in ,

கீழோராயினும் தாழ உரை (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்     

வேலைக்காரி சரோஜா  லேட்டாக வந்தாள் என்று பலத்த சண்டையில் மும்முரமாக இருந்தாள் மைதிலி.  கல்லூரியில் படிக்கும் அவள் மகள் மதுமிதா, இரண்டு காதுகளையும் பொத்திக் கொண்டாள்.

வேலைக்காரி என்றால், சரோஜா ஒரு வயதான பாட்டியோ அல்லது நடுத்தர வயது பெண்ணோ இல்லை,  ஏறக்குறைய மதுமிதா வயதுதான். மதுமிதா தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் டொனேஷன் கொடுத்துப் படிக்கிறாள். சரோஜா அரசு கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படிக்கிறாள்.

“என் அம்மாவிற்கு ஜுரம். அவர்களுக்கு கஞ்சி காய்ச்சி வைத்து விட்டு வீட்டில் உள்ள வேலைகளை செய்து விட்டு  வர கொஞ்சம் நேரமாகி விட்டது. சாரி அம்மா, நாளை முதல் சரியான நேரத்தில் வந்து விடுகிறேன்“ என்று சொல்லி விட்டு பாத்திரம் தேய்க்கப் போய் விட்டாள் சரோஜா.

மது சுற்றுமுற்றும் பார்த்து விட்டு சரோஜாவிடம் வந்து, “சரோ, அம்மா பேசியதற்கு நான் சாரி கேட்டுக் கொள்கிறேன். உன் வேலைகளை முடித்து விட்டு வா, நான் உன்னை என் வண்டியில் காலேஜில் டிராப் செய்து விடுகிறேன்“ என்றாள்.

“அதெல்லாம் வேண்டாம் சின்னம்மா, நான் வழக்கம் போல பஸ்ஸில் போய் விடுவேன்” என்றாள் சரோஜா.

“நான் ஒன்றும் உன் மேல் பரிதாபப்பட்டு கூப்பிடவில்லை.  இரண்டு பேராகப் போனால் போரடிக்காமல் ஜாலியாக போகலாம். ஆமாம், அது என்ன எப்போது பார்த்தாலும் என்னை ‘சின்னம்மா’ என்று கூப்பிடுகிறாய்? நான் என்ன உன் அம்மாவின் தங்கையா? என்னை இனிமேல் நீ மது என்றுதான் கூப்பிட வேண்டும்” என்றாள் மதுமிதா புன்னகையுடன்.

மதுமிதா எப்போதும் இப்படித்தான். மிகவும் நட்புடன் இருப்பாள்.  பேசிப்பேசி மனதிற்கு மிகவும் நெருங்கி விடுவாள்.  அந்த வீட்டில் ஹாலில் ஒரு பெரிய ஊஞ்சல் இருக்கும். அதில் உட்கார்ந்து ஆட வேண்டும் என்று சரோஜாவிற்கு நீண்ட நாள் ஆசை.

ஒருநாள் மது அந்த ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டு, அவள் அம்மா கொடுத்த பலகாரங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். சரோஜா சமையல் அறையில் பெருக்கிக் கொண்டிருந்தவள், அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்த மது, ஒரு மைசூர்பாக்கை எடுத்து வந்து சரோஜா எதிர்பார்க்காத நேரத்தில் அவள் வாயில் பலவந்தமாகத் திணித்தாள். மைதிலியை நினைத்து பயந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்த சரோஜா, வாயை இரண்டு கைகளாலும் மூடிக் கொண்டே, “ஏன் மது இப்படி செய்தாய்? அம்மா பார்த்தால் என்னைத்தான் திட்டுவார்கள்” என்றாள்.

“அம்மா எப்போது உன்னைத் திட்டாமல் இருக்கிறார்கள்? அவர்களின் பொழுதுபோக்கே உன்னைத்  திட்டுவதுதான். எனக்கு மிகவும் பிடித்தமான தோழி நீ. நான் சாப்பிடுவதை சமையலறையில் நின்று நீ பார்த்துக்கொண்டு இருக்க, நான் எப்படி சாப்பிடுவது? அதனால் தான் ஊட்டி விட்டேன்” என்றாள் மது.

“ஐயோ மது, நீ என்னைத் தப்பாக நினைத்து விட்டாய்.  நீ சாப்பிடுவதைப் பார்த்து நான் ஆசைப்படவில்லை. நீ ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருந்தாய் அல்லவா? அதேப்போல் எனக்கும் ஊஞ்சலில் ஆட வேண்டும் என ரொம்ப நாள் ஆசை. சின்ன வயதில் என் அம்மாவோடு உன் வீட்டிற்கு வரும் போதெல்லாம் உங்கள் அம்மா அந்த ஊஞ்சலில் தான் எப்போதும் உட்கார்ந்து ஏதாவது செய்து கொண்டிருப்பார். அப்போது நான் வீட்டிற்கு போய், அதேப் போல் ஊஞ்சல் நம் வீட்டிலும் வேண்டும் என்று அழுவேன். அதற்கு என் அம்மா ‘ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க’ என்று திட்டி, கனமான ஒரு நூல் புடவையில்  தூளி கட்டித் தருவார்கள். ஆனால் வீடு மிகவும் சிறியதாகையால் வேகமாக எல்லாம் ஆட முடியாது. அந்த ஆசையினால் தான் நீ ஆடுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தேன்” என்று நீண்ட உரையுடன் முடித்தாள் சரோஜா.

அவள் பேச்சைக் கேட்டு கண் கலங்கி மது, பலவந்தமாக சரோஜாவை ஊஞ்சலில் உட்காரவைத்து ஆட்டினாள். அதைப் பார்த்த மைதிலி, சரோஜாவைக் கீழே தள்ளிவிட்டு அந்த ஊஞ்சலை பீனைல் போட்டுக் கழுவினாள். அதைக் கண்டு, மனம் வெதும்பி கண்கள் கலங்கிய சரோஜா, அதோடு   வேலையை விட்டு நின்றாள். அவள் அம்மாவும் அந்த வீட்டில்  வேலை செய்ய மறுத்து விட்டது தனிக்கதை. மது அதன் பிறகு சரோஜா அவள் அம்மா யாரையும் பார்க்கவில்லை.

காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை அல்லவா. வருடங்கள் ஓடின. மது ஹைவேஸ் டிபார்ட்மென்டில் இஞ்சினியராகப் பணியில் சேர்ந்து விட்டாள். அவள் அம்மா தேடி வைத்த பணக்கார மாப்பிள்ளையோடு சேர்ந்து வாழ முடியவில்லை.

சரோஜா இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவுடன், தமிழக அரசு நடத்திய பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் தேர்ச்சி பெற்று இளநிலை எழுத்தராக ரெவன்யூ இலாக்காவில் பணியில் சேர்ந்தாள். சரோஜாவின் அம்மா அவளைத் திருமணத்திற்கு வற்புறுத்தினாள், ஆனால்  அவள் ஒத்துக் கொள்ளவில்லை.

அவளுக்குத் தான் எல்லாவற்றிலும் ஆசையாயிற்றே. அவள் வேலை செய்யும் இலாக்காவில் கலெக்டராக வேண்டும் என நினைத்தாள், அதற்கான கோச்சிங் கிளாஸிலும் சேரந்தாள். பிரிலிமினரி, மெயின், இன்டர்வியூ என எல்லா பரீட்சையிலும் தேறி, சென்னையில் கலெக்டராக பணியில் சேர்ந்தாள். கல்யாணம் குடும்பம் என்று எந்த வம்பிலும் மாட்டிக் கொள்ளவில்லை.

மதுமிதா வேலை செய்த ஹைவேஸ் டிபார்ட்மென்டில், யாரோ ஒரு ஒப்பந்தக்காரன் ரோடு போடும்போது குறிப்பிட்ட விகிதத்தில் சிமென்ட் கலக்காமல் ஏமாற்றியதால் பிடிபட்டான். அந்த வேலை மதுவின் கன்ட்ரோலில் இருந்தது. அவன் அநாவசியமாக மதுவையும் அந்த ஊழலில் சிக்க வைத்தான். எந்தத் தவறும் செய்யாமலே வம்பில் மாட்டிக் கொண்டாள் மதுமிதா. செய்யாத தவறை ஒப்புக் கொள்ள மறுக்கவே, கலெக்டர் தலைமையில் என்கொயரி கமிஷன் அமைக்கப்பட்டது.

அதுவரையில் ஒருவரை ஒருவர் சந்திக்காமலே இருந்த மதுமிதாவும் சரோஜாவும், அந்தக் கமிஷன் போதுதான் பார்த்துக் கொண்டனர். ஆனாலும் அப்போது தெரிந்தவர்களாக காட்டிக் கொள்ளவில்லை. மதுமிதா குற்றமற்றவள் என்று நிரூபிக்கப்பட்ட பின், சரோஜாவே அவளைத் தேடி வந்து வீட்டிற்கு அழைத்தாள்.

நிச்சயமாக வருகிறேன் என்று வாக்களித்தவள், எந்த விவரமும் சொல்லாமல் அவள் அம்மா மைதிலியையும் அழைத்துச் சென்றாள். கலெக்டர் வீடு என்றதும், எந்தத் தயக்கமும் இல்லாமல் உடனே கிளம்பினாள் மைதிலி.

கலெக்டருக்கு ஒதுக்கப்பட்ட ஆடம்பர அபார்ட்மென்டில் நுழைந்ததும், பெரிய ஹாலில் ஊஞ்சல் போன்ற சோபா ஒன்றில் அமர்ந்து அலுவலகக் கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சரோஜா. மைதிலிக்கு முதலில் சரோஜாவை அடையாளம் தெரியவில்லை. அடையாளம் தெரிந்த பிறகு, அந்த ஊஞ்சலைப் பார்த்து குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தது.

மதுவையும் அவள் அம்மாவையும் பார்த்தவுடன் “வாங்கம்மா, வா மது” என்று சந்தோஷமாக வரவேற்றாள் சரோஜா.

மைதிலி தான் கூனிக்குறுகி நின்றாள். அதற்குள் சரோஜாவின் அம்மா கையில் காபியுடன் வந்து அவர்களை வரவேற்றாள்.

“வாழ்க்கை எனக்கு சரியான பாடம் சொல்லிக் கொடுத்தது சரோஜா. எவ்வளவோ  நீதிக் கதைகள் படிக்கிறோம், ஆனால் அது எல்லாம் ஏட்டுச்சுரக்காய் ஆனது” என்றாள் மைதிலி வருத்தத்துடன்.

“என்னம்மா சொல்கிறீர்கள்?” எனக் கேட்டாள் சரோஜா.

“ஆமாம். ஒளவைப் பாட்டி கொன்றைவேந்தனில் சொல்லவில்லையா. ‘கீழோராயினும் தாழ உரை’ என்று. அதெல்லாம் படித்ததோடு மறந்து விடுகிறது. நீங்கள் எங்கள் வீட்டில் வேலை செய்கிறீர்கள் என்று மட்டமாக நடத்தினேன், கடைசியில் என் பெண்ணே உன் எதிரில் நிற்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. அதனால் தான் மூத்தோர் சொல் அமுதம்  என்பார்கள். நான் தான் எல்லாவற்றையும் மறந்து நடந்தேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்றாள் மைதிலி கண்கள் கலங்க.

“மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம் அம்மா. ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் நடந்தாலே போதும். முப்பது வருடம் வாழ்ந்தவரும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவரும்  இல்லை என்று அதனால் தான் சொல்கிறார்கள்” என்றாள் சரோஜா.

“பாட்டி சொல்லைத் தட்டாதே” என்று பாடினாள் மதுமிதா. 

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்      

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மேகம் விலகிய நிலவு!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்