in ,

சீட் எண் 45 (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

‘கன்னியாகுமரியிலிருந்து நிஜாமுதீன் வரை செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் வண்டி எண் 12641 இன்னும் சற்று நேரத்தில் முதலாவது நடைமேடையில் வந்து சேரும்… ‘

அந்த அறிவிப்பைக் கேட்டவுடன் உஷாரானான் கோவிந்தன்.  மாலாவும் பாபுவும் சிமென்ட் பலகையில் உட்கார்ந்திருந்தனர். ஒரு பெரிய ட்ராலி பேக், ஒரு சிறிய ட்ராலி பேக், இரண்டு ஷோல்டர் பேக்குகள், ஒரு கைப்பை என்று எல்லாவற்றையும்  அவர்களுக்கிடையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். ஏற்கனவே பாபு அவைகளை ஒருமுறை எண்ணிப்பார்த்து எல்லாம் சரியாக இருக்கின்றன என்று சொல்லிக்கொண்டான்.  மக்கள் கூட்டம் அலை மோதியது.  

சிறிது நேரம் கழித்து பாபு விளம்பர டிவியில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்தான். மாலா அமைதியாக எங்கோ வெறித்து பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். கண்களில் கண்ணீர் பொங்கிக்கொண்டு நின்றது. அவளைப் பார்த்ததும் ஒரு பெருமூச்சொன்றை இழுத்து விட்டான், கோவிந்தன். எவ்வளவோ தடவை அவளுக்கு ஆறுதல் சொல்லியாகிவிட்டது.

அறிவிப்பு வந்துவிட்டதால் ரெயில் ஏதும் ஸ்டேஷனை நெருங்குகிறதா என்று பார்க்க எண்ணி பிளாட்பாரத்தின் ஓரமாய் போய் நின்று ஸ்டேஷனின் கடைகோடியை உற்றுப் பார்த்தான், கோவிந்தன். வண்டி வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. பெருமூச்சொன்றை விட்டபடி திரும்பினான்.

மறுபடியும் ஒருமுறை பைகளை எண்ணிக்கொண்டான். மாலா இன்னும் அப்படியேத் தான் உட்கார்ந்திருந்தாள். அவளது தோளை ஆதரவாய் அழுத்தி, ‘ மாலா… கண்ணைத் தொடைச்சிக்கோ… இன்னும் கொஞ்ச நேரத்துல வண்டி வந்துடும்ங்கறாங்க… ‘ என்றான்.

அவனை இவனை ஒருமுறை வெறுமையாய் பார்த்துவிட்டு அமைதியாய் திரும்பிக் கொண்டாள். பெருமூச்சொன்றை விட்டபடி அவளருகில் உட்கார்ந்து குரலையும் தாழ்த்திக்கொண்டு சொன்னான், ‘மாலா… குடுத்த கடவுள் திருப்பி வாங்கிக்கிட்டான்… துக்கம் தான். மனவேதனைதான். கிளம்பும்போது அம்மாக்கூட என்னைக் கட்டிப்பிடிச்சிக்கிட்டு அழுதுதானே அனுப்பி வைச்சாங்க… எனக்கும்தான் நெஞ்சுக்குள்ளே அழுத்துது… என்ன பண்ண… நமக்கு கடவுள் விட்ட வழி இதான்… எழுந்து நின்னாகனுமே… ஆக வேண்டிய வேலைகளைப் பார்த்தாகணுமே… ‘ என்றுவிட்டு அவளது தோளை ஆதரவாய் மெல்ல அழுத்தி, ‘ரெயில் வரப் போகுது… கண்ணைத் துடைச்சுக்கோ… கொஞ்சம் நார்மலுக்கு வா… ‘ என்றவன் பக்கத்தில் இருக்கும் டீக்கடையைப் பார்த்துவிட்டு,  ‘ டீ ஒன்னு வாங்கிட்டு வரவா… ரயில் வர்றதுக்குள்ளே குடிச்சிடலாமே… தம்பிக்கும் ஏதாவது வாங்கி வரட்டா… ‘ என்றான்.  ‘

பாபு அம்மாவைப் பார்த்தான். அப்பாவையும் பார்த்தான்.  பிறகு விளம்பரம் வரும் டீ.வி.பெட்டியை பார்க்கலானான்.

‘வேண்டாம்… ‘ என்பது போல தலையை அசைத்தாள் மாலா.  கண்களையும் துடைத்துக் கொண்டாள். மூக்கையும் உறிஞ்சிக் கொண்டாள். ரெயில் வரும் திசையைப் பார்த்தாள். பையைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் ஒரு முடக்கு குடித்தாள். கோவிந்தனுக்கு இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.  

மக்கள் அரக்கபரக்க ஓடினார்கள். எட்டிப் பார்த்தான் கோவிந்தன். சத்தம் கொடுத்தபடி கொஞ்சம் தூரத்தே ரெயில் வருவது தெரிந்தது. நல்லவேளை டீ வாங்கவில்லை என்றெண்ணியபடி பைகளை எண்ணிக்கொண்டே சிலதை தானும் தூக்கிக்கொண்டு சிலதை மாலாவை எடுத்துக்கொள்ளவும் வைத்தான்.

‘பெட்டி நின்னதும் நீ தம்பியை தூக்கி ஏத்திவிட்டுட்டு ஏறிக்கோ… நான் பின்னாலேயே நின்னு உங்களை ஏத்திவிட்டுட்டு அப்புறம் ஏறிக்கறேன்… ‘ என்றவன் மகனைப் பார்த்து, ‘கண்ணு… அம்மா உன்னை எத்திவிட்ட்து உள்ளே போய் ஓரமா நின்னுக்கோ… அம்மா நானு உள்ளே ஏறியதும்… உன்னை சீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்… சரியா… நீ அந்த பக்கம் இந்தப் பக்கம்னு நகரக் கூடாது… ‘ என்றுவிட்டு அலைபாயும் மக்கள் கூட்டத்தைப் பார்த்துவிட்டு, ‘கூட்டம் வேற நிறைய இருக்குது… பார்த்து ஏறம்னும்… ‘ என்றும் சொல்லிக்கொண்டான்.

ஒருதடவை மொபைலை எடுத்து ரெயில் டிக்கட் வந்த மெயிலைத் திறந்து விவரங்களைப் பார்த்துக் கொண்டான். ‘S2 கோச்சு… சீட்டு நம்பர்…42, 43, 44, 45… ‘ என்றுவிட்டு சட்டென நாக்கைக் கடித்துக்கொண்டான்… பிறகு, ‘ S2 இந்த இடத்துலதான் நிக்குமாம்… ‘ என்றான்.

மாலா அவன் சொன்னதைக் கவனித்தாளா என்று தெரியவில்லை… இயந்திரத்தனமாக பைகளை எடுத்துக்கொண்டு ஒருகையால் பாபுவையும் பிடித்துக்கொண்டு மெல்ல ஓடும் பெட்டிகளைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.  மக்கள் அங்குமிங்குமாய் தாறுமாறாகவும் ஓடிகொண்டுதான் இருந்தார்கள்.

இதுவரை துக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த இவனுக்கும் திடீரென்று அழுகை முட்டிக்கொண்டு வந்தது. விட்டால் எங்கே அழுதுவிடுவோமோ என்ற பயமும் வரத்தான் செய்தது.

இதுவரை மாலாவை ஆறுதல் படுத்திக்கொண்டிருந்துவிட்டு இப்போது நாமும் அழுது விட்டால் அப்புறம் அவளை யார் தேற்றுவது… என்ற கவலை எழுந்த மறுநொடியே டக்கென ட்ராலியை வைத்துவிட்டு யாரும் கவனித்துவிடாதபடி கண்களைத் துடைத்துக் கொண்டான்.

பெட்டி கிரீச்சிட்டு ஒரு குலுக்கு குலுக்கி நின்றது. மக்கள் அடித்துப்பிடித்துக்கொண்டு ஓடினார்கள். மாலா பாபுவை தூக்கி உள்ளே விட்டுவிட்டு கம்பியைப் பிடித்துக்கொண்டு தானும் ஏறினாள். மக்கள் குறுக்கே புகுந்து ஏறினார்கள். கோவிந்தனும் நிதானத்துடன் ஏறிக் கொண்டான். பிறகு மூவருமாக உள்ளே நடந்ஹனர். சீட்டு நம்பர்களை பார்த்துக் கொண்டே நடந்தார்கள்.

‘ யப்பா… தோ நாப்பத்துரெண்டு… ‘ என்று சத்தம் போட்டான் பாபு.  

உஷாரான கோவிந்தன் மாலாவையும் மகனையும் உட்கார வைத்துவிட்டு ட்ராலிகளை சீட்டுக்கடியில் திணித்துவிட்டு அவளிடம் இருந்த பைகளையும் வாங்கி சீட்டுக்கடியில் ஒன்றும் கொக்கியில் ஒன்றுமாய் தொங்கவிட்டான்.  ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் கொடுத்து கையில் வைத்துக்கொள்ளச் சொன்னான்.  

ஜன்னலுக்கு வெளியே, ‘டீ… காபி… வடை… போண்டா… ‘ என்று குரல் கொடுத்தார்கள் பிளாட்பார வியாபாரிகள்.

மனைவியைப் பார்த்தான். இன்னும் இறுக்கமாய்தான் உட்கார்ந்திருந்தாள். இதை விட்டால் அடுத்த ஸ்டேஷன் வரும்வரை டீ குடிக்கமுடியாது என்பதால், ‘மாலா டீ குடிச்சுக்கோ… கொஞ்சம் தெம்பா இருக்கும்…. ‘ என்றான்.

அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனாலும் காசைக்கொடுத்து இரண்டு டீ கப்புகளை  வாங்கிக்கொண்டான். இரண்டு போண்டாவும் வாங்கிக்கொண்டான். அவளோ காலியாக இருந்த அந்த சீட்டை தடவிப்பார்த்துக்கொண்டிருந்தாள். கண்களில் மளமளவென கண்ணீர் கொட்டியது.  

அந்த சீட் நம்பர் 45. சுந்தருக்கானது. கேன்ஸலும் செய்யவில்லை.

ஏழெட்டுப் பையன்கள் வயலூர் போகும் ரோடில் ஜாலியாக சத்தம் போட்டுக்கொண்டு சைக்கிள்களில் பறந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் போய்க்கொண்டிருந்தது உய்யக்கொண்டான் வாய்க்காலை நோக்கித்தான்.  அந்த வாய்க்காலில் தண்ணீர் வெள்ளம் போல வருகிறதால் அதில் குளித்து மகிழலாம் என்றெண்ணி போய்க் கொண்டிருந்தார்கள்.

இரண்டு நாட்கள் முன்புதான் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டிருந்தார்கள். மண்ணும் சகதியும் ஆகாயத்தாமரை செடிகளுமாய்  வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதன் விளைவாக அதன் கிளை வாய்க்காலான உய்யக்கொண்டான் வாய்க்காலிலும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

‘டேய் குணா… நிஜமாவே வாய்க்கால்ல தண்ணீ வருதாடா… அங்கே போயி தண்ணீ வரலைனா ஏமாந்து போயி திரும்பனுமே… நான் வேற எங்க அப்பாவோட புதுத்துண்டை எடுத்துக்கிட்டு வந்திருக்கேன், அவருக்கிட்டகூட சொல்லாம… ‘ என்றான் ஒருவன்.

‘அட… நேத்து சாயங்காலம் எங்கப்பா வயலூர் போயிட்டு வரும்போது பார்த்திருக்கார்டா… வாய்க்கால்ல பாதிக்கு மேலே தண்ணீ ஓடுதாம்… ரொம்ப நாளாச்சில்ல, வாய்க்கால்ல நீச்சலடிச்சு… ‘ என்றான் மற்றொருவன்.

‘ டேய்… டில்லிக்காரனுக்கு நீச்சல் தெரியுமாடா… ‘

நம்மைத்தான் சொல்கிறார்கள் என்று புரிந்தவுடன் சுந்தர், ‘ நீச்சல் தெரியாட்டி என்ன… வாய்க்கால்ல தானே குளிக்கப் போறோம்…  உட்கார்ந்து குளிச்சுக்கறேன்… அதோட இன்னும் ரொம்பநாள் இருப்போம்ல… தினமும் வந்து நீச்சல் அடிச்சு கத்துக்க மாட்டேனா… ‘ என்றான் விழிகளை உருட்டிக்கொண்டு.

‘சுந்தரு… நீ கவலைப்படாதே… வாய்க்கால் ஓரங்கள்ல அங்கங்கே மரம் இருக்கும்… அதோட வேர் வாய்க்காலை ஒட்டித்தான் இருக்கும்…. அதைப் பிடிச்சிக்கிட்டே நீ காலால அடிச்சு அடிச்சு நீச்சல் கத்துக்கலாம்… ஈஸிதான்… ‘ என்றான் இன்னொருவன்.

ஒரு பெரிய தரைப்பாலம் இருக்கிறது. அதை ஒட்டி படிக்கட்டுகளும் துணி துவைக்கும் கற்களும் போட்டிருக்கிறார்கள். பொதுவாக மக்கள் அங்கேதான் குளிப்பது வழக்கம். மற்ற இடங்களில் சேறாக இருக்கும்… வழுக்கிவிட்டுவிடும்.  அத்துடன் ஆகாயத் தாமரைகள் முளைத்து வாய்க்காலையே அடைத்தபடி கிடக்கும்.

கொஞ்சதூரம் போனதுமே வாய்க்கால் தெரிந்தது. அதில் தண்ணீரைப் பார்த்ததும் மிகவும் குதூகலத்துடன் சைக்கிளை ஆங்காங்கே நிறுத்திவிட்டு எல்லோரும் வாய்க்காலை நோக்கி ஓடினார்கள்.  சுந்தரும் ஓடினான்.

அவர்களுக்கு இப்படி வாய்க்காலில் குளித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன.  இரண்டு மாதங்களாக தண்ணீர் வந்துகொண்டுதான் இருந்தது.  ஆனால் கணுக்கால் அளவு கூட இருந்திருக்காது. அதனால் யாரும் அங்கே வருவதில்லை.

எல்லோரும் வாய்க்காலில் இறங்கி… குதித்து… மூழ்கி… நிமிர்ந்து திளைத்தார்கள்.  ஓரிருவர் நீச்சல் போட்டார்கள், குப்புறப்படுத்தும், மல்லார்ந்தபடியும். ஓரிருவர் உட்கார்ந்தேயும் குளித்தனர்.

ஒருவன் சோப்புப் போட்டுக்கொண்டான். ஒருவன் ஷாம்பூவைத் தேய்த்துக்கொண்டான். மற்றவர்கள் ஜாலியாக குதித்துக் கொண்டிருந்தார்கள்.

திடீரென்று ‘ அய்யய்யோ… ‘ என்று ஒரு அலறல் சத்தம்.

எல்லோரும் அரண்டு போனார்கள். யார் எங்கேயிருந்து என்று பார்த்தால் கொஞ்ச தூரத்தில் சுந்தர்தான் துடித்துக்கொண்டிருந்தான்.

இரண்டு மூன்று பேர் தண்ணீரிலேயே அவனை நோக்கி ஓடினார்கள். அருகில் போனதும் தான் தெரிந்தது அவனது காலை ஒரு முதலை  பிடித்துக் கொண்டிருக்கிறதென்று. ரத்தம் தண்ணீரோடு கலந்து ஓடிக்கொண்டிருந்தது.

‘டேய்… முதலைடா… சுந்தர் காலைப் பிடிச்சிக்கிட்டிருக்குதுடா… ‘ என்று ஒருவன் சத்தம் போட எல்லோரும் அலறிக்கொண்டும் பதறிக்கொண்டும் கரைக்கு ஓடினார்கள்.

ஒருவன் ‘டே கல்லு ஏதும் கிடைக்குதா தேடுடா… ‘ என்றான். ஒருவன் மரத்தில் இருந்து குச்சி ஏதும் உடைக்கமுடியுமா என்று தேடினான். வாய்க்காளிலேயே ஓடிய பையன்கள் பலத்துடன் சுந்தரின் கையைப் பிடித்து தங்கள் பக்கமாய் இழுக்க முயற்சித்தார்கள்.

உடும்புப்பிடி என்பதை என்றுதான் எல்லோரும் பார்த்தார்கள். அப்படி பிடித்திருந்தது அந்த முதலை. கொஞ்சம் சிறிய சைஸ் முதலைப் போலத்தான் இருந்தது. ஆனாலும் அவனது காலை நன்றாக கவ்விக்கொண்டிருந்தது. அவனை இழுக்க முடியவில்லை. ரத்தம் வாய்க்கால் தண்ணீருடன் கலந்து ஓடிக்கொண்டிருந்தது.  

இவர்களது கூச்சல் சத்தம் கேட்டு அந்த வழியாக காரிலும் பைக்கிலும் போய்க் கொண்டிருந்தவர்கள் தங்களது வாகனங்களை விட்டுவிட்டு  ஓடோடி வந்தார்கள்.

ஆஸ்பத்திரி வாராண்டாவில் ஒரே கூட்டம். எதிரே எமெர்ஜென்சி வார்டு. ஒரு நர்ஸ் சத்தம் போட்டுக்கொண்டிருந்தாள்.

‘தம்பிகளா… அக்கா… அப்படி போயி ஓரமா நில்லுங்க… அண்ணா… உங்களையும்தான்… வழியை அடைசிக்கிட்டு நின்னா எப்படி வருவாங்க… போவாங்க… ‘

அந்தக் கூட்டத்தில் மாலாவும் கோவிந்தனும் இன்னும் அவரது சொந்தக்காரர்கள் தெரிந்தவர்கள் என்று நிறையபேர் அழுகையும் கண்ணீரும் கவலையும் பதட்டமுமாய் காத்திருந்தனர்.

அந்தப் பக்கமாக வந்த ஒருவர், ‘ என்னாச்சு… ‘ என்றார்.

ஒரு பையன், ‘நாங்கள்லாம் வாய்க்கால்ல குளிக்கப் போனோம்… அதோ அழுதுக்கிட்டிருக்காங்களே அந்தக்கா… டில்லிக்காரங்க… அவங்க பையனும் எங்களோட வந்தான்.  வாய்க்கால்ல முதலை இருந்திருக்கு.  யாரும் கவனிக்கலே… பசங்க தண்ணீல விளையாடறதைப் பார்த்துட்டு ஓடிவந்து அவன் காலைக் கவ்விடுச்சு… ‘ என்றான்.

இன்னொருவன்,  ‘நாங்க அங்கேதான் குளிப்போம்… இதுவரைக்கும் இப்படி முதலை வந்து நாங்க பார்த்ததில்லை… ‘ என்றான்.

இன்னொருவன்,  ‘ ஆத்துல தண்ணி வரவும் அதுமூலமா முதலையும் வாய்க்காலுக்குள்ள வந்துடுச்சு போல… இதான் முதலை வர்றது முதல் தடவைன்னு நினைக்கறேன்… ‘ என்றான்.  

இன்னொருவன் முந்திக்கொண்டு, ‘இல்லடா… ஏழெட்டு வருஷத்துக்கு முன்னால இது மாதிரி முதலை வந்திருக்குன்னு எங்கண்ணன் சொல்லுச்சு… ‘ என்றான்.

மாலா அழுதுகொண்டிருக்க கோவிந்தனும் பரிதவித்தபடி நின்றிருந்தான்.  நிறையபேர் கண்கள் கலங்கியிருந்தனர்.

வெளியே வந்த டாக்டரை எல்லோரும்  சுற்றிக்கொண்டனர்.  ‘ பையனுக்கு உறவுமுறை யாராவது இருக்கீங்களா… ‘ என்றார், பொதுவாக எல்லோரையும் பார்த்து.

‘டாக்டர் எங்க பையன்தான் அவன்… எப்படி இருக்கான்… என்னாச்சு டாக்டர்… ‘ என்று தவித்தபடி முன்னே ஓடிவந்தான் கோவிந்தன்.

‘கால் பயங்கர டேமேஜ் ஆகியிருக்கு… ரத்தம் நிறைய போயிடுச்சு… பையன் மயக்கத்துல இருக்கான். உடனே ஆப்பரேஷன் பண்ணனும்… கூட வாங்க… ஒரு பாரம் தர்றேன்… பில் பண்ணி கொடுங்க… நர்ஸ் பாரம் தருவாங்க… சட்டுன்னு பில்பன்னி கொடுங்க… அட்வான்ஸ் கட்டச் சொல்லுவாங்க கட்டுங்க… ரத்தம் உடனே தேவைப்படுது… என்ன வகை ரத்தம்னு சொல்லுவாங்க… உடனே ஏற்பாடு பண்ணுங்க…‘ என்றவர், கூடவே வந்த நர்ஸிடம், ‘சிஸ்டர்… இவங்ககிட்ட கன்சன்ட் பாரம் எழுதி வாங்குங்க… ‘ என்றுவிட்டு போய் விட்டார்.

அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் ரத்தம் வந்து சேர, ஆபரேஷன் ஆரம்பித்து விட்டார்கள். ஆபரேஷன் முடிந்து ஐ.ஸி.யூ.க்குள் சுந்தரை வைத்தார்கள். யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

‘ ஒரு மாச லீவுல ஊருக்கு வந்தாங்க.  வந்து பத்து நாள்தான் ஆகுது… வந்த இடத்துல திடீர்னு இப்படி ஆயிடுச்சு… ‘ ஒரு அம்மா யாரிடமோ கதைப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

‘ ஆத்துல வெள்ளம் வரவும் முதலை வந்திடுச்சு போல… ‘

‘ எங்கே வேலை பார்க்கறாங்களாம்… எந்த ஊராம்… ‘

‘ அவங்களா… பையனோட அப்பா டில்லில ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனில வேலை பண்றாரு… ரெண்டு பசங்க… முதல் பையனுக்குத்தான் இப்படி… சொந்த ஊரு இங்கே வயலூர் பக்கம்தான்…. ஒரு கிராமம்… ‘

 

டீயும் போண்டாவும் அப்படியே இருந்தன.

மனைவியின் தோளை மெல்ல அழுத்தி, ‘ கண்ணைத் துடைச்சுக்கோ… டீ ஆறுது பார்… குடி.. ‘ என்றான் கோவிந்தன்.

அவள் இன்னும் அந்த சீட்டை தொட்டுப் பார்த்துக்கொண்டேதான் இருந்தாள். அந்த சீட்டு தான் சுந்தருக்காக புக் பண்ணியிருந்த சீட்.  அதை கேன்ஸல் செய்யவேண்டும் என்று தோன்றவில்லை. அப்படியே விட்டிருந்தான். இப்போது காலியாக வருகிறது.

குரலைத் தாழ்த்திக்கொண்டு, ‘ அழுதுட்டே இருந்து என்னம்மா ஆகப் போகுது… நம்ம உடம்பையும் பார்த்துக்க வேணாமா… இந்த இழப்பு யாருக்குமே வரக்கூடாதுதான்… என்ன பாவம் பண்ணினோமோ… ‘ என்றான் மெலிதான குரலில்.

‘ நாலு பேரா வந்தோம்… மூணு பேரா திரும்பிப்…  ‘ அவளால் பேசமுடியவில்லை. உதடுகள் துடித்தன.   நெஞ்சு குலுங்கியது.  கேவிக்கேவி அழுதாள்.

அங்கே வந்த ஒரு டீக்காரரிடம் புதிதாக ஒரு டீ வாங்கிக்கொண்டான் கோவிந்தன்.

மறுபடியும் குரலைத் தாழ்த்திக்கொண்டு, ‘ மாலா… ப்ளீஸ்… கண்ணைத் துடைச்சுக்கோ… இந்த டீயைக் குடி… கொஞ்சம் தெம்பா இருக்கும்… ‘ என்றான் தழுதழுத்தக் குரலில்.

மேலும் குரலைத் தாழ்த்திக்கொண்டு, ‘ இழப்பு இழப்புதான்… எவ்ளோ அழுதாலும் பெரியவன் வரப் போறதில்லை… போய்ட்டான்… இப்போ நாம முழுசா ஊர்ப் போய்ச் சேர வேணாமா… ‘

அவள் இன்னும் கண்கலங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, குரலைத் தாழ்த்திக் கொண்டு, ‘ மாலா… எல்லாரும் உட்கார்ந்திருக்காங்க… ஏதாவது விசாரிச்சாங்கனா அப்புறம் நடந்ததை சொல்லணும்… திரும்பவும் அழனும்… அழுதவரை போதும் கண்ணைத் துடைச்சிக்கோ… ‘ என்றான் கொஞ்சம் அழுத்தமாய்…

அவள் டீயை எடுத்து பருக ஆரம்பித்தாள். அவன்  முனுமுத்துக்கொண்டான். ‘மயக்கத்துலையே இருக்கான்னாங்க… கோமான்னாங்க… பிட்ஸ்னாங்க… டாக்டர் எழுதிக் கொடுத்ததை எல்லாம் வாங்கித்தான் கொடுத்தோம்… பணத்தை கணக்கு பார்க்காம அள்ளி அள்ளி கொடுத்தோம்… என்ன பண்ண… கடவுள் சோதிச்சுட்டான்… கடைசியில தூக்கி வளர்த்த இந்தக் கையாலேயே கொள்ளியை வச்சிட்டு வந்தேன்… ‘ என்றபடியே தனது நெஞ்சைப் பிடித்துக்கொண்டான்.

ரெயில் ஓடிக்கொண்டிருந்தது.  தனது மூத்தப் பையன்  உட்கார்ந்திருக்கவேண்டிய அந்த சீட்டை மறுபடியும் தொட்டுப் பார்த்துக்கொண்டாள், அவள்.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

 (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மாத்தி யோசி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    பல் துலக்கி [டூத் பிரஷ்] (சிறுகதை) – வெங்கடேஷ் கணபதி