in ,

பயம் ஒரு பரவசம் (சிறுகதை) – சுஶ்ரீ

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பயம்ன்றது என்ன சார்? அது மனிதனுக்கு இருந்தா அது பலவீனம்னு சொல்றாங்களே அது உண்மையா? அதுவும் ஆண்கள் பயந்தால் கோழைன்றாங்க. எனக்கு பயம் ஜாஸ்தி தான், ஆனா அந்த உணர்ச்சி வரும் போது, விலகும் போது, அதுக்கு நடுவுல ஒரு பரவச நிலை அது அனுபவிக்கறவங்களுக்குத்தான் தெரியும், சொல்லத் தெரியலை எழுத்தில் வர்ணிக்க முடியாத ஒரு உன்னத உணர்ச்சி.

இன்டர்வ்யூன்னா பயம் வரது சகஜம்தானே? அதுக்காக நான் பயந்தாங்குளினு சொல்றது நியாயமா நீங்களே சொல்லுங்க. என் அம்மா, அப்பா, தாத்தா, பக்கத்து வீட்டு அக்கா,  எல்லாரும் என் பயத்தை கேலி பண்றாங்க சார்.

என் முதல் இன்டர்வ்யூ கார்ப்பரேஷன் ஸ்கூல்ல 3வது வகுப்பு சேரும் போது. ஒண்ணாவது, ரெண்டாவதெல்லாம் ஸ்கூல்ல படிக்கலை, ஸ்கூல் போக பயந்ததால அம்மாவே வீட்ல எல்லாம் சொல்லிக் கொடுப்பாங்க. அந்த பீரியட்ல அதெல்லாம் சகஜம், இப்ப மாதிரி பிளே ஸ்கூல், கே.ஜி. கிளாஸ்லாம் கிடையாது. 6 வயசுலதான் ஒண்ணாவது சேப்பாங்க, பர்த் சர்டிஃபிகேட்லாம் தேவையில்லை, கழுத்தை சுத்தி காதைத் தொட்டா ஒண்ணாவது வகுப்புக்கு ஃபிட். எனக்கு 8 வயசாச்சா அதனால நேரா 3வது வகுப்புல சேக்கலாம்னுட்டார் அப்பா.

அந்த கார்ப்பரேஷன் ஸ்கூல் ரொம்ப சின்னதுதான். இருக்கறதே அஞ்சாவது வகுப்பு வரைதான், என்ன சவுகரியம்னா வீட்டுக்கு பக்கத்துல இருக்கு அவ்வளவுதான். அப்பா ஆபீஸ் போறதுக்கு முன்னால என்னோட வந்தார். அப்ப பயம்லாம் இல்லை. ஹெட்மிஸ்ட்ரஸ் மேடம் கேக்கற கேள்விக்கெல்லாம் பயப்படாம பதில் சொல்லுனு அப்பா என்னை ஸ்கூலுக்கு உள்ளே கூட்டிட்டுப் போனார். அப்பதான் லேசா பயம் வந்தது.

கால்கள் தடுமாற உள்ளே பம்மிப் பம்மி நுழைஞ்சேன். அந்த சின்ன ரூம்ல ஒரு நடுநாயகமா மேஜை அதுல ஆஜானுபாகுவா, வெள்ளை வெளேர்னு புடவைல, வட்டக் கண்ணாடி மூக்கு நுனில தொங்க அந்த அம்மா உக்காந்திருந்தாங்க.

அப்பா, ”குட் மார்னிங் மேடம்“ னு சொல்லிட்டு என்னை அவங்க முன்னால நிறுத்தினார். அவங்களும் அழகா சிரிச்சிக்கிட்டே குட்மார்னிங்னு சொன்னாங்க. என்னைப் பாத்து, ”உன் பேர் என்ன”னு கேட்டாங்க. கொஞ்சம் பயப்பந்து தொண்டையை அடைக்க வாய் குளற பேரைச் சொன்னேன்.

“பயப்படாதே உனக்கு மூணாவது வாய்ப்பாடு தெரியுமா?”  

அம்மாதான் சொல்லிக் கொடுத்திருக்காளே, இப்ப கொஞ்சம் பயம் போய் தைரியமா ‘ம்’னு தலையாட்டினேன்.

“சொல்லு பாப்போம்”

“ஒரு மூணு, மூணுனு ஆரம்பிச்சு பதினாறு மூணு நாப்பத்தெட்டு”னு மூச்சு விடாம, ராகமா சொல்லி முடிச்சேன்.

என் ராகத்தைக் கேட்டு வாய் விட்டு சிரிச்ச அந்த மேடம், “சரி, நிறங்கள் மொத்தம் எத்தனை தெரிஞ்சதை சொல்லு பாப்போம்”

நான் அப்பா முகத்தைப் பாத்தேன். அவர், ”எத்தனை கலர்னு சொல்லுடா” 

கடகடனு, ”வயலட், இன்டிகோ, ஆரன்ஜ், பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம்னு”

சொன்னவுடனே திரும்ப வாய் விட்டு சிரிச்ச அந்த மேடம், அப்பாவைப் பாத்து, ”வெரி பிரில்லியன்ட் சைல்ட், பேர், பிறந்த தேதி, அப்பா அம்மா பேரு இந்த விவரமெல்லாம் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க, இன்னில இருந்தே கிளாஸ்ல உக்காரட்டும்”னார். அப்பா முகம் பெருமைல பொங்கித்து.

அந்த பெரிய மிஸ், அங்கே சுத்தம் பண்ணிட்டிருந்த ஆயாம்மாவைக் கூப்பிட்டு உள்ளே இருந்த கிளாஸ் ரூமுக்கு அவங்க கூட என்னை அனுப்பினாங்க. அங்கே ஒரு 25 குழந்தைங்க கீழே நீளப் பலகைகள்ல மடில ஸ்லேட்ட வச்சிட்டு உக்காந்திருந்தாங்க. நான் திரும்ப மனசுல வந்த பயத்தோட பக்பக்னு முளிச்சிட்டு நின்னேன்.

அங்கே டேபிள், சேர் போட்டு உக்காந்திருந்த உயரமா ஒல்லியா ஆனா அழகா இருந்த டீச்சர், ஒரு புன்னகையோட ”வா உக்காரு புது ஸ்டூடன்டா, பேரு என்ன”

நான் என் காதுல கூட கேக்காத மாதிரி பேரை முனகிட்டே நாலாபுறமும் உக்கார இடம் கண்களால் துளாவினேன். அந்த பச்சைப் பாவாடைப் பெண் சற்றே நகந்து நகந்து தன் பக்கம் பலகையைத் தட்டிக் காட்டினாள். நானும் தயங்கினபடி அவ பக்கத்துல உக்காந்தேன்.

அந்தப் பெண், ”நானு பர்வதம், கிளாஸ் ஃபஸ்ட்”னு சொன்னா. எனக்கு அதோட அர்த்தம் புரியலை. 

அந்த உயரமான டீச்சர் ஏதோ ராகத்தோட இங்லீஷ் பாட்டு சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க பாடப் பாட கூடவே பாபா பாபானு பாடணும். நான் தப்புத் தப்பா பாடறதைப் பாத்து அந்த பர்வதம் பல்லு பூரா தெரிய சிரிக்கிறா. உள்ளூர எனக்குள்ளே ரொம்ப பயம்தான் இன்னும். அப்பா வெளியே நிக்கறாரானு அடிக்கடி வெளில பாத்தேன்.

அந்த பர்வதம் பொண்ணுதான், ”பயப்படாதே அந்த பச்சைக் கதவு வீட்டுப் பையன்தானே நீ, நான் உன்னை திரும்பப் போறப்ப கூட்டிட்டுப் போறேன். கமலா டீச்சர் ரொம்ப நல்லவங்க ஒண்ணும் பண்ண மாட்டாங்க, அடிக்கவே மாட்டாங்க, பயப்படாம என் பக்கத்துலயே உக்காரு”ன்னா.

