in ,

கண்ணால பேசிப் பேசி (பகுதி 1) – சுஶ்ரீ

இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அஞ்சாறு பேரை திண்ணைல உக்கார வச்சு, பாவம் போனாப் போறதுனு கதை சொல்ல ஆரம்பிச்சவுடனே ஒரு குதர்க்கம் பேசறவனாவது கூட்டத்துல இருப்பான், நம்ம சீனு மாதிரி.

சொல்ல ஆரம்பிச்சவுடனேயே “அதனால என்ன”னு ஒரு பிரேக் போடப் பாப்பான். இன்னிக்கும் சுத்திமுத்திப் பாத்தேன் நல்ல வேளை சீனுவைக் காணலை.உற்சாகமா வெத்தலைச்சாறை முழுங்கிண்டு ஆரம்பிச்சேன்.

“அப்துல் மீரான்,மலேஷியால பிசினஸ் பண்றார்”.

“அதனால என்ன”னு கேட்டுண்டே வந்து உக்காந்தான் சீனு.கோபம் பொங்க

அவனைத் திரும்பிப் பாத்தேன்.ஈனு இளிக்கறான்.கதை சொல்ற மூடே போச்சு.

அவனே ஆரம்பிச்சு கொடுத்தான்,”அப்துல் மீரான்,மலேஷியால பிசினஸ் பண்றார்”

ஃபிரஷ்ஷா வெத்தலை பெட்டில இருந்து ரெண்டு திண்டுக்கல் கொழுந்து வெத்தலையை எடுத்து நரம்பை கிழிச்சு சகல சாங்கியங்களோட மடிச்சு வாயில  குதப்பிண்டப்பறம்தான் நிதானத்துக்கு வந்தேன்.

“எதுத்தாப்பல இருக்கே ‘மீரான் ஹவுஸ்’அந்த வீடு அது அவரோடதுதான், ரெண்டு போர்ஷனாப் பிரிச்சு வாடகைக்கு விட்டிட்டிருக்கார், மாசாமாசம் அவரோட ஏஜன்டோ சொந்தக்காரரோ, ஒரு பாய் வந்து வாடகை மட்டும் வசூலிச்சிண்டு போவார். கரெக்டா 3 வருஷத்துல வீட்டை காலி பண்ணிடணும்,பிராமின் ஃபேமிலி மட்டும்தான் வாடகைக்கு வைப்பார்”.

“இதெல்லாம் எல்லாருக்கும் தெரியும் மெயின் ஸ்டோரிக்கு வாங்க”னு, சொன்ன சீனுவை ,அலட்சியம் பண்ணிட்டு தொடர்ந்தேன்.

“நைன்டீன் சிக்ஸ்டி ஃபைவ் மே மாசத்துல ஒரு நாள் காத்தாலை 11 மணி இருக்கும்” சொல்லிட்டு சுத்தி முத்தி பாத்தேன் ராகவன் கஷ்டப்பட்டு கொட்டாவியை அடக்க முயற்சி பண்ணிட்டிருந்தான். சரி கதை சூடு பிடிக்கலை போல அதான்.

”நான் இதே திண்ணைல உக்காந்திருந்தேனா , எதுத்தாப்பல ஒரு குதிரை வண்டி வந்து நின்னது.அதுல இருந்து முதல்ல குதிச்சது பாவாடை தாவணில இருந்த அந்தப் பெண்”. அன்னிக்கு நான் ஆர்வத்தோட நிமிந்து உக்காந்தேன்.இப்ப திண்ணைல இருந்த எல்லாரும் நிமிந்து உக்காந்தாங்க, சீனு உட்பட.

“ம்..அப்பறம்” ரெண்டு மூணு குரல் ஆர்வத்தோட ஒலித்தது.

“சுசிலாக் குரங்கு பாத்து குதிடி, விழுந்து வைக்கப் போறே” பின்னாலயே இறங்கினது அவளோட அண்ணன் போல. இறங்கினவன் என்னைப் பாத்து ஸ்நேகமா சிரிச்சான். என் கண்ணு அந்தப் பொண்ணை விட்டு அகல மறுத்தது.

வயசுப்பா என்ன பண்றது.

ராகவன்,”அப்ப உங்க வயசு என்ன”

“என்ன சிக்ஸ்டி ஃபைவ்ல நான் பி.ஏ. முத வருஷம் முடிச்சு செகண்ட் இயர் போறேன்,படிப்புல கொஞ்சம் மந்தம்னு புதுசா ஆரம்பிச்ச ‘யாதவா காலேஜ்ல’ ரெகமண்டேஷன் பிடிச்சு அப்பா சேத்து விட்டார்.

சீனு,”ரெண்டுக்கும் சரியான வயசுதான்,அப்பறம்”

“அப்பறம் என்ன மறுநாள்ல இருந்து படிக்கறதுக்கு காத்தாலை சீக்கரம் எந்திருச்சிண்டேன்.இதே திண்ணைலதான் புஸ்தகத்தை வச்சிண்டு குறை வெளிச்சத்துல அரைக் கண்ணை மூடிண்டு படிக்கறாப்பல உக்காந்துப்பேன்.என் அப்பாவுக்கு ஆச்சரியம் பிள்ளைக்கு படிப்புல ஆர்வம் வந்துட்டதேனு.அதை அம்மா கிட்ட சொல்லி இருக்கார்.

அம்மா தோள்ல முகவாயை இடிச்சிண்டு,”உங்க பையன் உங்கள மாதிரிதானே இருப்பான்,கொஞ்ச நேரம் நின்னு பாருங்கோ, அவன் படிப்பு லட்சணம்”

அம்மா சொல்லி முடிக்கறதுக்குள்ளே அந்தப் பொண்ணு,பேரு கூட ஏதோ சொன்னாங்களே லீலாவோ,மாலாவோ( சுசிலான்ற பேரு மனசுல பசுமரத்தாணி போல பதிஞ்சிருக்கு) அவ எதிர் வீட்ல இருந்து ஒரு சின்ன டப்பால கோல மாவும்,சின்ன பக்கெட்ல தண்ணியுமா வெளில வந்தா.

அடடா,அடடா ஸ்டைலா வலது கையல இருக்கற வளையல்களை கொஞ்சம் மேலே தூக்கி விட்டுண்டு இடது கைல பக்கெட்டை எடுத்து தண்ணீர் தெளிக்கற அழகு இருக்கே அதை ரசிக்க ரெண்டு கண்கள் பத்தாது.

அது முடிச்சு, பாவாடையை லேசா தூக்கி இடுப்புல சொருகிண்டு ஒரு காலை லேசா உள்பக்கம் இன்னொரு கால் கொஞ்சம் நேரா வச்சு குதிங்கால்ல குத்தவச்சு உக்காந்து கோலப் பொடி டப்பாவை நளினமா கைல எடுப்பா பாருங்க.

இப்ப சீனு உட்பட எல்லாரும் ஆர்வம், மெளனம் ஒருசேர முன்னால நகர்ந்து உக்காந்து என் முகத்தையே பாக்கறாங்க.  நான் வேணும்னே இருங்கோ நான் ஒரு வாய் ஜலம் குடிச்சிட்டு வரேன்னு எழுந்தா, சுசிலா கதவுக்குப் பின்னால இருந்து குட்டி பித்தளைச் சொம்புல ஜலத்தை நீட்டறா.

என் காதுல மட்டும் விழறாப்பல, ”எல்லாத்தையும் உளறிக் கொட்டாம சென்சார் பண்ணி பேசுங்கோ”

அவ முகத்தை நிமிந்து பாத்தேன் இந்த வயசுலயும் முகத்துல வெட்கத்தைப் பாருங்கப்பா.

இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)   

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஃபைவ் ஸ்டார் வைத்தியம் (இறுதி அத்தியாயம்) – சுஸ்ரீ

    கண்ணால பேசிப் பேசி (பகுதி 2) – சுஶ்ரீ