எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நம்ம ஃபேவரைட் ஊரு மதுரை. மதுரைல வைகைக்கரையை ஒட்டினாப்பல ஒரு அக்ரகாரத் தெரு, லக்ஷ்மிநாராயணபுர அக்கிரகாரம், அழகான தெரு. போய்யா…. தங்க முலாம் பூசின தெருவானு கேக்கற கொழுப்பு பிடிச்ச ஆளை விட்டுத் தள்ளுங்க.
அங்கே வீடுகள் எப்படி இருக்கும் தெரியுமா? விரல் விட்டு எண்ணறாப்பல நாலஞ்சு தனி வீடுகள் தவிர, மத்ததெல்லாம் நீள நீளமா ஸ்டோர்னு சொல்லப்படற பல குடித்தனங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு ஸ்டோர்லயும் குறைஞ்சது 10 குடித்தனம். குடித்தனம்னா என்ன, முன்னால ஒரு வெராண்டா உள்ளே அதிகம் போனா ரெண்டு ரூம், அதுல ஒண்ணு சமையலறை. இப்படி எதிர் எதுத்தாப்பல, 5 வீடு வலது வரிசை, 5 வீடு இடது வரிசை. கட்டக்கடோசில கிணறு, நாலஞ்சு டாய்லெட், குளியலறை.
மொட்டை மாடி கட்டாயம் உண்டு வெயில் காலத்துல வடாம், வத்தல் காயப் போட வேண்டாமா? கொடி கட்டி துணி உலர்த்த வேண்டாமா, ஆடி மாசம் நியூஸ் பேப்பர்ல பட்டம் செஞ்சு பறக்க விட வேண்டாமா, முக்கியமா மொட்டை மாடி, குடி இருக்கற இளசுகளுக்கு சொர்க்க லோகம். ஓரளவு எப்படினு அனுமானம் வந்திருக்கும்னு நினைக்கறேன்.
சரி சரி கதைக்கு வரேன் .
வெங்கட்ராம அய்யர், அலமேலு தம்பதிகளுக்கு ரெண்டே ரெண்டு பகவானோட பிரசாதம். மூத்தது பங்கஜம், இளசுதான் நம்ம ஹீரோ சின்னக் கண்ணன். பேருதான் சின்னக்கண்ணன், பெரிய வால் பையன். ஸ்டோர்ல எல்லா மாமிகளுக்கும் செல்லக் கண்ணன்.
இவங்க போர்ஷன் இடது கோடில கிணத்தை ஒட்டினது, வெராண்டால தரை பூரா சாக் பீசால கிறுக்கிட்டு இருக்கும் சின்னக் கண்ணனை தண்ணி இறைக்க, துணி துவைக்கப் போற பெண்கள் நின்னு கொஞ்சாம போனது கிடையாது. கொழு கொழுனு புஷ்டியா இருக்கற குழந்தையை யாருக்குதான் பிடிக்காது. கன்னம் ரெண்டும் மாமிகள் முத்தம் கொடுத்தே செவ செவனுதான் இருக்கும்.
இப்படியே குழந்தையா இருந்திருந்தா இந்தக் கதையே இல்லையே!
அக்கா பங்கஜம் அழகா வளந்தா, இவனும் திடமா வளந்தான். அப்பா கோச்சடை பக்கம் ஏதோ ஒரு ரப்பர் கம்பெனில சூப்பர்வைசர், அவர் சத்தமா பேசி யாரும் கேட்டது இல்லை. காலைல 8.30 க்கெல்லாம், ஒரு எவர்சில்வர் டப்பால லன்ச் (முக்காவாசி தயிர்சாதம் தொட்டுக்க மாவடுதான்) எடுத்துட்டு, தன் ஹெர்குலிஸ் சைக்கிளை மாங்கு மாங்குனு மிதிச்சிட்டு ஆபீசுக்கு போவார். திரும்ப வர ஏழு மணி ஆயிடும். ஞாயித்துக்கிழமை லீவுலதான் பாவம், நியூஸ் பேப்பர், குமுதம், ஆனந்தவிகடன் படிக்க நேரம் கிடைக்கும்.
எப்பவாவது குடும்பத்தோட பக்கத்துல இருக்கற கல்பனா தியேட்டர்ல சினிமா, இல்லைன்னா மீனாட்சி அம்மன் கோவில், பழைய சொக்கநாதர் கோவில்னு போவார். ஆபீஸ் போற வழிலதான் அனுமார் கோவில் அதனால ஹனுமார் தரிசனம் தினசரி,மத்த படி சிம்பிள் மேன்.
நம்ம ஸ்மார்ட் ஹீரோ சின்னக் கண்ணன், குழந்தையிலிருந்து பையனாகிறான் .அம்மாவிடம் கேக்கறான், ”ஏன்மா எல்லா வீட்டு பசங்க பேரும் ரமேஷ், கணேஷ், ரவினு ஒத்தையாதானே இருக்கு எனக்கும் கண்ணன்ற பேரு போதாதா ஏன் சின்னக் கண்ணன்னு கூப்படறேள் எல்லாரும்”.
“அதாவதுடா சின்னா, நம்ம குடும்பத்துல எல்லா பெயரையும், பலரும் வைக்கறா, உன் அத்தை பையன் பேரும் கண்ணன் உன்னை விட பெரியவன் அவன், அதனால அவன் பெரிய கண்ணன், நீ சின்னக் கண்ணன். அதே மாதிரி பெரிய சுரேஷ், சின்ன சுரேஷ், பெரிய மாலா, சின்ன மாலா.இவ்வளவு ஏன் ஜாடில கூட பெரிய ஜாடி, சின்ன ஜாடி பெரிய அறுவாமணை, சின்ன அறுவாமணைனு இருக்காக்கும்.”
சரி போ சின்னக் கண்ணன் பேரு நல்லாதான் இருக்குனு விட்டுட்டான்.
எலிமென்டரி ஸ்கூல், ஹைஸ்கூல்னு முடிச்சு இதோ காலேஜ்லயும் சேந்தாச்சு. சுப்ரமணியபுரத்துல இருக்கற ஃபேமஸ் மதுரைக் கல்லூரிதான்.சிம்மக்கல் போய் 2ம் நம்பர் பிடிச்சு பஸ்ஸ்டாண்ட், சிலசமயம் நடந்தே அங்கே இருந்து, இல்லைன்னா 5ம் நம்பர் பிடிச்சு காலேஜ். சலனமில்லாம போன கல்லூரி வாழ்க்கை.
இப்ப வீட்டுப் பக்கம் கொஞ்சம் போவோம், இந்த ஸ்டோர்ல வயசும், வாளிப்புமா பெண்களுக்கு பஞ்சமில்லை. கட்டு மஸ்தான ஜிம் பாடி சின்னக் கண்ணனை வலையில் விழ வைக்கப் போறது வனிதாவா, சுசிலாவா, பிரபாவதியா, லட்சுமியான்றதுல ஒரு மெளன போராட்டம்.
இந்த போட்டி சின்னக் கண்ணனுக்கே தெரியாது அவனோட சகோதரி பங்கஜாவுக்கு மூக்குல வேர்த்தது.
கிணத்துல தண்ணி இறைச்சிண்டே வனிதா பாடறா, ”சின்னக் கண்ணன் அழைக்கிறான், இந்த ராதையை….. இல்லை.. இல்லை, சற்றே மெதுவாக, இந்த வனிதையை பூங்கோதையை”னு கற்பனை, பாட்டாக தறி கெட்டு ஓட. “ஏய் என்ன ரொம்ப ஓவராப் போறே உங்கம்மாகிட்ட போட்டுக் கொடுக்கவா?” கேட்டுட்டு முதல் பாத்ரூம்ல இருந்து சுசிலா வெளியா வந்தா.
“போடி இந்தப் பாட்டு பிரபாதான் பாடினா அவ பேரைச் சொல்லி, நான் பேரை மாத்தி பாடிப் பாத்தேன், என்ன தப்பாம்”
“ஓ பிரபாவுமா, என் சின்னாக்கு உங்க யாரையும் பிடிக்காது தெரியுமா”
“ஓகோகோ உன் சின்னாவா லட்சுமி கேட்டா உதைக்கப் போறா அவன் கூட காலேஜ் போறாளாம் தினமும், பஸ்ல சின்னாதான் சீட் பிடிச்சு கொடுப்பானாம்”
“ஒண்ணுமில்லை சின்னா, மெஜுரா காலேஜ்ல, லட்சுமி வேற எங்கயோ ஓட்டை இன்ஸ்ட்யூட்ல”
“போடி, டிப்ளமா படிக்கறா கவர்ன்மென்ட் பாலிடெக்னிக்ல, சின்னாவோட காலேஜ்கு எதுத்தாப்பலயேவாம். தினம் சேந்து போவாங்களாம் சேந்தே வருவாங்களாம், லட்சுமியே சொன்னா”
“தங்கை மாதிரி பழகுவானா இருக்கும். என்னையெல்லாம் அவன் பாக்கற பார்வையே வேற தெரியுமா? அவனோட அம்மா கூட என்னை மருமகளேன்னுதான் கூப்பிடுவா.”
“அந்த மாமி ஒரு லூசு, சொத்தை சொள்ளை, நல்ல கண்ணு,நொள்ளைக் கண்ணுனு, எல்லா பொண்களையும் மருமகளேன்தான் கூப்படறா விவஸ்தை இல்லாம.”
சின்னக் கண்ணனும் மனுஷன்தானே இந்த வயசுல கொஞ்சம் அப்படி இப்படி தோணும் தானே, அதுலயும் பக்கத்துலயே நாலஞ்சு அழகான பெண்கள் இவன் ஒரு பார்வைக்காக சுத்தி வரப்ப மனசு என்ன பாடு படும்.
ஆனா.. ஜிம் வாத்தியார் பயில்வான் பாஸ்கருக்கு சின்னக் கண்ணனை ரொம்ப பிடிக்கும், ஆறடி உயரம் அகண்ட பாடினு இருக்கானா, அவனை பெரிய பாடி பில்டராக்கி ஜிம்மோட இமேஜைக் கூட்ட ஆர்வம்.ஸ்டிரிக்டா சொல்லி இருக்கார் பெண்கள் பத்தி நினைப்பே கூடாது, பாடி ஏறாது, போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலைல சேர முடியாதுனு.
ஆமாம் சின்னக் கண்ணனுக்கு பெரிய போலீஸ் ஆபீசர் ஆகணும்னு ஆசை உள்ளூர இருக்கு. நாம நினைக்கறதெல்லாம் நடக்கறதா என்ன.
டிகிரி முடிச்சவுடனே போலீஸ் டிபார்ட்மென்ட் பரிட்சைலாம் எழுதினான். நேரடி இன்டர்வ்யூல, ஆஜானுபாகுவான ஒரு சர்தார்ஜி போலீஸ் ஆபீசர், உன் கால்கள் சரியில்லை, கண் சரியில்லைன்னு ரிஜெக்ட் பண்ணிட்டான். என்ன பண்றது இப்ப, அடுத்து பேங்க் பரிட்சை, அரசுப் பணி பரிட்சைகளுக்கு தயார் பண்ண வேண்டியதுதான்.
காலை 5.30க்கே எழுந்து பல்தேச்சு, குளிச்சு ரெடியாகி புஸ்தகங்களோட மாடிக்குப் போய் வெயில் உரைக்கற வரை படிப்பான். இதுவும் ஒரு ஏழெட்டு நாள்தான், வனிதா, பக்கெட் நிறைய துவைச்ச துணிகளைக் காயப் போட வந்த அன்னிக்கு வரை. மாடியில் இவனைப் பாத்த வனிதா முகம் 25 வாட் எலக்ட்ரானிக் பல்பா ஒளிர்ந்தது.
துணி காயப் போட்ட வண்ணம் நம்மளைப் பாக்கறானானு ஓரப் பார்வை வேற. சட்னு கண்கள் சந்தித்தது, புன்னகையுடன் கேட்டாள், ”தினமும் இந்த நேரத்துக்கு படிக்க வரயா? டிகிரி முடிச்சாச்சு இல்லையோ?”
“இல்லை இது காம்பெடிடிவ் எக்சாம்காக படிக்கறேன்”
“அப்படின்னா” அவளுக்கு தெரியாதா என்ன, சும்மா பேச்சை வளக்க.
“கவர்மென்ட் ஜாப் கான போட்டிப் பரிட்சைக்காக”
அவ பதில் சொல்றதுக்குள்ளே மாடிப் படில யாரோ ஏறி வர சத்தம்.சட்னு துணிகளைப் பட் பட்னு உதறி காயப் போடறதுல மும்மறமானா.
தோள்லயும், சின்ன வாளிலயும் துணிகளை ரொப்பிட்டு இப்ப பிரபா.
“ஏண்டி வனி, காலங்காத்தால இவ்வளவு துணிகளை கொடில போட்டா மத்தவங்க என்ன பண்றது?”
நிதானமாய் அவளை திரும்பிப் பாத்த வனிதா முக வக்கணையோட, “ஏதோ வாரம் ஒரு தடவை துவைச்சு காயப் போடறேன், அதே நாள்ல நீயும் போட்டிக்கு வருவேனு ஜோசியமா தெரியும்”
“ஏன் கிணத்தடில நான் துவைக்கறப்ப பாத்துட்டேதானே பல்லு தேச்சே”
“சரிப்பா உன் கூட வாயத்தம் பண்ண எனக்கு நேரம் இல்லை, நிறைய இடம் இருக்கு நீயும் போடலாம்”
பிரபா, “பாரு சின்னா, நான் என்ன சண்டைக்காரியா நீயே சொல்லு, உனக்குதான் என்னை நல்லா தெரியுமே”
சின்னக் கண்ணனுக்கு திக்னு போச்சு என்ன சொல்றா இந்தப் பொண்ணு, நல்லாத் தெரியும்னு, இவ பேர் கூட ஞாபகம் இல்லையே. ஒண்ணும் பேசாம இனிமே படிச்சாப்பலதான்னு புஸ்தகங்களை அள்ளிட்டு கீழே நடையைக் கட்டினான்.
இறங்கறப்பவே மனசுல ஒரு நினைப்பு, வாய் கொஞ்சம் ஜாஸ்தின்னாலும் ரெண்டாவது வந்த பொண்ணு பிரேமாவோ பிரபாவோ அவ கண்களும், கூர்மையான சின்ன நாசியும், பவழ உதடுகளும் செக்கச் சிவந்த நிறமும் மனசை என்னவோ செய்யத்தான் செஞ்சது.
பழனில இருந்து வந்த நாணா மாமா சிரிச்சிட்டே, ”ஏண்டா சின்னக் கண்ணா நீ ஏழாப்பு படிக்கறப்ப நான் எழுதின வியாசங்கள்னு ஒரு 80 பக்க நோட்டு நிறைய எழுதிக் கொண்டு வந்து காட்டுவயே, இப்ப எழுதறதில்லையா”
சட்னு பொறி தட்டிச்சு, ஆமாம் பத்திரிகைகளுக்கு கதைகள் எழுதினா என்ன? காலேஜ்ல என் புரொஃபசர் கூட என் எழுத்தை ஸ்லாகிச்சு சொல்லியிருக்காரே! சுஜாதா சார் மாதிரி, பாலகுமாரன் மாதிரி சிறப்பா எழுதறேனு.
நாணா மாமா, ”வெங்கட்ராமா, நீ கொடுத்து வச்சவண்டா என் தங்கை அலமேலு பஞ்சாமிர்தமா வத்தக் குழம்பும், சக்கரைப் பொங்கலா புடலங்கா கூட்டும் வைக்கறப்ப உனக்கு என்னடா குறை”
அப்பா குசும்பு கம்மியில்லை, ”ஆக வத்தக்குழம்பு, புடலங்கா கூட்டு ரெண்டுமே ஒரிஜினல் ருசில இல்லைன்றே”
“போடா கோணப் புத்திக்காரா, என் தங்கயோட அருமை உனக்கெங்கே தெரியப் போறது”
இதெல்லாம் விடுங்க நாணா மாமா வந்து சின்னாவோட எழுதற பழக்கத்தை கிண்டி விட்டுட்டு போயிட்டார்.
நாணா மாமா ரெண்டு வேளையும் ருசிச்சு சாப்டுட்டு திரும்ப பழனி கிளம்பினவுடனே எழுத உக்காந்தாச்சு பிள்ளையார் சுழி போட்டு.
மாடில பாத்த பிரபா ஞாபகம்தான் வந்தது. ஒரு கற்பனைக் காதல் கதை பிறந்தது 3 பக்கத்து காவியம்னு தன்னைத் தானே பாராட்டிண்டான். அடுத்த நாள் ஒரு கவர்ல போட்டு ஒரு பிரபல பத்திரிகையின் விலாசம் தேடி எழுதி ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பி வச்சான்.
அவ்வளவுதான் ஒரு வாரம் ஆச்சு 2 வாரம், ஒரு மாசம், ரெண்டு மாசம், ம்ஹூம் அவனோட காவியத்தை ரசிக்கத் தெரியலை இந்த பத்திரிக்கை காரங்களுக்கு.
ஆனா கவர்மென்ட் பரிட்சை பாசாயாச்சு, வேலையும் கிடைச்சாச்சு மெட்ராஸ்ல டிரெயினிங். மதுரை ஸ்டோர் அழகிகளுக்கு சின்னக் கண்ணன் மெட்ராஸ் போறது தெரிஞ்சு படு வருத்தம். இனி அம்மா அப்பா சொல்ற மாப்பிள்ளைதான் காதலாவது கத்திரிக்காயாவது.
மெட்ராஸ் போக ராத்திரி டிரெயின் பிடிக்கணும், ஊறுகாய், பொடி வகைகள், பசு நெய்னு அம்மா பாத்துப் பாத்து டப்பாக்கள்ல அடைச்சு தந்தா. போஸ்ட்மேன் ஷண்முகம், ”தம்பி உனக்கு லெட்டர்”னு அந்த காக்கி கவரை நீட்டினான்.
சின்னாக்கு மூச்சு ஒரு செகண்ட் நின்னு போச்சு, அந்த வாரப் பத்திரிகைல இருந்து தான். உங்கள் கதை ஏற்றுக் கொள்ளப் பட்டது சன்மானமாக 25 ரூபாய்க்கான செக் இணைக்கப் பட்டுள்ளது. தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள்.ஆசிரியர்.
தலைகால் புரியலை, யார்கிட்ட சொல்றது எப்படிக் கொண்டாடறது! அக்கா ஒருத்திதான் பகிர. பங்கஜம் அடுத்த பத்து நிமிஷத்துல இந்த செய்தியை ஸ்டோர் பூரா பரப்பிட்டா. சின்னக் கண்ணன் இப்ப எழுத்தாளர்.
மெட்ராஸ் வந்து வேலைக்கு சேந்தாச்சு. வேலைல இருந்துட்டே கதைகளும் எழுதணும்னு முடிவு பண்ணினான்.இவன் கதையை பிரசுரித்த பத்திரிகை ஆசிரியரை ஒரு தினம் சந்தித்தான். நல்ல மனிதர் தொடர்ந்து எழுத ஊக்கம் கொடுத்தார் டிரெயினிங் பீரியட் முடிவதற்குள் அந்த பத்திரிகையின் ஆஸ்தான எழுத்தாளர் சின்னக் கண்ணன்.
சார் புனைப் பெயர்ல, பிரபானு ஒரு பெண் பேர்ல எழுதவானு ஆசிரியரைக் கேட்டான்.
வேண்டாம் சின்னக் கண்ணன் பெயரே பிரபலமாகப் போகுது இதே பேர் போதும்னுட்டார்.
அஞ்சே வருஷத்துல ஆபீஸ்ல செக்ஷன் ஹெட், பத்திரிகை உலகத்துல புகழ் குவிக்கும் எழுத்தாளர். அட சொல்ல மறந்தாச்சே போன வருஷம் மதுரைல தடபுடலா கல்யாணம். இப்ப சின்னக் கண்ணனும், ஆமாம் அதே பிரபாதான் மெட்ராஸ் திருவல்லிக்கேணில தனிக் குடித்தனம்.
எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings