இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“இல்லைடி”னு நடந்தது பூராவும் கோர்வையா சொன்னேன்.
“ஓகோ வீண் மாய்மாலம் பண்ணி 20,25 ஆயிரம் வேட்டு வச்சாச்சு, தாங்காதே மருமக ஒண்ணு கேட்டா, சரி அடுத்து இப்ப என்ன?”
“பிளட் டெஸ்ட் ரிபோர்ட் இன்னிக்கே மெயில்ல வந்துடும் அதை பிரின்ட் எடுத்துட்டு நாளைக்கு நியூராலஜிஸ்டை பாக்கணும்,எனக்கு பயமாதான் இருக்கு அம்மாக்கு ஒண்ணுமில்லாம இருக்கணும்னு திருப்பதி பாலாஜிக்கு வேண்டிட்டிருக்கேன்”
“அம்மாவும் பிள்ளையும் நல்லா நாடகம் ஆடுங்க,எனக்கு ஹாரமும் வேண்டாம் இந்த பாரமும் வேண்டாம்,நான் எங்கம்மா வீட்டுக்கு வேலூர் போய் ஒரு மாசம் இருக்கப் போறேன்.”
நான் ஒண்ணும் பேசலை இது வாயத்தம் பண்ற நேரமில்லைனு.
நைட் ரிபோர்ட் வந்து பிரிண்ட் எடுத்தாச்சு,என் மூளைக்கு எட்டின வரை எல்லாம் நார்மல்தான்.ஆனா டாக்டர்தான் சொல்லணும்.
மறுநாள் ஆபீசுக்கு லீவு போட்டாச்சு,11 மணிக்கு ரிபோர்ட்டை எல்லாம் எடுத்துட்டு அம்மாவையும் கூட்டிட்டு டாக்டர் ஜலபதிராவை பாக்க போனோம். 12 மணி வாக்கில் ஜலதரிசனம் கிடைச்சது.
“ரண்டி,ரண்டி ரிபோர்ட்ஸ் தெச்சாரா”ஜலபதிராவ் புன்னகையோட வரவேற்றார்.
ரிபோர்ட்ஸ் வாங்கி திருப்பித் திருப்பி பாத்துட்டு “அட எல்லாம் நல்லா இருக்குப்பா, கண்ணுக்கு போற நரம்பெல்லாம் நல்லாவே இருக்கு. சரி ஒரு 15 நாளைக்கு மருந்து எழுதித் தரேன்.இதுல இருக்கற மருந்துகளை சாப்பிடட்டும். அதுக்கப்பறமும் வலி இருந்தா வாங்க ஒரு ரெண்டு நாள் அட்மிட் பண்ணி கம்பளீட்டா பாத்துடுவோம்.நம்ம பார்மசிலயே எல்லா மெடிசனும் வாங்கிக்கங்க.”
பார்மசிக்கு போய் இன்னும் ஒரு ஆறாயிரத்துக்கு கார்டை தேச்சிட்டு ஒரு ஆட்டோ பிடிச்சு வீடு வந்து சேர்ந்தோம்.
உள்ளே நுழைஞ்சவுடனேயே கலகலனு சரோவோட சந்தோஷக் குரல்.
ஓ அவளோட சித்தி,சித்தப்பா வேலூர்ல இருந்து வந்திருக்காங்க.
பரஸ்பர குசல விசாரணைகள் முடிஞ்சது. அம்மா தன் தலைவலி டாக்டர் கிட்ட போயிட்டு வந்தது, ஒரு மூட்டை மாத்திரைகள் வாங்கிட்டு வந்தது எல்லாம் விவரமா லலிதா சித்திக்கு சொன்னா.
“அடப் பாவமே இதுக்கா இவ்வளவு செலவு பண்ணி வைத்தியம்? ரெண்டு வருஷத்துக்கு முன்னால எங்க சம்பந்தி அம்மாக்கு இதே பிராப்ளம்தான்,நான்தான் வைத்தியம் செஞ்சு அனுப்பினேன்.இப்பவும் தலைல வச்சு தாங்கறா, என் சம்பந்தி அம்மா லலிதாம்மா மாதிரி உண்டானு.”
சரோ பெருமையா தன் சித்தியை பாத்துட்டு என்னையும் ஓரக்கண்ணால பாத்துட்டே, ”இங்கே நம்ம பேச்சை யாரு கேக்கறா, ஈரைப் பேனாக்கி,பேனை பெருமாளாக்கின கதைதான்”
“சரி சும்மா இருடி நான் வந்துட்டேனில்லை உன் மாமியாரை சரி பண்ணிட்டுதான் கிளம்புவேன்.”
“ம்க்கும் என்னவோ பண்ணுங்க நான் உனக்கும்,சித்தப்பாக்கும் காபி கலக்கி எடுத்துட்டு வரேன்.”
லல்லு சித்தி ஒரு துண்டு பேப்பரை எடுத்து ஏதோ கிறுக்கினா,
”மாப்பிளை இந்த மாத்திரை எல்லா மருந்து கடைலயும் கிடைக்கும் வாங்கிட்டு வந்துடுங்க”
இன்னும் மருந்தானு மனசுல நினைச்சிட்டே போய் பக்கத்துல இருந்த கடைல போய் கேட்டேன்.டக்னு ஒரு ஸ்டிரிப் எடுத்து கொடுத்து 25 ரூபா சார்னான்.
வாங்கிட்டு வந்து சித்தி மாமிகிட்ட கொடுத்தேன்.
அம்மாவைப் பாத்து நீங்க உங்க பெட்ல படுங்க இதோ வரேன்னு கைதேர்ந்த வைத்தியர் மாதிரி கொஞ்சூண்டு சுடு நீர்ல ஒரு மாத்திரையை கரைச்சு எடுத்துட்டுப் போய் அம்மாவோட நெத்தி பூரா காவிக் கலர்ல தடவி விட்டா.”இந்த பத்து ஒரு ரெண்டு நாள் மூணு வேளை போட்டு விடறேன்,நியூரலஜிஸ்டும் வேண்டாம் ஐ ஸ்பெஷலிஸ்டும் வேண்டாம்.”
சொன்ன படி அம்மா ரெண்டாவது நாளே,”வாசு நிஜமாவே எனக்கு சுத்தமா தலைவலி போயிடுச்சுடா”ன்றா
இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings