in , ,

ஃபைவ் ஸ்டார் வைத்தியம் (பகுதி 2) – சுஸ்ரீ

இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பண்டிகைன்னா கொஞ்சமா பட்சணம் பண்ணினேன், உன் பொண்டாட்டி பண்ணினா நான் ஏன் அடுப்படிக்கு போகப் போறேன்.

சட்னு திரும்பிப் பாத்தேன் சரோஜா எங்கயாவது பின்னால நிக்கறாளானு. ”சரிம்மா நாளைக்கு போலாம், மொபைல் ஃபோன் ராத்திரில அதுவும் கண்ணாடி இல்லாம பாக்காதே”

போன தடவை சரோவுக்கு கண் செக்அப் போன போது 400 ரூபாதான் கன்சல்டிங் ஃபீஸ் வாங்கினாங்க. எதுத்தாப்பல வசந்தபவன்ல பூரிமசாலாவும் காபியும்.ஆட்டோ காசு எல்லாம் சேத்து ஆயிரம் ரூபாக்குள்ள முடிஞ்சது. அதனால தைரியமா அம்மாவை ஆஸ்பிடல் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டேன்.

ராத்திரி படுத்துக்கறப்ப,எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்த சரோ, “என்ன அம்மாவும் பிள்ளையும் சாயந்தரம் சோஃபால உக்காந்து கொஞ்சிட்டிருந்தீங்க”

“அதில்லை சரோ கண்ல எதோ பிராப்ளம் ரெண்டு மூணு மாசமானு அம்மா சொன்னா, உச்சந்தலைல ஏக வலியாம் சரி நாளைக்கு போலாம்னேன்.”

“உங்கம்மாக்கு பாம்புக் காது,நான் ஹாரம் கேட்டது கேட்டிருப்பா,நாமளும் ஏதாவது செலவு வைப்போமேனு சொல்லியிருப்பா”

”சே,சே என்னடி இப்படி தப்பாவே யோசிக்கறே, 2.5 லட்சம் ஹாரம் எங்கே,400 ரூபா கண் பரிசோதனை எங்கே”

“சரி சரி நீங்க ஆச்சு உங்கம்மா ஆச்சு, போய் மடில படுத்துண்டு கொஞ்சிக்கோங்க,சரியான அம்மாக் கோண்டு”

அப்பறம் ஏதேதோ வழக்கம் போல தாஜா பண்ணி…….சரி விடுங்கப்பா.

மறுநாள் ஆபீசுக்கு லீவ் போட்டாச்சு.ஒரு ஆட்டோ பிடிச்சு 9.30க்கே அந்த உங்கள் வாழ்வை ஒளி மயமாக்கும் ஆஸ்பத்திரிக்கு போனோம்.

வரவற்பு மேஜைல இளநீல ஆடை சுந்தரிகள் மூணு பேர் ஒரே மாதிரி ஸ்விச் போட்ட மாதிரி சிரிச்சாங்க,”குட் மார்னிங் சார்”னு.பின்னால திரும்பிப் பாத்தேன் யாருக்கு சொல்றாங்கனு,அட எனக்குதான்.

“அம்மாவுக்கு கண் செக் பண்ணணும்”

“எஸ் சார் பேமென்ட், கார்டா கேஷா சார்?”

என்ன இது எடுத்தவுடனே இப்படினு சுருக்னு இருந்தது,சமாளிச்சு கார்ட் பேமென்ட்னேன்.

அந்த கையடக்க மெஷின்ல விரல்களை ஒத்தி எடுத்து என் கார்டை வாங்கி சொருகி என்கிட்ட நீட்டினாள் புன்னகையுடன்”சிக்ஸ் ஹன்ட்ரட் ஒன்லி சார்”

அட கூட்டிட்டாங்களா கன்சல்டேஷன் ஃபீஸ். பேர்,வயசு எல்லாம் கேட்டு கம்பயூட்டர்ல ஏத்தி சர்ர்ர்னு பிரின்டர்ல வந்த பேப்பரை ஒரு குட்டி ஃபோல்டர்ல போட்டு ஒரு கச்சல் சகோதரி கிட்ட கொடுக்க அவர் அதை எங்கேயோ தூக்கிட்டு போனார்.

அம்மாவும் நானும் சென்னை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் ஸ்டேஷன்ல இருக்குமே வரிசை கட்டின ஸ்டீல் சேர் அந்த மாதிரி இருந்த சேர்ல உக்காந்தோம். அவ்வளவுதான் எங்களை மறந்துட்டாங்க போல.“குட்மார்னிங் சார்,கார்ட் பேமென்டா கேஷ் பேமென்டானு” ரிசப்ஷன்ல இருந்து அடுத்தடுத்து இதே சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

ஒரு அரை மணி நேரத்துக்கப்பறம் ஒரு சேச்சி வந்து,

”அம்மாக்குதானே,அம்மா தலையை லேசா தூக்கி கண்ணைத் திறங்கனு”ரெண்டு கண்லயும் சின்ன பாட்டில்ல இருந்து டிராப்ஸ் சொட்டிட்டு ”கண்ணை மூடி வச்சிக்கங்க,இந்தாங்க துடைச்சுக்க பஞ்சுனு”கொடுத்துட்டு போனாங்க.இதே ரிச்சுவல் 15 நிமிஷ கேப்ல 2 தடவை,கண்ல டார்ச் அடிச்சு பாத்துட்டு, ஒருவழியா அரை மணி நேரத்துக்கப்பறம் அம்மா பேரைச் சொல்லி கூப்பிட்டார் ஒரு சிஸ்டர்??

ஒரு வசதியான கன்சல்டிங் ரூமுக்குள் செலுத்தப் பட்டோம்.உண்மைலயே அழகான இளம் டாக்டர்,”வாங்கம்மா இந்த சீட்ல உக்காருங்க”னு ஒரு கண்பரிசோதனைக் கருவி முன் உட்கார வைத்தார்.

பரிசோதனை செஞ்சது பூரா விளக்கமா எழுதினா நீங்க படிக்காம பாதில விட்டுட்டு போயிடுவீங்கனு தெரியும்.அதனால அந்த டாக்டர் கடைசியா சொன்னதை சொல்றேன்.”ஒண்ணும் பயப்படற மாதிரி இல்லை,ஆனா ஒரு தடவை கம்ப்ளீட் செக்அப் பண்ணிடுங்க,எதிர்ல இருக்கற மல்டிஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரிக்கு எழுதிக் கொடுத்திருக்கேன்.எல்லா டெஸ்டும் பண்ணிடுங்க. நியூரோ சர்ஜன் அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டுப் போங்க”

அம்மாவைப் பாத்து, “பயப்படாதீங்கம்மா அனேகமா ஒண்ணும் இருக்காது சீக்கிரம் சரியாப் போயிடும்”

நான் கேட்டேன்,”எதுக்கு டாக்டர் நியூரோ சர்ஜன் கன்சல்டன்சி”

“ஆக்சுவலா ரெண்டு கண் விழியும் மூளையோட கட்டளைப் படி சுழல மாட்டேன்து,கண் நரம்புகள் ஏதாவது அழுந்தியிருக்கா இல்லை ,எதாவது நரம்புல பிளீடிங் இருக்கா,என்ன பிராப்ளம், ஏன் உச்சந்தலைல வலிக்குது, எப்படி சரி பண்ணலாம்னு அவர்தான் சொல்ல முடியும்”சொல்லிட்டு அவ்வளவுதான் போகலாம்ன்ற மாதிரி பாத்தார்.

சரிதான் நம்ம அறுநூறு ரூபாய் தீந்து போச்சு போலனு அம்மாவைக் கூட்டிட்டு வெளியே வந்தேன்.

எதுத்தாப்பல நாலு கட்டிடம் தள்ளி அந்த பிரம்மாண்டமான மல்டி ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரி பைஃவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி ஜொலித்தது.

உள்ளே நுழைஞ்சவுடனே இங்கேயும் ரிசப்ஷன் கவுன்டர்.அந்த நடுத்தர வயது மனிதர் தன் கண்ணாடியை மேலே தூக்கி நெத்தில விட்டுட்டு “ஓ.பி.யா அட்மிஷனா என்ன பண்ணணும், பேஷன்ட் யாரு.”

“இல்லை சார் அம்மாவை டாக்டர் ஜலபதிராவை பாக்கச்சொல்லி ஐ சர்ஜன் அனுப்பினார்.

1200 ரூபா கார்டா கேஷா?

கார்ட்தான் சார்னு என் கார்டை நீட்டினேன்.

ஒரு அச்சடித்த பேப்பரை நீட்டி,”இதுல பேஷன்டோட டிடெயில் பில் பண்ணி அவங்க ஆதார் கார்டோட கொடுங்க.”

“ஆதார்கார்ட் ஃபோன்ல இருக்கு பரவாயில்லையா சார்”

அவர் நெத்தில இருந்த கண்ணாடியை இறக்கி விட்டு என்னைப் பாத்தார்,”சரி பரவாயில்லை ஃபார்ம் ஃபில் அப் பண்ணி கொடுங்க”

இங்கே ஒரு ஃபோல்டர் தயார் பண்ணி கைல கொடுத்தார்,அங்கே O.P கவுன்டர்-2 ல கொடுத்துட்டு அங்கே சேர்ல வெயிட் பண்ணுங்க டாக்டர் வந்ததும் கூப்பிடுவார்.

அடேயப்பாடி இங்கே ஏகப்பட்ட பேர் சேர்கள்ல காத்திருக்காங்க.ஆனா வேற வேற ஸ்பெஷலிஸ்ட் டாக்டரைப் பாக்க.

இந்த தொடர்கதையின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வராத அழுகை (சிறுகதை) – நாமக்கல் எம். வேலு

    ஃபைவ் ஸ்டார் வைத்தியம் (பகுதி 3) – சுஸ்ரீ