in ,

அப்பாவின் சொத்து (சிறுகதை) – கோபாலன் நாகநாதன்

எழுத்தாளர் கோபாலன் நாகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அன்று ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை தினமாதலால், சற்றே ஓய்வாக அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த ரவிக்கு, அப்பாவின் நண்பர் கேசவனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு அதிர்ச்சி செய்தியை கொண்டு வந்தது.

அதாவது, தனது தந்தை கிருஷ்ணன் இறந்துவிட்டார் என்ற செய்தியை அவரது நண்பர் கூறியவுடன், ரவி மிகவும் வருத்தமடைந்தான். உடனடியாக மனைவி மஞ்சுவுடன், அப்பா இறுதியாக வசித்து வந்த விழுப்புரம் அருகிலுள்ள மங்களகுடிக்கு விரைந்தான்.

பயணத்தின்போது அவனது நினைவலைகள் பின்னோக்கி சென்றன.

பணி ஓய்விற்குப்பின் கிருஷ்ணன் சில காலம் மகனுடன் சென்னையில்தான் இருந்தார். ஆனால், தற்போது பல குடும்பங்களில் நிகழ்வது போல., மருமகளுக்கு தாம் அவர்களுடன் இருப்பது பிடிக்கவில்லை என்பதை சில,பல குத்தல் பேச்சு, செய்கைகள் மூலம் தெரிந்து கொண்டார்.

குடும்பத்தில் தம்மால் பிரச்சனை ஏதும் வரவேண்டாம் என நினைத்த அவர், மகனிடம் தாம் சொந்த ஊரான மங்களக்குடிக்கு சென்று வசிக்க போவதாக தெரிவித்துவிட்டு, புறப்பட்டு சென்றுவிட்டார்.

தாம் ஊருக்கு புறப்பட்டு செல்வதாக கூறிய பிறகும் மகனோ, மருமகளோ தன்னை போக வேண்டாம் என தடுத்து ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என்பது அவரை மேலும் வருத்தமும், கோபமும் கொள்ள செய்தது.

சொந்த ஊருக்கு திரும்பிய அவருக்கு, மனைவி பரிமளம் உயிருடன் இருந்தபோது கற்றுக்கொண்ட சமையல்கலை இப்போது கை கொடுத்தது.

தனியார் கம்பெனியில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற கிருஷ்ணன், மாதம்தோறும் கிடைத்த சொற்ப பென்ஷன், மற்றும் சேமிப்பு தொகையை வைத்து சமாளித்து வந்தார்.

மகன் ரவியோ, மருமகளோ, பேரன் என யாருமே தன்னை பார்க்க வரவில்லையே என மிகவும் வருத்தமடைந்தார். ஆனால், ரவி மட்டும் எப்போதாவது கைபேசியில் ஒரு நிமிடம் பேசுவான்.

கிருஷ்ணன் தனக்கு ஏதாவது உடல்நிலை சரியில்லை என்றால் கூட, நண்பர்கள் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவரை சென்று பார்த்து வருவார்.

“வீடு வந்துடுச்சி, இறங்குங்க“ என்ற மனைவியின் குரல் ரவியை மீண்டும் நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.

வீட்டினுள் நுழைந்த ரவி, வீட்டின் முற்றத்தில் நடுவில் கிடத்தப்பட்டிருந்த தந்தையின் உடலை பார்த்து சற்றே கண்கலங்கினான்.

அப்போது, அவன் காதில், “அழுதது போதும், இறுதி சடங்குகளுக்கு ஏற்பாடு செய்ய சொல்லுங்க, இங்கேயே செஞ்சுட்டு போயிடலாம்” என்றாள் மஞ்சு.

ரவி, உடனே தந்தையின் நண்பர் கேசவனிடம், “அப்பாவோட இறுதி சடங்குகளுக்கு இங்கேயே ஆட்கள் கிடைப்பாங்கல்ல? நீங்கதான் ஏற்பாடுகள் செஞ்சு உதவனும்” என்றான்.

அப்போது கேசவன், “கொஞ்சம் பொறுங்க தம்பி, உங்க அப்பா என்கிட்ட, அவருடைய மறைவிற்கு பிறகு செய்ய சொல்லி சில பொறுப்புகளை கொடுத்துள்ளார், அவற்றை நான் நிறைவேற்ற வேண்டியுள்ளது” என்றார்.

அப்போது ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வீட்டின் வாயிலில் வந்து நின்றது.

அதில் வந்தவர்களில் ஒருவர், “மருத்துவ கல்லூரிக்கு போன் செய்தது யாரு?” என கேட்டார்.

கேசவன் முன்னே வந்து, நான்தான் போன் செய்தேன், நான் இறந்தவரின் நண்பர் என்றார். பிறகு, அவர்களிடம் ரவியை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது மற்றொரு நபர் ரவியிடம், “சார், தங்களது தந்தையார் தன்னுடைய இறப்பிற்குப் பிறகு அவருடைய உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கடிதம் எழுதிக் கொடுத்து, அதற்கான பத்திரங்களிலும் கையெழுத்திட்டுள்ளார்” என்றார்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரவி, “ஐயா, நான் அவரோட ஓரே மகன், அவருக்கான இறுதி சடங்குகளை எங்கள் வழக்கப்படி செய்ய விரும்புகிறேன். அவரது உடலை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சிக்காக அளிப்பதில் எனக்கு விருப்பமில்லை, அவர் எங்களுக்கு எதுவும் தெரிவிக்காமல் தவறாக எழுதிக் கொடுத்துள்ளார்” என்றான்.

ரவியை சமாதானம் செய்த அந்த அலுவலர் “சார், நீங்க உங்க குடும்ப வழக்கப்படி என்ன சடங்குகள் செய்யணுமோ அதை செய்யலாம், அதன் பிறகே நாங்கள் உங்களது தந்தையின் உடலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வோம்” என்றார்.

“அவரது உடலை மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்கு அளிப்பதன் மூலம் பல மாணவர்களின் கல்விக்கு உதவி செய்கிறீர்கள்” என்றார்.

ரவியை அருகில் அழைத்த மஞ்சு, ரகசியமாக “விட்டுத்தள்ளுங்கள், நமக்கு இறுதி சடங்கிற்கான செலவு மிச்சம்” என்றாள்.

பிறகு அவளே அந்த அலுவலரிடம் “சார், நாங்கள் சில சடங்குகளை செய்து கொள்கிறோம், அதன் பிறகு எனது மாமனாரின் உடலை நீங்கள் எடுத்துச் செல்லலாம்” என்றாள்.

பிறகு ரவி தனது தந்தையின் உடலுக்கு சில சடங்குகளை செய்த பிறகு கிருஷ்ணனின் உடலுக்கு மருத்துவக் கல்லூரி குழுவினரால் மாலை மரியாதைகள் செய்யப்பட்டு பின் மருத்துவ கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்நிகழ்வுகள் முடிந்த பின்னர்,கேசவன், ரவியிடம் “தம்பி, நான் வீட்டுக்கு போயிட்டு மாலையில் வருகிறேன், உங்களுக்கு சாப்பாடு அனுப்பி வைக்கிறேன்” என்று கூறிவிட்டு சென்றார்.

சாப்பாடு வரும் வரை ரவியும், மஞ்சுவும் வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர். கிருஷ்ணன் மட்டுமே தனியாக இருந்ததால், வீட்டில் ஒரு சில பாத்திரங்கள், மட்டுமே இருந்தது. பெரிதாக மதிப்புமிக்க பொருட்கள் எதுவுமில்லை.

மஞ்சு, கணவனிடம் “உங்க அப்பா வீட்டை துடைச்சு வச்சிட்டு போயிருக்கார், அவர் உயிரோட இருந்தபோதும் பிரயோஜனம் இல்லை, செத்த பிறகும் ஒன்னும் சேர்த்து வைக்கல, இந்த வீடு ஒண்ணுதான் மிச்சம்” என புலம்பினாள்.

“சரி, விடு மஞ்சு, இறந்து போனவரை பத்தி ஏன் குறை சொல்ற?“ என சற்று கோபமாக கேட்டான்.

“அப்பாவை குறை சொன்னா உங்களுக்கு கோபம் வந்திடுமே?” என கூறிய மஞ்சு,

“இதப்பாருங்க, நாம எந்த காலத்திலும் இந்த வீட்ல வந்து தங்கப்போறதில்ல, அதனால, கேசவன் சார் கிட்ட சொல்லி, நாளைக்கு ஒரு வீட்டு தரகரை வரச்சொல்லி, வீட்ட விக்க ஏற்பாடு செய்ய சொல்லுங்க, பதினைந்து நாள் கழித்து நாம திரும்பி வந்து பத்திர பதிவை முடிச்சுக் கொடுத்துட்டு போகலாம்” என்றாள்.

மறுநாள் காலையில் சுமார் ஒன்பது மணியளவில் கார் ஒன்று வீட்டு வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய சில நபர்கள் உள்ளே வந்து ரவிக்கு வணக்கம் தெரிவித்தனர். அதே நேரத்தில் கேசவனும் வீட்டுக்குள் நுழைந்தார்.

வந்தவர்களில் ஒருவர் ரவியிடம் சார், “நாங்கள் அன்பு ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து வருகிறோம். உங்களது தந்தையின் மறைவு எங்களுக்கும் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது, நாங்கள் நேற்றே வந்திருந்தோம், உங்களை தொந்தரவு செய்ய விரும்பாமல் புறப்பட்டு சென்று விட்டோம், நேற்று உங்களிடம் பேச இயலவில்லை, ஆதலால் இன்று மீண்டும் புறப்பட்டு வந்தோம்” என்றார்.

ரவி ஒன்றும் புரியாமல் அவர்களை நோக்கி, “என்ன விஷயமாக பேச வந்தீர்கள்”? என கேட்டான்.

உங்களது தந்தையார் இறப்பதற்கு முன் இந்த வீட்டினை எங்களது “அன்பு ஆதரவற்றோர் இல்லத்திற்கு தானமாக பத்திரம் பதிவு செய்து வழங்கியுள்ளார். எனினும், நாங்கள் அவரிடம், அவருடைய இறுதிக்காலம் வரை இங்கேயே இருக்கலாம் என்றும், அவரது மறைவிற்குப் பிறகு இந்த வீட்டை பொறுப்பு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தோம். ஆகையால், இந்த வீட்டை அடுத்த வாரத்தில் நாங்கள் பொறுப்பெடுத்துக் கொள்ள விரும்புகிறோம். அதற்கு முன்பாக தாங்கள் உங்களுடைய தந்தையின் ஞாபகார்த்தமாக இங்குள்ள பொருட்களை எடுத்து செல்வதாக இருந்தால் எடுத்துக் கொள்ளலாம்” என்றும் கூறினார்

அவர்கள் கூறியதை கேட்ட அதிர்ச்சி அடைந்த ரவி, “ஐயா, நான் அவரின் ஓரே மகன், அவருடைய சொத்திற்கு நான்தான் வாரிசு, இந்த வீடு எனக்குதான் சேர வேண்டும், அவர் ஏதோ ஒரு கோபத்தில் செய்ததை எல்லாம் நான் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றான்.

இப்போது அவன் அருகில் வந்த அவனது மனைவி “இருந்ததே ஒரு வீடு, அதையும் தானமாக எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாரே” என கோபமாக கூறினாள்.

அப்போது “அன்பு இல்ல “ நிர்வாகி பத்திரத்தினை எடுத்து காண்பித்தார்.

அதில், “இந்த வீடானது தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் கட்டப்பட்டதாகவும், அதனால் இந்த வீட்டில் யாருக்கும் உரிமையில்லையென்றும், தாம் சுயநினைவுடனும், சுய விருப்பத்தின் பேரிலேயேயும் இந்த வீட்டினை பதிவு செய்து கொடுப்பதாகவும்” எழுதி இருந்தார்.

பத்திரத்தை முழுவதும் படித்துப் பார்த்த ரவி, அன்பு இல்ல நிர்வாகியிடம், “சார், என் தந்தையின் இறுதி காலத்தில் அவரை வைத்து பராமரிக்க எனக்கு கடமையும், உரிமையும் இருந்த போதிலும், அவரை தனியே தவிக்க விட்டுவிட்டேன், எப்போது நான் அவரை பராமரிக்கவில்லையோ, அவரது சொத்தை அனுபவிக்கும் உரிமையும் எனக்கு கிடையாது, பெற்றோரை இறுதி காலத்தில் வைத்து பராமரிக்காத மகன்களுக்கு இது ஒரு பாடம்“ என்று வருத்தத்துடன் கூறிய அவன், “நாங்கள் இன்றே ஊருக்கு புறப்பட்டு செல்கிறோம், நீங்கள் வீட்டை பொறுப்பு எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினான்.

அடுத்த சில மணி நேரங்களில் ரவியும், மஞ்சுவும் தலை குனிந்தபடி சென்னையை நோக்கி பயணமானார்கள்.

எழுத்தாளர் கோபாலன் நாகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வைராக்கியம் (சிறுகதை) – கோபாலன் நாகநாதன்

    போன் கால் (சிறுகதை) – கோபாலன் நாகநாதன்