in ,

இல்லறமல்லது நல்லறமன்று (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கௌரி இல்லாமல் வீடு வெறிச்சோடி இருந்தது. சரவணனுக்கு அவன் மேலேயே கோபம் கோபமாக வந்தது. இருவரும் ஒருவர் மேல் ஒருவர் எவ்வளவு பிரியமாக இருந்தார்கள். அப்படியானால் அந்த காதல் பொய்யா? 

எப்படி அவனுக்கு அவ்வளவு கோபம் வந்தது? எல்லாம் இந்த அக்கா சௌமியாவால் தான். அது அவனுக்கு நன்றாகவே தெரிகிறது, ஆனாலும் அவளை மீறி அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

சரவணனுக்கு பத்து வயதும், சௌமியாவுக்கு பன்னிரண்டு வயதும் இருக்கும்போது அவர்களின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக இறந்து விட்டனர். வீட்டோடு இருந்த விதவையான ஒரு அத்தைதான், இவர்கள் இருவரையும் அந்த நேரத்தில் அன்புடனும் ஆதரவுடனும் அணைத்துக் கொண்டாள். எல்லா வேலைகளையும் அத்தை தான் செய்வாள். சௌமியா அத்தைக்கு எந்த உதவியும் செய்ய மாட்டாள். 

யாராவது ஏதாவது சொன்னாலும், “தாயில்லாத பெண் குழந்தை, இங்கே இருக்கும் வரை சுதந்திரமாக சந்தோஷமாக இருக்கட்டும். கல்யாணமானால் அவள் தானே அவள் வீட்டு வேலைகளை செய்ய வேண்டும்” என்பாள் அத்தை சிரித்துக் கொண்டு.

சரவணன் மட்டும் அத்தை தடுத்தாலும் அவனால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வான். சரவணனுக்கு அத்தையிடம் பிரியம் அதிகம். 

ஆசையாக இருந்த அம்மா அப்பா இருவரையும் ஒரே நேரத்தில் இழந்து சரவணன் இரவில் பயந்து அழும்போது, அன்புடன் அணைத்து அவன் பயம் போக்கி கதைகள் சொல்லி தூங்க வைப்பாள் அத்தை.  ஆனால் சௌமியா அதெல்லாம் ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ள மாட்டாள்.

“அத்தை சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தான் நம் வீட்டில் ரொம்ப வருடங்கள் தங்கியிருக்கிறாள், அதனால் இதெல்லாம் செய்ய வேண்டியது அவள் கடமை” என்பாள். 

வீட்டில் பணத்திற்கு ஒன்றும் கஷ்டம் இல்லை. பெற்றோர் இருவரும் அரசுப் பணியில் இருந்ததால், அவர்கள் மூலம் கிடைத்த பேமிலி பென்ஷன், பி.எப்., எல்லாவற்றையும் வங்கியில் ஐந்து ஆண்டுகளுக்கு பிக்ஸட் டெபாசிட் செய்து விட்டாள் அத்தை. அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையும், அத்தையின் பேமிலி பென்ஷன் தொகையும் தவிர, அநாவசிமாக எந்த செலவும் செய்ய மாட்டாள். 

சரவணனையும் சௌமியாவையும் நன்றாகப் படிக் கவைத்தாள். வங்கித் தேர்வில் வெற்றி பெற்று ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியிலும் தாள் சேர்ந்தாள் சௌமியா. மத்திய அரசு நடத்தும் சர்வீஸ் கமிஷன் எழுதி வருமான வரித்துறையில் பணியில் சேர்ந்தான் சரவணன்.

சௌமியா அவளுடன் வேலை செய்யும் சேகர் என்ற பையனைத் தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்று பிடிவாதம் செய்து திருமணம் செய்து கொண்டாள். அங்கும் இவள் வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இல்லாததால் எப்போதும் சண்டை தான்.

அத்தை ஒரு வாயில்லாத பூச்சி, அதனால் சௌமியா கேட்டது கேட்காதது எல்லாம் செய்து அனுப்புவாள். அப்படியும் காடாறு மாதம், நாடாறு மாதம் என்று தான் அவள் இல்லற வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது.

சரவணன் வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆக, அவனாக ஒரு பெண்ணைத் தேடிக் கொள்ளும் முன்பு அவர்கள் இனத்தில் தெரிந்த குடும்பத்துப் பெண்ணாகப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள் அத்தை. சௌமியா உடனே அவன் திருமண விஷயத்திலும் மூக்கை நுழைக்க ஆரம்பித்தாள்.

அவளுடைய தோழி வனிதா என்ற ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து சரவணனைக் காட்டி, “மீட் மை பிரதர்” என்று  அறிமுகப்படுத்தினாள். மிக அழகாக, அதிகப்படியான மேக்அப் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் இருந்தாள் அந்தப் பெண். அத்தைக்கோ அவளைப் பார்த்தவுடனே பிடிக்கவில்லை. சரவணனுக்கு அவள் பேச்சும் தோரணையும் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

இந்த நிலையில் தான் அத்தை, அவளுடைய தூரத்து உறவுப் பெண்ணான கௌரியைக் காட்டினாள். கௌரியின வீட்டில் எல்லோரும் பள்ளி ஆசிரியர்கள். மிகவும் சாதாரண குடும்பம், கௌரியும் ஒரு பட்டதாரி ஆசிரியைதான். அமைதியான ஆடம்பரமில்லாத அழகு, அத்தைக்கும் சரவணனுக்கும் அவளை மிகவும் பிடித்து விட்டது.

சரவணனின் திருமணத்தின்போது மிகவும் அட்டகாசம் செய்தாள் சௌமியா. மணமகனுக்கு அக்கா என்ற முறையில் பெண் வீட்டாரிடம் தேவையில்லாத கோரிக்கைகளை வைத்தாள்.  அதை செய்ய பணம் இல்லையென அவர்கள் கைகளைப் பிசைந்து  நிற்க, எப்படியோ அத்தைக்குத் தெரிந்து அத்தை அந்த செலவுகளைத் தவிர்த்தாள்.

சௌமியாவின் தவறுகளை பொறுக்க முடியாமல் சரவணனிடமும் கூறி விட்டாள். அவனும் பெண் வீட்டாரிடம் மன்னிப்புக் கேட்டு, அவனாக  ஏதாவது கேட்டால் மட்டும்தான் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அவனுக்கு கௌரியை மிகவும் பிடித்திருப்பதால் அவர்களால் என்ன முடியுமோ அதை மட்டும் செய்தால் போதும் என்றும் தெளிவாகக் கூறிவிட்டு வந்து விட்டான். ஆனால் அவன் கௌரியின் வீட்டில் சொன்னது எதுவும், சௌம்யாவிற்கோ அவன் அத்தைக்கோ தெரியாது.

இதெல்லாம் தெரியாமல் சௌம்யா வழக்கம்போல் கௌரியின் வீட்டிற்குப் போய், “என் தம்பி இன்கம்டேக்ஸ் டிபார்ட்மென்ட்டில் பெரிய வேலையில் இருப்பதால் நீங்கள் அவன் திருமணத்திற்கு ஒரு கார் வரதட்சணையாகத் தர வேண்டும். என் தோழி வனிதாவைத் திருமணம் செய்திருந்தால், கார் பங்களாவோடு வந்திருப்பாள்” என்று அதிகாரமாக சொல்லியிருக்கிறாள்.

சரவணன் ஏற்கெனவே கௌரியை மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறியதோடு, அவனாக ஏதாவது கேட்டால் மட்டும் செய்தால் போதும் என்று கூறியிருந்ததாலும், பெண் வீட்டார் இவள் கூறியது எதையும் கண்டு கொள்ளவில்லை.

ஒரு வழியாக சரவணன்-கௌரி திருமணம் இனிதாக முடிந்தது. மாமியார் வீட்டில் என்னதான் சந்தோஷமாக இருந்தாலும் அம்மா வீட்டில் அவள் வைத்தது தான் சட்டமாக இருக்க வேண்டும் என்று விரும்புவது சில பெண்களின் இயல்பு.  அந்த வகையைச் சேர்ந்தவள் தான் சௌம்யா. அவள் கணவனுக்கே அவளின் அந்தக் குணம் பிடிக்கவில்லை.

“நம் வீட்டில் நீ எப்படி சுதந்திரமாய் சந்தோஷமாய் இருக்கிறாயோ, அப்படி கௌரியும் இருக்கட்டுமே. நீ ஏன் அடிக்கடி அவர்கள் விஷயத்தில் தலையிடுகிறாய்? கடைசியில் சரவணனே உன்னை வெறுக்கும்படி நடந்து கொள்ளாதே?” என்றும் போதித்தான்.

‘கழுதைக்கு உபதேசம் காதில் ஓதினாலும் அவயக் குரலன்றி அங்கொன்றும் ஏறாது‘ என்ற பழமொழிக்கேற்ப, சௌம்யாவிற்கு யாருடைய உபதேசமும் ஏறவில்லை. அடிக்கடி சரவணன் வீட்டிற்கு வந்து கௌரியிடம் ஏதாவது ஒரு குறையைக் கண்டுபிடித்து அதை ஊதிப் பெரியதாக்கி சரவணனுக்கும் கௌரிக்குமே பெரிய தகராறை உருவாக்கி விடுவாள்.

சரவணன் சில நேரங்களில் சௌம்யாவின் பேச்சைக் கேட்டு கௌரியிடம் சண்டை போட்டால் கூட, அத்தை அவனிடம் உண்மையை எடுத்துக் கூறுவாள்.

அதைச் தொடர்ந்து, “சின்ன வயதில் இருந்தே அக்கா சொல்படி நடந்து, இப்போதும் கண்மூடித்தனமாக அப்படியே நம்பி விடுகிறேன். என்னை மன்னித்து விடு கௌரி, நான் உன்னை மிகவும் காயப்படுத்தி விட்டேன்” என்று மன்னிப்பு கேட்பான் சரவணன். இதைப்போல் மன்னிப்பு கேட்கும் படலம் பலமுறை நடந்திருக்கிறது. 

அப்படித்தான் ஒருமுறை சௌம்யாவால் பெரிய சண்டையாகி, சரவணன் கௌரியிடம் கையை நீட்டி விட்டான். கௌரி என்னதான் ஏழை வீட்டுப் பெண் என்றாலும், அவளுக்கும் சுயமரியாதை உண்டல்லவா? படித்து ஆசிரியையாக பணி புரிபவள் தானே? கோபம் அதிகமாகி, வழக்கம் போல் எல்லாப் பெண்களும் போவது போல் அம்மா வீட்டிற்குக் கிளம்பி விட்டாள்.

அத்தையும் சரவணனும் மாறி மாறித் தடுத்தும் கௌரி கேட்கும் நிலையில் இல்லை. கோபத்தில் அவள் கண்கள் சிவந்திருந்தன. உதடுகள் துடித்தன, மூக்கு சுருங்கி விரிந்தது. அவ்வளவு அடக்க முடியாத கோபம். அவள் கோபத்தைப் பார்த்து சரவணனே பயந்து விட்டான்.

சௌம்யா வழக்கமாக மற்றவர்கள் உணர்ச்சியை மதிக்கமாட்டாள், முதுகிற்குப் பின்னால் கேலி வேறு செய்வாள். ஆனால் அவளே  கௌரியின் கோபத்தைப் பார்த்து பயந்து விட்டாள். இருந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு, அவளால் என்ன செய்ய முடியும் என நினைத்தாள்.

கண்ணகி போல் வசனம் பேசுவாள். டீச்சர் இல்லையா, அதனால் பிள்ளைகளுக்குப் பாடம் எடுப்பது போல் எடுத்து விட்டுப் போகிறாள் என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள். 

பிறந்த வீட்டில் செய்ய வேண்டிய கலகங்களைச் சிறப்பாக செய்து விட்டு கணவன் வீட்டிற்கு சென்றாள் சௌம்யா. இவள் உள்ளே போகும்போது, கௌரி சௌமியாவின் வீட்டில் இருந்து வெளியேறுவதை பார்த்து திடுக்கிட்டாள். கௌரியின் கண்கள் அக்கினி போல் சிவந்திருக்க, உதடுகளில் ஓர் ஏளனப் புன்னகை. அப்போதே சௌமியாவிற்கு லேசாக கலக்கமாகத் தான் இருந்தது. 

வீட்டில் நுழைந்தவுடன் கணவன் சேகரின் விசுவரூபம் தெரிந்தது.  கௌரி சேகரிடம் தங்கை என்ற முறையில் அன்புடன் பழகி வந்ததால், சௌமியாவால் அவள் வீட்டில் நடக்கும் தகராறுகளையும், அவளால் கௌரிக்கும், சரவணனுக்கும் ஏற்படும் பிரச்சினைகளையும் ஆத்திரம் தீர சொல்லி விட்டு,  “அண்ணா, நீங்கள் உங்கள் மனைவியை உங்கள் திட்டத்தில் வைத்தால் தான் நான் என் கணவருடன் சந்தோஷமாக வாழ முடியும். நான் இப்போது என் அம்மா வீட்டிற்குத்தான் போகிறேன். சௌமியா எங்கள் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டாள் என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் தான் நான் என் கணவர் வீட்டிற்கு வருவேன். எங்கள் வாழ்க்கை உங்கள் கையில்” என்று கூறிவிட்டு கிளம்பினாள்.

சௌமியா இதெல்லாம் எதிர்பார்க்கவில்லை ஆதலால், வழக்கம் போல் மகாராணி போல் அதிகாரமாக உள்ளே நுழைந்தாள்.  சிறிது நேரம் அவளிடம் விசாரணை செய்துவிட்டு, எதிர்பார்க்காத நேரத்தில் அவள் கன்னத்தில் இடியாய் அறைந்தான் சேகர்.

“உன்னால் தான் கௌரி இப்போது சரவணனைப் பிரிந்து அவள் அம்மா வீட்டிற்குப் போகிறாள். எப்போது ஒரு குடும்பத்தில் கலகம் செய்து கணவன் மனைவியைப் பிரித்தாயோ, இனிமேல் நீ இங்கு இருக்கக் கூடாது. கௌரி எப்போது சரவணனிடம் வந்து சேருகிறாளோ, அப்போது தான் நீ இங்கு வரமுடியும்” என்று சௌமியாவை வீட்டை விட்டு விரட்டினான்.

சௌமியா பிறந்த வீட்டிற்கு வந்து ஒரு வாரத்தில், அத்தை சில தெரிந்த குடும்பங்களோடு சேர்ந்து காசிக்குப் பயணமானாள். இதுவரை இவர்களைப் பிரிந்து அவள் எங்குமே போனதில்லை, அதனால் வடக்கே சில முக்கியமான ஊர்களையும் பார்த்து விட்டு வர ஒருமாதம் ஆகும்  என்று கூறிவிட்டுக் கிளம்பி விட்டாள்.

சரவணனுக்குத் தான் அத்தை இல்லாமல் இருப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. அவள் வழிச்செலவிற்கு சில ஆயிரங்கள் அவள் வங்கிக்கணக்கில் போட்டு ஏ.டி.எம் கார்டையும் கொடுத்து அனுப்பினான்.

வேலை செய்ய அத்தை இல்லாத அந்த வீட்டில், சரவணனுக்கு தேவையானதையும் செய்து, இவளும் வேலைக்குப் போவது என்பது மிகவும் கடினமாக இருந்தது சௌமியாவிற்கு.

சரவணனுக்கோ, எதையும் பகிர்ந்து கொள்ள கௌரி இல்லாததும், இவனுடைய தேவைகளை நிறைவேற்றும் அத்தை இல்லாததும் எரிச்சலைக் கிளப்பியது. பலமுறை அழைத்தும், சௌமியா இருக்கும் அந்த வீட்டிற்கு வர மறுத்து விட்டாள் கௌரி. அதனால் சரவணன், சேகரையும் அழைத்துச் சென்று கௌரியிடம் சமாதானம் பேசினான்.

ஆனால் கௌரி, “சௌமியாவே வந்து இனிமேல் எங்கள் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்தால் தான் வர முடியும்” என்று திட்டவட்டமாகக் கூறினாள்.

என்ன செய்வதென்று தெரியாமல்  சரவணன் மீண்டும் சேகரின் உதவியை நாடினான். இம்முறை மூவரும் கௌரியின் வீட்டிற்குச் சென்றனர்.

“என்னை மன்னித்து விடு கௌரி. இனிமேல் நான் உங்கள் விஷயத்தில் தலையிட மாட்டேன், இது சத்தியம். நீங்களும் சரவணனும் ஒற்றுமையாக இருந்தால் அதுவே எங்களுக்குப் போதும்” என கண் கலங்க மன்னிப்பு கோரினாள் சௌமியா.

 “தங்கச்சி,  இனிமேல் சௌமியா உன் வீட்டிற்கு வரமாட்டாள். அதனால் நீ உன் வீட்டிற்கு வாம்மா” என உறுதியளித்தான் சேகர்.

அதுவரை இறுகிய பாறையாக இருந்த கௌரி, அப்போதுதான் சிரித்தாள்.

“அண்ணா, நான் சௌமியாவை எங்கள் வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லவில்லை. வந்தால் கணவன் மனைவி இருவருமாக வாருங்கள், அப்போது தான் இல்லறம் நல்லறமாக இருக்கும். யாரும் வரம்பு மீறி நடக்க மாட்டார்கள்” என்றாள் கௌரி.

“அடடே! இதுவும் நல்ல ஐடியா தான். இருவருமாக வந்தால் சௌமியா அங்கே டேரா போடமாட்டாள்” என்ற சேகர், கலகலவென்று சிரித்தான்.

எழுத்தாளர் பானுமதி பார்த்தசாரதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்      

(முற்றும்)           

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சின்னக் கண்ணன் அழைக்கிறான் (சிறுகதை) – சுஶ்ரீ

    கலப்படமில்லாத சிரிப்பு! (சிறுகதை) – இரஜகை நிலவன்