ஆனாலும் வயத்தைப் புரட்டி எடுக்கற பயம் போகலை, அம்மாவைப் பாக்கணும் போல இருந்தது. புறங்கையால கன்னத்துல வழியற கண்ணீரைத் துடைச்ச வண்ணம், அடிக்கடி மூக்கை உறிஞ்சிட்டு 2 மணி நேரத்தைப் போக்கினேன். இடைவேளைனு ஆயாம்மா மணி அடிச்சப்ப அம்மா தயிர் சாத தூக்கைத் தூக்கிட்டு வந்தா.

அம்மாவைப் பாத்தவுடனே ஓடிப் போய் அவளைக் கட்டிப் பிடிச்சுட்டு ஓன்னு அழுதேன். அந்த பர்வதம் குட்டி, புன்முறுவலோட நின்னு வேடிக்கை பாக்கறா. என் அம்மாவை தைரியமா பாத்து சொல்றா, ”நான் பாத்துக்கறேன் மாமி, சாயந்தரம் கிளாஸ் முடிஞ்சவுடனே என் கூடவே கூட்டிட்டு வரேன்.”

அம்மா, ”சமத்துப் பொண்ணு, உன் பேர் என்னடா செல்லம்?”

“என் பேர் பர்வதம், அம்மா பாருக்குட்டினு கூப்பிடுவா, தான்தான் மூணாப்புலயே ஃபர்ஸ்ட்”

எனக்கு அம்மா தூக்குல இருந்து சாதம் எடுத்து ஊட்டி விட்டா, பர்வதத்துக்கும் நடுநடுவுல ஒரு வாய் ஊட்டினா. அது கூச்சம் இல்லாம வாய் திறந்து வாங்கிண்டது. ரெண்டே நாள்ல என் பயமெல்லாம் போயிடுச்சு. பர்வதம், சாந்தா, மோகன், சங்கர் இவங்க தோழமையோடவும், கமலா டீச்சரின் செல்லப் பிள்ளையா அந்த ஸ்கூல்ல 3 வருஷம் படிச்சேன்னு வச்சிக்கங்களேன்.

அதுக்கப்பறம், ஹைஸ்கூல், காலேஜ் இதெல்லாம் சொல்லிட்டே போனா உங்களுக்கு போர் அடிக்கும் தானே? அதனால ஒரே ஜம்ப்பா ஜம்ப்பி கேரியர் பக்கம் வரேன்.

என்னோட பயங்களைப் பத்தி சொல்லிட்டு இருந்தேன் இல்லையா, அடுத்து பயம் மனசுல வந்தது காவேரியைப் பாத்தப்பதான். காவேரின்னா திருச்சில ஓடற அந்த அகண்ட காவேரி இல்லை, இடை குறுகின காவேரி.

என் கிராஜுவேஷனுக்கு அப்பறம், கோயமுத்தூர்ல ஒரு பெரிய பெயர் பெற்ற டெக்‌ஸ்டைல் மில்லுல முதல் முதலா வேலைக்கு சேந்தேன். யார்னிங் செக்‌ஷன்ல நானும் ஒரு சூபர்வைசர். கந்தசாமினு ஒரு அனுபவம் வாய்ந்த ஃபோர்மேன் அவர்தான் எனக்கு வேலையின் நுணுக்கங்களை கொஞ்சம் கொஞ்சமா கத்துக் கொடுத்தார். நான் வேகமா வேலை கத்துக்கிட்டதைப் பாத்து ஃபோர்மேன் என் மேல ரொம்ப பிரியமா இருந்தார். மிக முக்கியமான வேலைகளை என்னை நம்பி கொடுத்தார் அதை செவ்வனே செய்து முடிக்கும் வரை கூடவே இருந்து நிர்வாகத்தில் நல்ல பெயர் எடுக்க பிரதிபலனின்றி உதவினார்.

எங்க மில் கேன்டீன் பரந்து விரிந்து நவீனமா இருக்கும். 30க்கும் மேல நீள நீளமான மேஜைகள் 250 பேருக்கு மேலே தாராளமா உக்காந்து சாப்பிடலாம். நான் ரெகுலரா 1 மணிக்குப் போவேன் சாப்பிட, சட்னு சாப்டுட்டு, 2ம் நம்பர் கேட்டை ஒட்டி வெளில இருந்த பொட்டிக் கடைல ஒரு சார்மினார் சிகரட் வாங்கி பத்த வச்சு, பயந்து பயந்து புகை விடுவேன். அப்பா எங்கயாவது பாத்துடக் கூடாதேன்ற பயம் எப்பவும் இருக்கும். அவசர தம் அஞ்சாறு இழுத்துட்டு அசோகா பாக்குப் பொட்டணம் வாங்கி பிரிச்சு அவசரமா வாயில போட்டவுடனேதான் அந்த பயம் போகும்.

அந்த சனிக்கிழமை லன்ச் முடிச்சிட்டு 2ம் நம்பர் கேட்டுக்கு போறப்ப பின்னால இருந்து ஒரு இனிய குரல். பயத்தோட சட்னு திரும்பினேன், “பிளீஸ் நீங்க ‘தம்’ அடிச்சிட்டு வரப்ப ஆரஞ்ச் மிட்டாய் வாங்கிட்டு வர முடியுமா?” கையில் சில்லரையைத் திணித்தாள்.

ஒரு நிமிடம் விக்கித்துப் போனேன், பெண்கள்னா இந்த வயசுல ஒரு பயம் இருந்தது உண்மை. அதுவும் இவ்வளவு அழகான பெண் இத்தனை பேரை விட்டுட்டு தன்னிடம் வந்து உதவி கேட்டதால உடம்பெல்லாம் ஒரு பதற்றம் தொற்றியது. ஒரு கெஞ்சல் புன்னகை அவள் முகத்தை மேலும் அழகாய்க் காட்டியது.

“நான் காவேரி, அட்மின் ஆபீஸ்ல டைப்பிஸ்ட், மூணாவது வரிசைல இருப்பேன் சீக்கிரம் வாங்க” சொல்லிட்டே ஓடி நடந்தாள் தன் இடம் நோக்கி.

‘தம்’ அடிக்கறதே அப்பாக்கு பயந்து பயந்து, இதுல பொண்ணுங்ககிட்ட சவகாசம் வச்சிக்காதேனு ஆயிரம் எச்சரிக்கையோட அம்மா விபூதி வச்சு வேலைக்கு அனுப்பினது கண் முன்னால வந்தது. சே..போங்கப்பா இது ஜஸ்ட் ஹெல்ப்தானே ஒரு பொண்ணுக்கு ஆரஞ்ச் மிட்டாய் வாங்கிக் கொடுத்தா தப்பா என்ன அதுவும் அவ காசுல.

இன்னிக்கு அவசர தம்முக்கு அப்பறம் பொட்டிக்கடை ராஜுகிட்ட ஆரஞ்ச் மிட்டாய் கேட்டேன்.

“ஏன் சார் அசோகா வேண்டாமா, புதுசா அஜந்தா வந்திருக்கு டிரை பண்றீங்களா?”

இல்லை காவேரி ஆரஞ்சுனு ஏதோ உளறினது எனக்கே தெரிஞ்சது. ராஜு என்னை ஒரு மாதிரி பாத்துக்கிட்டே ஒரு நியூஸ் பேப்பர் துண்டுல நாலு ஆரஞ்சு மிட்டாய்களை சுத்திக் கொடுத்தான். ஒரு அசோகாப் பொட்டலமும்தான்.

திரும்பி உள்ளே வந்து ஆபீஸ் நோக்கிப் போனேன், அந்த காவேரி உக்காந்திருந்த இடம் பாத்தவுடனே பளிச்னு தெரிஞ்சது. மெதுவா தயக்க அடி எடுத்து பக்கத்துல போனேன். படபடவென டைப்ரைட்டரில் பொறிந்து கொண்டிருந்த அந்த அழகிய விரல்கள் என் நிழல் பாத்து சட்டென அமைதி பெற்றது. தலை நிமிர்ந்து தன் முத்துப் பற்கள் மின்ன புன்னகைத்தாள். அந்த நியூஸ் பேப்பர் பொட்டலத்தை தயக்கத்துடன் அவள் மேஜை முனையில் வைத்தேன்.

அவள், ”உக்காருங்களேன்”

“இல்லை, வேலை நேரம் போகணும்”

“சரி, நாளைக்கு சண்டே, எனக்கு மேட்டுப்பாளையம் ஒரு மேரேஜ்க்கு போகணும்” சொல்லிட்டு முகத்தைப் பாத்தா.

எனக்கு என்ன சொல்றதுனு புரியலை, ”நான் ஆர்.எஸ் புரத்துல இருக்கேன்”

“தெரியுமே, ஹனுமார் கோவில் பக்கத்துல, பெரியார் ஸ்டிரீட்ல”

“எப்படி நான் பார்த்ததே இல்லையே”

“தெரியும் நான் கோவிலுக்கு வரப்ப பாத்திருக்கேன், தலையைக் குனிஞ்சிட்டு கீரைக்காரம்மாகிட்ட கீரை வாங்கறதை” சொல்லிட்டு கலகலவென சிரித்தாள். முன்னால் உக்காந்திருந்த சங்கர் சார் தன் சொட்டைத் தலையை தடவிட்டே திரும்பிப் பார்த்தார்.

அந்த சண்டே பூரா எனக்கு இருப்புக் கொள்ளலை. அந்தக் காவேரி முகமே ஞாபகத்துல சுத்திச்சு. நாளைக்கு எனக்கு மேட்டுப்பாளையம் ஒரு மேரேஜ்க்கு போகணும்னு சொன்னாளே ஒருவேளை என்னை சூசகமா வரச் சொன்னாளோ. இது கூட புரியாத முட்டாளா இருக்கேனே. சீ..சீ.. அப்படி ஒண்ணும் முட்டாளெல்லாம் இல்லை நானா தப்பா புரிஞ்சிட்டு அவமானப்பட வேண்டாமேன்ற முன் ஜாக்ரதைனு வச்சிக்கங்களேன்.

இதுதான் காதலா, இல்லை இந்த வயசுல வர தளிர்மோகமா (infatuation) தெரியல. ஒருவேளை அவளும் என்னைப் பத்தி நினைப்பாளோ?

அப்பா, ”என்னடா, ஒரு மாதிரி இருக்கே? என்னாச்சு”ன்னார்.

சட்னு எனக்கு பயம் வந்தது, நிஜமாவே இந்தப் பெண்ணை காதல் பண்றேன்னு சொன்னா, தையா தக்கானு குதிச்சு வேற ஒரு ஊருக்கு அனுப்பி வச்சாலும் வச்சிடுவார். நான் பயந்த மாதிரியே அவர் பேச்சு இருந்தது, அவர் அம்மாகிட்ட, ”ஏண்டி இப்பதான் இவன் வேலைக்குப் போறானே அவனா எதாவது காதல் ஊதல்னு எவளையாவது இழுத்துட்டு வந்து நம்மளை அவமானப்படுத்தறதுக்குள்ளே சட்புட்னு இவனுக்கு ஒரு பொண்ணைப் பாத்து கல்யாணத்தை முடிச்சிட்டா நம்ம கடமை முடிஞ்சது. உனக்கும் வயசாச்சு, சமைக்கக் கொள்ள உதவியா இருப்பா”

திங்கக்கிழமை எப்படா விடியும்னு காத்திருந்து வேலைக்குப் புறப்பட்டேன். எனக்கு 8 மணி ஷிஃப்ட், ஆபீஸ்ல உள்ளவங்க 10 மணிக்குதான் வருவாங்க.

11 மணி வாக்குல கேன்டீன் போனேன், ஒரு சின்ன நப்பாசைதான் அந்தப் பொண்ணு வந்திருப்பாளோனு. கேன்டீன் உள்ளே நுழைஞ்சவுடனே அந்த வெளிச்சம் பழகி, ஒரு டீ வாங்கிட்டு நான் என் கண் பார்வையை சுழட்டறப்ப ஒரு மூலை டேபிள்ல உக்காந்து அவள் என்னையே பார்ப்பது தெரிந்தது. மனசுல சட்னு உதிச்ச பயம், படபடப்பை அடக்கிக் கொண்டு என் டீ கப்புடன் அங்கே போனேன். குட் மார்னிங் மேடம்னேன். பக்கத்தில் பாக்க இன்னும் அழகாய்த் தெரிந்தாள். 

“என்ன மரியாதை பலமா இருக்கு எனக்கு 20 வயசுதான்”

“அப்படினு இல்லை ஏதோ ஒரு மரியாதைலதான்.”

“நேத்து என்ன பண்ணினீங்க? வீட்டுக்குள்ளேயேவா?”

“இல்லை, ஆமாம், பேரன்ட்ஸ் நீதான் வேலைக்கு போக ஆரம்பிச்சாச்சே கல்யாணம் பண்ண வேண்டியதுதான்னு மேரேஜ் புரொபோசல்ஸ் பாக்கறாங்க”

“அப்படியா கங்கிராஜுலேஷன்ஸ், நல்ல பொண்ணா அமையட்டும், என்ன மாதிரி துடுக்குப் பெண்ணா இல்லாம”

“எனக்கு உன்னை மாதிரி துடுக்குப் பெண்களைத்தான் பிடிக்கும்”

“ஐய்யோடா தைரியமா சொல்றீங்க, யாராவது மனசுல இருக்காங்களோ”

“ம், அப்படித்தான் வச்சிக்கோயேன்”

“அட சட்னு மேடம் மரியாதை குறைஞ்சிடுச்சு, சரி அந்த பொண்ணுகிட்ட உங்க மனசை சொல்லியாச்சா”

“ம்ஹூம், சொல்லதான் பயமா இருக்கு”

“ஐய்யே ஆம்பளையா இருந்துட்டு எல்லாத்துக்கும் இப்படி பயப்படறீங்களே தைரியமா போய் சொல்லுங்க நான் வேணா ஹெல்ப் பண்றேன், உங்க தெரு எதிர்வரிசைல இருக்காளே அந்த வசந்தாதானே” சொல்லும் போதே அவள் முகம் குறும்பா சிரித்தது தெரிந்தது.

“ம்…ம்ம் நானே சொல்லிடறேன், ஐ ஐ லவ் யூ காவேரி மேடம்”

“அடடா மேடத்துகிட்டயே டிரயல் பாக்கறீங்களா?”

“விளையாடாதே காவேரி, உன்னைப் பாத்ததுல இருந்தே மனசெல்லாம் என்னவோ பண்ணுது, எஸ் சொல்வயா”

“லூஸ் பையா எப்படா சொல்லப் போறேனு நானும் காத்துட்டிருந்தேன், சரி அந்த மேனேஜர் கத்த ஆரம்பிக்கறதுக்கு முன்னால போறேன்” ஒரு சின்னக் குதி போட்டு ஓடி விட்டாள் காவேரி.

இது என்ன மனசுக்குள்ளே ,இப்படி ஒரு சந்தோஷப் பட்டாம்பூச்சி, இது திரும்பவும் பயமா, சந்தோஷமா வேலையே ஓடலை. அடுத்தடுத்த தினங்களில் அடிக்கடி திருட்டுத்தனமாய் சந்தித்தோம், நிறைய பேசினோம்.

மாதங்கள் வேகமாய் ஓடின, எங்கள் ஸ்நேகமும் இறுகியது. ஆனால் மனசுக்குள்ளே அந்த இனம் தெரியாத பயமும்.

இன்னுமொரு ஞாயித்துக்கிழமை இப்பல்லாம் லீவு நாட்கள் பிடிக்கறதில்லை, என் காவேரியை பாக்க முடியாதே. சோம்பேறித்தனமாக ஏதோ ஒரு பத்திரிக்கையை புரட்டிக் கொண்டு உக்காந்திருந்தேன். ம்க்கும்னு செருமிக் கொண்டே அப்பா பக்கத்தில் வந்து உக்காந்து கொண்டார். அதுவே எனக்கு ஒரு மாதிரி கலக்கத்தைக் கொடுத்தது.

“வேலையெல்லாம் எப்படிப் போகுது?”

“பிரச்சனை இல்லைப்பா, நல்லா வேலை கத்துக்கிட்டேன்”

‘உங்க ஃபோர்மேன் கந்தசாமியை ரெண்டு நாள் முன்னால மார்க்கெட்ல பாத்தேன், உன்னைப் பத்தி நல்ல மாதிரிதான் சொன்னார். அவருக்கு ஒரு பொண்ணு இருக்காமே உனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க தயாரா இருக்கார்.”

“அது வந்து, இப்ப வேண்டாம்பா மேலே கொஞ்சம் படிக்கலாம்னு இருக்கேன்”

“என் பையன் நான் சொன்னா தட்ட மாட்டான் பொண்ணைப் பாக்க வரோம்னு சொல்லிட்டேன் இன்னிக்கு 3 மணிக்கு அவங்க வீட்டுக்குப் போறோம் தயாரா இரு”  

இந்த விஷயம் காவேரிக்கு எப்படி சொல்றது. கந்தசாமி ஃபோர்மேன் எவ்வளவு கத்துக் கொடுக்கறார், அவர் பொண்ணை பிடுக்கலைனு எப்படி சொல்றது, மனசு கதங் கதங்னு பயத்தால் துடித்தது.

3 மணி சகல ஏற்பாடுகளுடன் பக்கத்தில் நடை தூரத்தில் இருந்த ஜவஹர் தெருதான். காலிங்பெல் அடித்தவுடனே கதவை திறந்து ஃபோர்மேன் கந்தசாமி சந்தோஷமாய் வரவேற்றார். வாங்க வாங்கனு நல்ல இருக்கைகளில் அமர வைத்தார்.

இவர் பொண்ணை நான் எப்படி வேண்டாம்னு சொல்லப் போறேன் கடவுளே அந்தப் பெண்ணே நான் வேற ஒத்தரை விரும்பறேன்னு சினிமால வர மாதிரி கடைசி நிமிஷத்துல சொல்லக் கூடாதா, அம்மா இந்தப் பொண்ணு ரொம்ப குண்டா இருக்கா என் பிள்ளைக்கு வேண்டாம்னு சொல்லக் கூடாதா. ஏதேதோ நினைவுப் போராட்டத்தில் நான்.

சில பல சம்பிரதாயப் பேச்சுகள் அப்பாவுக்கு இந்த கந்தசாமியை ரொம்ப பிடித்து விட்டது. இப்ப அம்மா கைலதான் இருக்கு. கந்தசாமி சாரோட மனைவி, பொண்ணைக் கூட்டிட்டு வர உள்ளே போனார். என் கண்ணில் பொங்கி வரும் கண்ணீரை யாரும் பாக்காமல் இருக்கணுமேனு  குனிந்த தலையை நிமிரவில்லை. பொண்ணு வந்து எதிரில் அமர்ந்ததை உணர்ந்தேன்.

அம்மா கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பிச்சா. “உனக்கு சமைக்கத் தெரியுமா, பாடத் தெரியுமா, என்ன படிச்சிருக்கே, வேலைக்குப் போற ஆசை இருக்கா” இப்படி ஏதேதோ கேக்கறது எனக்கும் கேட்டது. 

“நான் சுமாரா சமைப்பேன், பாட்டு வராது, பி.எஸ்.சி படிச்சிருக்கேன், ஏற்கனவே உங்க பிள்ளை வேலை பாக்கற அதே மில்லுலதான் வேலை பாக்கறேன்”

சட்னு தலை உயர்த்திப் பாத்தேன். என் கண்கள் நீருடன் மின்னியதைப் பாத்து காவேரி குறும்பாக புன்னகை பூத்தாள்.

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பூ ஒன்று புயலானது! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

    காலமிது காலமிது (சிறுகதை) – சுஶ்ரீ