எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சுற்றுலா முடிந்து தங்கள் ஊர் செல்ல ரயில் நிலையத்திற்கு வந்த குழுவினர் அனைவரின் முகமும் களையிழந்து காணப்பட்டது. பொதுவாகவே சுற்றுலா புறப்படும் சமயத்தில் இருக்கும் உற்சாகம் அது முடிந்து ஊர் திரும்பும் சமயம் இருக்காது. ஊர் சுற்றியதால் வந்த களைப்பு திரும்பவும் நமது தினசரி வேலைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் நம்மை சோர்வில் தள்ளிவிடும்.
ஆனால் இங்கு அதையும் மீறி அனைவர் முகத்திலும் ஒரு துயரத்தின் சாயல் படிந்திருந்தது எல்லோரும் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் அவரவர் உடமைகளை எடுத்துக் கொண்டு பெட்டியில் ஏறிக்கொண்டனர். சுற்றுலாவுக்கு பொறுப்பு எடுத்து ஏற்பாடு செய்திருந்த மாதவன் முகத்தில் டூர் முடிந்து அனைவரும் நல்லபடியாக ரயில் ஏறி விட்டோம் என்ற நிம்மதி பிறந்தது.. இருந்தாலும். அவனிடம் குற்ற உணர்ச்சியால் ஒரு பெருமூச்சு வெளிவந்தது.
மாதவன் அரசு வங்கியில் வேலை பார்க்கிறான் அவனும் அவனுடன் பணிபுரியும் சில நண்பர்களும் ஒரு நான்கைந்து வருடங்களாக குற்றால சீசனின் போது அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு குற்றாலம் வருவதை வழக்கமாக்கி கொண்டிருந்தனர். மூலிகை காற்றும், அருவி நீரும் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகும் அவர்களுக்கு மன எழுச்சியையும் உடல் உற்சாகத்தையும் கொடுப்பதாக அனைவருமே நம்பினர்.
அதனால் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் எல்லா வேலையையும் ஏறக்கட்டி விட்டு குற்றாலத்திற்கு வந்து விடுவார்கள். ஒவ்வொரு தடவையும் எங்களை விட்டுட்டு நீங்கள் மட்டும் ஜாலி டூர் போகிறீர்களே என்று மனைவிமார்கள் கேட்டதால் இந்த முறை குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வந்தனர்.
ஜூன் மாதமே ரயில் டிக்கெட் புக் செய்து குற்றாலத்தில் ஹோட்டலில் ரூம் போட்டு பக்காவாக ஏற்பாடு செய்து விட்டான் மாதவன். மாதவனின் சொந்த ஊர் தென்காசி என்பதால் அவனுக்கு இது விஷயங்கள் சுலபமானது. அவனின் தென்காசி நண்பர்கள் மூலம் குற்றாலத்திலும் அருகில் உள்ள பாபநாசம் அகஸ்தியர் அருவி மணிமுத்தாறு அருவிகளுக்கு செல்லவும் வேன் ஏற்பாடு செய்திருந்தான் மாதவன்.
குடும்பத்தினர் அனைவரும் டூரில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்தான். ஆனால் கடைசியில் இது ஒரு பயங்கரமான மறக்க முடியாத அனுபவமாக விளைந்தது அவர்களின் துரதிர்ஷ்டமே.
சென்னையில் ஆகஸ்ட் மூன்றாம் ஆம் தேதி ரயில் ஏறியவுடன் தன் நண்பன் லோகநாதனுக்கு போன் அடித்தான் மாதவன். “அருவியில தண்ணீர் எல்லாம் நிறைய விழுகுது நல்லா குளிக்கலாம் வாங்கப்பா எல்லாம் “என்று லோகு சொன்னதும் மாதவனுக்கு உற்சாகம் கரை புரண்டது. நெல்லையில் இறங்கி அங்கு தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு கோவிலில் நெல்லையப்பரையும் காந்திமதி அம்மையையும் தரிசித்தனர்.
வேனில் குற்றாலம் வரும் வழியெல்லாம் தாமிரபரணி ஆற்று நீரால் செழிப்பான வயல்வெளிகளை முதன்முறையாக பார்க்கும் குழந்தைகள் உற்சாகத்தில் துள்ளினர். இயற்கை அரணாக சூழப்பட்டிருந்த குற்றால மலையும் லேசான தூறலுடன் கூடிய சிலுசிலு காற்றும் சென்னையில் கடும் வெயிலால் அவதிப்பட்ட மாதவன் குழுவினரின் உடலையும் மனத்தையும் குளிர வைத்தன.
ஹோட்டல் ரூமுக்கு வந்ததுமே ஐந்து குடும்பத்தாரும் மெயின் அருவியில் குளிக்க கிளம்பினர். அருவிக்கு பக்கமாகவே ஹோட்டல் இருந்ததால் நடந்தே அருவிக்குச் சென்றனர் மாதவனின் அம்மாவால் நடக்க முடியாது என்பதால் அவருடன் சிறு குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி அருவிக்கு அனுப்பி வைத்தனர். அருவியில் கூட்டம் அதிகமாக இருந்தாலும் போலீஸ்காரர்களின் கட்டுப்பாட்டால் அனைவராலும் குளிக்க முடிந்தது. உடலும் உள்ளமும் குளிர குளித்தவர்கள் வெளி வந்து கடையில் சூடாக மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டனர்.
சென்னையில் பிறந்து வளர்ந்த மாதவனின் மனைவி சுபாவுக்கு இது புது அனுபவமாக இருந்தது. “இவ்வளவு நல்லா இருக்கும்னு தெரியாம போச்சே . இனி வருடம் தவறாமல் நாங்களும் உங்க கூட குற்றாலம் வருவோம்” என சுபா கூற மற்ற பெண்களும் அதை ஆமோதித்தனர். “சரிங்க ஆபீஸர்” என்று அவளிடம் மாதவன் கேலியாக கூறி சிரித்தான்.
மாலை குற்றாலநாதர் கோவிலுக்கு சென்று சுவாமியையும் அம்பாளையும் தரிசித்து விட்டு ஆடல் வல்லானின் சித்திர சபையையும் பார்த்து மகிழ்ந்தனர், வரும் வழியில் உள்ள கடைகளில் ஏலக்காய் பட்டை, சோம்பு போன்ற மசாலா சாமான்களையும் பிள்ளைகள் விரும்பிய நேந்திரன் சிப்ஸ் பீம புஷ்டி அல்வா மலை பிரதேசத்தில் கிடைக்கும் பழங்கள் என்று எதையும் விட்டு வைக்காமல் வாங்கினர் பெண்கள்.
எல்லாம் நல்ல விதமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. மறுநாள் மேக்கரை தனியார் அருவி அகஸ்தியர் அருவி மணிமுத்தாறு அருவி என்று எல்லாவற்றிலும் ஆசை தீர குளித்தனர்.அதுவும் மேக்கரை தனியார் அருவிக்கு ட்ரக்கிங் செல்வது போல் ஆண்கள் நடந்து வந்தனர். புது அனுபவமாக பெண்களும் குழந்தைகளும் ஜீப்பில் வந்தனர்.
நினையாதெல்லாம் நடப்பது தான் வாழ்க்கையா அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது தெரிந்தால் வாழ்வின் சுவாரஸ்யம் கெட்டுவிடும். ஆனால் இந்த பயங்கர நிகழ்வு நடக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. மாதவனின் மனம் மீண்டும் வருத்தத்தில் ஆழ்ந்தது. மாதவனின் மனைவி மற்ற நண்பர்கள் அவர்களின் குடும்பத்தினர் என அனைவரும் நடந்ததையே நினைத்து அசை போட்டுக் கொண்டிருந்தது அவர்களின் வருத்தம் தோய்ந்த முகத்தில் தெரிந்தது.
மூன்று நாட்கள் வேனில் அங்கும் இங்கும் சுற்றி அருவிகளில் குளித்து நினைத்ததை எல்லாம் சாப்பிட்டு சுத்தமான காற்றை சுவாசித்து இயற்கையின் அழகை கண்களால் பருகி அவர்கள் மன மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர். அங்கு சுற்றி திரியும் குரங்குகளின் சேட்டைகளை குழந்தைகள் ஆர்வத்தோடும் பயத்துடன் பார்த்து மகிழ்ந்தனர் .
நான்காம் நாள் இரவு ஊருக்கு புறப்பட வேண்டும் என்பதால் அன்று புலி அருவியிலும் பழைய குற்றால அருவியிலும் குளித்துவிட்டு செங்கோட்டையில் ரயில் ஏறிவிடலாம் என்ற திட்டத்தில் அங்கிருந்து ரயில் டிக்கெட் புக் செய்திருந்தான் மாதவன் அருவிக்குச் செல்லும் வழியில் சுபா மாதவனின் கைகளை காதலுடன் பற்றிக் கொண்டு “நீங்க இப்படி ஒரு டூர் ஏற்பாடு செய்ததற்கு உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க” என்றாள் கண்கள் மின்ன.
“ஏய் என்னம்மா” என்று அன்புடன் கொஞ்சிய மாதவன் “ஆமா சுபா அம்மா குழந்தைங்க எல்லாருமே ரொம்ப மகிழ்ச்சியா இருக்காங்க “என்றான் புன்னகையுடன்.
“செலவு ஒரு பக்கம் இருந்தால் கூட இது மாதிரி ஒரு டூர் வருடம் ஒருமுறையாவது வந்துட்டுப் போகணுங்க. இயற்கை அப்படி ஒரு சந்தோஷத்தை கொடுக்குதுங்க” என்றாள் சுபா பூரிப்புடன்.
” என்ன அங்க தனியா ரெண்டு பேரும் பேசிட்டு வரீங்க” என்று கேட்ட மாதவனின் நண்பரிடம் “அண்ணா இப்படி பக்காவா ஒரு டூர் ஏற்பாடு செய்த உங்க பிரண்டுக்கு ஒரு ஓ.. போட்டு விடலாம்னு சொன்னேன்” என்றாள் சுபா.
“போட்டுடலாமே ஓஹோ….” என்று நண்பர்கள் அனைவரும் பெரிதாக கத்தவும் ரோட்டில் நடப்பவர்களும் அதை பார்த்து சிரித்துக் கொண்டே சென்றனர்.
அருவியில் தெளிந்த நீர் தட தடவெனக் கொட்டிக் கொண்டிருந்தது. நீர் சாரலில் சூரிய கதிர்கள் வர்ணஜாலம் காட்டிக் கொண்டிருந்தன. கூட்டம் அதிகமாக இல்லை. எனவே மாதவன் குழுவினர் ஆசை தீரக் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் அந்த விபரீதம் நிகழ்ந்தது.மாதவனின் மூடிய கண்களுக்குள் காட்சி விரிந்தது.
அருவியில் நீர் வரத்து அதிகரிக்கிறதே என அவர்கள் உணரும் முன் காட்டாற்று வெள்ளமென நீர் பெருகி அடித்து தள்ளியது. பேய் இரைச்சலாக அருவியின் சத்தம். அனைவரும் பயத்தில் “அய்யோ அம்மா வெள்ளம் வருது “என கத்திக்கொண்டே ஆங்காங்கே ஓடி கரையேறினார். மாதவனும் மற்றவர்களும் பயத்துடன் படிகளிலும் தண்ணீர் ஓடி வருவதைப் பார்த்தபடி மேலே ஏறினர்.
அனைவரும் வந்து விட்டனரா என்று பார்த்த மாதவன் “ஐயோ, சுபா எங்க” என கத்தினான். சுபா தண்ணீரில் தத்தளித்தபடி ஒரு பாறையை பிடித்தபடி பயத்தில் அலறிக் கொண்டிருந்தாள். அவள் அருகில் ஒரு சிறுமியும் இருந்தாள். மாதவனுக்கு நீச்சல் தெரியும் என்பதால் நீரில் இறங்கினான். அதற்குள் அந்த சிறுமியின் தந்தை வெள்ளத்தில் நீந்தி அவர்கள் அருகில் சென்றவர் சுபாவையும் அவர் மகளையும் பிடித்து இழுத்தபடி படிகளின் அருகில் வந்து அவர்களை ஏற்றி விட்டார்.
ஆனால் அடுத்த நொடி அவர் படியில் ஏற முயன்ற பொழுது கால் வழுக்கி திரும்ப தண்ணீரில் விழுந்தவர் அனைவரின் கண்முன்னே வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டார். எல்லோரும் அலற அலற அந்த மனிதனை நீர் விழுங்கியது சுபா அதிர்ச்சியிலும் குற்ற உணர்ச்சியிலும் தவித்துப் போனாள். “ஐயோ என்னை காப்பாத்திட்டு அவர் தண்ணீல போயிட்டாரே” என்று விம்மினாள். அந்த மனிதரின் மனைவியோ தன் மகளைக் கட்டிக்கொண்டு செய்வதறியாது கதறினாள்.
நினைவுகள் தந்த வலியால் மாதவனின் கண்களில் நீர் வழிந்தது. மூன்று நாட்களாக மகிழ்ச்சி தந்த இடம் தங்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டதே. எழில் கொஞ்சும் இயற்கை தன் அளவு மீறாத வரை அதை ரசிக்கலாம் அதை மீறி தன் பேராற்றலுடன் விஸ்வரூபம் எடுத்தால் அதை நம்மால் தாங்க முடியுமா. அவனுள் எழுந்த கேள்விக்கு பதில் இல்லை.
இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை விடுத்து மனிதன் இயந்திரங்களோடு வாழ தொடங்கியது தான் இதற்கு காரணமா மாதவனுக்கு புரியவில்லை. ஆனால் இந்த துக்கத்தின் நிழல் எங்களுக்குள் ஒரு வடுவாக நிலத்திருக்கும் என்று நினைத்த மாதவனின் கண்கள் கண்ணீரை உதிர்த்தது.
எழுத்தாளர் பவானி உமாசங்கர் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings