in

நினைவாலே சிலை செய்து!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அந்த ஏரிக்கரை முழுவதுமே ஜே ஜே என்று கூட்டம் நிரம்பியிருந்தது. எல்லா வயதிலும் மக்கள் அங்கே ஆக்கிரமித்திருந்தார்கள். எல்லாம் சூரிய பகவானின் அருள். அன்றைக்கு கதிரவன் தன் கிரணங்களை  கொஞ்சம் அதிகமாக  செலுத்தியிருந்தான்.

நெதர்லாந்தின் எல்லா ஏரிக்கரைகளுமே அன்று  நிரம்பி வழிந்தன. வெய்யிலை பார்த்ததில் அவரகளுக்கு அப்படி ஒரு கொண்டாட்டம்.

‘வெய்யிலே பார்க்காதவர்களைப் போல ! என்ன இது”, என்று அலுத்துக் கொண்டாள்  மாதவி. 

பொன்னியின் செல்வன் புதினத்தில் வரும் கல்கியின் வீரநாராயண ஏரியின் வர்ணனை அவள் மனதில் தோன்றியது. அன்று அந்த ஏரியின் கரையில் நிறைந்திருந்த மக்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இங்கும் நிறைந்திருந்தார்கள். பார்க்கிங் ஏரியாவில் அத்தனை விதமான கார்கள்.

காற்று அடைக்கப்பட்ட படகுகளையும் பல வேறு பொம்மைகளையும் கொண்டு வந்திருந்தார்கள். ஏரித்தண்ணீரில் நீச்சலடிப்பவர்களும், கால் நனைத்துக் கொண்டாடுபவர்களும், படகுகளில் செல்பவர்களுமாக  மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது.

சிறு குழந்தைகள் குதூகலிக்க, பெரியவர்கள் வயதை மறந்து உற்சாகமாக அவர்களுடன் நேரத்தை கழித்தார்கள். 

மக்கள் கூடும் இடம் என்பதால் எல்லாவித வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தன. ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள், டாய்லெட் வசதிகள் எல்லாமே  சரியாக அமைந்திருந்தன.

தீபாவும் அவளுடைய நண்பர்கள் பட்டாளமும் சாப்பிடுவதற்காக உணவு வகைகளையும் கொண்டு வந்திருந்தனர். தட்டுக்கள், தம்ளர்கள், ஸ்பூன்கள்  என்று கடை‌விரித்து எல்லோருமாக சாப்பிட்டார்கள்.

மாதவிக்கும் எல்லாவற்றையும் கொண்டு வந்து கொடுத்தார்கள்.‌ “அம்மா, நல்லா இருக்கா!” என்ற தீபா, ‘இவங்கதாம்மா ஆனந்தி அம்மா !’என்று  ஒருவரைக் கொண்டு வந்து நிறுத்தினாள்.

தன்னைப் போலவே பெண் வீட்டிற்கு வந்திருக்கும் அந்தப் பெண்மணியை நேசத்துடன் பார்த்தாள் மாதவி.  நிறைய நிழல் கொடுக்கும் மரங்களும், புல்தரைகளுமாக  இதமாக இருந்த அந்த இடத்தில் அவர்கள் அமர்ந்து கொண்டார்கள்.

 பச்சை நிற பிரிண்டட்  காட்டன் புடவையில்  எளிமையாக  இருந்தவர் ,தன் பெயர் தேவகி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“நீங்களும் சென்னை தானா!” என்றாள் மாதவி.

‘ஆமாம் ‘என்றவர் சரளமாகப் பேச ஆரம்பித்தார்.குடும்ப பின்னணி உடல்நலம் என்று எல்லாம் தொட்டு சென்றன அவர்கள் உரையாடல்.

இயல்பாக பேசிக் கொண்டிருந்தவர் சொன்ன ஒரு விஷயம் அவளை திகைப்பிலும் வியப்பிலும் ஆழ்த்தியது. எதிரில் பரந்து கிடந்த ஏரித் தண்ணீரை விட ஆழமான பரந்த மனதுடைய ஒருவரை அவர் கண் முன் நிறுத்தினார் அவர். தன் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தை சொல்ல ஆரம்பித்தார்.

அவருடைய தாயார் பதினாறு வயதில் திருமணம் ஆகி மூன்றே வருடங்களில் வாழ்க்கையை இழந்தவர் . அதற்குள் மூன்று குழந்தைகள் வேறு. தனியொரு மனுஷியாக என் அம்மா எங்களை வளர்த்தார்கள் என்று சொன்ன போது அவர்கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

படிப்பும் இல்லை , வயதும் அதிகம் ஆகவில்லை. என்றாலும் அவரது மன உறுதி குறையவே இல்லை.  எத்தனை போராட்டங்கள், சவால்கள், துயரங்கள்  சொல்லமுடியாத வேதனைகள். மிக சில விஷயங்களை மட்டுமே சொன்னார் என்ற போதிலும் அவையே மனதுக்கு மிகவும்  சங்கடத்தை கொடுத்தன.

எத்தனையோ பெண்கள் எத்தனையோ  விஷயங்களில் சாதித்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு பின்புலம் இருக்கும் இல்லையா!  ஆனால் ஒன்றுமே இல்லாது நடுக்கடலில் எதிர்நீச்சல் அடித்து தன் பிள்ளைகளை கரையேற்றிய அந்த தாயின் நினைவே  தேவகியின்  மனசுக்குள் குடையாக விரிந்தது.

சொந்த தம்பி மட்டுமே கடை வைக்க உதவினான் என்று சொன்னார்.  பர்மா சென்று வாழ்ந்த கதையும், பட்ட கஷ்டங்களும் அவருடைய அம்மா பின்னாளில் சொல்லி இருக்கிறார்கள் என்று சொன்னார்.

ஏரிக் கரையிலிருந்த மக்கள் எல்லோருமே தண்ணீருக்கு சென்றுவிட்டதால் அவர்களால் தடையின்றி பேச முடிந்தது.

“எனக்கு ஒரு விஷயம்தான் புரிவதே இல்லை. திரைப்படங்களையும் பத்திரிகை செய்திகளையும் பார்த்து ஐயோ பாவம் என்று பரிதாபப்படுபவர்கள் நிஜத்தில் தன் பக்கத்தில் நடக்கும்  கஷ்டங்களை கஷ்டப்படுபவர்களை கண்டு கொள்வதே இல்லை. கொஞ்சம் ஆதரவு கொடுத்தால் போதும் என்று கூட ஏன் நினைப்பதே இல்லை!”

மாதவி மிகவும் மனம் வருத்தப்பட்டு பேசினாள். “பறவைகள் கூட பறக்கும்போது ஒன்றிணைந்து கூட்டமாக பறக்கின்றன”.

“சிலபேருக்கு கஷ்டங்கள் அதிகமாக வரும்போது எப்படியாவது மீண்டு வரவேண்டும் என்ற வெறி வந்துவிடும்.‌அதுதான் என் அம்மாவின் வாழ்க்கையிலும் நடந்தது. இன்றைக்கு சாதாரணமாக ஒரு பிரச்சினைக்கே கட்டிய கணவனையும் தான் பெற்ற குழந்தையையும் நிராதரவாக விட்டு விட்டு விவாகரத்துக்கு அலையும் எத்தனையோ  பெண்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு தாய்!”

“இருமலர்கள்” படத்தில் அண்ணன் குழந்தைகளுக்காக தன் காதலை  இனிய வாழ்க்கையை உதறி விட்டுப் போகும் பத்மினியை பார்த்து நாகேஷ்  ஒரு வார்த்தை சொல்லுவார்.‌

சில‌பெண்கள் குழந்தை பெற்ற பிறகுதான் தாயாவார்கள்.‌ சில பெண்கள் தாயாகவே பிறந்தவர்கள் என்று சொல்லுவார். அது உங்கள் அம்மாவின் விஷயத்திலும் உண்மையாகி விட்டது. இளம் வயதில் தன்னுடைய அத்தனை உணர்வுகளையும் கனவுகளையும் எரித்துக் கொண்டு குழந்தைகளுக்காகவே வாழ்ந்திருக்கிறார்கள். சென்னை வந்தபிறகு உங்கள் அம்மாவை பார்க்க வருகிறேன். நிஜமாகவே ஒரு தெய்வப்பிறவி”,   மனம் கனிந்து கூறினாள் மாதவி.

“அவங்க நிஜமாகவே தெய்வமாகி விட்டாங்க. ஆறு மாதமாகிறது!” என்று சொன்னவர் கலங்கியிருந்த கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு லேசாக முறுவலித்தார்.

நதியே ! நதியே ! என்று ஒரு பாடல் ரிதம் படத்தில் வரும்.

“பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்!நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கடந்து போகக்கூடும்” என்ற வரிகள் இன்றைக்கும் சத்தியமான உண்மை! சொன்னமாதவி  தேவகியின் கரங்களைப் பற்றிக் கொண்டு,” நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் ”  என்றாள்.

அவள் கண்களும் கலங்கியிருந்தன.

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அஞ்சு ரூபாய் சமாச்சாரம் (சிறுகதை) – மனோகர் மைசூரு

    புதியதோர் உலகம் செய்வோம்!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்