இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சீனு கேட்டான், ”அதுக்கப்பறம் என்ன லவ்தானே, அதை விவரமா சொல்லுங்கோ மாமா, கல்யாணம் ஏன் பண்ணிக்கலை அந்தப் பொண்ணை,அவங்க வீட்ல அப்ஜெக்ஷனா”
வரதன்,”அட மக்கு சீனு ,கதவு மறைவுல நின்னு மாமா கதையை கேக்கறது யாருனு நினைச்சே, அந்தப் பொண்ணேதான் இந்த மாமி”
உள்ளே சரசரவென புடவை சத்தம், சுசிலா வேகமா கதவு மறைவுல இருந்து நகந்துட்டா.
ஹா..ஹா..னு பெரிசா சிரிச்ச வண்ணம் உள்ளே பாத்த நான் கதையை தொடர்ந்தேன்.
அப்படியெல்லாம் பெரிய ரொமான்டிக் கதை இல்லை.சித்திரை மாசம் அழகர் ஆத்துல இறங்கறப்ப எங்க வீட்ல எல்லாரும், மீரான் ஹவுஸ்ல உள்ள ரெண்டு போர்ஷன்லயும் இருந்து எட்டு உருப்படி எல்லாரும் கும்பலா வைகை ஆத்துக்குப் போவோம். நாட்டுச்சக்கரை ஏலம் கலந்து அது மேலயே சூடம் ஏத்தி தங்கக் குதிரை சவாரி வர அழகருக்கு காட்டுவோம். அந்த சக்கரைப் பிரசாதம் எல்லாருக்கும் கொடுப்போம். அப்ப சரளமா பேசிக்கலாம் பெரிசுங்க கண்டுக்காது.
மெல்ல உள்ளே பாத்தேன் சமையலறைல சுசிலா இருக்கறது தெரிஞ்சது.
ஒரு தடவை சுசிலாவை பழைய சொக்கநாதர் கோவிலுக்கு வரச் சொல்லிட்டு சைக்கிள்ல முன்னால கிராஸ் பார்ல உக்கார வச்சு மாரியம்மன் தெப்பக்குளம் வரை ஜாலி சைக்ளிங். பாவம் முன்னால பார்ல அரை மணி நேரம் உக்காந்து வரது கஷ்டம்தான். ஆனா அந்த சவாரில ஒரு கிக் முத தடவையா நாங்க தனியா வெளில போறோமேனு, ஆனா மனசுக்குள்ளே ஒரு சின்ன பயம் யாராவது தெரிஞ்சவங்க கண்ல பட்டுடுவோமோனு.
ஏதாவது சுசிலாவுக்கு வாங்கிக் கொடுக்கணும்னு ஆசைதான் ஆனா பாக்கெட்ல 65 பைசாதான் இருந்தது. சரினு கற்பக விலாஸ் கூட்டிண்டு போனேன். எதாவது சாப்பிடறயானு பயந்துண்டே கேட்டேன். நல்லவேளை காபி போறும்னுட்டா.ரெண்டு காபி மட்டும் குடிச்சிட்டு அவளை மட்டும் திரும்பறப்ப 4ம் நம்பர் பஸ்ல ஏத்தி விட்டுட்டு கைல 20 பைசா கொடுத்தேன்,சிம்மக்கல் ஸ்டாப்ல இறங்கி வீட்டுக்கு போயிடுன்னு.
தனியா சைக்கிள்ல திரும்பறப்ப பெரிய சாதனை பண்ணின திருப்தி ரெண்டு கையையும் விட்டுட்டு சைக்கிளை விசில் அடிச்சிட்டே ஓட்டிண்டு வந்தேன்.
திரும்ப நான் வீட்டுக்குள்ளே நுழையறப்ப, விச்சு மாமா கூடத்துல நின்னு அம்மா கூட பேசிட்டிருந்தார். என்னைப் பாத்ததும், ”நான் வரேண்டியம்மா,எனக்கு எதுக்கு வேண்டாத பொல்லாப்பு, நல்லதுக்காக சொன்னேன்,விசாலம் உன்னை ரொம்ப விஜாரிச்சா, வத்சலாக் குட்டி அத்தை அத்தைனு சதா உன்னை நினைச்சிக்கறா”சொல்லிண்டே நழுவிட்டார்.
அம்மா என்னைப் பாத்து,”எங்கடா போயிட்டு வரே”
என் யூகம் சரிதான்னு தோணித்து,இந்தக் கிழம் என்னையும் சுசிலாவையும் எங்கேயோ சேத்துப் பாத்திருக்கு. மனுஷன் வம்புக்காகவே உள்ளே நுழைஞ்சு வத்தி வச்சிட்டு போயிருக்கு. அவரோட ஒரே பொண்ணு வத்தல் வத்சலாவை என் தலைல கட்டிடணும்னு அவருக்கு ஒரு ஐடியா இருக்கறது எனக்குத் தெரியும்.
“என்னம்மா இப்படியெல்லாம் கேள்வி கேக்கறே,எதுத்தாத்துல ஒரு பொண்ணு இருக்காளே பேரு கூட மாலாவோ என்னவோ”
அம்மா,”மாலா இல்லை சுசிலா அவளுக்கென்ன இப்ப”
“சொக்கநாதர் கோவிலண்டை நொண்டி நொண்டி நடந்து போயிண்டிருந்தா வலது கால் மணிக்கட்டுல நல்ல அடி ,பாவமா இருந்தது,அதனாலதான் சைக்கிள்ல உக்கார வச்சு சின்னக்கடை வீதில விட்டுட்டு வந்தேன்”
“அதனால என்ன இப்ப,நான் ஒண்ணு சொல்ல வந்தா நீ ஒண்ணு சொல்றயே”
அச்சச்சோ நுணலும் தன் வாயால் கெடும்னு நானே உளறிட்டேனா. ”சொல்லு என்ன இப்ப எதுக்கு மாமா வந்தார் இப்ப”
“பாவம் அவருக்கு ஏதோ பிரச்சனை புலம்பிட்டுப் போறார்,காத்தாலை இருந்து டிபன் கூட சாப்பிடாம எங்கேயோ சுத்திட்டு வரயே அதான் கேட்டேன்,உனக்குப் பிடிச்ச அரிசி உப்புமாவும்,கத்திரிக்கா கொத்சுவும் பண்ணினேன்.ஆறி அவலமாப் போறதேனு கேட்டேன்.”
“ஓ..நான் என்னவோ ஏதோனு பயந்துட்டேன்.”
அம்மாக்கு இப்பதான் லேசா சந்தேகம் வந்தது போல இருக்கு, ”ஏன் அந்த சுசிலா பொண்ணு கோவிலுக்கு தனியாப் போறா, சின்னக் கடை வீதில என்ன வேலையாம்?அதான் குண்டுக் கல்லாட்டாம் அவளோட அண்ணன் ஒத்தன் இருக்கானே”
“அதெல்லாம் நான் விஜாரிக்க முடியுமா,ஏதோ நம்மாலான உதவி செஞ்சேன், அவ்வளவுதான்”
“என்னமோப்பா இந்த விச்சுவானா தன் பொண்ணை காலா காலத்துல உனக்கு கட்டி வச்சிடணும்னு உன் அப்பாகிட்டயும் என்கிட்டயும் சொல்லிண்டே இருக்கான்.படிப்பு முடிச்சு ஒரு வேலை தேடிக்கட்டும் முதல்லேனு நாங்களும் சொல்லிண்டிருக்கோம்”
“போம்மா அந்த உப்புமாவைக் கொடு பசி வயித்தைக் கிள்ளறது.”
கதவு தட்டற சத்தம்,“மாமி உங்க வடாம் பிழியற நாழி, அஞ்சு தட்டும் உள்ளேயே இருக்குனு” வந்து நிக்கறா சுசிலா.
அம்மா,”இதுக்கென்ன அவசரம்,உனக்கே கால் முடியாம நொண்டறே”
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings