in ,

காலமிது காலமிது (சிறுகதை) – சுஶ்ரீ

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

வெண்ணிலாக்கு ராத்திரி பூரா தூக்கமே வரலை. ஏனா? முதமுத ஒரு பெரிய கல்லூரில காலடி எடுத்து வைக்கப் போறாளே! நாளைக்கு முதல் நாளாச்சே, ஆர்வமாய் சரியாக தூக்கம் இல்லாமல் தன் அறையில் போர்வையில் முடங்கி மொபைலில் மூழ்கி இருந்தாள். “சீ சில ரீல்ஸ் ரொம்ப பச்சையா இருக்குப்பா, பாக்கவே கூடாது இதெல்லாம், ஆனாலும் பாய்ஸ், கேர்ல்ஸ் இப்படியெல்லாமா பண்ணுவாங்க.” யோசித்துக் கொண்டே தூங்கிப் போனாள்.

ஒரு 200 பக்க நோட் மட்டும் எடுத்துண்டு புறப்பட்டா வெண்ணிலா, காலேஜ் பஸ் சூப்பரா தான் இருந்தது. டிரைவர் தன் லிஸ்டை சரி பாத்து இவளை ஏத்திண்டான். பஸ்ல அதிகம் ஸ்டூடன்ட்ஸ் இல்லை இருந்த 12 பேரும் ‘ஹாய்’ சொல்லி வரவேற்பு கொடுத்தார்கள்.

“ஹாய் நான் வெண்ணிலா நியூ அட்மிஷன்” சொல்லிட்டு ஒரு காலி சீட்டில் அமர்ந்தாள். பின் சீட்டில் இருந்த ஒரு பெண் இவள் தோளைத் தட்டி, ”ஹாய் வெண்ணிலா, நான் நந்திதா என் பக்கத்துல வாயேன் பேசிட்டே போகலாம்”

முதல்நாள் இண்டக்‌ஷன், கல்லூரியை சுத்திப் பாக்கறது, சீனியர் மாணவர்களின் ஸ்கேல் மாடல் எக்சிபிட்ஸ், கேண்டீன், ரெஸ்ட் ரூம் வரை ஒரு ரவுண்ட், ஜாலியாப் போச்சு.

வெண்ணிலாவோட அம்மா ரம்யா அன்னிக்கு ராத்திரி, கணவன் ரமேஷுக்கு பால் கலந்து டம்ளரில் கொண்டு வந்து கொடுத்து விட்டு அருகில் அமர்ந்தாள். அவள் கையை எடுத்து தன் கைகளில் அடக்கிக் கொண்டார் ரமேஷ்.

“குட்டி பெரியவளாயிட்டா, கொஞ்சம் ஜாக்ரதையா நடந்துக்கங்க. இன்னிக்கே வழக்கம் போல அவ கலகலப்பாயில்லை, எதையோ தொலைச்ச மாதிரி ஏதோ எண்ணங்கள்ல மூழ்கி இருந்தா. சரியா சாப்பிடக் கூட இல்லை.”

“ஆமாம் இந்த வயசுல குழந்தைகள் கொஞ்சம் மெதுவா பேரண்ட்சை விட்டு விலகிதான் இருப்பாங்க, நாமளும் புரிஞ்சு நடக்கணும்.”

“அய்யே ஆளைப் பாரு, எப்பப் பாத்தாலும் காணாத்தை கண்ட மாதிரி இந்த வயசுலயும் ரம்மு, ரம்மினு சுத்தி சுத்தி வரேள், ஆபீசுக்கு போறதுக்கு முன்னே அந்தக் கொஞ்சல், வெக்கமில்லை வளந்த குழந்தைக்கு முன்னால இப்படி நடந்துக்கறதுக்கு”

“சரி வா இதுல பால் நிறைய இருக்கு, நீ கொஞ்சம் எடுத்துக்கோ”

“ரொம்பதான் கரிசனம் இன்னிக்கு” சிரித்துக் கொண்டே கட்டிலில் அமர்ந்தாள் ரம்யா.

சரி இனி அவர்கள் அந்தரங்கத்தில் நாம் தலையிட வேண்டாம்.

சீக்கிரமே ஏன் முழிப்பு வந்தது தெரியலை. ஸ்கூல் போறப்ப எல்லாம் அம்மா உலுக்கி எழுப்பணும். போம்மா நான் இன்னும் கொஞ்சம் தூங்கணும்னு போர்வையில் புகுந்து கொள்வாள். தன் மொபைல் ஃபோன் எடுத்துப் பார்த்தாள். அடேயப்பாடி இந்த காலேஜ் சேந்தவுடன்தான் எத்தனை  நட்புக்கள்.

எழுந்து பிரஷ் செய்து கொண்டே கண்ணாடியில் ‘ஈ’னு தன்னைப் பார்த்துக் கொண்டாள். வாய் கொப்பளித்து விரல்களால் தலை முடியை சரி செய்து கொண்டு கண்ணாடியைப் பார்த்தாள். மூக்கு ரொம்ப சிறுசா இருக்கோ, கன்னங்கள் ஓகே புசுபுசுனு மல்கோவா மாம்பழம் போல, சிரிக்கறப்ப விழும் சின்னக் குழி இதெல்லாம் அழகா என்ன, தாடையில் ஒரு கரு மச்சம் (நந்திதா சொல்றா இந்த உன் மச்சம் சிவந்த முகத்துக்கு மேலும் அழகு சேக்குதுடினு) இந்த தலைமுடிதான் அளவுக்கு மேல நீளம் வெட்டிக்கலாம்னா அம்மா திட்றா.

“அம்மா காபி”னு கிச்சனுக்குள் நுழைந்தாள் குட்டி.

“என்னடி குட்டி இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம்” அவசர அவசரமாய் தன் ஆடையை திருத்திக் கொண்டாள். தன் முகம் ஏதும் காட்டிக்கொடுத்து விடாதே என பயத்துடன் வாஷ்பேசினில் முகத்தைக் கழுவிக் கொண்டு மகளை ஏறெடுத்தாள்.

“இன்னிக்கு சிடில உள்ள, பழைய ஆர்கிடெக்சுரல் பில்டிங்ஸ் பாக்கப் போறோம்.”

“யார் கூடப் போறே”

“காலேஜ்ல எல்லா பசங்க பொண்ணுங்க கூடவும்தான், ஏன் இப்படி கேக்கறே”

“சரி,ஏதோ கேட்டேன்,விடேன்.இரு காபி கலக்கறேன்” குட்டி பாக்கறதுக்குள்ளே தன் ரவிக்கையை சரி செய்து கொண்டாள்.

சென்னையில் உள்ள புராதனக் கட்டிடங்களின் அழகான கலை நயம் மிகுந்த அமைப்புகளை புரொபசர் ஆனந்த் தன் மாணவ மாணவிகளுக்கு காட்டி விளக்கிக் கொண்டிருந்தார். இந்தோ பிரிட்டிஷ் கல்ச்சரில் வந்த கட்டிடங்கள், இந்தோ பார்சனிக் பாணியில் கட்டப்பட்ட புகழ் பெற்ற கட்டிடங்கள் என தரம் பிரித்து விளக்கினார்.

“ஆமாம் எத்தனை தடவை பாத்ததுதானே புதுசா என்ன இருக்கு,வாடா நாம “டெய்ரி டே”ல போய் புதுசா ‘ஹனிடே’னு ஒரு சூப்பர் ஐஸ்கிரீம் லான்ச் பண்ணியிருக்காங்களாம், நழுவிப் போயிடலாம்” ஒரு ஜோடி நைசா விலகி எக்மோர் ஸ்டேஷனுக்கு எதிரில் கென்னட் லேனுக்குள் நுழைந்தது.

வெண்ணிலா அவர்களை பாத்து வியந்தாள் என்ன தைரியம் இவங்களுக்குனு. பக்கத்தில் தன்னை யாரோ குறுகுறுனு பார்ப்பதை உணர்ந்தாள். தன் பேட்ச் ரகுதான். ”என்ன, வெண்ணிலா நாமளும்ஒரு க்விக் பைட்கு போலாமா?”

“இல்லை ஆனந்த் சார், அழகா ஸ்ட்ரக்ச்சர் பத்தி விளக்கறார் அது நல்லா இருக்கு கேக்கணும்.”

“ஹே..இதெல்லாம் கூகிள்ல படிச்சு சொல்றார்,நாமளே பாத்துக்கலாம் வா நீ, இங்கே சூப்பரா பன் பட்டர் ஜாம்,மசாலா டீ கிடைக்கும்”

தயக்கத்தோட அவனுடன் நழுவினாள் வெண்ணிலா. அவள் கையைப் பற்றிக் கொண்டு அந்த பரபரப்பான தெருவைக் கடந்தான் ரகு. டக்னு ஒரு ஆட்டோவை நிறுத்தி வெண்ணிலாவை தள்ளி ஏறச் செய்து தானும் ஏறிக் கொண்டான். “ஏய் என்னடா பன், டீனு சொல்லிட்டு ரிக்‌ஷால ஏத்தறே”

ரகு, ”பக்கத்துலதான் மவுன்ட் ரோட் எல்.ஐ.சி. க்கு எதுத்தாப்பல ஒரு ஃபேமஸ் கடை.ஒரு தடவை பன் பட்டர் ஜாம் அங்கே சாப்டுப் பாரு,மசாலா டீயும் கூட”சொல்லிட்டே அவள் தோளில் கையைப் போட்டுண்டான். முதலில் கொஞ்சம் நெளிந்தாலும் அவன் அருகாமை வெண்ணிலாவுக்குப் பிடித்திருந்ததால்,ஆட்சேபனை அதிகம் செய்யவில்லை, ஆனால் அத்து மீற அனுமதிக்கலை.

மவுன்ட் ரோட் போஸ்ட்ஆபீஸ் தாண்டி அந்தப் பள்ளிவாசலுக்கு அருகே புகாரி ஹோட்டல் பக்கம் ரிக்‌ஷா நின்றது.”அய்யோ இது நான்வெஜ் ஹோட்டல், நான் வர மாட்டேன்பா” வெண்ணிலா பம்மினாள்.

“அங்கே யாரு போறாங்க, பக்கத்துல பாரு கூட்டம் அம்முது, அந்தக் கடைதான் பன்பட்டருக்கும், மசாலா டீக்கும் ஃபேமஸ்.”

“இரு நான் வாங்கிட்டு வரேன்.”

வெண்ணிலா கொஞ்சம் பயத்தோடயே பிளாட்பாரத்தில் போடப் பட்டிருந்த ஒரு வட்ட டேபிளுக்கு அருகே நின்றாள்.

ரெண்டு பிளாஸ்டிக் பிளேட்ல பன் பட்டர் ஜாமோட வந்தான் ரகு.அதை டேபிள்ல வச்சிட்டு, ஒரு பிளேட்ல இருந்து ஒரு விள்ளல் எடுத்து வெண்ணிலாவுக்கு ஊட்ட வந்தான்.

“ஐய்யே இதென்ன நடு ரோட்ல,நான் என்ன சின்ன பாப்பாவா ஊட்டி விட, எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க”

“யாரும் பாக்கலை, சும்மா வாயைத் திற, வெண்ணிலாவின் செப்பு வாயில், சிவந்த ஜாமும், வெண்ணையும் வழியும் அந்த பன்னை திணிக்காத குறையா ஊட்டி விட்டான்” அவள் மறுத்துக் கொண்டே லேசா வாய் திறந்து வெட்கத்துடன் ஏற்றுக் கொண்டாள். புறங்கையால் அழகாய் வாயைத் துடைத்துக் கொண்டு, ”போதும் ரகு நானே சாப்பிடுவேன், என் அம்மா கூட இப்படி ஊட்ட மாட்டாங்க”

ஒரு மணி நேரத்தில் கூச்சம்லாம் போய் வெண்ணிலா ரகுவுடன் லயித்துப் பழகி விட்டாள்.

நாளாக நாளாக இந்த நட்பு இறுகியது மெரினா பீச்ல உக்காந்து கூச்சமே இல்லாமல் தொட்டுப் பழக வைத்தது. வெண்ணிலாவுக்கு புரியாத விஷயங்கள் புரியத் தொடங்கியது. கிட்டத்தட்ட ரெண்டு வருஷ ஆர்கிடெக்சர் படிப்புல, ஆண் பெண் அருகாமை சுகம் என்ன என்பது வெண்ணிலாவுக்குப் புரிந்தது.

ஃபோன்ல ரகு, ”ஏய் என்னடி ரொம்ப பிகு பண்றே,என்னவோ ஒண்ணும் தெரியாத பாப்பாவாட்டம்”

“ரகு, இது பல தடவை சொன்னதுதான் உனக்கு, ஓசியா உனக்கு ஃபிரண்டோட கெஸ்ட் ஹவுஸ் ஓ.எம.ஆர்ல கிடைச்சா நானும் உன் கூட வந்து இருக்கணும்னு அவசியமில்லை. எவளுக்கு இதுல இஷ்டம் இருக்கோ அவளைக் கூட்டிட்டுப் போ. இனிமே இது விஷயமா என் கூடப் பேசாதே.”

“என்னவோ பெரிய பத்தினித் தங்கம் மாதிரி பேசறே, எல்லாம் பாத்தவதானே நீ”

“ஷட் அப் யூ ராஸ்கல், இனிமே என் கூட பேச வேண்டாம்.இது மூணாவது தடவை இப்படி நீ பேசறது. இனிமே நமக்குள்ள ஒத்து வராது.லாஸ்ட் அண்ட் ஃபைனல் பிரேக்அப், கெட் லாஸ்ட் ஃபிரம் மை லைஃப்.”

“என்ன இப்ப புதுசா யாரும் கிடைச்சிட்டானா? ராகேஷா? போ, ஃபைஸ்டார் ஹோட்டல்ல ரூம் போடுவான்”

இந்த பிரேக்அப் எப்பவோ வரவேண்டியது. இந்த பசங்களுக்கு தேவை அது ஒண்ணு தான், ஆரம்பத்துல எப்படி பெரிய யோக்யன் மாதிரி பேசினான் இந்த ரகு.நாளாக நாளாக சுயரூபத்தைக் காட்டிட்டானே. எனக்கு மட்டும் வேற ஹேண்ட்சம் பையன் கிடைக்க மாட்டானா என்ன? உண்மைல அவன் சொன்ன ராகேஷ் அப்ரோச்தான் பண்றான்.

காலேஜ் அடுத்த நாள் போறப்ப கொஞ்சம் வலிக்கதான் செஞ்சது வெண்ணிலாக்கு, கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா பழகினவன் கிட்ட பிரேக் அப் பண்ணினது. ஆனா கொஞ்சம் ரிலீஃப் கூடனு சொல்லலாம்.  ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துட்டு சொந்தப் பொண்டாட்டினு நினைச்சு அதிகாரம் பண்ணினா யாருக்குப் பிடிக்கும்.படிச்சு முடிக்கறதுக்குள்ளே லிவ்-இன் டுகேதேர் லைஃப்தான் எனக்குப் பிடிக்கும்னான், எனக்கும் அதுல தப்பு தெரியலைன்னா கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்கறான்,கை வேற கண்ட இடத்துல அத்து மீறுது. வெண்ணிலாக்கு பயம் வந்தது எக்குத் தப்பா ஏதாவது விஜயாவுக்கு ஆன மாதிரி ஆயிடுச்சுன்னா என்ன பண்றதுனு.

எப்பவும் கலகலப்பான விஜயா அன்னிக்கு முகமெல்லாம் கறுத்து ஒரு மாதிரியா உக்காந்திருக்கா, கண்ணு ரெண்டும் கலங்கியிருக்கு. வெண்ணிலா அவளை கவனித்து விட்டாள். பக்கத்துல போய் “என்னடி விஜ் தனிமை”

“ப்ச், ஒண்ணுமில்லை”

“பரவாயில்லை என்கிட்ட சொல்லு”

“செத்துடலாம்னு இருக்கு, உடைப்பெடுத்தது கண்கள்”

“ஏய் லூசு வா வெளில என் கூட “

இருவரும் கல்லூரி வாசலை நோக்கி நடந்தார்கள்.

“சரி சொல்லு விவேக்கோட பிரேக்அப் ஆனதுக்கா இத்தனை”

“வெறும் பிரேக்அப்னா பரவாயில்லை இப்ப ரெண்டு மாசம் தள்ளிப் போச்சு, என்ன பண்றதுனு தெரியலை”

“அடிப்பாவி சேஃப்டி மெஷர்ஸ் எடுத்துக்கணும்னு தெரியாதா”

“எப்படியோ தவறிப் போச்சு, அந்தப் படுபாவி விவேக் கலைச்சுக்கோ என்னவோ பண்ணுனு போயிட்டான்”

“நாளைக்கு முதல் காரியமா சவிதா கிளினிக் போ ஒரு 10 நிமிஷம்தான் கிளீனா வந்துடலாம், 10 கே மட்டும் ரெடி பண்ணிக்கோ. லேட் பண்ணாதே”

“நீ அங்கே எப்பவாவது பண்ணியிருக்கயா?”

“சீ அதெல்லாம் இல்லை, எப்படியோ தெரியும் போய்ப் பாரு அங்கே அனாவசிய கேள்விகள் கேக்க மாட்டாங்க,பணம் கொடுத்தா போறும் திரும்ப சுத்தமா கன்னிப் பெண் ஆயிடுவே”

“ஆனா பத்தாயிரம் ரூபாய்க்கு எங்கேடி போவேன்”

“ஏன் உன் பாய் ஃபிரண்டுகிட்டயே கேளேன், அவனாலதானே இந்த கஷ்டம்”

“வேண்டாம் இப்ப அவனோட பேசறது பாக்கறது இல்லையே”

அப்ப, ”ஹை கேர்ல்ஸ் வாட்ஸ் சோ சீக்ரெட்”னு கேட்டுட்டே அங்கே வந்தான் ராகேஷ் அவன் கண் பூரா வெண்ணிலா மேல.

“நத்திங் உன் வேலையைப் பாத்துட்டுப் போ”

“ஐ ஸா ரகு வித் ஃபர்ஸ்ட் இயர் ஷீலு,வாட் ஹேப்பன்ட்? வெண், யு ஆர் நாட் ஹிஸ் கேர்ல் எனிமோர்?”

“ஏய் என்ன லண்டன்ல இருந்து வந்திருக்கயா? தமிழ் வராதா”

“சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லு, ரகுவோட ஜி.எஃப் தானே நீ”

“நோ, நாட் எனிமோர்” சொல்லிட்டு நாக்கைக் கடிச்சிண்டா அவனைச் சொல்லிட்டு நாம இங்லீஷுக்கு போயிட்டோமேனு.

“குட்குட் அப்ப வேகன்சி இருக்கு, அப்ளை பண்ணலாம்”

“அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம், முதல்ல விஜ்க்கு கொஞ்சம் உதவி தேவை அதைப் பண்ண முடியுமா பாரு”

“ரியல்லி? டெல் மி விஜயா, ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ”

விஜயா ஒண்ணும் பேசாம தலையை குனிந்து கொண்டாள்.

வெண்ணிலா, ”பெரிசா ஒண்ணுமில்லை கொஞ்சம் பணம் தேவை”

ராகேஷ், “ஃபைவ் ஹன்ட்ரட் வில் டூ?”

“இல்லை கொஞ்சம் பெரிய அமவுன்ட், சரி விடு நாங்க பாத்துக்கறோம்”

“சொல்லு வெண்ணிலா ஐ வில் ஹெல்ப் யூ அவுட் எவ்வளவு வேணும்”

“டென் தவுசண்ட் முடியுமா? முடியாது இல்லை, நீ உன் வேலையைப் பாத்துட்டுப் போ,நாங்க பாத்துக்கறோம்”

“எதுக்கு இவ்வளவு பெரிய அமவுன்ட்னு தெரிஞ்சிக்கலாமா”

“ம்… விஜியோட நாய்க் குட்டியோட பிரசவகால செலவுக்கு, முடிஞ்சா கொடுப்பயா கேள்வியெல்லாம் கேட்டுட்டு”

ராகேஷ், ”வெய்ட், ஐ வில் டிரை” தன் ஃபோனை எடுத்து ஏதோ பாத்தான். உடனே அவனோட அப்பாக்கு ஃபோன் பண்ணினான்.

”டாட் ஜிபேல ஒரு 10 k உடனே அனுப்புங்க அவசரம்”

கொஞ்சம் இடைவெளி, ”இல்லை டாட் காலேஜ்ல இப்ப கட்டணும், ஓகே தேங்க் யூ”

தன் ஃபோனை திரும்ப நோண்டினான், ஒரு டிங் சத்தத்தோட அவன் பேங்க் கணக்குல பத்தாயிரம்  சேந்தது.

“விஜி உன் ஜி.பே. நம்பர் கொடு”

அடுத்த அஞ்சு நிமிஷத்துல பத்தாயிரம், விஜி கணக்குல. இதையெல்லாம் கவனித்த வெண்ணிலா சட்னு ராகேஷை லேசா ஹக் பண்ணி, ”தேங்ஸ்டா, மறக்க மாட்டோம் உன் உதவியை”

“அப்ப மறக்காம காஃபி டேல இன்னிக்கு ஈவ்னிங் காஃபி குடிக்க, என் கூட வருவயா”

“எஸ் ரெண்டு பேருமே வரோம்”

“விஜிக்கு வேற முக்கியமான வேலை இருக்காம்,இல்ல விஜி?”

கலகலனு ரொம்ப நாளைக்கப்பறம் சிரிச்ச விஜி, ”ஆமாம் நான் இடைஞ்சலா இருக்க மாட்டேன்” சொல்லிண்டே வெண்ணிலாவின் கையை கிள்ளி மெதுவே முணுமுணுத்தாள். ”ஜாக்கிரதை பையன் ரொம்ப வேகத்துல இருக்கான் நீ ஒரு 10K தயாரா வச்சுக்கோ”

வெண்ணிலா காலேஜ் டைம் முடிஞ்சு பஸ்ல ஏற வரப்ப, சரியா தன் ஹோண்டா பைக்கோட ராக்கேஷ் நின்னிட்டிருந்தான். “ஹேய், வெண் கம் ஆன், லெட்ஸ் கோ”

வெண்ணிலாக்கு லேசா தயக்கம் பஸ்க்குள்ளே இருந்து ஒரு ஜோடிக் கண்கள் இவளையே பாத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. வேற யாரு ரகுதான். உடனே மனம் இறுகி, ”சரி வா போகலாம்”னு  ராக்கேஷோட பைக்ல உக்காந்து அவன் தோளில் கை போட்டுக் கொண்டாள்.

நினைச்ச அளவு ராக்கேஷ் மோசமா நடக்கலை, ஓரளவு டீசன்டாதான் இருந்தான். வேணும்னு பள்ளத்துல பைக்கை இறக்கி ஏத்தலை, ஸ்பீட் பிரேக்கர்ல கூட ஸ்லோ பண்ணி ஓட்டினான். அவளுக்கு ராக்கேஷ் மேல மதிப்பு உயர்ந்தது.

காபி ஷாப்ல கூட, ஆர்கிடெக்சர் பேசறான், தான் பாரீஸ் போய் மேல்படிப்பு படிக்கப் போறதை சொல்றான். நீ என்ன பண்ணப் போறேனு கேக்கறான். ”எல்லா கேர்ல்ஸ் போல மேரேஜ், குழந்தை குட்டிகளா”

“அதெல்லாம் ஒண்ணும் டிசைட் பண்ணலை, இப்போதைக்கு பி.ஆர்க், ஆனா சேரறதுக்கு முன்னால இருந்த ஆர்வம் ஆர்கிடெக்சர்ல இப்ப இல்லை. ஏன்னு தெரியலை”

“தப்பா நினைக்காதே ரகுவோட பிரேக்அப் ஆனதுல அப்செட் ஆயிட்டயா”

“சே அவன் பேரைக் கூட எடுக்காதே இப்ப”

“அப்ப என் பெண்டிங் அப்ளிகேஷன் அப்ரூவ் ஆயிடுச்சா”

ஒரு நிமிஷம் அவனைத் திரும்பிப் பாத்த வெண்ணிலா, ”லூசு இல்லைன்னா பைக்ல உன் கூட வருவேனாடா?” அவன் கையை எடுத்து உள்ளங்கையில் மிருதுவாக முத்தமிட்டாள்.

“தேங்க் யூ டியர், ஐ லைக் இட்”

குட்டி டிகிரி முடிச்சு இப்ப ஒரு ஃபேமஸ் ஆர்கிடெக்ட்கிட்ட வேலைக்குப் போறா. முத மாதிரி முகத்துல இருந்த உற்சாகம் போயிடுச்சு. ஏனா, அதான் ராக்கேஷ் பாரீஸ் போயிட்டானே.

பாய்ஃபிரண்டுக்கும் நமக்கும் ராசி இல்லைனு வெண்ணிலாவுக்கு துக்கம் பொங்கும் அப்பப்ப. அந்த சனியன் பாரீஸ்ல இருந்து ஃபோன் கூட பண்றதில்லை, எவளவாது பிரென்ச்காரி வெள்ளை சொள்ளையா பிடிச்சிருப்பான். கிட்டத்தட்ட ஆறு மாசம் ஆச்சு அவனை லேசா மனசுல இருந்து இறக்க. ஆனாலுமே கஷ்டமாதான் இருந்தது. சே இனிமே இந்த ஆம்பளை பசங்களோட சாவகாசமே வேண்டாம்னு குட்டி முடிவுக்கு வந்த நேரம்தான் ரம்யா, ஆனந்தைப் பத்தி பேசினாள்.

வெள்ளிக்கிழமை பொண்ணுக்கு தலைக்கு எண்ணை வைக்கறப்ப, “மான்செஸ்டர் தெரியுமோ குட்டி உனக்கு”

“அதென்ன திடீர்னு பூகோளம் பாடம் எடுக்கறே, இங்கிலாண்டோட தொழில் நகரம் மான்செஸ்டர்”

“உனக்கு வெளிநாடெல்லாம் பாக்கணும்னு ஆசை இல்லையாடி குட்டி”

“இருந்தா? நீ அனுப்பி வைக்கப் போறயா என்ன”

“ஆமாம், நானும் உன் அப்பாவும் அதைப் பத்திதான் யோசிக்கறோம்”

“என்னம்மா பெருசுங்க ரெண்டும் சேந்து என்ன சதித்திட்டம் தீட்டறீங்க, பயமா இருக்கே”

இப்ப ரமேஷும் சேந்துண்டார், “அப்படி இல்லைடா குட்டி உன் அத்தை பையன் யு.கே.ல இருக்கானே அவன் கொஞ்ச நாள் முன்ன பேசினான்.”

“ஆனந்த் அத்தானா? அவன் செம போர் பீஸ் ஆச்சே, முகத்தைப் பாக்கவே வெக்கப் படுவானே”

“ஆமாம்மா நல்ல பையன்மா, உனக்கு ஓகேன்னா அவனுக்கு முடிச்சு வச்சுடலாம்னு பாக்கறோம்”

“நோ வே, பேசவே தெரியாது அவனுக்கு, அவன் கூட என் லைஃப் பூராவமா.வேணும்னா….. சரி ஒண்ணுமில்லை”

“சொல்லுடா குட்டி மனசுல உள்ளதை, நீ சரின்னு சொன்னாதான் அவனுக்கு கன்ஃபர்ம் பண்ணுவோம், இல்லைன்னா அவனுக்கு வேற பொண்ணு பாக்கணும்”

“ஏன்ப்பா எனக்கு மாப்பிள்ளை தேடறீங்களா, இல்லை அவனுக்கு பொண்ணு தேடறீங்களா?”

“ரெண்டும் ஒண்ணா அமையணும்னுதான் எனக்கும் உன் அம்மாவுக்கும் ஆசை.”

“அவன் எந்த ஊர்ல இருக்கான்?”

“மான்செஸ்டர்”

“இரு” மொபைல்ல ஏதோ நோண்டினா. “ஓகே டாட், மாம் எனக்கு ஓகே,இப்பவே ரெடி மண்டபம் பாத்தாச்சா? ரெஜிஸ்டர் மேரேஜா”

ரமேஷ், ரம்யா ரெண்டு பேருக்கும் சொல்ல முடியாத அளவு சந்தோஷம்.

ரமேஷ், ”இப்ப இங்லாண்ட்ல நேரம் என்ன இருக்கும், மாப்பிள்ளைக்கு ஃபோன் பண்றேன்” பரபரப்பானார். ரம்யா பொண்ணுக்கு கன்னத்தை வழிச்சு திருஷ்டி கழிச்சா.

அடுத்த மாசமே மதுரவாயல் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் கல்யாணம் சுபமா முடிந்தது. 

ஹோட்டல் சென்னை கிராண்ட்ல பார்ட்டி, முதல் இரவு அங்கேயே. “ஆனந்த் மான்செஸ்டர் நல்ல ஊரா? பாரிஸ் அங்கே இருந்து எவ்வளவு தூரம்”

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)               

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பயம் ஒரு பரவசம் (சிறுகதை) – சுஶ்ரீ

    இளமை எனும் இளவேனிற்காலம் (சிறுகதை) – சுஶ்ரீ