எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
போர்டிகோவினுள் வெள்ளை முயலென நுழைந்த அந்த ஆல்டோ கார் ஒரு மெல்லிய ஹார்ன் அடித்து நின்றது. அது சமையலறையில் இருந்த திவ்யாவுக்கு கணவன் இளங்கோவின் வருகையை அறிவித்தது. திவ்யா சமையலறையில் இருந்து எட்டி மகள் வினயா எங்கிருக்கிறாள் என பார்த்தாள். வினயா பெட்ரூம் வாயிலில் கூம்பிய முகத்துடன் நின்றிருந்தாள்.
ஹாலுக்குள் நுழைந்த இளங்கோ மகள் அருகில் சென்று அவளை வாரி எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தவன் “என்ன ஆச்சு தங்கத்துக்கு மூட் அவுட்டா” என வினவினான்.
சமையலறையில் இருந்து அங்கு வந்த திவ்யா “எது கேட்டாலும் நான் அப்பாகிட்ட சொல்லிக்கிறேன்ங்கிறா. அடம், எல்லாம் நீங்க கொடுக்கிற செல்லம் அவங்க மிஸ் டைரியில் எழுதி இருக்கிறதை பாருங்க” என்று கூறி திவ்யாவும் அவன் அருகில் அமர்ந்தாள்.
இளங்கோ திவ்யா இருவரின் எட்டு வயது செல்ல மகள் வினயா. படிப்பு விளையாட்டு என அனைத்திலும் சுட்டி. இளங்கோ மகளிடம் மிக மெல்லிய குரலில் “இன்னைக்கு ஸ்கூல்ல என்ன நடந்தது நீங்க என்ன செஞ்சீங்க ” என கேட்டான்.
வினயாவும் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் “அப்பா என் ஃபிரண்ட் ராகவ் இருக்கான்ல, அவன் ஒரு பேப்பர்ல ஐ லவ் யூன்னு எழுதி குடுத்தான் பா நானும் அதுல ஐ டூ லவ் யூன்னு எழுதி கொடுத்துட்டேன்பா. இதை போய் கிளாஸ்ல எல்லாரும் ராகவும் வினயாவும் கல்யாணம் செஞ்சுக்க போறாங்கன்னு சொல்லி சிரிச்சாங்கப்பா” என்றவள் இளங்கோவை பார்த்து “இது தப்பாப்பா” என்று பரிதாபமாக கேட்டாள்.
இளங்கோ வினாடி நேரம் யோசித்தவன் மகளுக்கு புரியும்படி “லவ்ன்னா அன்புன்னு பொருள், அப்பா உன்கிட்ட நீ எல்லார்கிட்டயும் அன்பா இருக்கணும்னு சொல்லி இருக்கேன். அதனாலதான் நீ அப்படி எழுதி இருக்க கண்ணா, பரவாயில்லை நீ சொன்னது தப்பில்லம்மா” என்றான் சிரித்தபடி.
“அப்போ கல்யாணமெல்லாம் செஞ்சுக்க வேண்டாமா” என வினவினாள் வினயா.
“ஆமாண்டி இப்பவே பிடிச்சு லவ், கல்யாணம்னு பேசுங்க” என்றாள் திவ்யா கோபமாக.
“ஷ்… ” என்று திவ்யாவை முறைத்தவன் மகளிடம் “வினயா, நீ ஸ்கூலுக்கு போய் நிறைய கத்துக்கிட்டு பெரிய படிப்பெல்லாம் படிச்சு நல்லா வளர்ந்த பின்னாடிதான் கல்யாணத்தை பத்தி எல்லாம் பேசணும் சரியா” என்ற இளங்கோவிடம்
“எங்க மிஸ் கூட இதைத்தான்ப்பா சொன்னாங்க. ஆனா பக்கத்து கிளாஸ் மிஸ்தான் திட்டினாங்க எனக்கு ஒரே ஷேம் ஆயிடுச்சு” என்றாள் வினயா.
“அவங்களுக்கு நீங்க படிப்புல கவனமா இல்லையேனு கவலை ஆயிடுச்சு. அதான் திட்டிட்டாங்க. நீ நாளைக்கு போய் அவங்ககிட்ட நான் இனிமே கருத்தா கவனமா படிக்கிறேன்னு சொல்லிடு அவங்க கூலாயிடுவாங்க” என்றவனிடம்
“ஓகே பா நான் இனிமே நல்லா படிக்கிறேன் பா நீங்களும் நாளைக்கு எங்க மிஸ்கிட்ட வந்து சொல்லிடுங்கப்பா” என கெஞ்சும் குரலில் கேட்டாள் வினயா.
“ஓகே டன்” என சிரித்தபடி கூறினான் இளங்கோ.
இரவு உணவு முடித்து வினயா திவ்யா இருவரும் தூங்கியும் இளங்கோவுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. அவன் மனம் பல வருடங்கள் பின்னோக்கி பயணித்தது.
அன்று அந்த நாள் அந்த கிராமமே கலவரமாகி கலங்கி நின்றது. பள்ளிக்குச் சென்ற ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் மூன்று சிறுமிகளை காணவில்லை. அதில் இளங்கோவின் பெரிய அக்கா கமலமும் ஒருத்தி. அவன் அப்பா சதாசிவம் அந்த ஊர் பெரிய தனக்காரர் , ஆதலால் ஊர் ஜனம் முழுவதும் இளங்கோ வீட்டின் முன் தான் நின்றது. ஆளுக்கு ஆள் ஏதோ விமர்சனம் செய்தபடி இருந்தனர்.
டவுனில் இருந்த பள்ளித் தலமைஆசிரியருக்கு சொல்லி அனுப்பியதில் அவர் சிறுமிகளின் வகுப்பு ஆசிரியருடன் அங்கு வந்தார். சிறுமிகளின் தோழி லட்சுமியை கொஞ்சம் அதட்டி விசாரித்ததில் மூவரும் சினிமாவில் சேர மெட்ராஸ் போயிருப்பதாக தெரிய வந்ததும் ஊரே ஆடிப் போய்விட்டது.
“என்ன தைரியம் பொட்ட பிள்ளைங்களுக்கு, இதுங்கெல்லாம் படிக்கப் போகுதா வேற எதுக்கும் போகுதுங்களா, மெட்ராஸ் பட்டணத்துல இவங்கள எங்க போய் தேடுறது”, ஆளாளுக்கு பேசினார்கள். மூன்று பெற்றோரும் செய்வதறியாது திகைத்தனர்.
மறுநாள் காலை பள்ளி தலைமை ஆசிரியருக்கு மெட்ராஸில் இருந்து ஒரு போன் கால் வந்தது மூன்று சிறுமியரையும் ரயில்வே போலீஸ் பத்திரமாக மீட்டு உள்ளதாகவும் சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கூட்டிச்செல்லும் படியாக செய்தி வந்தது.
மறுநாள் சிறுமியர் மூவரும் அவரவர் பெற்றோருடன் கிராமம் வந்தடைந்தனர். வீடு திரும்பும் வரை மூவரும் எதுவும் பேசாமல் கண்ணீருடன் பயத்தில் உறைந்திருந்தனர்.
சதாசிவம் மகளின் பயம் தெளிந்து தானே சொல்லட்டும் என அவளை எதுவும் கேட்காமல் இருந்தார். மனைவியிடமும் கமலத்தை எதுவும் தொந்தரவு செய்யாதே என்று கூறினார்.
சற்று நேரத்தில் முன்னறையில் அமர்ந்திருந்த சதாசிவத்திடம் தயங்கியபடி வந்த கமலம் கண்ணீருடன் அவர் காலில் விழுந்தாள். “அப்பா என்னை மன்னிச்சிடுங்கப்பா, கூட படிக்கிற பிள்ளைங்க தான் நீ ரொம்ப அழகா இருக்க சினிமாவுல நடிக்கலாம். மெட்ராஸ்ல தான் சினிமாவெல்லாம் எடுக்குறாங்க. அங்க போய் பெரிய நடிகர் யாரையாவது பார்த்தா உன்னை கதாநாயகி ஆக்கிடுவாங்கன்னு சொன்னாங்கப்பா” என்ற தன் மகளின் முகத்தை கருணையுடன் பார்த்து ஆதுரத்துடன் அவள் கைகளை பற்றினார்.
“கமலம், நான் சொல்வதை கவனமா கேளம்மா. சினிமாங்குறது பெரிய மாயச் சுழல். அதில் நிறைய பேர் மூழ்கிக் காணாமல் தான் போயிருக்காங்க. வெகுசிலர்தான் நல்லபடியா முன்னுக்கு வராங்க. ஆனா அதுக்காக அவங்க இழந்தது நிறைய இருக்கும். வெளியில பகட்டா தெரிபவர்கள் மனதளவில் நொந்து போய் இருப்பாங்க. சிறுமியான உனக்கு இதெல்லாம் புரியாதம்மா இப்போ உனக்கு படிக்கும் வயது இப்பத்தான் உன்னால நிறைய கத்துக்க முடியும். நீ உன் கவனத்தை படிப்பில் மட்டும் செலுத்து. நீ நிறைய படிக்கணும்னு அப்பா ஆசைப்படுகிறேன்” என்றார் சதாசிவம்.
“அப்பா இனியும் என்னை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவீங்களா” என ஆச்சரியத்துடன் கேட்டாள் கமலம்.
“ம்..கண்டிப்பா அனுப்புவேன். இந்தப் பள்ளிக்கல்ல வேற பள்ளிக்கு” என்ற சதாசிவம் அதன் பின் தான் எடுத்த முடிவுகளை துரிதமாக செயல்படுத்தினார்.
அந்த வருடமே பிள்ளைகள் மூவரையும் அருகில் உள்ள டவுன் பள்ளியில் சேர்த்து குடும்பத்துடன் அங்கு இடம் பெயர்ந்தார். பெற்றோர் இருவரும் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றதும் கிராமத்திற்கு வந்து விவசாய வேலைகளை கவனிப்பார்கள்
பல வருடங்கள் கழித்து அப்பா இறந்த அன்று அக்கா கமலம் மனம் நிறைந்து கூறினாள். “அப்பா மட்டும் அன்னைக்கு என்னை கடுமையா ஏதாவது சொல்லியிருந்தார்னா நானும் என் தோழிகள் மாதிரிதான் ஆகி இருப்பேன். ஒருத்திய அவ வீட்ல ஓடுகாலின்னு சொல்லியே பைத்தியம் ஆக்கினாங்க. இன்னொருத்திய அவசரமா ஒரு குடிகாரனுக்கு கட்டி வச்சி அவ புருஷன் கொடுமை தாங்காம கிணத்துல விழுந்து உயிரை விட்டாள். அப்பாவிடம் அன்பு என்னும் ஒரு மாயக் கோல் இருந்தது அதில் மயில் இறகால் வருடுகிற மாதிரி வரும் வார்த்தைகள் நம் மனதை இளைப்பாற செய்யும். அதனால்தான் நான் இப்போ ஒரு கல்லூரி பேராசிரியர் ஆகியிருக்கேன் அவர் ஆசைப்பட்ட மாதிரி” என்ற கமலத்திடம்
“அது மட்டுமா உனக்கு பிடித்த உன்னை புரிஞ்சுகிட்ட ஒருத்தரை உனக்கு திருமணம் செஞ்சு வச்சாரு இல்ல அதுதான் சிறப்பு ” என்றாள் சின்னக்கா வனிதா.
இன்று அம்மா அப்பா இருவரும் இல்லை ஆனால் மூவரையும் பாசம் என்ற அன்பு வலை இணைத்துள்ளது. இளங்கோ எப்போது கண்ணயர்ந்தான் என தெரியவில்லை காலையில் பால்காரரின் மணியோசை அவனை எழுப்பியது.
பள்ளியில் வினயாவின் வகுப்பு ஆசிரியையிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் இளங்கோ.
“உங்க மகளைப் பற்றி புகார் சொல்றதா நீங்க எடுத்துக்க வேண்டாம். வகுப்பறையில் நடந்தது உங்களுக்கு தெரியணும்னு தான் உங்களை வரச் சொன்னேன்” என்றார் ஆசிரியை.
“நான் அப்படியெல்லாம் நினைக்கல மேடம், நேற்றே வினயா வகுப்பில் நடந்ததை கூறினாள். நீங்க என் மகளிடம் கடுமையாக நடந்துக்காம அவ இப்ப படிப்பில் மட்டும்தான் கவனம் செலுத்தணும்னு அன்பாக அவளுக்கு உணர்த்தியதற்கு ரொம்ப நன்றி. குழந்தைகள் வகுப்பறையிலேயே பண்பட்டால் தான் அவங்க வாழ்க்கையில் நல்ல மனிதர்களாக இருக்க முடியும்” என கூறிவிட்டு கை குவித்து விடை பெற்றான் இளங்கோ.
எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings