எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“அப்பா, டேவிட் ஆஸ்திரேலியா போகப் போறானாம், அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துப் படிப்பதற்காக”
“அதுக்கு என்ன இப்ப? அவன் பெரிய பணக்காரன், ஆஸ்திரேலியா என்ன?, அமெரிக்கா கூடப் போவான்”
“அதுக்கில்லப்பா.. நான் இங்குள்ள மருத்துவக் கல்லூரியிலாவது சேரணும். பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு நேரம் முடிந்தவுடன், மாலை நேர வகுப்பில் இந்த வருஷமே NEET கோச்சிங் சென்டர்ல என்னை சேர்த்து விட்டிங்கன்னா.., இந்த இரண்டு வருஷத்துல நல்ல முறையில் படிச்சு, இந்திய அளவில நல்ல ரேங்க் எடுத்து, அரசாங்க ஒதுக்கீட்டில அதிகமான செலவுகள் என்று எதுவும் இல்லாமல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பேன், அதுக்குதான்.”
“நீ சொல்றது சரிதான் சீனு, உம்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. இல்லைன்னு சொல்லல, பத்தாம் வகுப்பில நீ தான் மாவட்ட அளவில முதலாவதாக வந்தே. NEET கோச்சிங் வகுப்பில் சேர்ந்து படிக்க எவ்வளவு செலவாகும்னு தெரியல. தவிர அங்கே நல்லபடியாப் படிச்சு, இந்திய அளவில நல்ல ரேங்க் எடுத்து, அரசாங்கத்தின் ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தாலும் கூட, ஐந்து வருடம் படிப்பதற்கு நிறைய செலவாகுமே…! இப்பதான் உன் தம்பி எட்டாவது படிக்கிறான். உங்க இரண்டு பேருக்கும் வருஷம் தோறும் பள்ளிக்கூடக் கட்டணம், புத்தகக் கட்டணம், பேரூந்து கட்டணம் கட்டவே தடுமாற்றமா இருக்கு. என் மாதச்சம்பளம் எவ்வளவு, குடும்பச் செலவு எவ்வளவு என்று உனக்கே நல்லாத் தெரியும். இந்த நிலையில் உன்னை NEET கோச்சிங் சென்டர்ல சேர்ப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம். அப்படியே எங்கேயாவது வட்டிக்குக் கடன் வாங்கிப் NEET கோச்சிங் சென்டர்ல படிக்க வச்சா கூட, மேற்கொண்டு மருத்துவக் கல்லூரியில் ஐந்து வருஷம் படிப்புச் செலவுக்கு நான் எப்படி..? எங்கே..? கடன் வாங்க முடியும், கடனுக்கு வட்டி கட்ட முடியுமாச் சொல்லு?”.
“ஆமாம்பா…! நீங்கச் சொல்றதும் சரிதான், ஆசை இருந்தா மட்டும் போதாது, அதற்கேற்ப வசதி இருக்கணும்”.
“டேவிட் நான் உன் கூட NEET கோச்சிங் சென்டர்ல சேர முடியாது சாரிடா…”
“ஏண்டா..?, உங்கப்பா என்னச் சொன்னாரு? “
“இல்ல டேவிட், எங்க அப்பாவுக்கு என்னை மருத்துவக் கல்லூரியில் படிக்க வைக்கிற அளவுக்கு வருமானம் இல்லையாம். நானும் ஏதோ ஆர்வத்துல உன்கிட்ட இரண்டு பேரும் ஒரே NEET Coaching Centreல சேர்ந்து படிக்கலாம்னு சொல்லிட்டேன். இன்னிக்கு எங்கப்பா விளக்கமாச் சொன்ன பிறகுதான் எனக்குப் புரிந்தது. நீ மட்டும் போய்ச் சேர்ந்து நல்லா படிச்சு, நல்ல ரேங்க் வாங்கி, ஆஸ்திரேலியா போய் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படி”.
“என்ன சீனு அப்படிச் சொல்லிட்டே. உன்னை விட்டு நான் மட்டும் எப்படிப் போய்ப் படிப்பேன்? நாம இரண்டு பேரும் ஆறாவது வகுப்பிலிருந்து இப்போ பிளஸ் 1 வரைக்கும் ஒண்ணாப் படிச்சினு வர்றோம். நீ வரலன்னா நானும் NEET கோச்சிங் கிளாஸ் போகல. நாம இரண்டு பேரும் பிளஸ் 2 முடிஞ்சதும், இங்கேயே ஏதாவது பொறியியல் கல்லூரியில் சேர்ந்திடலாம் என்ன சொல்றே, சரியா?”
“என்னால நீ ஏண்டா மெடிக்கல் படிக்கற ஆசையை விட்டுட்டு, இரண்டு பேரும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம்னு சொல்றே?”.
“இல்லச் சீனு, உன்னை நினைச்சா எனக்கு மிகவும் கஷ்டமா இருக்கு. உனக்குப் படிக்க ஆசை இருக்கு, படிக்கும் தகுதியும் இருக்கு. ஆனால், வசதி இல்லைன்னு நினைக்கும் போது, உன்னை விட்டு நான் மட்டும், வசதி இருக்கிற காரணத்தால் வெளிநாடு போய் மெடிக்கல் படிக்க என் மனசு ஒத்துக்கல. எனக்கு ஒரு இரண்டு நாள் டைம் கொடு, என் அப்பாகிட்ட உன்னைப் பத்தி எடுத்துச் சொல்லி ஒரு நல்ல பதிலாச் சொல்றேன்”.
“வேண்டாம் டேவிட், எங்கப்பா இதுக்கெல்லாம் ஒப்புக் கொள்ள மாட்டார்”.
“அப்படியா…?, சரி.., நாளைக்குப் பார்க்கலாம், பை.. சீனு”.
“அப்பா”
“என்ன டேவிட் தயங்கறே, ஏதோ கேட்க வர்ற மாதிரி தோணுது..”
“நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..? முடியாதுன்னு சொல்லக்கூடாது”.
“என்னடா பீடிகை பலமா இருக்கு..?, நீ கேட்டு நான் ஏதாவது மறுப்பு சொல்லியிருக்கேனா..?, நீ நல்லாப் படிக்கிறே, எந்தத் தப்பும் செய்யமாட்டே, தவறான வழிக்கும் போக மாட்டே, உன் நண்பன் சீனுவை போல…!, கேளு, என்ன விஷயம்?”
“அதாம்பா, என்னைப் போலவே. என் நண்பன் சீனுவிற்கும் மெடிக்கல் படிக்க வேண்டும் என்று ஆசை இருக்கு. அவன் பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவிலேயும், எங்கள் பள்ளியிலும் அவன்தான் முதல் ரேங்க். நான் இரண்டாவது ரேங்க் தான். உங்களுக்கும் தெரியும். அவன் தான் என்னுடைய Best friend கூட”.
“எல்லாம் தெரியும் டேவிட், மேலே சொல்லு”
“அவனும், நானும் மெடிக்கல் காலேஜில் சேர வேண்டி ஒரே NEET coaching centreல் சேர்ந்து படிக்கலாம்னு இருந்தோம். அவனும் சரி என்றுதான் சொன்னான், ஆனால், அவங்க அப்பா அவனை மெடிக்கல் காலேஜில் படிக்க வைக்கிற அளவுக்கு வசதியில்லைன்னு சொல்லிட்டாராம். அவனும் அவங்க அப்பா சொல்றது உண்மைதான் என்று மிகவும் வருத்தமாகச் சொன்னான்”
“அப்படியா?, சரி… அதுக்கு நான் என்ன பண்ண முடியும் ?”.
“என்னையும் அவனையும் Coaching Centreல நீங்க சேர்த்து விட்டீங்கன்னா.. அவன் இந்திய அளவில நல்ல ரேங்க் எடுப்பான். அதனால அவனுக்கு அரசாங்க ஒதுக்கீடுல இலவசமாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைச்சிடும். ஐந்து வருஷம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு ஆகும் மொத்தச் செலவுகளையும் நீங்கள் செய்தால், எனக்குப் பள்ளியில் கிடைத்த ஒரு நல்ல நண்பன், மருத்துவக் கல்லூரியிலும் கிடைப்பான்”.
“இதுக்கு எதுக்குடா இவ்வளவு கதை?. நம்மிடம் இருக்கும் வசதிக்கு உன் ஒரு நண்பனை அல்ல, பல பேரைப் படிக்க வைக்க முடியும். போய் அவனிடம் சொல்லு, எவ்வளவு செலவானாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்”
“ரொம்பச் சந்தோஷம்பா. நீங்கள் கட்டாயம் இதுபோல் தான் சொல்லுவீங்கனு எனக்குத் தெரியும். இதையும் அவன் கிட்ட வேறு விதமா சொன்னேன். ஆனாலும்..!, ஒரு பிரச்சினை இருக்கே…”
“வேறு எதுவாக இருந்தாலும் சொல்லு டேவிட், நான் செய்றேன், நீ ஏன் தயங்கறே..?”
“அவங்க அப்பா இதுக்கு ஒப்புக்க மாட்டாராம். அதனால எனக்காக.. நீங்க, அவங்க அப்பாகிட்டப் போய் இது பத்தி பேசினா.. நல்லது”.
“அவ்வளவு தானே..! இதுக்குப் போய் ஏம்பா தயங்கறே. அப்பா, உனக்காக இது கூடச் செய்ய மாட்டேனா..?, நான் அவங்க அப்பாகிட்டப் பேசறேன். அவங்க வீட்டுக்கு என்னிக்கு போகலாம் நீயே சொல்லு”.
சீனு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார் டேவிட் அப்பா.
வீட்டின் உள்ளே இருந்தபடியே “யாரு, என்ன வேணும்?”, என்று சீனு அப்பா கேட்டார்.
“சார், வணக்கம், இங்கே சீனுவின் அப்பாவை பார்க்கணும். மாதவன், நீங்கள் இங்கே…”
“வாங்க சார், வணக்கம். இது என்னுடைய வீடு தான். என் வீட்டுக்கு நீங்க. எதுக்கு..? சொல்லி அனுப்பியிருந்தா… நானே உங்க வீட்டுக்கு வந்திருப்பேனே !”.
”மாதவன், சீனு உங்கள் மகனா…?”
“ஆமாம் சார்..”
“மாதவன், அப்ப நான் நேரா விஷயத்திற்கு வந்து விடுகிறேன். என் மகன் பெயர் டேவிட். உங்க பையன் சீனுவும், டேவிட்டும் ஒண்ணாப் படிக்கிறாங்க”.
“தெரியும் சார். ஆனால் டேவிட் உங்கள் மகன் தான் என்று எனக்குத் தெரியாது”.
“இருக்கட்டும் பரவாயில்லை. உங்கள் மகனின் படிப்புப் பற்றியும், அவனுடைய ஒழுக்கத்தைப் பற்றியும் என் மகன் பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறான். தவிரச் சீனு பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதலிடம் வந்ததும் எனக்குத் தெரியும். என் மகன் டேவிட், சீனுவுடன் சேர்ந்து மருத்துவக் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறான்”, அதைப் பற்றி பேசத் தான் வந்தேன்.
“சார், நேற்று இது பற்றி சீனு என்னிடம் கூறினான். என் வசதிக்கு அவனை மருத்துவக் கல்லூரியில் படிக்க வைக்க இயலாது என்று கூறி விட்டேன். என் குடும்ப நிலையைப் பற்றி அவனுக்கும் நன்றாகவே தெரியும். அதனால்….”
“இருங்க மாதவன் நான் சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன். சீனுவின் படிப்பு செலவைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நானே அவன் மருத்துவக் கல்லூரியில் படிக்க ஆகும் எல்லாச் செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறேன். என் மகன் டேவிட் ஆசையை நான் நிறைவேற்ற வேண்டும். அது மட்டுமல்ல பள்ளியில் சீனுவைப் போல் ஒரு நல்ல நண்பன் டேவிட்டுக்கு கிடைத்தது போல், கல்லூரியிலும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று என் மகன் ஆசைபடுகிறான், ஏன் நானும் தான்”
“எல்லாம் சரி தான் சார். நீங்கள் என் மகன் மருத்துவக் கல்லூரியில் படிக்க ஆகும் செலவை இப்போது நீங்கள் கொடுத்தாலும், பின்னர் அந்தப் பணத்தை என்னால் உங்களுக்குத் திருப்பி தருவதற்கு எனக்கு போதிய வருமானம் இல்லையே”.
“மாதவன், உங்கள் மகன் மருத்துவக் கல்லூரியில் படிக்க, நான் செலவழிக்கும் பணத்தை நீங்கள் எனக்கு எப்போதும் திருப்பித் தர வேண்டாம். பள்ளியில் படிக்கும் போது ஒரு சிலர், நண்பர்கள் என்ற முறையில் வீட்டுக்கு வருவார்கள், சினிமா, சுற்றுலா என்று பல இடங்களுக்கு ஒன்றாகச் செல்வார்கள், நிறைய வீண் செலவு கூடச் செய்வார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட உங்கள் மகன் சீனு எங்கள் வீட்டிற்கு வந்தது இல்லை. அது போல என் மகன் டேவிட்டும் ஸ்கூல் விட்டால் வீடு என்று தான் இன்று வரை இருந்து வருகிறான். உன் நண்பன் யார் என்று சொல், உன்னைப் பற்றிக் கூறுகிறேன் என்று ஒரு பழமொழி உள்ளது. அந்தப் பழமொழிக்கேற்ப இருவரும் உள்ளனர். அதனால் உங்கள் மகன் சீனு, என் மகன் டேவிட்டுக்கு இன்று வரை நல்ல நண்பனாகவும், ஒழுக்கத்தில் சிறந்தவனாகவும், படிப்பில் நல்ல ஆர்வமுள்ளவனாகவும் இருப்பதால் இந்தப் பள்ளியின் நட்பு அவர்கள் கல்லூரியிலும் இருவருக்கும் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் உங்களை நேரில் பார்த்துப் பேச வந்தேன்”.
“நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான், ஆனால்…”
“இதோ பாருங்கள் மாதவன், நீங்கள் என் கம்பெனியில் வேலைப் பார்ப்பவராக இருக்கலாம். நான் அதை மனதில் கொள்ளவில்லை. நல்ல ஒழுக்கமான, அறிவாளியான பிள்ளையின் தந்தையாக இருப்பதாலும், என் மகனின் நலனுக்காகவும் தான் உங்களிடம் கேட்கிறேன், மறுப்பு எதுவும் கூறாமல் ஒப்புக் கொள்ளுங்கள்”.
“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்”
“திருவள்ளூவரின் வாக்குப்படி என் மகன் எனக்கு நல்ல பெயரினை வாங்கி தந்துள்ளான். தங்கள் மகனின் எதிர்காலம், என் மகனால் நல்லபடியாக அமையும் என்றால், இதை விட ஒரு தந்தைக்குத் தன் மகனால் வேறு என்ன பெருமை வேண்டும், சரி உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள். உங்கள் உதவியால் என் மகனும் ஒரு மருத்துவர் ஆவதில் எனக்கும் பெருமை தான்”
“நன்றி மாதவன்”
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings