in ,

அஞ்சு ரூபாய் சமாச்சாரம் (சிறுகதை) – மனோகர் மைசூரு

எழுத்தாளர் மனோகர் மைசூரு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பட்ஜெட் பத்மநாபன் என்று இந்த கதைக்கு டைட்டில் வைத்திருக்கலாம். ஆனால், அந்தப் பெயரில் ஏற்கனவே ஒரு திரைப்படம் வந்துவிட்டதால் எதாவது லீகல் ப்ராபளம் ஆகி விடுமே என்று பயந்தேன். இது வெறும் ‘அஞ்சு ரூபாய் சமாச்சாரம்’ என்பதால் இதையே வைத்து விட்டேன்.

அஞ்சு ரூபாயும் இப்போதெல்லாம் கிடைப்பது அரிது. அதனால், நீங்கள் பத்து ருபாய் சமாச்சாரம் என்று கூட தலைப்பை மாற்றிக்கொண்டு படிக்கலாம். எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. சரி, கதைக்குள்  நுழைவோம்.

நம்ம ஹீரோ பரந்தாமன் பயங்கர பட்ஜெட் பேர்வழி. மாத பட்ஜெட்டை சரியாகப் போட்டு செலவழிப்பதில் கில்லாடி. பட்ஜெட் விட்டுட்டு வேற ஐட்டம் வாங்க வரச்  சொன்னால் முகம் சிவப்பாகி விடும். ஆனால், அவரை கருமி என்ற வட்டத்திற்குள் போட்டு விட முடியாது. மனுஷன் கொஞ்சம் ஓவர் ஸ்ட்ரிக்ட் என்று சொல்லலாம். முன்ஜாக்கிரதை முனுசாமி,  சிக்கன அவருடைய பட்ஜெட்டில் துண்டு விழும் பேச்சே இல்லை.

செலவை விட வரவு எப்போதும் அதிகம். அதை எமெர்ஜெண்சி பந்தில் ஒதுக்கி வருவார். இவர் தான் நம்ம நாட்டுக்கு நிதி அமைச்சராக இருக்க வேண்டியவர் என்று நண்பர்கள் பொன்னாடை எதுவும் போர்த்தாமல் பாராட்டுவார்கள். அந்த புகழ் மழையில் அவர் நனைந்தாலும்,  தம் பட்ஜெட்டில் எப்போதும் கருமமே என்று விழித்து இருப்பார். சிங்காரம் எல்லாம் கலந்த கலவை அவர்.

போன வாரம் ஒரு கிரிடிட் கார்டு-காரன் போன் பண்ணி, ‘சார்ஜ் ஒன்னும் இல்ல, கூட 1000 ரூபா இலவச வவுச்சர் வேற குடுக்கிறேன்’னான். அதுக்கெல்லாம் நம்ம ஆளு மசியலை. எதோ ஒரு வார இதழில் “கடன் அட்டை எனும் பூதம்” என்கிறச் செய்திக் கட்டுரையைப்  படித்தப் பின், இவர் அந்தப் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை.

அவருடைய ஆபிஸ் நண்பர்- கடன் அட்டைகாரர்-  ஒரு தடவை ஒரு நாள் தள்ளி பணம் கட்டப் போய் 1000க்கும் மேல் அபராதம் கட்டினார். அவர் பட்டப்பாடு நம்ம ஆளுக்கு ஒரு பாடமாகியது.

சரி, அவசரத்திற்கு என்னச் செய்வார் என்று நீங்கள் கேட்கலாம். ATM கார்டு உண்டு. ஆனால் அது, பணத்தை எடுக்க மட்டுமே பயன்படும் அட்டை. ஷாப்பிங்க்கு உபயோகப்படுத்த மாட்டார்.

அவர் பொதுவாக மளிகைக் கடைக்குச் சென்றால் லிஸ்ட் போட்டுக் கொண்டு அவற்றை மட்டும் வாங்குவார். கண்ணில் “ஆவலாக தென்படும்” உருப்படிகளை கண்டுக் கொள்ள மாட்டார்.

அன்று அவர் தன் வீட்டிலிருந்து நடைசாரியாக சென்றுக் கொண்டிருந்தார். வீட்டிலிருந்து போன். தர்மபத்தினி கட்டளை விண்ணப்பித்தார். “ஊறுகாய் தீர்ந்து விட்டது. உலா செல்லும் பாதையில் சூப்பர் மார்க்கெட்டிலிருந்துக்  கொண்டு வாங்க”. விண்ணப்பம் என்றால் உத்தரவு தான்.

அரை கிலோ ஊறுகாய் பாக்கெட் டிஸ்கவுன்ட் ரேட் ரூ 135. பில் கௌண்டர்க்கு வந்து கையில் 200 ரூபாய் தாளுடன் நின்றுக் கொண்டார். பில்காரன் அந்தப் பணத்தை டேபிள் ட்ராயரில் போட்டு விட்டு, சில்லறையைத் தேடினார். ரூ 65 பாக்கிக் கொடுக்க வேண்டும். 50, 10 இருந்தன. அஞ்சு ரூபாய் கையில் பிடிப்படவில்லை.

“சார், அஞ்சு ரூபாய் சில்லரை இருக்கா ? பாருங்களேன்”.

“இல்லப்பா, முன்னாடியேச் சொல்லிருந்தா நான் வாங்காமேலேப் போயிருப்பேனே”.

“இல்ல சார், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, கேஷ் கொடுக்கற கஸ்டமர் வருவாங்க. இல்ல, அஞ்சுக்கு எதாவது சாக்லேட் தரவா !.”

“நான் எனக்கு வேண்டியதைத் தான் வாங்க வந்தேன். உன்கிட்ட சும்மாயிருக்குன்னா நான் எதுக்கு வாங்கணும். வேணுமின்னா, பில்லை கான்செல் பண்ணு. ஐட்டம் வாபஸ் வாங்கு”

“சார், இது கம்ப்யூட்டர் பில். ஒன்னும் பண்ண முடியாது. நான் தான் ஐட்டம் எடுத்துக்கிட்டு அமௌண்ட்டை என் கையிலிருந்து போட வேண்டியிருக்கும். சாரி சார். கொஞ்சம் வையிட் பண்ணுங்க சார். யாரோ வர்றாங்க. சில்லறை கிடைக்கலாம்”.

வந்த நபர் கரெக்டா 100 ரூபாய்க்கு பொருள் வாங்கி கேஷ் கொடுத்து சென்றார். அடுத்து வந்த நபர்களும் இப்படி கார்டு, கூகிள்-பே மூலம் தான் பணமாற்றம் செய்தார்கள். அஞ்சு ரூபாய் சில்லறை தகராறில் நபரொருவர் கொல்லப்பட்டதாக செய்தி* முன்பு எப்போதோப் படித்ததாக மனதில் திரையோடியது.

‘அட ராமா’ என்று உதவிக்கு அழைத்தார் நம் பட்ஜெட் ஆள். உடனே,  உதவியும் ஒரு மின்னல் ரூபத்தில் மூளையில் அடித்தது.

“அந்த அஞ்சு ரூபாயை நீயே வச்சுக்கோ. இல்ல, வேணாமின்னா  கோயில் உண்டியல்ல போட்டிடு “. பரந்தாமன் கேசியரிடம் சொல்லி விட்டு அங்கிருந்து வெளியேறினார்.

யாருக்கும் எந்த கெடுதலும் இல்லாமல் இதை நான் முன்னாடியேச் செய்திருக்கலாமே என்று நம் பட்ஜெட்டுக்குப் பட்டது.

வீட்டுக்குச் சென்றப் பிறகு மனைவியிடம் நிகழ்ந்தவற்றைப் படம் காட்டினார். மனைவி பில்லைப் பார்த்தார். ‘நல்ல காரியம் செய்தீர்கள். ஒரு வகையில் பார்த்தால் இங்கே 5 ரூபா நஷ்டம் ஒன்றுமில்லை. பொருளின் அதிகப்பட்ச விலை (MRP) 140. நீங்க கொடுத்ததும் 140. வருத்தப்பட எதுவுமில்லை. சரி தானே’.

 இந்த மாதிரி இக்கட்டிலிருந்துத் தப்பிக்க சுலபமான வழி எங்கோ ஒளிந்திருக்கும். அதை சரியாகக் கண்டுக்கொண்டால் வாழ்க்கைப் படகு சுகமாகப் போகும். இந்த மாதிரி வாழ்க்கை படிப்பினைகளை எந்த கல்லூரியிலும் சொல்லிக்கொடுக்க மாட்டார்கள்.

எழுத்தாளர் மனோகர் மைசூரு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    குப்பை (சிறுகதை) – மனோகர் மைசூரு

    நினைவாலே சிலை செய்து!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்