எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கம்பெனி வாசலில் காரை நிறுத்திய ரேவதி நிமிர்ந்து மேலே இருந்த போர்டைப் பார்த்தாள் “சுகுணா ஆயத்த ஆடைகள் நிறுவனம்” பெயர் பளிச்சென மின்னியது. மனம் பெருமிதத்தால் பொங்கியது. போர்டுக்கு பின் கடுமையான உழைப்பும் தொடர் முயற்சியும் அவள் அப்பாவின் அனுபவமும் மறைந்திருந்தன.
அலுவலகத்திற்குள் நுழைந்தவளிடம் கம்பெனியின் பெண் மேலாளர் ராதாமணி “மேடம் எக்ஸ்போர்ட் பண்ண வேண்டிய சரக்கெல்லாம் ரெடி ஆயிடுச்சு. பண்டில் பண்ண வேண்டியதுதான் பாக்கி. நீங்க ஒரு முறை…” என்று இழுத்தவளை
“நான் நேத்து நைட்டே சரக்குகளை செக் பண்ணிட்டேன். பேப்பர்ஸ் பக்காவா இருந்தா அனுப்பிட வேண்டியதுதான்” என்ற ரேவதி புன்னகைத்தாள்.
“நம்ம கம்பெனி சரக்குகளை முதல் முறையா ஃபாரினுக்கு அனுப்ப போறதால எல்லாம் சரியா இருக்கணும்னு கொஞ்சம் படபடப்பா இருக்குது அவ்வளவுதான்” என்று கூறியவள் “சரி வாங்க பார்க்கலாம்” என்று நடந்தாள் ரேவதி.
அலுவலகத்தை ஒட்டி கம்பெனியின் அவுட்லெட் விற்பனை நிலையம், அதன் பின்னே கோடவுனும் அதைத் தொடர்ந்து பணியாளர்கள் ஆயத்த ஆடைகள் தயார் செய்யும் ஹாலும் அமைந்திருந்தது. இரண்டாயிரம் சதுர அடி பரப்பில் ஊரின் மையப்பகுதியில் அமைந்த தங்கள் கம்பெனியை முழுவதுமாக சுற்றி வந்த ரேவதியின் மனதில், இந்த நிலைக்குத் தங்கள் குடும்பம் உயரக்காரணமான அவள் பெற்றோரின் தியாகமும் உழைப்பும் அவள் நினைவிலாடியது.
டவுனுக்கு அருகில் இருந்த ஒரு சிறிய கிராமத்தில் விவசாயக் கூலியாளாக இருந்தவர் தான் குணசேகரன். மழை பொய்த்ததில் விவசாயம் குறைந்து நிலங்களும் ரியல் எஸ்டேட்காரர்கள் பிடியில் சிக்கியதில் உள்ளூரில் கூலி வேலை கிடைப்பது குதிரை கொம்பாகியது. குணசேகரனும் அவர் நண்பர்கள் சிலரும் வேலை தேடி டவுனுக்கு வந்தனர். அங்கு ஒரு கம்பெனியில் பிசிறு வெட்டுவதில் ஆரம்பித்து கை மடிக்க, பட்டன் காஜா தைய்க்க என்று கொஞ்சம் கொஞ்சமாக பழகி கட்டிங் மாஸ்டரிடம் நட்பாக பழகியதில், பனியன் ஆடைகளை வெட்டுவதற்கும் அதை தைய்ப்பதற்கும் மூன்றே வருடங்களில் நன்றாக கற்றுக் கொண்டார் குணசேகரன்.
கம்பெனி வேலையில் சம்பளம் உயர்ந்ததில் தன் அத்தை மகள் சுந்தரியை திருமணம் செய்து சம்சாரியானார் குணசேகரன். இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்ததும் வருமானம் கைக்கும் வாய்க்கும் சரியாக இருந்தது.
வீட்டு வருமானத்தை உயர்த்த மனைவியை கம்பெனி ஆடைகளில் பிசுறு வெட்டும் வேலையை வீட்டில் செய்ய ஆடைகளை வாங்கி வந்தார் குணசேகரன். எல்லாம் சுகமாய் போய்க் கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட சாலை விபத்தில் குணசேகரனின் கையில் பலத்த காயம் பட்டு அவர் இடக்கை முழுவதுமாக நீக்கப்பட்டது. அவரால் வேலைக்கு போக முடியாமல் போனது. சுந்தரி தவித்து போனாள்.
ஆனால் குணசேகரன் நம்பிக்கை இழக்காமல் உடம்பு குணமானதும் சிரமம் பார்க்காமல் தன் ஒற்றைக் கையால் சுந்தரிக்கு தனக்கு தெரிந்த தையல் கலையை பயிற்றுவித்தார். சுந்தரி குறைந்த சம்பளத்தில் கம்பெனி வேலைக்கு செல்ல ஆரமித்தார். குணசேகரன் தன் பிள்ளைகளும் பள்ளிக்கு சென்று வந்ததும் தையலை சிறிது சிறிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று கண்டிப்புடன் இருந்தார். வீடு வறுமையில் தள்ளாடியது.
“அப்பா நான் பள்ளிக்கூடம் போகலப்பா, பேசாம கம்பெனிக்கு கை மடிக்க போய்க்கிறேன். வாரச் சம்பளம் கிடைக்கும்” என்று ரேவதி ஒருநாள் சலிப்புடன் கூறினாள்.
குணசேகரனுக்கு மகள் பேசியதில் வருத்தமானாலும் அதை வெளிக்காட்டாமல் “தங்கம் இங்கே வாங்க” என்று தன் மகள்கள் இருவரையும் அழைத்து தன் அருகில் அமர்த்தி கொண்டார்.
“அப்பா சில விஷயம் சொல்வேன், ரெண்டு பேரும் கவனமா கேட்கணும் புரியுதா” என்றவர் “நம்ம வீட்டில இப்போ ரொம்ப வசதி குறைவுதான். ஆனா இது ஒரு நாள் மாறும். பெண் பிள்ளைகளுக்கு படிப்பு ரொம்ப அவசியம். அது மட்டுமில்லாம இப்போ நான் சொல்லித் தரும் தையல் கலை ஒரு நல்ல தொழில். கல்வி உங்க அறிவை விசாலமாக்கும். இந்த தொழிலும் அதோட சேர்ந்தா நீங்க உங்க வாழ்க்கையில ரொம்ப உயரத்துக்கு போவது உறுதி” என்றார் உணர்ச்சி பொங்க.
சிறுமிகள் இருவரும் அப்பா சொல்வது புரிந்தது போல் சரி என தலையை ஆட்டினர். அதன் பின் பிள்ளைகள் இருவருக்கும் அவர்கள் தந்தையின் கண்டிப்பிலும் கராறிலும் தினசரி வாழ்க்கை சீராக ஓடியது.
இளமைப் பருவ ஆசைகள், உணர்வுகள் எதையும் நினைக்க முடியாத அளவுக்கு வீட்டின் கண்டிப்பு இருந்தது. ரேவதிக்கு ஆரி வொர்க்கில் ஆர்வம் ஏற்பட்டதால் அதை பக்கத்தில் இருந்த தையல் கடையில் கற்றுக் கொண்டாள்.
“மேடம் சரக்கெல்லாம் பண்டில் செய்தாச்சு” என்ற மேலாளரின் குரலில் பழைய நினைவுகள் கலைந்து வெளிவந்த ரேவதி, “ஓகே மா ஒரு சின்ன பூஜை செய்துட்டு சரக்குகளை கார்கோ ட்ரக்கு அனுப்பி விடலாம்” என்று கூறி எழுந்தாள்.
கம்பெனி வேலைகளை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த ரேவதியை கல்லூரியில் படிக்கும் அவள் தங்கை அமுதா வரவேற்றாள். “வாழ்த்துக்கள் அக்கா வெற்றிகரமா நம்ம கம்பெனி ஆடைகளை எக்ஸ்போர்ட் செய்துட்ட சூப்பர்” என்று கூறி ரேவதியை அணைத்துக் கொண்டாள்.
ரேவதி +2 முடித்ததும் அவள் தந்தையிடம் அப்பா நாம ஏன் சின்ன கம்பெனிகளுக்கு ஆயத்த ஆடைகள் செய்து தரக்கூடாது என்று கேட்டதில் எழுந்த பொறி, இன்று சொந்தமா ஒரு கம்பெனியே வச்சுட்டா அக்கா, ஒரு மகளின் வெற்றிக்கு பின் அவள் அப்பா இருப்பது எங்க குடும்பம் தான் என நினைத்ததில் பெருமையுடன் “அக்கா நீ சாதிச்சுட்ட” என ரேவதியை மீண்டும் பாராட்டினாள் அமுதா.
குணசேகரன் ரேவதியின் கனவை மெய்ப்பிக்க அவளை முதலில் ஒரு சின்ன கம்பெனிக்கு வேலை கற்றுக் கொள்ள அனுப்பினார். ஆறு மாதத்தில் அங்கிருந்து வெளியே வந்த ரேவதி தன்னுடைய டிசைன்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக ஊடகங்களில் போஸ்ட் செய்ததில், நிறைய கம்பெனிகளின் தொடர்பும் கொஞ்ச நாட்களில் ஆர்டர்ஸும் கிடைத்தன. இரண்டு மிஷின்களுடன் ஒரு சின்ன இடத்தில் ஆரம்பமான அந்த விதை இன்று விருட்சமாகி வளர்ந்து நிற்கிறது.
ரேவதியின் படிப்பையும் தொலைதூரக் கல்வி மூலமாக தொடரும்படி குணசேகரன் வற்புறுத்தினார். ரேவதியோ “கம்பெனி வேலையோட எப்படிப்பா” என்று முதலில் சற்று கோபப்பட்டாலும், படிப்பை முடித்து ஒரு டிகிரி வாங்கியதால், வங்கியில் கடன் வாங்கி தொழிலை விரிவு செய்ய முடிந்தது.
கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்து தொழில் செய்பவர்களுக்கு மத்தியில் ரேவதியும் தைரியமாக தன் சொற்ப மூதலீட்டை போட்டு தன் கடுமையான உழைப்பை நம்பி கம்பெனி நடத்தினாள்.
அனைத்திற்கும் பின்புலமாக அவள் தந்தை குணசேகரனும் தாய் சுந்தரியும் இருந்தனர். மேலும் குணசேகரன் கம்பெனியில் பெண்களை மட்டும் வேலைக்கு அமர்த்திக் கொள்ள செய்தார்.
“பெண்கள் பொறுப்போடும் ஆர்வத்துடனும் வேலை செய்வர். நாம் தரும் சம்பளம் அவர்கள் குடும்பப் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்கும். அவர்களை தலைநிமிர்ந்து வாழ வைக்கும்” என்றார்.
தன் தந்தையின் அறைக்குள் நுழைந்த ரேவதியை “சின்ன பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சொல்ற பழமொழியை பொய்யாக்கிட்ட மகளே” என அவள் கையை வாஞ்சையுடன் பற்றிக் கொண்டார் குணசேகரன்.
அவள் அம்மாவோ அன்பாக அவள் முதுகை தட்டி “கம்பெனியை அடுத்த நிலைக்கு கொண்டு வந்து உன் நீண்ட நாள் கனவை மெய்யாக்கிட்ட தங்கம்” என்றாள் பெருமையாக.
“எல்லாத்துக்கும் காரணம் நீங்க ரெண்டு பேரும் தான். நான் கம்பெனி தொடங்கலாம்னு சொன்னதும் சின்ன புள்ள ஏதோ சொல்றான்னு அதை அசட்டை செய்யாம அதுக்கான முயற்சியில இறங்கி எனக்கு உறுதுணையாய் இருந்தீங்க. கல்வியோட கைத்தொழிலும் ஒண்ணு கத்துக்கிட்டா வாழ்க்கையில உயர முடியும்னு சொன்னீங்க. அது இன்னைக்கு உண்மையாகிடுச்சுப்பா” என்றாள் ரேவதி மகிழ்ச்சியுடன்.
“உங்களை எப்போதும் ரொம்ப கண்டிப்பும் கறாருமா நடத்தினோம் நானும் உங்க அம்மாவும்” என்றவரிடம், “இல்லப்பா நீங்க கண்டிப்பு மட்டுமில்ல கனிவோடும் இருந்தீங்க. அதுதான்ப்பா எங்களை தடம் மாறாம கூடுதல் பொறுப்போடும் அர்ப்பணிப்போடும் நடக்க வைத்து இந்த உயரத்துக்கு கொண்டு வந்துருக்கு. இந்த வருடம் படிப்பு முடிச்சிட்டு அமுதாவும் எனக்கு உதவியா வந்துடுவா” என்றாள் ரேவதி கனிவாக.
“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள். “
என்று பாடியபடி அங்கு வந்தாள் அமுதா.
எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings