in ,

பாடல்களில் அவள் தாலாட்டு (சிறுகதை) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை                              வாசிக்க இங்கு கிளிக் செய்யவு                        

அம்மாவின் தோள் மீது சாய்ந்திருப்பது குமரேசனுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. மனம் சோர்ந்து போகும்போதோ அல்லது மற்றவர்களால் காயப்படுத்தப்படும்போதோ அவன் இப்படிச் செய்வது வழக்கம். முன்பெல்லாம் அம்மாவின் தோள் மெத்து மெத்தென்று பஞ்சு போல் இருக்கும்.  

இப்போது மிகவும் மெலிந்து போய் இருந்த‌ அவளின் உடலால்,  அவனின் சாய்மானம் கூட வசதியில்லாமல் இருந்தது. அவள் ஏன் இப்போதெல்லாம் சரியாகச் சாப்பிடுவதில்லை என்று ஒருநாள் அவன் அம்மாவிடம் கேட்டான்.

‘குமரு… ஒரு வயதிற்குப் பின் நாமே நம் சாப்பாட்டைக் குறைத்து, உடல் எடையை அளவாக வைத்துக் கொள்ள வேண்டும்.  கடைசியில் நம்மைத் தூக்கிச் செல்லும் அந்த‌ நாலு பேருக்கு நாம் அதிகச் சுமை கொடுக்கக் கூடாது…’  என்ற அவளின் பதில் அவனைத் திகைக்க வைத்தது.

வயதானவர்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டான். அவனுக்கு எங்கோ படித்த பாட்டு ஞாபகம் வந்தது.

‘நோயில் தளராமல், நொந்து மனம் வாடாமல்,

 பாயில் கிடவாமல், பாவியேன் காயத்தை

 ஓர் நொடிக்குள் நீக்கி, எனை ஒன் போரூர் ஐயா

 நின் சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து’.     

‘அம்மா.. உன்னிடம் பல நாளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்… அப்பாவுக்கு என்னை ஏனம்மா பிடிப்பதில்லை… எப்போதும் ஒரு எதிரியைப் பார்ப்பது போலவே என்னைப் பார்க்கிறார்?’  என்றான் குமரேசன் நொந்து போன குரலில்.

முப்பத்தைந்து வயதாகியும் திருமணம் ஆகாமல் இருந்த அவனின் நரைத்துப்போயிருந்த தலையைத் தடவிக் கொண்டே அவள் சொன்னாள்,

‘உங்க அப்பாவுக்கு சோதிடம், ஜாதகம், பில்லி, சூனியம் போன்றவற்றில் அளவுக்கு அதிகமான மூட‌நம்பிக்கை. எங்கள் கல்யாணம் நடந்து ஒரு வருடம் வரை அவரைத் திருத்துவதற்கு முயற்சி செய்து பார்த்து விட்டு, முடியாமல் விட்டு விட்டேன்.  நீ பிறப்பதற்கு முன்பு, ஒரு ஜோசியன் அவருக்குப் பையன் பிறந்தால் பெரும் நஷ்டம் விளையும் என்று கூறியிருந்தான். அதற்குத் தகுந்தாற்போல நீ பிறந்த ஒரு வாரத்தில் அவருக்கு வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்படவும், உன்னை வெறுக்கத் தொடங்கிவிட்டார்.  

நானும் அவரின் குருட்டு நம்பிக்கையைப் போக்க எவ்வளவோ முயற்சி செய்து தோல்வியடைந்து விட்டேன்.  உன் தங்கைகள் மூன்று பேர் பிறந்தவுடன் அவரின் வியாபாரம் செழிக்கத் தொடங்கியதும் எதேச்சைதான். ஆனால் அவர் உன்னை துரதிஷ்டசாலியாகவும் உன் தங்கைகளை அதிர்ஷ்டசாலிகளாகவும் உறுதியாக நம்பத் தொடங்கிவிட்டார்.  அவர் உன்னை அலட்சியப் படுத்துவதற்கு இதுதான் காரணம். இப்போது உனக்குக் கல்யாணம் செய்யாமல், உன் மூன்று தங்கைகளுக்கும் வரன் பார்க்கத் தொடங்கிவிட்டார். என் விதி… இதையெல்லாம் நான் அனுபவிக்க வேண்டுமென்பது…’  என்று கண்ணீர் வடித்தவளைச் சமாதானம் செய்தான் குமரேசன்.

வெளியே போய் விட்டு வீட்டுக்குள் நுழைந்த துரைசாமி இவர்கள் அமர்ந்திருந்த நிலையைப் பார்த்து, ‘ஆரம்பித்து விட்டீர்களா அம்மாவும் பிள்ளையும்?  மனோகரா கண்ணாம்பாள், சிவாஜி கணேசன் என்ற நினைப்பு… ஏண்டா… கடலைக் காட்டுக்கு தண்ணி கட்டாமல் காய்ந்து கிடக்குது… அதெல்லாம் பார்க்க மாட்டாயா? ‘ என்று எரிந்து விழுந்தார்.

காலை மூன்று மணிக்கே எழுந்து தண்ணீர் கட்டிவிட்டான் என்றாலும் அதைச் சொன்னால் வேறொன்றைப் பிடித்துக் கொள்வார் என்பதால் மெளனமாகத் தலை குனிந்து கொண்டான் குமரேசன்.

‘ம்.. என்னமோ செய்யுங்க ரெண்டு பேரும்…’ என்று உறுமிவிட்டு உள்ளே சென்றார் துரைசாமி.

சிறிது நேரத்தில் அங்கே வந்தாள் சிவகாமி.  குமரேசனின் மூத்த தங்கை. பட்டப்படிப்பை முடித்து விட்டு கல்யாணத்திற்கு தயாராக இருப்பவள்.

‘என்ன, செண்டிமென்ட் சீனா?  நடத்துங்க… நடத்துங்க…’  என்று தன் பங்கு வெறுப்பைக் கக்கி விட்டுச் சென்றாள்.

பேச்சுச்சத்தம் கேட்டு அடுத்து வந்தாள் அவனின் அடுத்த தங்கை யமுனா.  முகத்தைக் காட்டுவதில் அப்படியே அப்பாவைக் கொண்டிருப்பவள். அன்று நல்ல மூடில் இருந்ததால் முகத்தை மட்டும் பளிப்புக் காண்பித்து விட்டு சென்று விட்டாள்.

சமையல் வேலையை முடித்து விட்டு முகத்து வேர்வையைத் துடைத்துக் கொண்டே வந்த அவனின் கடைசித் தங்கை மல்லிகா, அம்மாவின் அருகில் அமர்ந்து அம்மாவின் மற்றொரு தோளில் சாய்ந்து கொண்டாள்.

‘நீ மட்டும் எப்படியடி தப்பிப் பிறந்தாய்?’ என்றாள் அவளின் அம்மா வாஞ்சையுடன் அவள் கன்னத்தைத் தடவிக்கொண்டு.

யாரிடமும் அதிர்ந்து பேசாதவள் மல்லிகா. அண்ணனிடம் கொள்ளைப் பாசம் கொண்டவள். அந்த வீட்டில் அன்பு என்ற பூங்காற்று மெலிதாக வீசுவதற்குக் காரணம் அம்மாவும், மல்லிகாவும்தான்.

யாருக்காகவும் காத்திருக்காமல் காலம் தன் போக்கில் சுழன்று கொண்டிருந்தது.  மூன்று பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்தவுடன் தன் கடமை முடிந்தது போல், துரைசாமி ஒருநாள் நெஞ்சு வலி வந்து, துடித்து, ஆஸ்பத்திரி போவதற்குள் மரணமடைந்து விட்டார்.  கலகலப்பாக இருந்த அந்த‌ வீடு இப்போது அம்மா, மகன் மட்டுமே உள்ள அமைதியான வீடாக மாறிவிட்டிருந்தது.

‘உனக்கு ஒரு துணை இல்லாமல் அனாதையாக விட்டு விட்டுப் போய்விடுவேன் போலிருக்கிறதே?’ என்று புலம்பிக் கொண்டிருந்த குமரேசனின் அம்மாவும், ஒருநாள் இந்த உலகத்தை விட்டு த‌ன் நிறைவேறா ஆசையுடன் பிரிந்து விட்டாள்.  எந்த நேரமும் சண்டையும், சிரிப்பும் நிறைந்திருந்த குமரேசன் வீடு நிசப்தத்தால் நிறைந்திருந்தது.

வீட்டுக்கு வெளியில் இருசக்கர வாகன ஓசை கேட்டு எட்டிப் பார்த்தான் குமரேசன்.  தங்கை மல்லிகா தன் இரு சக்கர வாகனத்திற்கு ஸ்டேண்ட் போட்டுக் கொண்டிருந்தாள்.

‘மல்லிக் குட்டி…’ என்று கூவிக்கொண்டே ஓடிப் போய் அவளின் கையைப் பிடித்துக் கொண்டான். அவனுக்குப் பிடித்த ஜீவனை, அந்தத் தனிமையான நேரத்தில் பார்த்தது, மனதுக்குச் சொல்ல முடியாத மகிழ்வைக் கொடுத்தது.

‘ நல்லா இருக்கீங்களா அண்ணா? ‘ என்று கேட்டவளுக்குப் பதில் சொல்லாமல்

‘எங்கே மாப்பிள்ளை வரலையா?’ என்றான்.

‘இல்லைண்ணா‘  என்றவள்  ‘இந்தாங்க… வர்ற வழியிலே, கடையில் சூடா வடை போட்டுக் கொண்டிருந்தாங்க… பருப்பு வடை உங்களுக்குப் பிடிக்கும்ணு வாங்கி வந்தேன்…’ என்றாள்.

இருவரும் திண்ணையில் உட்கார்ந்து வடை சாப்பிட்டுக் கொண்டு இருக்கையில் பேச்சை ஆரம்பித்தாள் மல்லிகா.

‘அண்ணா… இரண்டு முக்கியமான விசயம் சொல்லலாம்ணு வந்தேன்… ஒன்று கெட்ட செய்தி, மற்றொன்று நல்ல செய்தி…’ என்றாள்.

‘இந்த நாற்பது வருட வாழ்க்கையில் எனக்கு இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும் பக்குவம் வந்து விட்டதம்மா… நீ சொல்..’ என்றான் குமரேசன்.

‘நம் அப்பா இறப்பதற்கு முன்பு ஒரு ரகசிய உயில் எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார் அண்ணா. அதில் அவர் சொத்து முழுவதும் மூன்று பெண்களுக்கு மட்டுமே சேரும் என்றும், அதுவும் அம்மாவின் மரணத்திற்குப் பின் மட்டுமே அனுபவிக்கும் உரிமை உள்ளதாகவும் எழுதி வைத்துள்ளார். சுயமாக சம்பாதித்த சொத்து என்பதால் அவர் எழுதியது செல்லும் என்று வக்கீல் சொல்கிறாராம். போன வாரம் மூன்று மாப்பிள்ளைகளும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். இரண்டு அக்காக்களும் சொத்தை விற்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பு உங்களை இங்கிருந்து காலி செய்யச் சொல்ல வேண்டும் என்று பேசிக் கொள்கிறார்கள்.  இது விசயமாக மூன்று மாப்பிள்ளைகளும் உங்களிடம் பேச வருவார்கள் என்று நினைக்கிறேன்…’  என்றாள்.

கேட்ட செய்தியை கொஞ்சம் அதிர்ச்சியுடன் ஜீரணித்து விட்டுச் சொன்னான் குமரேசன்.

‘சொத்து எனக்கு முக்கியமில்லை மல்லிக்குட்டி… அப்பா இறக்கும்போது கூட என் மேல் இருந்த வன்மம் அவருக்குக் குறையவில்லை என்பதுதான் மனதைக் கீறுகிறது…’ என்றான் கலங்கிய கண்களுடன். 

‘அண்ணா… வருத்தப்படாதீங்க… ‘ என்று அவன் கையை இறுகப் பற்றினாள் மல்லிகா.

‘அண்ணா… நம்ம பக்கத்துத் தோட்டத்து அருக்காணி பாட்டி தெரியும்தானே உங்களுக்கு?’ என்றாள் மல்லிகா.

சம்பந்தம் இல்லாமல் ஏன் கேட்கிறாள் என்று குழம்பி, ‘தெரியும்டா… அவங்களுக்கு ஒரு பேத்தி உன் வயசில உண்டு.. அந்தப் பெண்ணுக்கு இரண்டு வயசில ஒரு பையன்… பாவம் அந்தப் பெண்ணின் கணவன் விபத்தில் இறந்து விட்டான். அவங்க மோட்டார் ரூமில் ஃப்யூஸ் போய் விட்டால் என்னைத்தான் கூப்பிடும் அந்தப் பெண்.  திடீரென அவர்களைப் பற்றி ஏன் கேட்கிறாய்?’ என்றான் குமரேசன்.

‘போன வாரம் அருக்காணிப் பாட்டியிடம் பேசினேன்.  தன் காலத்திற்குப் பிறகு பேத்தி கோமதியும் அவள் பையனும் அனாதை ஆகி, பாதுகாப்பில்லாமல் போய் விடுவார்களே என்று கவலைப்பட்டார். எங்கள் அண்ணனுக்கு கோமதி அக்காவைத் திருமணம் செய்து கொடுப்பீர்களா என்று கேட்டவுடன் சந்தோசத்தில் படுக்கையை விட்டு எழுந்து விட்டார். இது நடந்து விட்டால்  நான் இனி நிம்மதியாகப் போய்ச் சேருவேன் என்று நூறு முறை சொல்லி, சந்தோசப்பட்டுக் கொண்டார். கோமதி அக்காவிடமும் நேருக்கு நேர் கேட்டு விட்டேன். அவங்களுக்கும் சம்மதம்தான். பாட்டி ஒரே ஒரு வேண்டுகோள் மாத்திரம் கேட்டுக் கொண்டார். அதாவது நீங்கள் அவர்கள் வீட்டிலேயே தங்கிக் கொள்ள வேண்டுமாம்..’  என்று முடித்தாள் மல்லிகா.

‘உழைக்க உடம்பில் தெம்பு இருக்கிறது… மாப்பிள்ளைகள் என்னை வெளியேற்றிய பின்பு தங்குவதற்கு இடம் தேட வேண்டுமே என்று மனம் தவிப்பில் இருந்தது. எனக்கு நீ இருக்க‌ இடமும் ஏற்பாடு செய்து,  ஒரு நல்ல வாழ்க்கையையும் கொடுத்து விட்டாய்… எனக்கு என்னவோ ந‌ம் அம்மா உன் உடம்பில் புகுந்து இந்த ஏற்பாட்டைச் செய்து விட்டார்களோ என்று தோன்றுகிறது…’ என்றான் குமரேசன் குரல் தழுதழுக்க.

‘அண்ணா… இனிமேல்தான் உங்க வாழ்க்கை தொடங்கப் போகிறது… கொஞ்சம் லேட் என்றாலும் ஒரு நல்ல வாழ்க்கை… உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும். எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.  நீங்க கவலைப்படாதீங்க… வரட்டுமா? ‘ என்று கூறிவிட்டுச் செல்லும் அவளைப் பார்த்தான் குமரேசன்.  இளவயதில் அவன் அம்மா நடக்கும் நடையைப் போலவே இருந்தது அவள் நடை.

எழுத்தாளர் சின்னுசாமி சந்திரசேகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்) 

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் (சிறுகதை) – பவானி உமாசங்கர்

    கனவுகளை நனவாக்கும் காரிகை!! – காந்திமதி உலகநாதன்