இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“ஏண்டி சுசிலா எப்படிடீ நீ மட்டும் இன்னும் இவ்வளவு அழகா இருக்கே? நான் பாரு சுருங்கிப் போயிட்டேன்.”
“அய்யே போறும் உங்க வழிசல்,பொழுது போக்கத்த உங்க தொடுப்புங்க மீதிக் கதைக்கு காத்திருக்கு பாருங்க,போய் வாய்க்கு வந்ததை அளந்து விடுங்க”
“மாமா என்னாச்சு” வரதன் சத்தம் கொடுக்கறான்.
“இதோ வரேண்டா ,பொண்டாட்டியாண்ட கொஞ்சம் பேச விடறேளா எப்பப் பாத்தாலும் கதை கேக்க காதைத் தீட்டிண்டு வந்துடறது. கொஞ்சம் மூட் ஏத்திண்டு வந்தாதானே எனக்கும் சொல்ல வரும்”
சீனு,”இந்த வயசுலயும் ரொமான்சா,உங்க பேரன் பேத்திகளோட டைம் மாமா இது”
“அந்தக் காலம் மாதிரி காதல்ல நளினம் எங்கடா இருக்கு இப்ப? காதல்னா என்னனு புரியாத வயசுலயே கண்ட சினிமா,டி.வி பாத்து கெட்டுப் போறதுகள் குழந்தைகள்.விவரம் தெரிய ஆரம்பிக்கற வயசுல பிரேக்அப் கூட ஆயிடறது.
“சரி மாமா,நீங்க உங்க கதையை தொடருங்கோ இன்ட்ரஸ்டான ஆரம்பம்”
“ஆமாம்,எதுல விட்டேன்?”
சீனு,”அந்தப் எதிர் வீட்டுப் பொண்ணு அழகா குத்த வச்சு உக்காந்து கோலம் போட்டாளே அதோட நிக்கறது”
“ஓ அதுலயே நின்னுடுத்தா, அப்பறம் என்ன நான் கண்ணு கொட்டாம பாக்கறதை அந்தப் பொண்ணு பாக்கலை,ஆனா என் அம்மா பாத்துட்டா”
“ஏய் ஶ்ரீதரா,என்னடா பாக்கறே கோலம் போட கத்துக்கலாம்னு பாக்கறயா” தன் கைல இருந்த கோல மாவு டப்பாவை திண்ணைல டொக்னு வச்சா.வாளித் தண்ணீரை சிக்கனமா தெளிச்சிட்டு என்னைப் பாத்தா.
“ 30 புள்ளி 8 வரிசலை அந்த எதுத்தாத்து மாமி அழகா தேர்க் கோலம் போட்டாளே அந்த மாதிரி உனக்கு வருமானு யோசிச்சிட்டிருந்தேன்.”
“யோசிப்பே, யோசிப்பே அது மாமியா, 15 வயசுப் பொண்ணை மாமிங்கறே,கேட்டா உரிச்சு உப்புக் கண்டம் போட்டுடுவா”
“ஓ நிஜமாவா?நான் கோலத்தை மட்டும் ரசிச்சிட்டு நின்னதுல போடறவா யாருனு சரியா கவனிக்கலை”
“சரி போய் பல்லைத் தேய், சமையலுள்ல காபி கலந்து வச்சிருக்கேன் அப்பாவுக்கும் கொடுத்துட்டு நீயும் குடி”
நான் எதிர்வீட்டு வாசலைத் திரும்பித் திரும்பி பாத்துட்டே தயக்கத்தோட உள்ளே போனேன். அந்தப் பொண்ணு கோலத்தை முடிச்சிட்டு நிமிந்து நின்னு இடுப்புல ரெண்டு கையையும் வச்சிண்டு தன் கோலத்தை தானே ரசிச்சு,ஒரு ஒப்புதல் புன்னகையுடன் தலையை அசைச்சிண்டே உள்ளே போயிட்டா.
அன்னிக்கு அம்மன் தரிசனம் அவ்வளவுதான்.9 மணிக்கு காலேஜ் புறப்படறப்ப சைக்கிளை எடுத்து வெளில நிப்பாட்டி நிதானமா சைக்கிளை துடைச்சிட்டே எதிர் வீட்டுப் பக்கம் கண்களால் துளாவினேன்.ம்ஹூம் அவ கண்ல படல்லை.ஏமாற்றத்தோட சைக்கிள்ல ஏறி காலேஜ் புறப்பட்டேன்.புது அனுபவம் இது, மனசுக்குள்ளே ஏதோ குறுகுறுப்பு இதை எப்படி சொல்றது, சந்தோஷமா,பயமா,திருட்டுத்தனமா எல்லாம் சேந்த புது மாதிரி கலவை மூளைக்குள்ளே.
மறு நாளைக்கு காத்தால ரொம்ப சீக்கிரம் முளிப்பு வந்தது,அவசரமா கதவைத் திறந்துண்டு திண்ணைக்கு வந்தேன்.மனசு படபடனு அடிச்சிக்கிறது. அம்மா வரலைன்னா அந்தப் பொண்ணை உன் பேரு என்னன்னாவது கேட்டுடணும். பேர் தெரியும் இருந்தாலும் எதாவது பேசணுமே.டாண் டாண்ணு உள்ளே இருந்து கடிகார சத்தம்,மணி நாலுதான் ஆறது.நேத்து அவ கோலம் போட வரப்ப என்ன டயம் இருக்கும்! 6 மணிக்கு கொஞ்சம் முன்னே.இன்னும் அவ்வளவு நேரம் ஆகுமா!
திரும்ப உள்ளே போய் பேருக்கு ஒரு புஸ்தகம், திணறித் திணறி எரிஞ்சிட்டிருந்த ஒரு மண்ணெண்ணை விளக்கு எடுத்துட்டு வந்து திண்ணைல செட்டில் ஆயிட்டேன்.இதுல ஒரு நல்லது என்னன்னா, வேற வழியில்லாம ஹிஸ்டரி புக் படிச்சேன்.
அட பரவாயில்லையே நம்ம இண்டியன் ஹிஸ்டரி ஸ்வாரஸ்யமாதான் இருக்கு. 13 வது சென்ச்சுரி தமிழக மன்னர்கள் காலம் ,சங்க காலம் (முற்காலம்) களப்பிரர் காலம் (இடைக்காலம்) மற்றும் பிற்காலச் சோழர்கள். கரிகால் சோழன்,இராஜராஜ சோழன்,இராஜேந்திர சோழன்னு படிக்க படிக்க நேரம் போனது தெரியலை.கடிகாரம் 6 முறை ஒலிச்சப்பதான் சுரணை வந்தது. அவசரமா வெளில எதிர் வீட்டை பாத்தேன்.கதவு இன்னும் திறக்கலை புஸ்தகத்தை மூடி வச்சிட்டு வெளில வந்து நின்னேன்.
ஒரு சின்ன சத்தத்தையும் மிஸ் பண்ணாம காதுகளை ஷார்ப்பா வச்சிண்டேன். எதிர் வீட்டு அந்த ராட்சச கதவு கீச்னு சத்தம் போட்டுட்டே திறந்தது.கண்களை தேச்சு விட்டுண்டு ஆர்வமா இதயம் படபடனு அடிச்சிக்க காத்திருந்தேன்.
வந்தாள் மகா லக்ஷ்மியே…..
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings