எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இரவு எட்டு மணி. ரம்யா தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தாள். மலையடிவாரத்தை ஒட்டிய பகுதி அது. பகற்பொழுதில் பச்சை பசேலென்று ஆரவாரமாகத் தெரியும் மலைக்காடுகள், இரவுப் பொழுதில் பெரும்பாலும் அமைதியாகத்தான் இருக்கிறது.
இன்றைக்கு நிறைய மின்மினிப் பூச்சிகள் தென்பட்டன. இது வழக்கமாக தென்படுவதுதான். ஆனால் ஒரு ஆச்சரியம். மலைச்சாரல் முழுவதும் ஆங்காங்கே மரங்களைச் சுற்றி எண்ணிலடங்கா மின்மினிகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து கொண்டிருந்தன. அது நிர்மலமான வானில் ஆயிரக்கணக்கான வெள்ளி நட்சத்திரங்களைக் கொட்டியது போன்று மிகவும் அழகாக இருந்தது.
அப்பாவும் இரவு உணவை முடித்து விட்டு வந்து திண்ணையில் அமர்ந்தார். மின்மினிகள் மலைச்சாரல் முழுவதும் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்து “ரொம்ப அழகா இருக்குல?” என்றார்.
சிறிது நேரம் மின்மினிகளை ரசித்துக் கொண்டிருந்த ரம்யா அப்பாவிடம் “எப்படிப்பா மின்மினிகளால இப்படி மின்ன முடியுது!” என்று கேட்டாள்.
“மின்மினி தன்னோட உடம்புல இருந்து சில வேதிப்பொருட்களை வெளிப்படுத்துது! அது காற்றோட கலந்;து ஒளியா மாறுது! மின்மினி தான் வெளிப்படுத்தும் இந்த ஒளியை தன்னோட இறக்கை மற்றும் உடல் அசைவுகளால கட்டுப்படுத்துது! இப்படி வெளிப்படுத்துற இந்த ஒளி குளிர்ச்சியான ஒளி! இதுல வெப்பம் இருக்காது! மற்ற பூச்சிகளைக் கவர்ந்து இழுக்குறதுக்கும் எதிரிகள்கிட்டருந்து தங்களைப் பாதுகாத்துக்குறதுக்கும் மின்மினிகள் இந்த முறையைக் கையாளுதுங்க! என்றார் அப்பா.
ஒரு விநாடி தலையாட்டி ஆமோதித்தவள் “மின்மினிகள் எதுக்காக மின்னனும்!” – என்று கேட்டாள். அப்பா நிமிர்ந்தார்.
அவளின் இந்தக் கேள்வியில் அறிவியலையும் தாண்டி வேறு எதையோ தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் தொக்கி நிற்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் இதற்கு உடனடியாகப் பதில் சொல்லாமல் சற்று நேரம் யோசித்தார். பின் பேச ஆரம்பித்தார்.
”உனக்கு பொன்வண்டுகளைப் பிடிக்குமா?” – என்று கேட்டார்.
“பொன்வண்டுகள் எவ்வளவு அழகு! மஞ்சள் பச்சை நீலம் பழுப்புனு எத்தனை நிறங்கள்ல்ல அழகழகா மினுமினுக்குது! எனக்குப் பொன்வண்டுகளை ரொம்பப் பிடிக்கும்!” – என்றாள் ரம்யா.
“பூக்களைப் பிடிக்குமா?” – அப்பா மீண்டும் கேட்டார்.
“பூக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்துல வேற வேற நிறத்துல எவ்வளவு அற்புதமா இருக்கு! பூக்களைப் பிடிக்காமல் இருக்குமா?” – என்றாள் ரம்யா.
“பட்டாம்பூச்சி?” அப்பாவிடம் இருந்து அடுத்த கேள்வி
“பட்டாம்பூச்சிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்! அவைகள் கொள்ளை அழகு!” – என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்
“நிலவின் வெளிச்சம் கடலின் நீலநிறம் இரவின் கருமை!” – என்று அடுத்தடுத்து அடுக்கிக் கொண்டே போனார்.
ரம்யா வியப்புடன் அப்பாவைப் பார்த்தாள். அவரே தொடர்ந்து “இது எல்லாத்ததுக்குமே அடிப்படை ஒளிதான்! இவைகள் எல்லாம் ஒளியை கிரகிச்சுட்டு அதை நிறமா வெளிப்படுத்துதுங்க! –என்றவர் “நிறம் வேற ஒளி வேற இல்லை! இரண்டும் ஒன்றுதான்!” – என்றார்;.
“கடல் மலை பொன்வண்டு பூக்கள் இதெல்லாம் பாக்குறதுக்கு வேறவேறயாத் தெரிஞ்சாலும் அடிப்படைல இவைகளை இணைக்குற ஓரு தொடர்பு இருக்கு! அது என்னனு தெரியுமா உனக்கு ரம்யா?” – என்றார் அப்பா.
“தெரியும்! அது பிரபஞ்சத் தொடர்பு!” – என்றாள் ரம்யா.
“நல்லது! வெறும் பிரபஞ்சத் தொடர்பு மட்டுமில்லை! இந்தத் தொடர்பு எல்லாத்துலயும் ஒரு ஒழுங்குத் தன்மை இருக்குறதையும் நீ; புரிஞ்சிக்கனும்;!” – என்றார்.
ரம்யா மவுனமாக இருக்க அவரேத் தொடர்ந்து “நாம வாழுற இந்த பூமிக்கு ஒரு சூரியன் ஒரு நிலவுங்குற மாதிரி இது எல்லாமே ஒரு நியதிதான்! ஒவ்வொரு உயிரற்ற உயிருள்ள பொருட்கள்ல்லயம் இந்த நியதியை பிரபஞ்சம் ஒரு ஆச்சரியம் போல ஒளிச்சு வைச்சிருக்கு! அதை நாம கண்டும் கேட்டும் துய்த்தும் உணர்ந்தும் வாழ்றதுதான் வாழ்க்கை! அப்படி வாழ்வதற்கான உந்து சக்தியும் இப்படிப் பொதிந்திருக்கும் இந்த அதிசயங்கள்தான்! ” – என்றார் அவர்.
ரம்யாவிற்கு அப்பா சொன்னதை உள்வாங்கிக் கொள்வது சற்று சிரமமாக இருந்தது. அதைப் புரிந்து கொண்டார்.
“நான் உனக்கு இதை எளிமையா விளக்குறேன்!” – என்றவர் “மின்மினிப் பூச்சிகள் மினுமினுக்குறதைப் பார்க்கும் போது உனக்கு எப்படி இருக்கு? – என்று கேட்டார்.
“ரொம்பா மகிழ்ச்சியா இருக்கு!” – இது ரம்யா.
“நம்முடைய இந்த மகிழ்ச்சிக்காகத்தான் மின்மினி மின்னுது! அவ்வளவுதான்” – என்றார் அவர். ரம்யா அமைதியாக இருந்தாள். இந்தப் பிரபஞ்சம் பேராற்றல் மிக்க ஒரு அதிசயம் என்று அவளுக்குத் தோன்றியது.
எழுத்தாளர் பிரபாகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings