in ,

தனிக்குடித்தனம் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி

 எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்    

 “என்னங்க, எப்படி கணக்கு பார்த்தாலும் பட்ஜெட்ல துண்டு விழுது.”

“என்ன பண்றதுன்னு தெரியலையே பார்வதி. நானும் அவ்ளோ நேரமா எந்தச் செலவையெல்லாம் கட்டுக்குள்ள கொண்டு வரலாம், எதையெல்லாம் தவிர்க்கலாம்னு மாத்தி மாத்தி கணக்கு போடறேன். இதுக்குமேல என்ன செய்யணும்னு தெரியல.”

“அதே தாங்க, நீங்க சொல்றதெல்லாம் நானும் கால்குலேட்டர்ல கூட்டிக் கழிச்சு எல்லாம் பார்த்துட்டேன். எவ்வளவு பார்த்தாலும் நம்மளோட ஒரு மாசச் செலவுக்குத் தேவையான அளவு பணம் நம்ம கைல இல்ல. எப்படி  சமாளிக்கப் போறோம்?”

“என்ன பண்றது பார்வதி? சமாளிச்சுத்தானே ஆகணும். பார்க்கலாம், கணக்கு போடும்போது இப்படி கூடக் குறைய இருக்கும். ஒரு மாசம் என் பென்ஷன்ல வாழ்க்கையை ஓட்டினாத்தானே சரியா கணிக்க முடியும்.

வீட்டு வாடகை இல்ல, அதுவே பெரிய விஷயம்தான். மாசம் மளிகை சாமான், காய்கறி, உனக்கும் எனக்கும் மருந்துச் செலவு, கரண்ட் பில், சிலிண்டர் அப்படி இப்படின்னு அத்தியாவசியமான செலவு எல்லாம்தான் கணக்கு போடறேன். அதையும் எவ்ளோ கம்மி பண்ணி போட்டுக்க முடியுமோ போட்டிருக்கேன். ஆனாலும் எனக்கு வர பென்ஷன்ல 20 நாள்தான் ஓட்டமுடியும்னு நாம போடற பட்ஜெட் சொல்லுது. மீதி பத்து நாள் எப்படி சமாளிக்கப் போறோம்ங்கறது நம்ம ரெண்டு பேர் கைல இருக்கு.”

“சமாளிக்கலாம்ங்க. நீங்க வேலைக்குப் போயிட்டிருந்த காலத்துல நமக்குன்னு ஒரு தொகையை பேங்க்ல தனியா போட்டு வச்சிருக்கணும். வர பணத்தை எல்லாம் வீட்டுச் செலவுக்கும், நம்ம ரெண்டு பசங்க படிப்புக்கும் செலவு பண்ணிட்டோம். நமக்குன்னு எதுவுமே சேர்த்து வச்சுக்கணும்னு தோணவே இல்ல.”

“ஆமா பார்வதி. அப்போ அந்த வருமானம் செலவுக்குத்தான் சரியா இருந்துது. நமக்குன்னு தனியா சேமிக்கணும்னு யோசிக்கக்கூட முடியலையே. பேங்க்ல  போடற  சேவிங்கஸ் அடுத்த வருஷம் பசங்களுக்கு ஃபீஸ் கட்டத்தான் உதவியா இருந்துது. அதுவே இறுக்கிப் புடிச்சுதான் செலவுகளை சமாளிச்சுட்டிருந்தோம். இதுல எப்படி பார்வதி நமக்குனு தனியா சேவிங்ஸ் போட முடியும்?”

“கஷ்டம் தாங்க. ஆனா சேர்த்து  வச்சிருந்தா இப்போ நாம இவ்வளவு யோசிக்க வேண்டியதில்லையே.”

“நம்ம வயசுல இருக்கற நிறைய  பேர் இதே தப்பைப் பண்ணிட்டுத்தான் கையைப் பிசைஞ்சுட்டு நிக்கறாங்க பார்வதி. நாம ஓடி ஓடி சம்பாதிக்கற வயசுல எல்லாமே நம்ம குழந்தைகளுக்குன்னு மட்டும்தான் யோசிக்கறோம். அவங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கணும்னு நேரம் காலம் பார்க்காம உழைக்கறோம். நம்மளோட எதிர்காலத்தைப் பத்தி யோசிக்க மறந்துடறோம். என்ன இருந்தாலும் நம்ம குழந்தைங்க நம்மளைப் பார்த்துப்பாங்கனு  நம்பறோம். ஏன் போன மாசம் வரைக்கும்கூட நாமளும் அப்படித்தானே நினைச்சுட்டிருந்தோம். திடீர்னு நம்ம பசங்க ரெண்டு பேரும் இப்படித் தனிக்குடித்தனம்  போவாங்கன்னு நமக்கு எப்படித் தெரியும் பார்வதி?”

“அதென்னவோ  உண்மைதான்.  சின்னவனுக்குக் கல்யாணம் முடிஞ்சு இந்த ஆறு மாசத்துல வீடு நல்லா கலகலப்பாதான் இருந்தது. வாழ்க்கை ரொம்ப நிறைவா இருக்கறதா நினைச்சு  சந்தோஷப்பட்டேன். சின்ன மருமகளும் பெரியவன் குழந்தைகிட்ட ரொம்ப அன்பாதான் இருந்தா.  இவ்வளவு  ஏன்,  ரெண்டு  மருமகள்கிட்டயும்  நான்  பாசமா இருக்கேன்.  

திடீர்னு என்ன பிரச்சனைன்னு தெரியல. பெரியவன் குழந்தைக்கு ஸ்கூல் மாத்தணும்னு வேற வீடு மாத்திப் போறேன்னு சொல்றான். சின்னவன் ஆஃபீஸ் பக்கத்துல வீடு பார்த்துட்டுப் போறதா  சொல்றான். தனிக் குடித்தனம் போறது அவங்க இஷ்டம். அதை நாம தடுக்க முடியாது.  மருமக ரெண்டு பேருக்கும் இங்கே இருக்கறது புடிக்கலையோ என்னவோ. தனியா போய் இருக்கட்டும். அவங்க வாழ்க்கையை அவங்கதானே  பொறுப்பா  வாழணும்.  அதுல தப்பில்லை.

ஆனா  நம்ம பசங்க சம்பாதிக்க  ஆரம்பிச்ச பிறகு,  அவங்க வருமானமும்  சேர்ந்துதானே குடும்பம்  ஓடிட்டிருக்கு.  இப்போ திடீர்னு  அவங்கவங்க  வழியைப்  பார்த்துட்டுக் கிளம்பிட்டா  நாம என்ன செய்வோம்? நமக்கு செலவுக்கு இரண்டு பேருமே தரணும் இல்லையா? அது அவங்க கடமைதானே? அவங்க பொறுப்பைத் தட்டிக் கழிச்சுட்டுப் போகக்கூடாது  இல்லையா?”

“எல்லாம் சரிதான் பார்வதி. அவங்களா  புரிஞ்சுகிட்டு தந்தாப் பரவாயில்ல. நாம  எப்படி வாய்விட்டு கேட்க முடியும்? ரெண்டு பேரும் தனிக்குடித்தனம் போறாங்க. அவங்களுக்கும் செலவுகள் இருக்கும். வாடகை வீடு, அதுபோக கார், பைக் வசதி வாய்ப்புகள், அவங்களோட அன்றாடச் செலவு, அவங்க குழந்தைகள் படிப்பு  இப்படி நிறைய இருக்கே. இதுல நமக்கும் செலவுக்குக் கொடுக்கணும்னு நாம கட்டாயப்படுத்த முடியாது இல்லையா.”

“புரியுதுங்க. அவங்க மட்டுமா தனிக்குடித்தனம் போறாங்க, நாமளும் இந்த வயசான காலத்துல தனிக்குடித்தனம் பண்ணப் போறோம். சரி,  கவலைப்படாதீங்க. இப்போ உங்களுக்குக் கிடைக்கற பென்ஷனைவிட  கம்மி சம்பளம் நீங்க வாங்கின காலத்துலகூட நாம சந்தோஷமா, நிம்மதியா,  சிக்கனமா செலவழிச்சுட்டு வாழ்க்கை நடத்தியிருக்கோம். இது ஒண்ணும் பெரிய விஷயமில்லைங்க. சமாளிச்சுக்கலாம். என்ன, நமக்குன்னு சேர்த்து வைக்கணும்னு  நம்ம ரெண்டு பேருக்குமே  தோணலை பாருங்க.  அவ்ளோ முட்டாளா இருந்துட்டோம்.  அதுதான் ஆறவே மாட்டேங்குது. என்னங்க, நான் சொல்றது சரிதானே?”

“ஆமா பார்வதி. பரவாயில்ல  விடு. நாம சமாளிச்சுக்கலாம். எவ்வளவோ சமாளிச்சுட்டோம், இதையும்  பழகிப்போம். நாம ரெண்டு பேர்தானே, எப்படியெல்லாம் செலவுகளைக் கட்டுக்குள்ள கொண்டுவர முடியும், எதையெல்லாம் குறைக்கலாம்னு ஒரு மாசம் பார்த்தாத் தெரிஞ்சுடும். இப்பவும் மாசா மாசம் பென்ஷன்ல எந்த அளவுக்கு சிக்கனமா செலவு பண்ண முடியுமோ பண்ணிட்டு, மீதியை சேர்த்து வைக்கணும் பார்வதி. நம்ம கடைசி காலத்துல அது நமக்கு உதவும். நான் இல்லேன்னா உனக்கும், நீ இல்லைனா எனக்கும் அதாவது துணையா இருக்கும் இல்லையா.”

கணவர் சொல்லும் சொல்லில் இருக்கும் நிதர்சனம் புரிந்ததால் கண்ணீருடன் தலையாட்டினார் பார்வதி.

எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நகுலனின் நாலு கட்டு வீடு நூல் (விமர்சனம்) – தி. வள்ளி, திருநெல்வேலி

    யதார்த்தத்தின் வலி (சிறுகதை) – மீனாக்ஷி சேகர்