in ,

வைராக்கியம் (சிறுகதை) – கோபாலன் நாகநாதன்

எழுத்தாளர் கோபாலன் நாகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பரத், நான் சொல்றத கொஞ்சம் கேட்டுக்கோ,

“எங்க இரண்டு பேருக்குமே வயசாயிடிச்சு, சுகர், பிரஷர்னு, வியாதியெல்லாம் வந்திடுச்சு. இந்த நிலைமையில, கனடாவுல உங்க அண்ணன் பிரபு வீட்ல நாலு மாசம், U.S Boston-ல உங்க வீட்ல மூனு மாசமுன்னு வருஷத்துல பாதி நாள் வெளிநாடு, இந்தியான்னு ட்ராவல் பண்ண முடியல. அதனால, நானும் அப்பாவும் சேர்ந்து ஒரு முடிவு செஞ்சுருக்கோம், அது என்னன்னா இந்த முறை நாங்க இந்தியா திரும்பிய பிறகு, மீண்டும் உங்க அண்ணன் வீட்டுக்கோ, அல்லது இங்கேயோ வரப் போறதில்ல, வேணுமுன்னா நீயும், பிரபுவும் இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை எங்களை வந்து பாத்துட்டு போங்க” என முடித்தாள் அம்மா லட்சுமி.

“எங்களால வர  முடியலயின்னு தானம்மா உங்க இருவரையும் வர சொல்றோம், எங்களுக்கு மட்டும் ஆசையில்லையா? இந்தியா வரணும், உங்களோட கொஞ்ச நாளாவது இருக்கனும்,உறவுகளை யெல்லாம்  பார்க்கணாமுன்னு” என கேட்டான் பரத்.

“இல்லப்பா, எனக்கும் எழுபது  வயசாயிடிச்சு, அம்மாக்கும் அறுபத்தஞ்சு வயசாயிடிச்சு, இந்த வயசுல  சுமார் இருபது மணி நேரம் ஃபிளைட்ல தொடர்ந்து ட்ராவல் செய்ய முடியல, மூட்டு வலி வந்துடுது, அதனாலதான், இனிமேல் உங்களை சென்னைக்கு வர சொல்றோம” என முடித்தார் ராகவன்.

“சரிப்பா, உங்களை நான் வற்புறுத்தல, எங்களால் எப்ப வர முடியுமோ அப்போ வந்து பார்த்துட்டு உங்களோடு கொஞ்சநாள் இருந்துட்டு வர்றோம்,“ என்றான் பரத்.

ராகவனுக்கு சில தினங்களுக்கு முன் இரவு தானும், மனைவியும் தங்கள அறையில் பேசிக் கொண்டது நினைவிற்கு வந்தது…

அப்போது லட்சுமி அவரிடம், “ஏங்க நாம கொஞ்சம் ஓய்வா இருக்கலாம்னு  நினைச்சு வந்தேன், ஆனா, இங்கேயும் வந்து சமையல்கட்டுல கால்  கடுக்க நின்னு சமைக்க வேண்டி இருக்கு. பெரியவன் வீட்டிலும் சரி, இங்கேயும் சரி இரண்டு பேருமே வேலைக்கு போறதுனால சமையல் வேலையை என்ன கவனிக்க சொல்லிட்டு, அவங்க வேலைக்கு போயிடறாங்க, ஆனா, என்னால  இங்கவுள்ள  எலக்ட்ரிக் அடுப்புல சமைக்க சரிப்பட்டு வரல, இருந்தாலும் நம்ம குழந்தைகளுக்கு பிடிச்சத, நம்ம கையால சமைச்சு கொடுக்கிறோம்னு   மனசுக்கு திருப்தியா இருக்கு. இருந்தாலும் ராத்திரி தூங்கும்போது முட்டிக்கால்  எல்லாம் வலிக்குது. அதனால, இனிமே நாம அமெரிக்காவுக்கும், கனடாவுக்கு வர வேண்டாம். ஏன்னா, நமக்கு வயசும் ஆயிடுச்சு, இனிமே ஜாஸ்தி ட்ராவல் பண்ணாம சென்னையிலேயே ஓய்வு எடுப்போம், வேண்டுமென்றால் பசங்க ரெண்டு பேரும் அவங்களால முடியறப்ப நம்மள வந்து பார்த்துட்டு போகட்டும். இத நாளைக்கு நான் பக்குவமா சொல்லிடுறேன், நீங்களும் பசங்ககிட்ட மனசு நோகாதுபடி பேசிடுங்க” என்றாள்.

அதன் தொடர்ச்சியாகத் தான் இன்று லட்சுமி மகனிடம் பேசினார்.

இளைய மகனிடம் சொல்லியது போலவே, மூத்த மகன் பிரபுவிடமும்  தங்களால் இனிமேல் சென்னையில் இருந்து கனடாவிற்கு வர இயலாது என்றும், முடிந்தால் நீங்களே எப்போது முடியுமோ அப்போது வந்து அப்பா அம்மாவை பார்த்து விட்டு செல்லுங்கள் என கூறிவிட்டார்.

அவனும், பெற்றோரின் கஷ்டத்தை புரிந்துகொண்டு, அப்பாவிடம் ஆறுதலாக  “சரிப்பா வாய்ப்பு கிடைக்கும்போது நாங்களே சென்னை வருவதற்கு முயற்சி செய்கிறோம்“ என கூறிவிட்டான் .

ராகவனும், லட்சுமியும் சென்னை திரும்பி சில மாதங்கள் கடந்துவிட்டது. மகன்கள் இருவரும் அவ்வப்போது பெற்றோரிடம் வீடியோ கால் மூலமாக பேசி வந்தார்கள்.

அன்று இளைய மகன் பரத்திடமிருந்து போன் வந்தது. போனில் அவன்  “அப்பா, அம்மா உங்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி   உனது மருமகள் சுதா முழுகாம இருக்கிறாள், மூன்று மாதங்கள் ஆகிறது, நானும் சுதாவும் நீங்க இங்கு வந்து பிரசவம் நல்லபடியாக நடக்கும் வரை கூடவே இருந்து உதவி செய்யனுமுன்னு ஆசைப்படுறோம்” என்றான்.

“சுதா முழுகாம இருக்கிறாங்குற செய்தி கேட்டு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது பரத், ஆனா நாங்க ஏற்கனவே கூறியபடி எங்களால் உடனடியாக மீண்டும் அமெரிக்கா புறப்பட்டு வர இயலாது. நீங்க சுதாவின் பெற்றோரை அழைச்சு, உதவிக்கு வச்சுக்கோங்க, பொதுவா பெண்களும் பிரசவ காலத்தில் தனது தாயார் தன்னுடன் இருப்பதைதான் விரும்புவார்கள்” என்றார் ராகவன்.

அப்போது கணவனிடமிருந்து போனை பிடுங்கி  பேசிய லட்சுமி “பரத் கண்ணு, அப்பா கிடக்குறார் விடுப்பா, என் மருமகளுக்கு நான் செய்யாம வேறு யார் செய்வாங்க? அதனால நீ எதுக்கும் கவலைப்படாத, அப்பாக்கும், எனக்கும் உடனே டிக்கெட் போடு, நான்  வந்து என் மருமகள பத்திரமா பாத்துக்கறேன், நாங்க புறப்பட்டு வரும் வரை சுதாவை அதிகமா வேலை செய்யவிடாம கவனமா பாத்துக்க” என்றாள்.

“ரொம்ப சந்தோஷம்மா, நீங்க எப்ப புறப்பட முடியுமுன்னு நாள் பார்த்து சொல்லுங்க, நான் flight டிக்கெட் போட்டு அனுப்பறே” சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான் பரத்.

“இனிமே நான் அமெரிக்கா வரமாட்டேன், என்னால அங்க போய் சமையல்கட்ல நின்னுகிட்டு  வேலை பார்க்க முடியல, பிளைட்ல இருபது மணி நேரம் உட்கார்ந்து பயணம் செய்ய முடியல” என்றெல்லாம் வைராக்கியமாக பேசிய லட்சுமி, இன்று, மருமகள் முழுகாம இருக்கிறாள் என மகன் சொன்னவுடன், தன்னிடமிருந்து போனை வாங்கி ஒன்றுமே நடக்காதது போல் பையனிடம் தான் உடனே புறப்பட்டு வருவதாக சொல்லியதைப் பார்த்து அசந்து போய் நின்றார் ராகவன்!

எழுத்தாளர் கோபாலன் நாகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பனி விழும் மது வனம் ❤️(இறுதி பாகம்) – பவானி உமாசங்கர்

    அப்பாவின் சொத்து (சிறுகதை) – கோபாலன் நாகநாதன்