in ,

மாத்தி யோசி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கமலத்திற்கு மண்டை காய்ந்தது.

‘வர்றவங்கலாம் ஒவ்வொரு வருஷத்துலயே காலி பண்ணிக்கிட்டுப் போனா என்ன அர்த்தம்… ‘

கோபத்தில் பாத்திரத்தை உருட்டினாள் அவள். ஹாலில் இருந்து அதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ராமன் கமுக்கமாய் சிரித்துக்கொண்டார். 

இவள் இப்படித்தான், கோபம் என்று வந்துவிட்டால் ஒன்று வார்த்தைகளில் காட்டுவாள், அல்லது கையில் அகப்படும் பாத்திரங்களில் காட்டுவாள்.  அதை நினைத்துக் கொண்ட போது இன்னும் சிரிப்பு வந்தது அவருக்கு. சரி, அவளது கோபம் கொஞ்சம் தணியட்டும், பிறகு கூப்பிட்டு புத்திமதி சொல்லலாம் என்று கம்மென்று இருந்துவிட்டார்.

நடந்தது இதுதான்… கீழ் போர்ஷனை வாடகைக்கு விட்டிருந்தார்கள். சரியாக ஒரு வருஷம் ஆகிவிட்டது.  காலையில் அந்தம்மாள் மேலே படியேறி வந்திருந்தாள்.

‘அக்கா எப்படி இருக்கீங்க… ‘ என்றாள். வழக்கமான குசலம் என்பதால், ‘ நல்லாயிருக்கேன் திவ்யாம்மா… நீங்க எப்படி இருக்கீங்க… ‘ என்றாள் இவளும்.  திவ்யா என்பது அவர்களின் பன்னிரண்டு வயது பெண்.

‘டீ கொண்டு வர்றேன்… உட்காருங்க… ‘ என்றுவிட்டுத் திரும்பினாள் கமலம். உடனே, ‘இல்லேக்கா… இப்போதான் சாப்பிட்டோம்… ‘ என்று மறுத்தாள் அவள்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலையிலிருந்தே எல்லா வேலைகளையும் சாவகாசமாய் செய்து கொண்டிருந்தாள் கமலம். திவ்யாம்மாவின் கணவனும் வேலைக்குப் போயிருக்க மாட்டார். அதனால் ரெஸ்ட் கிடைத்திருக்கும், நம்முடன் பேச வந்திருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டாள் கமலம்.

‘ அக்கா… ‘

‘ சொல்லுங்க… ‘

‘ எங்க மாமியார் அவங்களோட வந்துடச் சொல்லி கேட்டுக்கிட்டே இருக்காங்க… அதனால… ‘

‘ அதனால… ‘

‘ அடுத்த மாசம் வீட்டைக் காலி பண்ணிடலாம்னு இருக்கோம் ‘

திடுக்கிட்டுப் போனாள் கமலம்.

போன வருடம் அவளும் அவளது கணவனும் இங்கே வந்திருந்தார்கள். அப்போது கீழ் போர்ஷன் காலியாகி வெளியே வாடகைக்கு போர்டு மாட்டியிருந்தார்கள்.

வீடு வேண்டும் என்று சொன்னார்கள். அவர் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறார். இந்தம்மாள் டியூஷன் எடுக்கிறார்.  அதனால் வாடகைக்கு பிரச்சினை இருக்காது என்று நம்பினாள் கமலம்.

அவளது மாமியார் மாமனார் இதே ஊரில் கடைகோடியில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் மனவருத்தமாம். அதனால் கொஞ்ச காலம் பிரிந்து தனியாக இருக்க வேண்டும் என்று வந்திருப்பதாக சொன்னார்கள். 

கமலம் போட்ட முதல் கண்டிஷன், ‘கண்டிப்பா குறைஞ்சது ரெண்டு வருஷமாவது இருக்கணும்… அதுக்கு மேலே இருந்தாலும் சரி… ‘ என்றாள்.

அவர்கள் புரியாமல் பார்த்தார்கள்.

‘ஏன் சொல்றேன்னா… ஏற்கனவே காலி பண்ணினவங்க ஒரே வருஷத்துல காலி பண்ணிட்டாங்க. அதுக்கு முன்னே இருந்தவங்களும் ஒரே வருஷத்துல காலி பண்ணிட்டாங்க… இப்படி வர்றவங்கலாம் ஒரு வருஷம் ஒரு வருஷம் மட்டும் இருந்துட்டு காலி பண்ணிக்கிட்டு போயிட்டிருந்தா… வீட்டுலே ஏதோ பிரச்சினைங்கற மாதிரியல்லவா பார்க்கறவங்க நினைச்சுக்குவாங்க… இல்லே நாங்க ஏதோ அவங்களுக்கு தொல்லை கொடுக்கற மாதிரியும் நினைச்சுக்குவாங்க இல்லே… அதான்… குறைஞ்சது ரெண்டு வருஷமாவது இருந்தா வீடு தர்றேன்… அதுக்கு மேலே உங்க விருப்பம்… ‘ என்று நிறுத்தி உற்று நோக்கினாள்.  அவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர் மெல்லிய குரலில்.

‘அன்னிக்கு தலையைத் தலையை ஆட்டிட்டு இன்னிக்கு வந்து வீடு காலி பண்றேன்னா என்ன அர்த்தம். இல்ல இவங்கள்லாம் மனசுல என்னத்தான் நினைச்சிக்கிட்டிருக்காங்கனும் தெரியலை‘ என்று முணுமுணுத்தபடியே காஃபி கப்புடன் கணவனிடம் வந்தாள்.

சிரித்தபடி கப்பை வாங்கிக்கொண்டு, ‘கமலா.. இப்படி உட்கார் ‘ என்று சோபாவைக் காட்டினார்.  கணவன் ஏதோ சொல்லப் போகிறார் என்ற நினைப்புடன் காஃபியை பருகிக் கொண்டே அவரருகில் உட்கார்ந்தாள். 

‘ரெண்டு வருஷத்துக்கு முன்னே வந்தவங்ககிட்ட ரெண்டாவது வருஷத்துலேர்ந்து ஐநூறு ரூபாய் ஏற்றித் தரணும்னு சொன்னே… அவங்களும் சரின்னு சொல்லிட்டுத்தான் குடிவந்தாங்க. ஆனா அடுத்த வருஷமே காலி பண்ணிட்டாங்க… கரெக்ட்டா… ‘

கணவனை ஏறிட்டாள். ‘ ஆமா… அதுக்கென்ன இப்போ… ‘ என்றும் சொன்னாள்.

‘அடுத்தாப்புல வந்தவங்ககிட்ட அந்த ஐநூறு ரூபாயையும் ஏத்திதான் வாடகைக்கு விட்டோம்… அவங்களும் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க… ‘

மறுபடியும் கொஞ்சம் முறைத்துப் பார்த்தபடி, ‘ அதான் தெரியுமே… அதுக்கென்ன இப்போ…‘ என்றாள்.

மறுபடியும் சிரித்தபடி சொன்னார், ‘இதே தெருவுலே நம்ம சைஸ் வீடுதான், பதினெட்டாயிரம் வாடகைக்கு விட்டிருக்காங்க… நாம ஆரம்பத்துல குறைஞ்ச வாடகைக்கு விட்டுட்டு நடுவுல ஏத்த முடியாம தவிச்சோம்… கரெக்ட்டா… ‘

இப்போது கொஞ்சம் கடுப்பு ஏறியது இவளுக்கு. ‘ஆமா… ரொம்ப சரி… சரி, ஆனா இதெல்லாம் ஏன் இப்போ என்கிட்டே சொல்லிட்டிருக்கீங்க… தெரிஞ்ச விஷயம்தானே… ‘ என்றுவிட்டு காஃபி கப்பை தரையில் லொட்டென வைத்தாள்.

‘உனக்கு யோசனை பத்தலை… அதான் சொல்றேன்… ‘ என்றார் கடைவாயில் சிரிப்புடன்.

புரியாமல் முழித்தாள் இவள்.

‘அந்தம்மா வந்து வீடு காலி பண்றோம்னு சொன்னப்போ நீ எப்படி புலம்பினேன்னு எனக்குத் தெரியும்… ‘

‘ஆமா… நிசம்தான்… ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வருஷத்துலயே காலி பண்ணிக்கிட்டு போயிட்டிருந்தா பார்க்கறவங்க நம்ம மேலேயும் வீட்டு மேலேயும் சந்தேகப் படமாட்டங்களா…‘

‘ மாத்தி யோசி  கமலா… ‘

மறுபடியும் புரியாமல் பார்த்தாள் இவள்.

‘அவங்க வீடு காலி பண்ணறதுல ரெண்டு நல்ல விஷயம் இருக்கு… அதை யோசிச்சியா… ‘

கண்களை அகலவிரித்தபடி அவளை ஏறிட்டாள்… ‘ அதெப்படி ‘ என்றாள்.

‘மாமியாரோட சண்டை போட்டுக்கிட்டு இங்கே வந்தாங்க… இப்போ ஒன்னு சேரப் போறாங்க… ‘

சட்டென நிமிர்ந்த கமலம், ‘ சேரட்டுமே… அதனால எனக்கென்ன… ‘

‘சரி அதை விடு… உனக்கு அதனால பிரயோஜனம் இல்லைதான்… ஆனாலும் அதென்ன இன்னொரு நல்ல விஷயம்னு கேட்கமாட்டியா… ‘

‘ சரி… சொல்லுங்க… கேட்கறேன்… அதென்ன இன்னொரு நல்ல விஷயம்… ‘

‘ இப்போ பதினஞ்சாயிரம் வாங்கிட்டிருக்கோம்… ‘

‘ ஆமா… தெரிஞ்சதுதானே… ‘

‘தெரியாதது ஒன்னு இருக்கு… நாம வாடகையை ஏத்தி விடறதுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருக்குன்னு ஏன் நீ அந்த கோணத்துல நினைக்கலை…’ 

சட்டென நிமிர்ந்து உட்கார்ந்தாள் கமலம்.

சிரித்தபடி சொன்னார், ‘ நான் சொன்னேன்ல… நம்ம சைஸ் வீட்டை பதினெட்டாயிரத்துக்கு ஒருத்தர் விட்டிருக்காங்கன்னு… நாமளும் அதே வாடகைக்கு விடுவோம்… மூவாயிரம் கூடுதலா வாடகை கிடைக்கும்ல… ‘

இப்போது நிமிர்ந்து உட்கார்ந்து கண்களையும் அகலவைத்துக்கொண்டு அவரை ஏறிட்டாள்.  ‘ ஆமா இல்லே… ‘

‘ ஆமாவா… இல்லையா… ‘

‘ ஆமா… ‘

‘மண்டு… அதான் முதல்லேயே சொன்னேன்… மாத்தி யோசின்னுட்டு…’ என்றவர், அவள் பக்கம் முழுதாகத் திரும்பி, ‘அவங்க வீட்டை காலி பண்ணட்டும்… நமக்கு அதுல ஆதாயம் தான்… சுளையா மூவாயிரம் கூடுதலா கிடைக்கும்… வாயைப் பொத்திக்கிட்டு உடனே போயி சரி சொல்லிடு… ‘ என்றார்.

அவளது காஃபி கப்பையும் அவர் வைத்த கப்பையும் எடுத்தபடி ‘ ‘ நல்ல ஐடியாங்க… இப்போவே போயி சொல்லிடறேன்… ‘ என்றாள்.

அதே நேரம் வெளியே  இருந்து, ‘ அக்கா… ‘ என்ற குரல் கேட்டது. எட்டிப்பார்த்தாள் கமலம்.  திவ்யாம்மா நின்றிருந்தாள்.  புன்னகைத்தபடி உள்ளேயும் வந்துவிட்டாள்.

‘ அக்கா யோசிச்சுப் பார்த்தோம்… இன்னொரு வருஷம் இருந்துட்டே போகலாம்னு முடிவு பண்ணிட்டோம்… ‘ என்றாள் அவள்.

திகைத்துப்போன கமலம், உடனே சுதாரித்துக்கொண்டு, ‘இல்லே திவ்யாம்மா… எனக்கொன்னு ஆட்சேபனை இல்லை… நீங்க தாராளமா வீட்டைக் காலி பண்ணிக்கங்க…‘ என்று சொன்னதும், ஒன்றும் புரியாமல் பார்த்த அந்தம்மாள், ‘ நிஜமாவா… ‘ என்றாள்.

‘ சத்தியமா…‘ என்றாள் கமலம்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

 (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சவாரியும் சந்தோஷமும் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு