in ,

கல்லூரிக் காலம் (சிறுகதை) – பவானி உமாசங்கர்

எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

        நாட்டின் கடைக்கோடி தென்மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்திலிருந்து சென்னை கல்லூரியில் இன்ஜினியரிங் படிக்க வந்துள்ளான் நம் நாயகன் பிரவீன் இசக்கி. சென்னைக்கு பஸ்ஸில் வந்து கோயம்பேட்டில் இறங்கியது முதல் பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போல் எல்லாவற்றையும் ஆச்சரியமாக பார்த்தபடி நடந்து வந்தான் பிரவீன்.

      “எம்மாம் பெரிய கட்டடம் எல்லா பக்கமும். எப்படி கட்டியிருப்பாங்க  எல்லாத்தையும் ஆத்தாடி” என வியந்து முணுமுணுத்தப்படி வந்து கொண்டிருந்தவனை கல்லூரியில் சேர்க்க அவனுடன் கூட வந்த அவன் சித்தப்பா “டேய் ரோட்டை பார்த்து நடடா தடுக்கி விழுந்துடாத” என்று எச்சரித்தார்.  “வயசு பதினெட்டு ஆகப்போகுது இன்னும் குழந்தை பயலா இருக்குறான். இம்மாம் பெரிய காலேசுல இவன் எல்லாத்தையும் எப்படி சமாளிப்பான். அம்மா, இசக்கி பையனை பாத்துக்கம்மா” குல தெய்வத்தை துணைக்கு அழைத்தார் சித்தப்பா.

கல்லூரியின் முகப்பே அவர்கள் இருவரையும் மிரட்டியது. “காலேசு முழுக்க சுத்தி வர ஒரு நாள் ஆகும் போல” என்றார் அவன் சித்தப்பா. 

    கல்லூரி ஆபீசில் பிரவீனின் ஹாஸ்டல் அறையின் விவரங்களை தெரிந்து கொண்டு இருவரும் ஹாஸ்டலுக்கு வந்தனர். கல்லூரியிலிருந்து ஹாஸ்டல் அரை கிலோ மீட்டர் தூரம் இருந்தது. வழி நெடிகிலும் மரங்களும் புல்வெளியுமாக பசுமையாக இருந்தது பாதை.      

ஹாஸ்டலில் பிரவீனுக்கு அலாட் செய்திருந்த ரூமுக்கு இருவரும் வந்தனர். அறையிலிருந்த பையனிடம் “தம்பி பிரவீன் கிராமத்தில் இருந்து வரான் கொஞ்சம் பாத்துக்கப்பா” என்றார் அவன் சித்தப்பா.

           “பாத்துக்குறேன்ங்க” என்று கூறி தலையை ஆட்டினான் அந்தப் பையன். சற்று நேரம் ரூமில் இருந்த அவன் சித்தப்பா “சரி நான் கிளம்புறேன் நீ ஜாக்கிரதையா இருந்துக்க போன் பத்திரம். எது வேணும்னாலும் போன் செய்துடுப்பா” என்றவர் அவன் கன்னத்தில் செல்லமாக தட்டி விட்டு கிளம்பினார். 

       கண்கள் நீரில் மிதக்க சித்தப்பாவுக்கு கைகளை ஆட்டினான் பிரவீன். ரூமில்  பிரவீனுடன் இரண்டு சீனியர் மாணவர்களும் முதல் வருடம் படிப்பவன் ஒருவனுமாக மொத்தம் நான்கு பேர் தங்கினார். 

        பிரவீன் தன் ரூம் மேட் அனைவரையுமே அண்ணா என அழைத்தான். “டேய் நான் உன்னோட தானே படிக்கிறேன் என்னை ஏண்டா அண்ணான்னு கூப்பிடுற” என்பான் விநோத் என்ற அந்த ரூம் மேட்.

     “டேய் இனி நீ அண்ணான்னு என்னைய கூப்பிட்ட நான் பேசமாட்டேன் டா உன்னோட” என்று விநோத் கூறிய பின்பே பிரவீன் அவனை பெயர் சொல்லி அழைத்தான். வகுப்பில் அவன் முழு பெயர் பிரவீன் இசக்கி என்று தெரிந்ததும் அவனை சக மாணவர்கள் கேலியும் கிண்டலும் செய்து இசக்கி விஸ்க்கி என்று அழைத்தனர்.

     “டேய் எங்க சாமி பேருடா அது. அப்படியெல்லாம் மாத்தி கூப்பிடாதீங்க டா” என்றவன் வார்த்தைகள் அங்கு எடுபடவில்லை. கூட படிக்கும் மாணவிகளுக்கோ ஒல்லியான உடல்வாகும் கருப்பு நிறத்தில் களையான முகத்துடன் இருந்த பிரவீனை ரொம்ப பிடித்திருந்தது. 

    வகுப்பில் ப்ரொபசர் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை தமிழில் கூறுவதுமாக பிரவீன் அந்த வகுப்பின் ஐகானாக இருந்தான். “பிரவீன் இம்ப்ரூவ் யுவர் லாங்வேஜ்” என்பார் ப்ரொபசர் சிரித்தபடி.

       அஸ்வினி குமார் நம் கதையின் நாயகி கிராப் கட் ஜீன்ஸ் டி ஷர்ட்டுடன் பைக்கில் ஆண்களுக்கு இணையாக கல்லூரியில் வளைய வருபவள். பிரவீன் அமைதியின் மறுபக்கம் என்றால் அவள் ஆழிப் பேரலை போல் இருப்பாள். எப்போதுமே எதிரெதிர் துருவங்கள் இணைவது தானே இயற்கை.

      அஸ்வினியை முதல் முதலாக பிரமிப்புடன் பார்த்த பிரவீனை “டோர் க்ளோஸ் ஜொள்ள தொடச்சுக்கோ” என்று கேஷுவலாக அவனிடம் பேசினாள் அஸ்வினி.

“இல்லைங்க அக்கா” என்று ஆரம்பித்தவனை “என்னது அக்காவா டேய் நானும் உன் கிளாஸ் தானே படிக்கிறேன் நான் அஸ்வினி அப்படியே கூப்பிடு அக்காங்காத புரியுதா” என்றாள் மிரட்டலாக.

     அதன்பின் அடிக்கடி அவனிடம் சந்தேகம் கேட்க ஹாஸ்டலுக்கே வந்து விடுவாள் அஸ்வினி. பிரவீனோ “ஹாஸ்டலுக்கு எல்லாம் வர வேண்டாங்க. நாம காலேஜிலேயே பேசிக்கலாம் போதும்” என்றவனிடம் “ஹேய் யாராவது சீனியர் என்கிட்ட வம்பு பண்ணுவாங்கன்னு பயப்படுறியா நோ சான்ஸ் நீ வொரி பண்ணாத” என்பாள் அஸ்வினி ஜாலியாக.

        நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தாங்கள் காந்தம் போல் ஒருவரை ஒருவர் கவர்கிறோம் என்பதை இருவருமே உணர்ந்தனர். அதில் முதலில் சுதாரித்துக் கொண்டவன் பிரவீன் தான்.          

“தம்பி காலேஜ்ல உனக்கு நிறைய மாற்றங்கள் வரும் நீ குழப்பம் ஆயிடுவ. ஆனா நாம படிக்க வந்திருக்கோம் அது மட்டும் தான் நம்ம குறிக்கோள் அப்படின்னு திடமா மனச வச்சுக்கணும். இங்க எப்படி உங்க வாத்தியாருங்க சொன்னதைக் கேட்டு நல்லா படிச்சு இப்ப மாவட்டத்துலயே முதல்மாணவனா வந்த மாதிரி அங்கேயும் சாருங்க சொல்றத கேட்டு காலேசிலேயும் முதலா வந்துரணும் சரியா”.

      அவன் காலேஜில் சேரப் போவதாக சொன்னதுமே அவன் அம்மா கூறிய அந்த அறிவுரைகள் அவ்வபோது மனதில் ஒலிக்கும்.” டேய் இந்த காலத்துல பொண்ணுங்க எல்லாம் விவரமா இருக்காங்க நல்லா பழகுறாங்கன்னு காதல் கீதல்னு ப்ரொபோஸ் பண்ணிடாத. நான் உங்களை என் அண்ணனா தான் பார்க்கிறேன்னு சொல்லி அப்படியே பிளாப் பண்ணிடுவாங்க ஜாக்கிரதை நீயும் நீக்கு போக்கா இருக்க பழகிக்க டா ” என்று விநோத் வேறு அவ்வப்போது பிரவீனிடம் கூறி எச்சரிப்பான்.

        அன்று ஏதோ யோசனையாக அமர்ந்திருந்த பிரவீனை “என்னடா நீ ப்ரொபோஸ் செய்தயாக்கும் அஸ்வினி அதை பிளாப் பண்ணிட்டாளா நான் நினைச்சேன் இதுக்கெல்லாம் வருத்தப்பட்டுகிட்டு தாடி வளர்த்து தேவதாஸ் ஆயிடாத இது இல்லன்னா இன்னொன்னு அஸ்வினி நோ சொன்னா மாலினி எஸ் சொல்லுவா  கவலைப் படாதடா” என்ற விநோத்திடம் “டேய் என்ன நடந்ததுன்னு தெரியாம நீ பாட்டுக்கு பேசிட்டே போற” என்று கூறி சிரித்தான் பிரவீன்.

     “என்னடா நடந்தது அதையாவது சொல்லேன்” என்று சிடுசிடுத்தான் விநோத்.”நேத்து அஸ்வினி என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணினாடா” என்றான் பிரவீன் சிந்தனையுடன் “அடப்பாவி மச்சக்காரன்டா நீ” என்று கூறி அவன் முதுகில் தட்டிய விநோத்  “நீ ஓகே சொல்லிட்ட இல்ல ” என்றான் வேகமாக.

      “இல்லடா ஆனா அவகிட்ட” முதல் நாள் மாலை நடந்தது அவன் கண்முன்னே காட்சியாக விரிந்தது. பிரவீனோடு ஏதோ பேசிக் கொண்டே வந்த அஸ்வினி திடீரென “பிரவீன் உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டா ஐ திங்க் நான் உன்னை காதலிக்கிறேன்னு நினைக்கிறேன்” என்றாள் இயல்பாக. 

     பிரவீன் சற்று நேரம் பேசாமல் நடந்தவன். “நமக்குள் இப்படி ஒரு உரையாடல் வரும் என நான் எதிர்பார்த்து தான் இருந்தேன் அஸ்வினி. பரஸ்பரம் இரண்டு பேருக்குள்ளேயும் இந்த அன்பு இருக்கு. ஆனா அதுக்கான தருணம் இது இல்ல. இப்போ நம்மோட லட்சியம் நம்ம பெற்றோரோட ஆசை எல்லாமே நாம இந்த கோர்ஸை படிச்சு முடிச்சு வாழ்க்கையில உயரணும்ங்கறதுதான. கல்லூரி காலம் கனா காணும் காலம்தான்.  ஆனால் அந்த கனவு நம்ம உயர்வுக்கானதா இருக்கணும் இந்த நாலு வருஷத்துல எத்தனையோ மாற்றங்கள் வரும் நமக்குள்ள. அதற்கு பிறகும் நாம ரெண்டு பேரும் இதே போல அன்போடு இருந்தா நம்ம பெற்றோர் சம்மதத்தோட திருமணம் செய்துக்கலாம்.  அப்புறம் வாழ்க்கை முழுக்க நாம காதலிக்கலாம். அதுவரை நாம கொஞ்சம் தூரமாகவே இருக்கலாம் சரியா. இதுக்கு உனக்கு சம்மதம் தானே” என்று கேட்ட பிரவீனை வியந்து பார்த்தாள் அஸ்வினி.

அவனிடம் வேறு எதுவும் பேசாமல் சிரித்தபடி தம்சப் காட்டியவள் விரைந்து தன் டூவீலரில் ஏறி மறைந்தாள்.                                   

அனைத்தையும் கேட்ட விநோத் “டேய் நான் உன்னை என்னமோன்னு நெனச்சேன் ஆனா நீ பெரிய ஆளுதான் நல்லா பொறுப்பான பதில்தான் கொடுத்திருக்க அஸ்வினிக்கு. நீ என் நண்பன்னு சொல்லிக்க எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடா” என்று கூறி பிரவீனின் தோளை தட்டிக் கொடுத்தான் விநோத்.

எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)      

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆசிரியரே நாட்டின் வேர் (மரபுக்கவிதை) – பாவலர் கருமலைத் தமிழாழன்

    முடியாத முடிவு (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு