சொல்லியிருந்தார். அந்த மருந்தை வாங்கவே செல்லி இளையவனை துணைக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாள்.
“அம்மா போலாமா?”
“இருடா கேட்டுட்டு வரேன்..”
செல்லி கேட்டதற்கு ஐந்து மணிக்கு வந்து விடுவார் என்றார்கள். இங்கு ஐந்துமணிக்கே இருட்டிவிடும் ஆறுமணிக்கு கடைசிப் பேருந்தில் ஏறிவிடலாம் என்று காத்திருந்தாள் செல்லி.
அதே போல் வைத்தியரும் வந்துவிட்டார். ஒருவழியாக மருந்துப் பாட்டிலை வாங்கிக் கொண்டு அருகிலிருந்த தேனீர்க் கடையில் குளிருக்கு இதமாய் பச்சைத் தேயிலைத் தண்ணீர் வாங்கிக் குடித்தார்கள். பேருந்து நிறுத்தம் வந்தனர் இரண்டு பெண்களும், மூன்று ஆண்களும் இருந்தனர்.அதில் ஒரு பெண்மணி, “ஏம்மா, நீ டீச்சரம்மா தங்கச்சி செல்லிதானே?”
“ஆமாம் அக்கா, நீங்க?”
“உங்க அக்கா ஊருதான். நீ அக்கா வீட்டுக்கு வரும்போது பார்த்தது அஞ்சாறு வருசமிருக்கும், இப்போ வரதில்லை போல..”
“அப்படியா வேலை அதிகமா இருக்கறதால இப்போ அடிக்கடி வரமுடியலக்கா.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், “ஆறுமணி வண்டி பிரேக் டவுனாகி கீழேயே நிக்குது, இன்னக்கி வராது.”
“ஒத்தையடிப் பாதையிலே வெரசா போயிடலாம்“ என்று கலைந்தார்கள் மலைக்கிராம மக்கள் .
ஏற்கெனவே செல்லியிடம் பேசிய அந்தப் பெண்மணி, “நீ வாம்மா,பத்திரமா கூட்டிட்டுப் போய், அக்கா வூட்ல விட்டுடறோம்.”
“இல்லக்கா, நீங்க போங்க , இங்க வைத்தியர் வீட்டுல தங்கிடறோம்.”
“பத்திரம் ,நாங்க வரோம்.” என்றவள், “சரியான ராங்கிக்காரி.” என்று முனகிக் கொண்டே நகர்ந்தாள்.
செல்லியின் அக்கா தமயந்தியை அம்மாவின் அண்ணன் மகன் வீரேசனுக்குத் திருமணம் செய்திருந்தார்கள். இருவருமே தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள். வீரேசன் தன் ஊர் மக்களுக்குத் தன்னால் ஆனதைச் செய்ய வேண்டுமென்று எண்ணுபவர். அதனால் வேறு எங்கும் மாற்றல் வாங்கிச் செல்லாமல் கணவனும் மனைவியுமாக அங்கேயே பணிபுரிகின்றனர்.
செல்லி எடுத்தெறிந்து பேசுபவள். கோபம் மட்டும் வந்து விட்டால் யாரென்று யோசிக்கவே மாட்டாள். தமயந்தி எவர் மனமும் புண்படக்கூடாது என்று கவனமாகப் பேசுவாள். அக்காவும் தங்கையும் பாசமாகத்தான் இருந்தார்கள். ஏதோ நாளடைவில் வேறுபாடு புகுந்து கொண்டது. நகரத்தில் வாழ்க்கை, சொந்த வீடு. பிள்ளைகள் தனியார் பள்ளியில் படிப்பது. கணவனின் வேலையின் பெருமை எல்லாமும் சேர்ந்துகொண்டது. வசதி குறைவான வாழ்க்கை நடத்துபவள் என்று அவளை மதிப்பதில்லை. தங்கைதானே என்று தமயந்தி இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டாள்.
அப்பா பணி ஒய்வு பெற்றார் அப்போது கிடைத்த பணத்தில் மூன்று பேருக்கும் சமமாகப் பிரித்தபோது, “நாங்க உங்களுக்காகதானே இவ்ளோ பெரிசா வீட்ட கட்டிட்டு இருக்கோம்.”
“ நாங்க எப்பவும் போல இருந்துக்கறோம் செல்லி.”
“இல்ல மா, நீ வாடகை வீட்ல கஷ்டப்பட்டது போதும், இனிமே எங்க கூடவே இருந்துடுங்கப்பா.” என்று அழுது ஓய்ந்து விட்டாள்.
கடைசியில் அவளுக்கு பெரும்பகுதிப் பணத்தை வீடுகட்டத் தந்தார் அப்பா.
ஏனோ தெரியவில்லை பெற்றவர்களின், உழைப்பும், உடைமையும் தனக்கும், தன் பிள்ளைகளுக்கும் மட்டுமே சேர வேண்டுமென நினைக்கிறாள். அன்று தமயந்தியும், வீரேசனும் வந்திருந்தார்கள். அவர்கள் கிளம்பும்போது அம்மா , “பசங்களுக்கு வடையும்,பாயசமும் எடுத்துட்டுப் போயேன்.” என்றாள் . அப்பா,
“இதுல வச்சிக் கொடு..” என்று முதல்நாள் அவருக்கு ஓய்வூதியர் சங்கக் கூட்டத்தில் தந்த மூன்றடுக்கு டிபன் கேரியரை எடுத்துத் தந்தார்.
உடனே செல்லி, “நானுந்தான் தெனம் சாப்பாடு எடுத்துட்டுப் போறேன், எனக்கு தரணும்னு தோணலையாப்பா உங்களுக்கு..”
“ அப்படியில்லே மா.”
“பெரிய பொண்ணுனா உங்களுக்குப் பாசம் அதிகம் பா”
“என்ன செல்லி இப்படிப் பேசலாமா?” என்று இடையில் வந்த வீரேசனிடம்,
“நீங்க நடுவுல வராதீங்க மாமா..” என்றாள்.
“ நானும் பார்த்திட்டுதான் வரேன் நீ யாரையும் மதிக்கறதில்லே..” என்றார் அப்பா.
“நான் ஞாயத்தைக் கேட்டா சண்டைக்காரியா?”
“ செல்லி அக்கா, தங்கச்சி ஒத்துமையா இருக்கணும் .”
“அம்மா நீ ஏன் சொல்ல மாட்டே, அது குடும்பந்தான் அதுக்குப் பெரிசு, உங்க மேல அக்கறை கொஞ்சமாவது இருக்கா?.”
“ எங்களை நாங்க பார்த்துக்குவோம்.”
“அப்பா போதும் விடுங்க, இதை தங்கச்சியே வச்சிக்கட்டும், நாங்க கெளம்பறோம்.” என்று சென்றவள் தான் தமயந்தி நான்கு ஆண்டுகளாகிறது. பெற்றோர் சென்று பார்த்து வருவதோடு சரி.இருவரும் பேசிக் கொள்வதும் இல்லை. ஆனால் அதற்காகச் செல்லி கவலைப்படுவதும் இல்லை.
இப்போது எப்படி அவள் வீட்டிற்குப் போவது?. ஆறரை மணியாகிவிட்டது. சொல்லி விட்டாளே தவிர, வைத்தியர் வீட்டில் எப்படித் தங்க முடியும். அங்கே வயதான கிழவி ஒருத்தி மூலிகை அரைக்கவும், வைத்தியருக்கு உதவும் மூன்று பேர் மருந்து தயாரிக்கவும் இருப்பதை அறிவாள். எப்படி கேட்பது தங்க இடம்? அந்த ஊரில் வேறு யாரும் தெரிந்தவர்களும் இல்லை. மாதையன் சென்னைக்கு ஏதோ வேலையாகச் சென்றிருக்கிறான். அதோடு நிலைமையைச் சொல்லவும் அலைபேசி இங்குச் சரியாக இயங்காது. என்னதான் செய்வது?
“ அம்மா, குளிருது..”
“இதோ இதைப் போர்த்திக்கோ..” என்று பையிலிருந்த துண்டை எடுத்துப் போர்த்தி விட்டாள்.
வைத்தியர் வீட்டிற்குச் சென்றாள். இப்போது நன்றாக இருட்டி விட்டது. மினுக் மினுக் என்று தெரு விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. வீட்டுக் கதவு மூடியிருந்தது தட்டினாள்.யாரும் திறக்கவில்லை.
ஒரு சந்தடியும் இல்லை. பக்கத்தில் வீடுகளே இல்லை. ஒரு சரிவின் இறக்கத்தில் சில வீடுகளில் லாந்தர் விளக்குகளின் வெளிச்சம் தெரிந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இறங்கினாள்.
ஒரு வீட்டுத் திண்ணையில் இரண்டு பேர் பீடி பிடித்துக் கொண்டிருந்தார்கள். பேச்சும் சிரிப்பும் மதுவின் போதையைப் பறைசாற்றியது. அந்த இரவின் அமைதி இதை இவளுக்கு. தூரத்திலிருந்தே உணர்த்தியது. பாதி தூரம் இறங்கியவள் மகனை அழைத்துக் கொண்டு திரும்பிப் பேருந்து நிறுத்தம் வர முற்பட்டாள்.
இருட்டானால் என்ன கோலிகுண்டுகளாய் மின்னிய கண்களால் இவர்களைப் பார்த்து விட்ட கருப்பு நாய் ஒன்று குரைத்துக் கொண்டே துரத்த வந்தது.
“ராவானா இதோடத் தொல்ல தாங்கல..” என்று அதட்டி கல் எடுத்து எறிந்தான் திண்ணையிலிருந்த ஒருவன். சற்று அடக்கி வாசித்துக் கொண்டே திரும்பிச் சென்றது அது.
அந்த நிறுத்தத்தின் பின்புறம் மலைச் சரிவும், முன்புறம் வளைந்து செல்லும் குறுகலான தார்ச்சாலையை ஒட்டி அடர்ந்த காடும் இருந்தது. இரவில் இங்கு ஓநாய், நரி, மான், சமயங்களில் புலிகளின் நடமாட்டமும் உண்டு. அதனால் ஊரே அடங்கி விடும். தனியாக எவரும் வெளியில் வருவதில்லை. குலதெய்வத்தை வேண்டிக் கொண்டாள்.
“தாயே நீயே துணையா இருந்து காப்பாத்து”
சிமென்ட் பலகையில் உட்கார்ந்து, பயத்திலும் பசியிலும் குளிரிலும் ஒடுங்கியிருந்த மகனை மடியில் படுக்க வைத்து சேலைத் தலைப்பால் போர்த்திக் கொண்டாள். காய்ந்த இலைகளில் சரசரவென்று ஒரு சத்தம். பாம்போ என்னவோ?.
எங்கிருந்தோ ஆந்தை ஒன்று அலறியது. புலி வருமோ?,இல்லை காட்டு யானைதான் வருமோ? எத்தனை நேரம் ஆனதோ தெரியவில்லை. பளீரென வெளிச்சம் அடித்து இரு சக்கர வாகனம் ஒன்று வந்து நின்றது. மூச்சே நின்று போனது இவளுக்கு.
“செல்லி ஏறுமா வண்டியில” என்று சிவாவைத் தூக்கிக் கொண்டார் வீரேசன்.
பத்தே நிமிடத்தில் வீட்டிற்கு வந்து விட்டனர்.
வாசலில் நின்றிருந்த தமயந்தி, ”ஏண்டி அப்படி என்ன வீராப்பு? பக்கத்துத் தெரு குப்பம்மாக்கா வந்து சொல்லிட்டுப் போனாங்க” என்று கண்ணில் நீர் வழிய, தங்கையைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
”சரி குளுருது உள்ளே கூட்டிட்டுப் போ, சூடா சாப்பிட வை.”
“செல்லி நிம்மதியாத் தூங்குமா, நான் மாதையனுக்குப் போன் பண்ணிட்டு வரேன்” என்றார் வீரேசன்.
“பெரிமா பசிக்குது” என்றான் சிவா.
பேச்சே எழாமல் கர்வமெல்லாம் கரைந்து விழிவழி ஓட அக்காவையும் மாமாவையும் கையெடுத்துக் கும்பிட்டாள் செல்லி.
எழுத்தாளர் மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings