எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“கண்டிப்பாக கல்யாணத்துக்கு வரணும்!” என்று சொல்லியபடியே அழைப்பிதழை எடுத்து நீட்டினாள் சந்திரா.
“உள்ளூர் தானே! வராமல் இருப்பேனா! ” என்று மறுமொழி சொன்னாள் அர்ச்சனா.
“ஸ்கூல் பிரின்சிபல் ஆயிற்றே! கொஞ்சம் கவனம் வைத்துக் கொள்ளம்மா !”
“இப்போதே குறித்து வைத்துக் கொள்கிறேன்! சரியா! “
சிரித்துக்கொண்டே தன் தோழியை பார்த்தாள் சந்திரா.
திருத்தமான முகம்.கண்டிப்பும் கனிவும் கலந்த பார்வை.தினமும் மாணவர்களுடன் பழகுகிறாள் இல்லையா!
எண்ணியபடியே அவளது மேஜையை நோட்டமிட்டாள் சந்திரா.
வழக்கமாக ஒரு பள்ளி முதல்வரது மேஜையில் இருக்க வேண்டிய லேப்டாப் க்ளோப் வருகைப் பதிவு ரிஜிஸ்டர் என்று அத்தனை பொருட்களும் அணி வகுத்திருந்தன.
அவற்றிலிருந்து வேறுபட்டு ஒரு உண்டியலும் இருந்ததை ஆச்சரியத்துடன் பார்த்தாள் சந்திரா.
அளவில் சிறியதாகவும் இல்லாமல் மிகப் பெரியதாகவும் இல்லாமல் நடுத்தர அளவில் இருந்தது.
“ஹேய்! என்ன இது! உண்டியல் எல்லாம் வச்சிருக்கே!”
“பில்டிங் ஃபண்டா, இல்லை வேறு ஏதாவதா? “
கண்களை சிமிட்டிக்கொண்டு விளையாட்டாக வினவிய சந்திராவை முறுவலுடன் பார்த்தாள் அர்ச்சனா.
“நீ சொன்ன எதுவும் கிடையாது. சொல்லப் போனால் இந்த உண்டியல் பணம் யாருக்கு போகப் போகிறது என்று எனக்கே தெரியாது”.
“நிஜமாவா! “விழிகளை விரித்தாள் அவள்.
“உன்னால் கொஞ்ச நேரம் இங்கே இருக்க முடியுமா! உனக்கு விவரமாக சொல்றேன்.”
“சொல்லு! சொல்லு ! கேட்கிறேன்.சஸ்பென்ஸ் வைக்காமல் சொல்லு!”
“இரு! உனக்கு காஃபி கொண்டு வரச் சொல்கிறேன். “
அழைப்பு மணியை அடித்து பணியாளரை வரவழைத்தவள், “காஃபி மட்டும் போதுமா !” என்றும் கேட்டுக் கொண்டாள்.
“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு!.முதலில் என்னுடைய முக்கியமான வேலைகளை முடித்துக் கொள்கிறேன். அப்புறம் பேசுவோம்”.
அவள் வேகமாக தன் பணிகளை முடித்து கொண்டிருந்தபோது சுற்றியிருந்த சுவர்களில் ஈகை பற்றிய குறள்கள் எழுதப்பட்டிருந்ததை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சந்திரா.
“என்ன நடந்தது என்று சொன்னால் உனக்கு ஆச்சரியமாக இருக்கும். திடீரென்று ஒரு நாள் இங்கே படிக்கிற ஒரு பையனோட அம்மா ரொம்ப கோபமாக வந்து சத்தம் போட்டாள்”.
அன்றைய நிகழ்ச்சியை அப்படியே விவரித்தாள் அர்ச்சனா.
படபடவென்று பொரிந்து தள்ளினாள் அந்த பெண்மணி.
“யாருங்க அந்த வள்ளி! என் பையன்கிட்டே பணம் கேட்டிருக்கா!”
“எதுக்காக சத்தம் போடுறீங்க? நிதானமா பேசுங்க! முதலில் உட்காருங்க!”
முக்கியமான வேலை ஏதோ பார்த்துக் கொண்டிருந்தவள் அதை மூடி வைத்துவிட்டு அவளை நேராகப் பார்த்தாள்.
“வள்ளி எங்க ஸ்கூல்ல வேலை பார்க்கிற ஒரு பணியாள். அவள் யார்கிட்டேயும் பணம் கேட்டிருக்க மாட்டாளே!”
“ஏங்க ! நான் பொய்யா சொல்றேன். எதுக்காக என் பையன் அரவிந்த் வந்து வள்ளிக்கு ரூபாய் கொடுக்கணும்னு கேட்கணும்!”
“அவ ரொம்ப சுயமரியாதைக்காரி ஆயிற்றே!”, என்றவள் மணியடித்து அவளை வரவழைத்தாள்.
“இவங்க பையன்கிட்டே பணம் கேட்டியா? “
“இல்லையேம்மா! நான் எதுக்கு சின்ன பசங்ககிட்ட போய் பணம் கேட்கப் போகிறேன்? “
அவள் திடமாக சொன்னதும் அரவிந்த்தையும் கூட்டி வரச் செய்தாள் அர்ச்சனா.
வள்ளியைப் பார்த்ததுமே அவன் “நேத்து சாயங்காலம் அழுதுகிட்டு இருந்தீங்களே! இப்போ சரியாயிடுச்சா! “என்று கேட்டான்.
அப்போதுதான் அவர்களுக்கு புரிந்தது .அரவிந்த் அவள் அழுதுகொண்டு யாரிடமோ பேசிக் கொண்டிருந்ததை பார்த்துவிட்டு தானாகவே வீட்டில் வந்து பணம் கேட்டிருக்கிறான் என்பது.
அரவிந்த்தின் அம்மாவால் எதுவும் பேசமுடியவில்லை. “ஸாரிங்க! நான் அவசரப்பட்டு கோபப்பட்டு விட்டேன்”.
“இப்போ புரிஞ்சுதா?”
“சின்ன பசங்க மனசிலே இருக்கிற கொஞ்ச பஞ்ச நல்ல எண்ணங்களையும் பெரியவங்க துடைச்சுப் போட்டு விடுகிறோம். நல்ல மனசு எல்லோருக்கும் வருவது இல்லை!”.
அழுத்தமான குரலில் சொன்ன அர்ச்சனாவை ஏறிட்டவள் மறுபடியும் மன்னிப்பு கேட்டாள்.
“மன்னிப்பு கேட்டு என்ன பண்றதுங்க! யோசிக்காமல் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?”
“சின்ன வயசிலே ஒரு விஷயம் சொல்லுவாங்க. கிணத்திலே விழுந்த தவளை தினமும் மூன்று அடி உயரம் ஏறும். இரண்டடி சறுக்கும். அப்படின்னா அது எப்போ கிணத்தை விட்டு வெளியே வரும்னு கேட்பாங்க!”
“வறுமையில் கஷ்டப்படுகிறவர்களும் அது மாதிரி மேலே வர எவ்வளவோ முயற்சிக்கிறாங்க. ஆனா நம்ம அவங்களை கண்டுக்காம இருந்தாலும் பரவாயில்லை. மறுபடியும் கீழே தள்ளத்தான் முயற்சிக்கிறோம். வள்ளியோட புருஷனுக்கு உடம்பு சரியில்லை. அவ ரொம்ப கஷ்டப்பட்டு மருத்துவம் பார்த்துகிட்டு இருக்கா. எங்க கிட்ட கூட அவ எந்த உதவியும் எதிர்பார்க்கலை. அப்படி இருக்கும் போது தடாலடியாக நீங்க வந்து சத்தம் போடுறீங்க! “.
“என் தப்பை புரிஞ்சுக்கிட்டேன். என்னால் முடிஞ்ச உதவியை இந்த வள்ளிக்கு பண்றேன்”,என்று சொன்னவள் வள்ளியிடமும் மன்னிப்பு கேட்டாள்.
“சரி ! அதற்கும் இந்த உண்டியலுக்கும் என்ன சம்பந்தம்!”
“சொல்றேன்! அந்த அம்மாவை சொன்னேனே தவிர நாங்களுமே வள்ளிக்கு தனிப்பட்ட முறையில் எந்த உதவியும் செய்ததில்லை. யாருக்கு வந்த விருந்தோ ! என்பது மாதிரி அசட்டையாக அலட்சியமாகத் தான் இருந்திருக்கிறோம் என்பதை தாமதமாகத்தான் உணர்ந்தோம். எல்லா ஆசிரியைகளையும் கூப்பிட்டு கலந்து பேசினோம். அப்புறம் எங்களால் முடிந்த எல்லா உதவியும் அவளுக்கு செய்து கொடுத்தோம்”.
“அப்போதான் இந்த மாணவர்கள் எல்லாம் வந்து நாங்களும் ஏதாவது செய்கிறோம் என்று சொன்னார்கள். முதலில் வேண்டாம் என்று சொல்லத்தான் நினைத்தேன். ஆனால் நல்ல குணங்களை நாமும் கொஞ்சம் வளர்த்து விடலாம் என்று தோன்றியது.
முன்பெல்லாம் நிறைய குழந்தைகள் வீட்டில் இருப்பார்கள். கேரிங் அண்ட் ஷேரிங் தானாகவே வரும். இப்போது ஒற்றைப் பிள்ளையாக வளர்வதால் எந்த ஒரு நல்ல குணமும் வருவதில்லை. சமுதாயத்தை நொந்து கொள்வதை விட இருட்டாக இருக்கிறது என்று புலம்புவதை விட சின்னதாக ஒரு விளக்கை ஏற்றி வைப்போம் என்று தோன்றியது. பெற்றோரையும் கூப்பிட்டு வைத்துப் பேசினோம். சக மாணவர்களிடம் அன்பு, கஷ்டப் படுபவர்களிடம் கனிவு மாணவர்களுக்கு வந்தால் நாளைய சந்ததி நன்றாக இருக்கும் என்று உணர வைத்தோம்”.
ஒரு ஆசிரியையாக அவள் யோசித்திருக்கிறாள். சந்திராவுக்கு புரிந்தது..
“இன்றைய மாணவர்களிடையே காணப்படும் வேண்டாத உணர்வுகள் பழக்கங்கள் இல்லாமல் இருந்தால் நல்லது தானே!”
“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் அன்னை வளர்ப்பதிலே அப்படின்னு சொன்ன காலம் போய் அலை பேசி தானே வளர்க்கிறது”.
இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.
“அப்புறம் இந்த உண்டியல் பணம் கஷ்டப்படுகிற யாரோ ஒருவருக்கு என்று தீர்மானித்தோம். அதை செய்வது யார் தெரியுமா!”
“அன்றைக்கு வந்து சண்டை போட்டாளே! அந்த அரவிந்த்தோட அம்மா ஆனந்திதான். பணக்காரியாக பகட்டாக இருக்கிறதை விட பரோபகாரியாக இருப்பது பிடித்திருக்கிறது என்று சொல்கிறாள். தோற்றம் பார்த்து வரும் பாராட்டை விட உதவும் போது வரும் மன நெகிழ்ச்சி சந்தோஷமாக இருக்கிறது”, என்கிறாள்.
“மாணவர்களுடைய கண்ணோட்டமும் மாறியிருக்கிறது. ஏளனமாக பார்ப்பது இழிவாக பேசுவது கிண்டல் செய்வது எல்லாம் விட்டுவிட்டார்கள்.சக மனிதர்களிடம் மரியாதை, பணிவு , இரக்கம், உதவி செய்யும் மனப்பான்மை எல்லாமே வளர்ந்திருக்கிறது.
சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தாள் சந்திரா.அவளுக்கு வியப்பாக இருந்தது.
“உண்மையில் இது மிகப் பெரிய விஷயம்தான். சின்ன சின்ன மாற்றங்களை நாமும் உருவாக்கலாம். நாளைய தலை முறை நலமாக வாழவேண்டும் என்று ஆசைப்படுவது தவறில்லையே!.”
“கோவை மருத்துவமனையில் அன்பின் ஆடை என்று அதிகம் உபயோகிக்காத துணிகளை வாங்கி சீர்ப்படுத்தி நோயாளிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் இலவசமாக வழங்குகிறார்கள் என்று ஒரு செய்தி பார்த்தேன். நிறைய மக்கள் பயனடைந்து இருக்கிறார்கள் என்றும் பார்த்தேன்.சந்தோஷமாக இருக்கிறது”.
நெகிழ்வுடன் சொன்ன சந்திரா ,”நானும் ஒரு தொகை இந்த உண்டியலில் போடுகிறேன்”,என்று எழுந்தாள்.
“பெரிய பெரிய இலக்குகள் எல்லாமே சின்ன சின்ன அடிகளில் தான் ஆரம்பிக்கின்றன இல்லையா!” என்ற அர்ச்சனாவிடம் கை அசைத்துவிட்டு மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அங்கிருந்து கிளம்பினாள் சந்திரா.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings