in , ,

கண்ணால பேசிப் பேசி (பகுதி 3) – சுஶ்ரீ

இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அப்படியே அன்னம் போல நடந்து வந்தா,நேத்து மாதிரியே ஒரு சின்ன பக்கெட்ல தண்ணி,கோல மாவு டப்பா,முகத்துல சின்ன புன்சிரிப்பு.என்ன ரசனைப்பா இந்த பிரம்மனுக்கு, செதுக்கி வச்சிருக்கான், இவளைப் படைக்கறப்ப நல்ல மூட்ல இருந்துருப்பான் போல.

எதுர்ல தூணைப் பிடிச்சிட்டு நின்னுண்டு நான் இவளையே பாக்கறதை உணர்ந்திருக்கணும்,சட்னு தலையைத் தூக்கி என் பக்கம் பாத்தா,  ஒரு தயக்கப் புன்முறுவல்.எனக்கு தைரியம் வந்தது.கொஞ்சம்ஒரு ஸ்டெப் முன்னால வந்து,“என் பேர் ஶ்ரீதர்,யாதவால பி.ஏ. ஹிஸ்டரி செகண்ட் இயர்னு”மளமளனு ஒப்பிச்சிட்டு மூச்சு வாங்கினேன்.

சின்ன சிரிப்புதான் பதில்,தான் பாட்டுக்கு தன் வேலையை ஆரம்பிச்சா.

நான்,”நேத்து போட்ட தேர்க் கோலம் சூப்பர்,அளவா,அழகா இருந்தது.”இதுக்கும் பதில் இல்லை நிமிர்ந்து பார்த்து மீண்டும் ஒரு மந்திரப் புன்னகை.

“நீ எந்த ஸ்கூல் ஒ.சி.பி.எம்.மா?”

“மிஸ்டர் ஶ்ரீதர்,நான் மீனாட்சில பி.யூ.சி படிக்கறேன் எனக்கு ரெண்டு அத்தைங்க,ரெண்டு பேருக்கும் பசங்க இருக்காங்க, போதுமா இன்னும் விவரம் ஏதாவது வேணுமா?”

எனக்கு என்ன மேற்கொண்டு சொல்றதுனு ஒண்ணும் தெரியலை தலையைக் குனிஞ்சிண்டு திரும்பி நடந்தேன்.முளைக்கறதுக்கு முன்னால தோட்டத்துல கிணத்துக்கு பக்கத்துல வந்த கருவேப்பிலைச் செடியை கொத்தாப் பிடுங்கிப் போட்டேனே அந்த ஞாபகம் ஏனோ வந்தது.கண்கள் தானாகப் பனித்தது.

உள்ளே நுழைஞ்சதும் சமையலுள்ல இருந்து அம்மா கேக்கறா, ”ஶ்ரீதரா பல் தேச்சிட்டயா,காபி கலக்கட்டா, எதுத்தாத்து மாமி என்ன கோலம் போட்டிருக்கா பாத்துட்டு வந்தாச்சா” குரல்ல அப்பட்டமா கிண்டல் தொனி இருந்தது.

எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கறது தெரியாம அம்மா கிண்டல் பண்ணறா. ரெண்டு அத்தையாமே ரெண்டு பேருக்கும் பசங்க இருக்காங்களாமே,எப்படி நாசூக்கா என் மனசைப் புரிஞ்சிட்டு ஆரம்பத்துலயே கட் பண்ணி விட்டுட்டா.

பேசாம திரும்ப ஹிஸ்டரி புக்கை எடுத்து வச்சிண்டு கரிகால் சோழனை கான்சன்ட்ரேட் பண்ண முயற்சி பண்ணினேன். அடுத்த அஞ்சு நாட்கள் நான் திண்ணைல உக்காந்து ஹிஸ்டரி படிக்கப் போகலை.சைக்கிளை 15 நிமிஷம் நின்னு துடைக்கலை. தப்பித் தவறியும் கண்கள் மீரான் ஹவுசைத் துளாவிப் பாக்கலை. ஒரு சன்யாசி ரேன்ஜுக்கு மனசு போயிடுச்சு.

ஞாயித்துக்கிழமை ஓரளவு மனசு சமநிலை அடைஞ்சு ஹால் ஊஞ்சல்ல உக்காந்து, தினமணி பேப்பரை புரட்டிட்டிருந்தேன்.சட்னு ஒரு கிண்கிணி நாதம்,”மாமி…..,மாமி இல்லையா அம்பி” ஒரு குறும்புச் சிரிப்போட நின்னது அவளேதான். நான் ஒண்ணும் பேசலை, தலையை குனிஞ்சிண்டு, தினமணில மூணாவது பக்கத்துல, ”சங்கிலியாண்டபுரத்தில் ரெட்டைக் கொலை. போலீசார் தீவிர விசாரணைனு படிச்சிட்டிருந்தேன்”

பக்கத்துல நிழலாடியது,”என்ன ரொம்ப கோவமா, என்கிட்ட பேச மாட்டீங்களா இனிமே” கொஞ்சும் குரல், கெஞ்சும் குரலில்.

தலை நிமிந்து அவள் முகத்தைப் பாத்தேன், அண்ணலும் நோக்க, அவளும் நோக்கினாள் கதைதான். கண்கள் கலந்தது,கனவுகள் பிறந்தது.பேச்சுக்கு அங்கே இடமில்லை. ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்து நின்ற அந்த சந்தனக்கையின் பிஞ்சு விரல்களைப் பற்றினேன்.”அச்சோ அம்மா”என்று கைகளை சட்டென்று இழுத்துக் கொண்டாள்.

அம்மா உள்ளே இருந்து வந்தவ,”வாடிம்மா பொண்ணே,நேத்தே  உங்கம்மா சொன்னா மறந்து போயிட்டேன்,இரு எங்க ஶ்ரீதரனை எடுத்துத் தரச் சொல்றேன்.”

என்னைப் பாத்து,”கோச்சிக்காம செத்த ஸ்டூலை எடுத்துப் போட்டுண்டு அட்டத்துல முன்னால இருக்கற லைஃப்பாய்னு பெரிசா எழுதி இருக்குமே அந்த அட்டை டப்பாவை எடுத்துக் கொடேன். வடாம் பிழியற நாழியை அதுக்குள்ளதான் வச்ச ஞாபகம்”

சந்தோஷமா அந்த டப்பாவை இறக்கிக் கொடுத்தேன்.வெண்கல நாழி கொஞ்சம் பச்சைக் கலர்ல இருந்தது.அம்மா அதைக் கைல வாங்கிண்டு,”செத்த எங்க ஶ்ரீதரனோட பேசிண்டிரு ஒரே நிமிஷம் இதைக் கொஞ்சம் புளி போட்டு தேச்சுக் கொடுத்தடறேன்” சொல்லிண்டே அதை வாங்கிண்டு கிணத்தடிக்கு போயிட்டா.

இப்ப திரும்ப அவ கைகள் ஊஞ்சல் சங்கிலியில், கொஞ்சம் தயக்கத்தோட என் கைகள் அவள் விரல்களை தொட்டது. அவளிடமிருந்து எதுவும் எதிர்ப்பு இல்லை என்று தெரிந்து கொண்ட என் கைகளுக்கு தைரியம் வந்து கொஞ்சம் முன்னேறியது.

“சரி போறும்,விரலை இவ்வளவு அழுத்தினா வலிக்கறது”

“சாரி,சாரி”னு கைகளை எடுத்தேன்,”சுசி சுசி…வந்து நான் வந்து .. உனக்கு ரெண்டு அத்தையா..ரெண்டு பேருக்கும் பசங்களா”

குலுங்க குலுங்க சிரிச்ச சுசிலா,”பெரிய அத்தையோட பையன் ஏழாவது படிக்கறான், சின்ன அத்தையோட பையன், ஹைஸ்கூலுக்கே வரலை இன்னும்”

“அடிப்பாவி ஒரு வாரமா என்னை கலங்க அடிச்சிட்டயே”

“இவ்வளவு மக்கா இருப்பேள்னு எனக்கு எப்படித் தெரியும்?பேசறப்ப எதிர்ல உள்ளவா கண்ணைப் பாத்துப் பேசினா உள் மனசு புரியும்.தேவையில்லாத இடங்களைப் பாத்துண்டு பேசினா, சங்கடப் பட வேண்டியதுதான்.”

இப்ப அம்மா வந்துட்டா,”இந்தாடிம்மா இப்ப பளபளனு ஆயிடுத்து பாரு,உள்ளயே அஞ்சு தட்டு இருக்கு,ஜாக்கிரதை என் மாமியாரோட ஞாபகமா இது ஒண்ணுதான் இருக்கு இப்ப”

“சரி மாமி ரொம்ப தேங்ஸ் நான் வரேன்” என்னைப் பாத்து சின்ன தலை அசைவு, ஒரு அன்னம் அசைந்து அசைந்து  தயக்க நடை நடந்து வெளியேறியது.

இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)   

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கண்ணால பேசிப் பேசி (பகுதி 4) – சுஶ்ரீ

    கண்ணால பேசிப் பேசி (பகுதி 5) – சுஶ்ரீ