எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வாசு பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே போய்விட்டான். கமலம் கோவிலுக்குப் போய்விட்டாள். ராமன் டி.வியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.
கிளம்பும்போதே, ‘ஏங்க… நான் கோவிலுக்குப் போறேன்… இன்னிக்கு ரெண்டு பூஜை இருக்கு, துர்கா பூஜை அப்புறம் விளக்குப்பூஜை. வர கொஞ்சம் லேட்டாகும். நீங்க வாக்கிங் போறதாயிருந்தா பூட்டிட்டு சாவிய எடுத்துக்கிட்டுப் போயிடுங்க‘ என்றுவிட்டுப் போய் விட்டாள்.
ஆறரைக்கு நியூஸ் முடிந்தது. எழுந்து வாக்கிங் கிளம்பத் தயாரானார், ராமன். டிராக் பேண்ட், டீஷர்ட் போட்டுக்கொண்டார். தொப்பியைத் தேடியெடுத்து தலையில் மாட்டிக் கொண்டார். சாவியைத் தேடி எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். நினைவு வந்தவராய் திரும்பிப் போய் பாத்ரூமிற்குள் நுழைந்தார்.
‘வாக்கிங் போய்கொண்டிருக்கும்போது யூரின் முட்டக்கூடாதே… எங்கேயும் ஒதுங்கவும் முடியாதே…. க்ளீயர் செய்துவிட்டே போகலாம்… ‘
வெளியே வந்தார். வீட்டைப் பூட்டினார். சாவியை ஷூ ஸ்டாண்டின் மேல் வைத்துவிட்டு கான்வாஸ் ஷூவை எடுத்தார். சாக்ஸை எடுத்து உதறி மாட்டிக்கொண்டு, ஷூவையும் மாட்டிக் கொண்டு நிமிர்ந்தவருக்கு அப்போதுதான் மொபைல் எடுக்காமல் விட்டது நினைவுக்கு வந்தது. பேண்ட் பாக்கெட்டுக்குள் கை விட்டார். சாவியைக் காணோம்.
சட்டென ஞாபகம் வந்தது. திரும்பினார். ஷூ ஸ்டேன்ட் மேல் இருந்த சாவி பல்லை இளித்தது. எடுத்து வீட்டைத் திறந்தார். மொபைல் கண்ணில் படவில்லை. இங்கும் அங்கும் தேடினார். கிடைக்கவே இல்லை.
‘இது ஒரு தொல்லை. அடிக்கடி எங்கேயாவது வைத்துவிடுகிறோம்… கமலம் இருந்தாலாவது அவளது மொபைலை வாங்கி ஒரு ரிங் விடலாம். சத்தம் போடும் இடம் தேடிப் போய் எடுத்துவிடலாம். இப்போது என்ன செய்ய… மறுபடியும் ஒரு ரவுண்டு தேடினார். அப்போதுதான் திடீரென்று நினைத்துக்கொண்டவராய் பாத்ரூமிற்குள் போனார். வாஷ்பேசின் மேல் அது மல்லார்ந்து கிடந்தபடி சிரித்தது.
‘ அடடா… இங்கே வைத்துவிட்டுதானே ஒன்பாத் ரூம் போனோம்… எப்படி எடுக்க மறந்தோம்…‘ சலித்துக்கொண்டே மொபைலுடன் வெளியே வந்தார். மறக்காமல் போர்ட்டிக்கோ லைட்டை எரியவிட்டுவிட்டு நகர்ந்தார்.
லைட்டைப் போடாமல் போனால் அவள் வந்து, ‘ஏன் இப்படி வீட்டை இருட்டடிச்சு வச்சிருக்கீங்க.‘ என்று கத்துவாள். படிகளில் இறங்கி கீழே வந்து மறக்காமல் காம்பவுண்டு கேட்டையும் சாத்திவிட்டு ரோடில் நடக்க ஆரம்பித்தார்.
நான்கைந்து நண்பர்கள் அவருடன் வாக்கிங் வருவார்கள். எல்லோரும் எல்லா நாளும் வருவதில்லை… ஒரே நேரத்திலும் வருவதில்லை. ஒவ்வொருவராய் கொஞ்சம் முன்னே பின்னே வந்து சேர்ந்துகொள்வார்கள். கிரவுண்டு வந்துவிட்டார். யாரும் வந்து சேர்ந்திருக்கவில்லை. தனியாக நடந்தார்.
‘ நாம்தான் சீக்கிரம் வந்துவிட்டோமோ… ‘
‘இல்லை… வழக்கமான நேரம்தானே… இவர்கள்தான் லேட்டாக வருகிறார்களோ என்னவோ… ‘
யோசித்துக்கொண்டே நடந்தார். எப்போதும் ஆறு ரவுண்டுகள் போவார். சிலசமயம் லேட்டாக வந்து சேருகிறவர்கள், இன்னொரு ரவுண்டு போகலாமே என்பார்கள், அப்போது கூடுதலாக நடப்பார்.
நண்பர் சிதம்பரம் மட்டும்தான் முதலில் வந்து சேர்ந்தார். மூன்றாவது ரவுண்டில், சேதுராமன் வந்து சேர்ந்தார். வேறு யாரும் இன்று வரவில்லை. பேசிக்கொண்டே ஆறு ரவுண்டு வந்தாகிவிட்டது.
சிதம்பரம், ‘பை‘ சொல்லிவிட்டுக் கழன்றுகொண்டார். இன்னொரு ரவுண்டு போலாமே என்றார் சேது. அடுத்த ரவுண்டு முடியும்போது சேது கழன்று கொண்டார். இவர் பிரிந்து இந்தப் பக்கமாக திரும்பிவிட்டார்.
பெரும்பாலும் எட்டுமணி போல கமலம் வந்து சேருவாள். அதனால் போகிற வழியிலேயே டீ குடித்து கொள்ளலாம் என்று யோசித்து டீயைக் குடித்துவிட்டு ஜீபேயில் பணத்தைப் போட்டுவிட்டு மேற்கொண்டு நடந்தார்.
‘போர்டிகோ லைட்டை போட்டுவிட்டு வந்தோமா… ‘ தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். இல்லாவிட்டால் கமலம் எரிந்து விழுவாளே.
ஒருதடவை அவள், ‘வீடு இப்படி இருட்டடிச்சுக் கிடக்குதே… பொழுது மறைஞ்சதுமே வெளீல லைட்டு எரிய வேண்டாமா… அப்புறம் எப்படி லட்சுமி உள்ளே வருவாள்… ‘ என்றாள்.
இவரும், ‘ஆமா… எப்படி உள்ளே வருவாள்… வீடுதான் பூட்டிக்கிடக்கே… ‘ என்று இவர் ஜோக்கடித்தார். அவளோ சுட்டெரித்துவிடுவது போல பார்த்தாள்.
நினைவு வந்தவராய் பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டார். மொபைல் மட்டும்தான் வந்தது. சாவியைக் காணவில்லை.
வலது பாக்கெட், இடது பாக்கெட் இரண்டிலும் தேடினார். இல்லை. டீஷர்ட் பாக்கெட்டில் கைவிட்டார். அதிலும் இல்லை.
‘ஐயோ, எப்போதாவது மொபைலை வெளியில எடுக்கும்போது சாவியும் சேர்ந்து வந்து கீழே ஏதும் விழுந்துவிட்டதா…
‘அய்யய்யோ… சாவியை எங்கே விட்டோம்… ‘ நெஞ்சு அடித்துக்கொண்டது. திரும்பி வந்த வழியிலேயே வேகவேகமாய் நடந்தார்.
எப்போதுமே இடது ஓரமாய்த்தான் நடப்பார். அப்படியே தரையைப் பார்த்துக்கொண்டே நடந்தார்.
‘இதற்குத்தான் சாவியையும் மொபைலையும் ஒரே பாக்கெட்டில் வைக்கக் கூடாது என்பது… மொபைலை எடுக்கும்போது சாவியும் ஒட்டிக்கொண்டே வந்து எங்கேயாவது விழுந்து தொலைத்துவிடும். முன்பு கூட ஒரு முறை அப்படித்தான் நடந்தது. அப்படித்தான் இப்போதும் எங்காவது விழுந்து தொலைததோ என்னவோ… ச்சை… ‘
டீ குடித்த இடம் தேடி… கிரவுண்டும் போய் தேடி…அதற்குள் இருட்ட ஆரம்பித்துவிட்டது. நெஞ்சு பக் பக் என்று அடித்துக்கொண்டது.
‘ கடவுளே… இப்போது வீட்டை எப்படித் திறப்பது… கமலத்துக்கு என்ன பதில் சொல்லுவது… ‘
‘ஏம்ப்பா… வயசாக வயசாக உங்களுக்கு ஞாபக மறதி அதிகமாயிக்கிட்டே போகுது… கொஞ்சம் உஷாராத்தான் இருங்களேன்ப்பா… ‘ மகன் வாசு திட்டுவது மறுஒலிபரப்பாக காதுகளில் விழுந்தது.
இன்னொரு ரவுண்டுதான் போய்ப்பார்க்கலாமா… இப்போது இருள் ஜாஸ்தியாகிவிட்டது. அப்படியும் சாவி கிடைக்கவே இல்லை. எங்கே விழுந்ததோ என்று யோசித்துக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தார்.
வெளி சாவியை மட்டும் எப்போதும் வாசு தனது பர்ஸில் வைத்திருப்பான். அவனுக்கு ஃபோன் போடலாமா… யோசனை ஓடியது. கண்டிப்பாக திட்டுவான்… யோசனையை கைவிட்டார். தரையில் தனது பார்வையை பதித்துக்கொண்டேதான் நடந்தார்.
வீடு நெருங்கப் போகிறது. கடவுளே… இன்றைக்கு அர்ச்சனை இருக்கிறது. வாங்கு வாங்கென்று வாங்கப் போகிறாள் இவள்…
ஏற்கனவே வந்திருந்தால், ‘எவ்ளோ நேரம்தான் கால் கடுக்க நிக்கறது… கொஞ்சமாவது உரைக்க வேணாம்… ‘ என்று கத்துவாள்.
வாசுக்கு ஃபோன் போட்டுவிடலாம் வேறு வழியில்லை என்றெண்ணி போட்டார். என்கேஜ்டு சவுண்டு வந்தது. கொஞ்ச தூரம் நடந்துவிட்டு மறுபடியும் போட்டார். மறுபடியும் என்கேஞ்டு சவுண்டு. தெரு மொக்கில் திரும்பும்போது மறுபடியும் போட்டார். இப்போது ரிங் போனது.
விவரம் சொன்னார்… நன்றாக திட்டினான்… வாங்கிக் கட்டிக்கொண்டார். கடைசியில்… ‘ சரி படிக்கட்டுல உட்கார்ந்திருங்க, வந்துடறேன்… நின்னுக்கிட்டே இருக்காதீங்க… பத்து பதினஞ்சு நிமிஷமாவது ஆகும்… ‘ என்றுவிட்டு கட்பண்ணிவிட்டான்.
‘அம்மா வந்து கடுப்போட உட்கார்ந்திருப்பாடா…‘ என்று சொல்ல வந்தார், இவர். அதற்குள்தான் கட்பண்ணிவிட்டானே, அவன்.
‘ வாசுவிடம் சொல்லி முதலில் ஒரு ட்யூப்ளிகட் சாவி போட்டுவிடவேண்டும்… ‘ யோசித்துக்கொண்டே, காம்பவுண்டு கேட்டில் கைவைத்தவர் மாடியைப் பார்த்தார். பகீர் என்றது.
வீடு திறந்தே கிடந்தது. திடுக்கிட்டார்.
‘பாத்ரூமில் இருந்து மொபைலை எடுத்துக்கொண்டு வந்து பூட்ட மறந்து அப்படியே கிளம்பி விட்டோமோ… ‘
வாசுவுக்கு ஃபோன் போட மொபைலை எடுத்தார். கமலம் இன்னும் வராதிருந்தால் தப்பித்தோம். ஒருவேளை வந்திருந்து உள்ளே இருந்தால் என்ன சொல்லி சமாளிப்பது…
யோசித்துக்கொண்டே படிகளில் ஏறினார். வீட்டுக்குள் கடமுடாவென சத்தம். பின்னாலேயே வாசுவும் வந்து சேர்ந்தான். அப்புறம் வேறென்ன… அர்ச்சனைதான். ஷூ ஸ்டேண்டில் அவர் வைத்திருந்த சாவியை எடுத்து அவள் வீடு திறந்தது தனிக்கதை.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings