எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“ரேகா எழுந்திரும்மா. மணி ஆறு ஆகுது. இன்னிக்கு உனக்கு எக்சாம் 10.00 மணிக்கு. ஒரு மணிநேரத்திற்கு முன்னதாக அங்கு இருக்கணும், மறந்திட்டியா?”.
“அம்மா.. எனக்குத் தெரியும். அதனால் தான் ராத்திரியெல்லாம் நல்லா படிச்சிட்டு 5.00 மணிக்கு தான் தூங்கவே ஆரம்பிச்சேன். 7.00 மணிக்கு எழுந்திருக்கேனே. பிளீஸ், பீளீஸ்”.
“இல்ல ரேகா. இப்ப எழுந்தா தான் நீ கிளம்ப 7.00 மணி ஆகும். பேருந்து நிலையம் செல்ல 8.00 மணி ஆகும். அங்கே உடனே பேருந்து கிடைத்தால் கூட தான் , தேர்வு நடைபெறும் கல்லூரிக்கு 9.00 மணிக்கு போக முடியும். அங்கே உன்னுடைய தேர்வு அறையை தேடி கண்டுபிடிக்க ஒரு அரை மணி நேரம் ஆகும். மொத்தமா கூட்டி கழிச்சு பார்த்தா 9.30 மணி ஆகி விடும். எழுந்திரும்மா. உன் அண்ணன் உனக்காக 5.00 மணிக்கெல்லாம் எழுந்து தயாராகி வீட்டின் வெளியே பைக்கோட நிற்கிறான்”.
“என்னாம்மா நீ காலையில, டி.வி. சீரியல் கதை சொல்லற மாதிரி சொல்றீங்க”.
ஒரு வழியாக ரேகா எழுந்து, காலை கடன்களை முடித்து, குளித்துவிட்டு, உடை மாற்றிக் கொண்டு வர சரியாக 7.00 மணி ஆகி விட்டது.
“பார்த்தியா ரேகா , நான் சொன்ன மாதிரியே 7.00 மணி ஆகிடுச்சு நீ கிளம்ப. இந்தா காபி, இத மட்டும் குடிச்சிட்டு கிளம்பு. டிபன் சாப்பிட உட்கார்ந்தா, எழுந்திருக்க மணி ஏழரை ஆகி விடும், அப்புறம் எக்சாம் உனக்கு ஏழரைதான். வழியில் பல தடங்கள் கூட வரலாம். ஆறு மாசமா கஷ்டப்பட்டு படிச்சது வீணாயிடும். ஹால் டிக்கெட் பேனா, பென்சில், எரேசர், மொபைல் எல்லாத்தையும் உன் பர்சில் வச்சிருக்கேன். ஒரு தடவை செக் பண்ணிக்கோ.
“என்னமா நீ, ஜோசியக்காரன் மாதிரி சொல்லறே ? ” என்று கூறியபடியே தன் அம்மாவை முறைத்துக் கொண்டே ரேகா காபியை நிதானமாக குடிக்க ஆரம்பித்தாள்.
“என்ன ரேகா, ஜூஸ் குடிக்க மாதிரி மெதுவா ருசிச்சி குடிக்கறே?, வேகமா குடிம்மா, நேரமாகுது”.
“அம்மா காபி சூடா இருக்கும்மா”.
“சூடா குடிக்க தான் காபி, டீ எல்லாம். அப்போ தான் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும். “
ரேகா வீட்டை விட்டு வெளியே வர மணி 7.15 ஆனது. அண்ணனின் பைக்கில் ஏறி அமர்ந்தாள் ரேகா. இரண்டு மணி நேரமாக காத்திருந்த கோபத்தால் அவளிடம் எதுவும் பேசாமல் பைக்கை வேகமாக ஓட்டினான் அவள் அண்ணன் குமார்.
முப்பது நிமிடங்களில் பேருந்து நிலையம் வந்தடைந்தான். அப்போது ஒரு பேருந்து புறப்பட தயாராக இருந்தது. “ஆல் தி பெஸ்ட் ரேகா “, என்று கூறிவிட்டு அந்த பேருந்தில் ரேகாவை ஏற்றி விட்டான் குமார். பேருந்து கிளம்பியது.
தேர்வு நடைபெறும் கல்லூரிக்கு பேருந்து வந்து சேரும்போது மணி 9.00 ஆனது. அந்த கல்லூரியின் உள்ளே வந்து, ஒரு வழியாக தன் தேர்வு அறையை கண்டு பிடித்து தன் இருக்கையில் சோர்வாக அமர்ந்து தன் கை கடிகாரத்தை பார்த்தாள் மணி 9.30 என்று காட்டியது.
அப்போது தான் அவள் அம்மா காலையில் கூறியது நினைவுக்கு வந்தது. “அட, என்னமா கணக்கு போட்டு சொல்லியிருக்காங்க..!, அவங்க சொன்ன மாதிரியே மணி சரியா 9.30 ஆகியிருக்கே…”, என்று மனதிற்குள் தன் அம்மாவைப் பாராட்டினாள்.
மணி 9.55 ஆகியது. இன்னும் ஐந்து நிமிடம் தான் உள்ளது தேர்வு தொடங்குவதற்கு. அவள் தேர்வு எழுதும் அறையில் பாதி பேர் வரவில்லை. அது போல் மற்ற அறைகளிலும் பலர் வரவில்லை என்று அங்கிருந்த சில தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். மணி 10.00 ஆனது. கேள்வித்தாள் மற்றும் விடைகள் எழுதும் தாள் வழங்கப்பட்டது. அப்போதும் அந்த நபர்கள் வரவில்லை.
ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் காலை 9.00 மணிக்கு மரணமடைந்த காரணத்தால் ஊரெங்கும் கலவரம் ஏற்பட்டது. கடைகள் மூடப்பட்டன. பேருந்துகள் இயங்கவில்லை. சாலைகள் அடைக்கப்பட்டது. கல்லூரியின் வெளியில் பயங்கர கலவரம் நடைப்பெற்று கொண்டிருந்தது.
தேர்வு நடைபெறும் அந்த கல்லூரியின் நுழைவு வாயிலில் உள்ள பெரிய கதவுகள் மூடப்பட்டன. தேர்வு எழுதுபவர்களின் நலம் கருதி தேர்வு அறையின் கதவுகளும் மூடப்பட்டன .
தேர்வு முடிந்து, தேர்வு எழுதியவர்கள் தேர்வு அறையை விட்டு வெளியே வந்தனர். வெளியே நடக்கும் கலவரத்தின் காரணமாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. சாலைகளும் அடைக்கப்பட்ட காரணத்தால், அந்த தேர்வு மையத்தில் சுமார் ஆயிரம் நபர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று அங்கேயிருந்தவர்கள் பேசிக் கொண்டனர். ஆனால் கல்லூரியை விட்டு வெளியே செல்ல முடியாத சூழ்நிலை அங்கே இருந்தது.
ரேகா தன் அண்ணனுக்கு போன் செய்து அங்குள்ள நிலவரத்தை கூறினாள். தான் வந்து அழைத்துச் செல்வதாகவும் அது வரையில் கல்லூரியை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கூறினான் குமார்.
மூன்று மணி நேரத்தில் குமார் கல்லூரிக்கு வந்து சேர்ந்தான் ரேகாவை அழைத்துச் செல்ல. நேரம் ஆக ஆக வீட்டில் அவர்கள் அம்மா தவித்துக் கொண்டிருந்தாள். முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டு கலவரமாக இருந்ததால், சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் சுற்றியவாறே, குறுக்கு வழிகளைத் தேடி கண்டுபிடித்து ஒரு வழியாக இருவரும் வீடு வந்து சேர இரவு மணி 7.00 ஆகியது.
ஊரில் ஏற்பட்ட கலவரத்தால், பேருந்துகள் மற்றும் எந்த விதமான போக்குவரத்துகளும் இயங்காத காரணத்தால் தேர்வு மையத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் சரியான நேரத்திற்கு தேர்வு எழுத வரவில்லை என்று கல்லூரியில் பேசிக் கொண்டதாக ரேகா தன் அம்மாவிடம் கூறினாள்.
நல்லவேளை, முன்னதாக நீங்கள் என்னை கிளம்ப வைத்ததால், சரியான நேரத்தில் தேர்வு மையத்தை அடைந்து, தேர்வு எழுத முடிந்தது என்று கூறி அம்மாவிற்கு நன்றி கூறினாள் ரேகா. அவள் எழுதிய அந்த வங்கித் தேர்வில் ரேகா தேர்ச்சி பெற்று வங்கியின் அதிகாரியாக பணியில் சேர்ந்தாள்.
எழுத்தாளர் வேலூர். D. சீனிவாசன் எழுதிய அனைத்து சிறுகதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings