இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
திரும்ப வந்து திண்ணைல உக்காந்தேன்.“என்ன மாமா இன்னிக்கு அவ்வளவுதானா கதை” ரெண்டு மூணு குரல் சேந்தாப்பல.
இருங்கோ எல்லாரும்,ஒய்ஃப் ஸ்நாக்ஸ்,டீ கொண்டு வரா சாப்டுட்டு நிதானமா யோசிக்கலாம்.
சுசிலா மிக்சர், வெங்காய வடாம் வறுத்து ஒரு பெரிய கிண்ணத்துலயும் ,டீ ஒரு பெரிய சொம்புலயும் கொண்டு வந்து வச்சா.கூடவே குடிக்க டம்ளர்கள்,கிண்ணங்கள் ஒரு பெரிய தட்டுல.
வரதன் ஒரு வாய் மிக்சர் வாயில போட்டுண்டு,”கொஞ்சம் நமுத்துப் போன மாதிரி இருக்கே.ஒரு வாரத்துக்கு மேல ஆச்சோ,வெங்காய வடாம் சூப்பர்,சின்ன வெங்காயமா?”
சீனு டீ டம்ளரை கைல எடுத்துண்டு,”சொல்லுங்கோ மாமா அப்பறம் என்ன ஆச்சு.”
அனேகமா இப்ப எல்லாரும் சாப்டு கொஞ்சம் தெம்பாயிட்டா.
“அப்பறம் பெரிசா ஒண்ணும் இல்லை, சுசிலா டிகிரி கோர்ஸ்‘லேடி டோக்’ல சேரறப்பவே மீரான் ஹவுஸ் பாய், அவங்களை வீடு காலி பண்ண சொல்லிட்டார்,மூணு வருஷம் அக்ரிமென்ட் முடிஞ்சு போச்சாம்.வீட்டை காலி பண்ணிண்டு ஆரப்பாளையம் பக்கம் வீடு பாத்துண்டு போயிட்டா.அதிகம் பாத்துக்க முடியலை.
நான் டிகிரி முடிச்சேன், கோர்ட்ல வேலை கிடைச்சது. விச்சு மாமா வாரா வாரம் வரார். வத்சலாக்கு ஏகப்பட்ட வரன் வருது, ஆனா உங்ககிட்ட பேசி முடிக்காம வேற ஜாதகத்தை தொடக்கூடாதுனு வச்சிருக்கோம். இப்ப ஶ்ரீதரனுக்கு வேலை கிடைச்சிடுத்தோன்னோ, பெர்மனன்ட் ஆயிடுத்தா. சீக்கிரம் பதில் சொன்னா தேவலை.
அதுக்குள்ளே அம்மா ,அப்பாகிட்ட நான் சுசிலாப் பொண்ணை லவ் பண்றேன்னு சொல்லி அவரும் ஒரு வழியா சம்மதிச்சிட்டார். விச்சு மாமாகிட்ட நாசூக்கா நீங்க வேற இடத்துல பாருங்கோ வத்சலாக்குனு சொல்லியாச்சு.
பாவம் அவர்,”உங்களை நம்பி இத்தனை காலம் வந்த நல்ல நல்ல இடத்தையெல்லாம் நழுவ விட்டேனே என் புத்தியை செருப்பால அடிச்சிக்கணும்”னு புலம்பிண்டே போய் சேந்தார். அடுத்த மாசமே நடந்த வத்சலா கல்யாணத்துக்கு பத்திரிகை கூட வைக்கலை.
வரதன், ”சுசிலா ஆரப்பாளையம் போயிட்டாளே அப்பறம் எப்படி உங்க கம்யூனிகேஷன்லாம்”
“அதெல்லாம் பிராப்ளம் இல்லை,பஜாஜ் சேடக் புக் பண்ணினது கிடைச்சிடுத்தே ஆரப்பாளையம் 10 நிமிஷ தூரம் ஆயிடுத்து. என் அம்மா மீனாட்சி கோவில்ல சுசிலாவோட அம்மாவை ஒரு வெள்ளிக்கிழமை எதேச்சையா பாத்திருக்கா. அப்ப பொற்றாமரைக் குளப் படில உக்கார வச்சு எங்க விஷயத்தை உடைச்சு சொல்லிட்டா.அவங்களுக்கு ஆச்சரியம் ஊமைக்கொட்டான் மாதிரி இருக்கற எங்க சுசிலாவானு கன்னத்துல கை வச்சிண்டுட்டாளாம்.
அவ படிப்பு முடிஞ்சிடும், அடுத்த மாசம் நீங்க முறையா ஆத்துக்கு வந்து கேளுங்கோ என் மாமியார் ஒத்துக்கணும் எங்களுக்கு பிரச்சனை இல்லைன்னுட்டா.
அதுக்கப்பறம் என் பேரன்ட்ஸ் போய் முறையா பொண்ணு கேட்டு,அடுத்த ஏப்ரல்லயே மீனாட்சி மஹால்ல கல்யாணம் முடிஞ்சிடுத்து அவ்வளவுதான் கதைனு டேப் ரிகார்டரை ஆஃப் பண்ணினேன்.
வரதன்,”போங்கோ மாமா உப்புச் சப்பு இல்லாம கதையை முடிக்கறேள்.ஆமாம் ஆரம்பத்துல இருந்தே கேக்கணும்னு இருந்தோம்.நீங்க சொல்றதை தினம் நீங்களே எதுக்கு ரிகார்ட் பண்றேள் இந்த டேப் ரிகார்டர்ல.”
“அது சும்மா”னு சொல்லிண்டே வெத்தலைப் பெட்டியை தூக்கிண்டு எழுந்தேன் ஜமா கலைஞ்சது.
ரிகார்டிங் சமாசாரம் அந்த கேங்குக்கு சொல்லலை,உங்க எல்லாருக்கும் சொல்றேன். ரிடயர் ஆகி 2 வருஷம் ஆச்சு தினம் தினம் ரொடீன் வேலை குளி, சாப்பிடு ,கொல்லைக்குப் போ,தூங்குனு, போர் அடிச்சுப் போச்சு.
குழந்தைகளும் அமெரிக்கா,ஆஸ்திரேலியானு போய் செட்டில் ஆயிட்டா.எதாவது செய்யணுமேனு யோசிச்சேன். சுசிலாகிட்டயும் பேசினேன்.அவ,”பேசாம ஒவ்வொரு மாசமும் எதாவது கோவில் குளம்னு வெளியூர் போகலாம்”னா.
“அது எப்பவாவதுன்னா சரி தினம் தினம் என்ன பண்றது, எனக்கு ஒரு ஐடியா வருது செய்யலாமா சொல்லு”
“ஏடாகூடமா ஏதாவது யோசிக்காம நடக்கற விஷயமா இருந்தா சொல்லுங்கோ”
“நான் ஸ்கூல் டயத்துல இருந்தே ஸ்கூல் மேகசின்ல,காலேஜ் மேகசின்ல எழுதுவேன்,கதை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினா என்ன?”
சுசிலாவோட முகம் சிவந்தது,”ஆமான்னா எனக்கு கூட எத்தனை லெட்டர் எழுதிப் போடுவேள் .அதை யாருக்கும் தெரியாம ஒரு ஃபைல் நிறைய சேத்து வச்சிருக்கேன். நன்னாதான் எழுதறேள் ஆனா சில சமயம் ரொம்ப ரொமான்டிக்கா இருக்கும், சில சமயம் ஜோக்னு நீங்களா நினைச்சிண்டு எதையாவது எழுதிடுவேள்..”
“அப்ப டிரை பண்ணலாமா, உன் பையன் போன தடவை கொண்டு வந்தானே பேனாசோனிக் ரிகார்டர் பீரோல இருந்து அதை எடு.”
“அது எதுக்கு”
“எடு சொல்றேன்”
புத்தம் புது டேப் ரிகார்டர் வெளில வந்தது. அது சரியா இருக்கா செக் பண்ணணும்,ரிகார்ட் பட்டனை அமுக்கி,”ஐ லவ் யூ மை டியரஸ்ட் சுசிலா செல்லம், உம்ம்மா” சுசிலா செல்லமா என் தொடைல ஒரு அடி வச்சா.
இப்ப வால்யூமைக் கூட்டி பிளே பட்டனை அமுக்கினேன், ”ஐ லவ் யூ மை டியரஸ்ட் சுசிலா செல்லம், உம்ம்மா” பலமா சத்தம் வந்தது.
சுசி,”அச்சச்சோ நிறுத்துங்கோ அதை முதல்ல,வாச வரை கேக்கறாப்பல அலறரது.” வெக்கத்துல தக்காளி ஆயிட்டா.
“நாளைல இருந்து திண்ணைல ஒரு ஜமா கூட்டி கதை சொல்லப் போறேன்,அதை ரிகார்ட் பண்ணி வச்சிண்டு நைட் எடிட் பண்ணி பேப்பர்ல எழுதிடணும். கதை முடிஞ்சவுடனே நல்ல பிரபல பத்திரிகைகளுக்கு அனுப்பறது. எப்படி ஐடியா?”
அந்த ஐடியாலதான் இந்த கதையை இது வரை எழுதியிருக்கேன், உங்களுக்கு பிடிச்சிருக்கா? நிஜக் கதையான்னுதானே கேக்கறீங்க, ஹி.,ஹி..இல்லை எல்லாம் டூப்தான். என் ஒய்ஃப் இருக்காளே என்னோட சேலம் அக்கா பொண்ணு அவ பிறந்தவுடனேயே எங்க கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுத்து, காலேஜ்ல எல்லாம் படிக்கலை ஸ்கூல் படிப்போட சரி. கல்யாணம் ஆற வரை சேலத்துக்கு லெட்டர்தான் போடுவேன் அக்கா அப்ஜெக்ட் பண்ண மாட்டா.
இந்தக் கதையை ஸ்வாரஸ்யமா கேட்ட சுசிலா கூட முதல்ல, ”இது கதைதானே, நிஜமா ஏதும் இப்படி நடக்கலையேனு “ சந்தேகமா கேட்டா.
நாளைக்கே போஸ்ட் பண்ணப் போறேன் பெரிய பெரிய பத்திரிகைகள் என் கதைகளுக்கு போட்டி போடப் போறது.”மதுஶ்ரீ”ன்னு புனைப் பெயர். (மதுரை ஶ்ரீதர்க்கு சுருக்கம்) மறக்காம வாங்கிப் படிச்சிட்டு எனக்கு நல்ல விமர்சனமா எழுதுங்கோ சரியா!
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings