in ,

காலம் ஒரு நாள் மாறும் (சிறுகதை) – சுஶ்ரீ

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“ஷர்மி… பாட்டு வாத்யார் வந்துடுவார், கைகால் அலம்பிட்டு பளிச்னு பாவாடை சட்டை போட்டுக்கோ,ஸ்வாமியை சேவிச்சிட்டு, கிச்சன்ல காபி வச்சிருக்கேன் குடிச்சிட்டு வந்து உக்காந்துக்கோ”.

என் அம்மா நான் ஸ்கூல் விட்டு வந்தவுடனே தினம் சொல்றது இதுதான். அம்மாவுக்கே பாட்டுல அசாத்திய ஞானம், ஆனாலும் வேற ஒரு பாட்டு வாத்தியார் வச்சு எனக்கு பாட்டு கத்துத் தரா. அந்த மொபட்ல வர பாகவதர், தன் கரகர குரல்ல பாட்டு சொல்லித் தருவார்.பாவம் ஒரு காலத்துல நல்ல பேராம்,ஏதோ வியாதி, தொண்டை கெட்டுப் போச்சு. வயிறு கழுவ நாலு பேருக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கறார்.

என் அம்மா சுப்புலட்சுமி பாடினா மெய் மறந்து போகும்/ பஞ்சரத்ன கீர்த்தனைல, வராளி ராகம்,ஆதி தாளத்துல ஒரு பாட்டு கண்ணை மூடிட்டு பாடுவா பாருங்க. கேக்கறவா மெய் மறந்து போயிடுவாங்க.,”கன கன ருசிரா கனக வசன நின்னு”பேருக்கேத்த மாதிரி எம்.எஸ் அம்மாவே நேர்ல வந்து பாடற மாதிரி இருக்கும்.இந்த சங்கீதம், அம்மாவோட ரத்தத்துல ஊறிப் பிறந்த எனக்கும் நெஞ்சு பூரா பரவி இருக்கும் போல.பாட்டுன்னா எனக்கும் ரொம்ப இஷ்டம்.

அச்சோ சங்கீதம் தவிர வேற எதுவும் இவளுக்கு பேசத் தெரியாது போலனு நகந்து போயிடாதீங்க, சொல்றேன் என் கதையை.

அப்பா சேதுராமன் சின்னதா ஒரு கடை வச்சிருக்கார் சிவன் கோவில் பக்கத்துல. ஜோதிடம், ஜாதகம், ஆன்மீகப் புஸ்தகங்கள், கலைமகள், மஞ்சரி, அமுதசுரபி மாதிரி பத்திரிக்கைகள் எல்லாம் கிடைக்கும். தவிர ஊதுபத்தி வகைகள், சூடம், சாம்பிராணி, பூஜை சாமான்கள், ஏதேதோ வச்சிருப்பார். ஆயூர்வேத மருந்து வகைகள், பொடிகள் தைலங்கள் அதுவும் கண்ணாடி அலமாரில அடுக்கி வச்சிருப்பார். ஒரு ஆயூர்வேத வைத்தியர் கூட தினம் சாயந்தரம் ரெண்டு மூணு மணி நேரம் மருத்துவ ஆலோசனைக்காக உக்காந்திருப்பார். கோவில் பக்கத்தில் என்பதால் நல்ல வியாபாரம் நடக்கும்.

நான் கவர்ன்மென்ட் ஸ்கூல்ல பத்தாவது படிக்கிறேன். இன்னிக்கும் எப்பவும் போல “அம்மா”னு குதிச்சிட்டே உள்ளே வந்தேன், ”போய்க் கைகால் கழுவிட்டு வா,மேலே வந்து விழாதே எருமை மாடாட்டம்”னு, சொல்ற அம்மா குரல் கேக்கலை. ஊர்ல இருந்து பர்வதம் பாட்டி வந்திருந்தா. கொஞ்சம் பயத்தோட பாட்டியை கேட்டேன்,

”அம்மா எங்கே, அம்மாவுக்கு என்னாச்சு?”

“ஒண்ணுமில்லைடி உள்ளே தூங்கறா, தொண தொணனு கேள்வை கேக்காம போய் உன் வேலையைப் பாரு”

“இல்லை எனக்கு அம்மாவை இப்பவே பாக்கணும்” ஷூஸ் மட்டும் கழட்டி வீசிட்டு உள் ரூமுக்கு ஓடினேன். அம்மா போர்வைக்குள்ளே ஒருக்களிச்சு படுத்திட்டிருந்தா.

பின்னாலயே வந்த பாட்டி, ”சொன்னா கேக்க மாட்டயா, அம்மாவை இப்ப தொந்தரவு பண்ணக் கூடாது, ஏய் சுப்பு,ஒருக்களிச்சுப் படுத்துக்காதே கொடி சுத்திக்கும்.”

பாட்டியை பாத்தேன்,”அம்மா படுக்கறதுக்கும் கொடி சுத்தறதுக்கும் என்ன சம்பந்தம்? குடியரசு தினம் போய் பத்து நாள் ஆறது”

“போடி, போக்கத்தவளே, உனக்கு ஒரு தம்பிப் பாப்பா பெத்துத் தரப் போறா உன் அம்மா”

எனக்கு எதோ புரிஞ்ச மாதிரியும் இருந்தது,புரியவும் இல்லை.அம்மா போர்வையை விட்டு வெளியே தலை காட்ட தயாரா இல்லை.ஒண்ணும் பேசாம குளியலறைக்கு போனேன்.

உள்ளே பாட்டி பேசறது கேட்டது,”சொன்னாக் கேளு இதுல என்ன பயம், இந்தக் காலத்துல வேலைக்கு போறோம்ன்னு பொண்ணுங்க 30 வயசுலதான் கல்யாணமே பண்ணிக்கறதுகள். நீ 35 வயசுல பிள்ளைப் பெத்துண்டா கொலைக் குத்தமா என்ன? யார் என்ன சொல்லுவா பல்லு மேல நாக்கு போட்டு நான் இருக்கேன், தைரியமா எழுந்து நடமாடு”

“இல்லைம்மா வயசுக்கு வந்த பொண்ணை வீட்ல வச்சிட்டு என்ன இது,எனக்கு யாரையும் பாக்கவே கூச்சமா இருக்கு.”

“போடி பைத்தியக்காரி, உன் நாத்தனார் அலமு 45 வயசுல அஞ்சாவது குழந்தை பெத்துண்டா அதனால என்ன குடி முழுகிப் போச்சாம் இப்ப”

அப்பா ராத்திரி லேட்டாதான் வந்தார், அவர் கூட என் முகத்தை ஏறிட்டுப் பாக்க தயங்கறார். ஒரு வாரம் ஆச்சு வீடு சகஜ நிலைக்கு வர.

அம்மா லக்ஷ்மி படத்து முன்னால உக்காந்து நாட்டை ராகத்தை அமிர்த வர்ஷமா தன் சன்னமான குரல்ல மழைச்சாரலா பொழிஞ்சா. “ஜகதானம்த காரகா ககனாதிப சத்குலஜ ராஜ ராஜேஸ்வர சுகுணாகர…..”

நானும் இயல்பா கூட சேந்தேன், ”சுரசேவ்ய பவ்ய தாயக சதா சகல ஜகதானம்த காரகா”

இந்தப் பாட்டு பாடறப்பவே அம்மா கன்னத்துல கண்ணீர் வழிஞ்சது. மெதுவா பக்கத்துல போய் மண்டி போட்டு கன்னத்துல வழிஞ்ச கண்ணீரைத் துடைச்சேன்.

அம்மாவை மாத்தறது அவ்வளவு சுலபம் இல்லை, அடிக்கடி அப்பாகிட்ட வேற சண்டை போடறா. நாட்கள் ஓடினது தெரியலை பக்கத்துல இருந்த கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரில தான், ஆண் சிசு ஜனனம். 3வது நாள் அம்மாவை கூட்டிட்டு வந்தாச்சு. புண்யாஜனம் பண்ணி பாலசுப்ரமணியன்னு பேர் வச்சாச்சு.

செக்கச் செவேர்னு, நார்த் இன்டியன் ஸ்வீட் ஸ்டால் கண்ணாடி ஷோ கேஸ்க்குள்ளே அடுக்கி வச்சிருப்பாங்களே ‘மோத்தி சூர் லட்டு’னு அது மாதிரி பளபளனு இருந்தான் என் தம்பி பாலு. அப்பா கூட கடை சாத்திட்டு வந்தவுடனே இந்த லட்டு தூங்கிட்டு இருந்தா கூட அழ அழ தூக்கி ஒரு அஞ்சு நிமிஷமாவது கொஞ்சிட்டுதான் கீழே விடுவார்.

அப்ப ,அம்மா முகத்தைப் பாக்க கோடி கண் வேணும், வெட்கம், பெருமை, சந்தோஷம் எல்லாம் கலந்து மினுமினுக்கும் கண்கள், பேச்சே இல்லாமல் உணர்ச்சிகளை காட்டும் பூரித்த முகம். வேற ஒண்ணும் சொல்லத் தெரியலை. இவன் பிறந்ததுக்கப்பறம் அம்மா ,அப்பா கூட சண்டை போடறதில்லை.

பகல்ன்னா அடுத்து இருட்டு வராம இருக்குமா, சந்தோஷத்துலயே  எப்பவும் இருக்க முடியுமா, அந்த இருட்டையும் பாக்க நேர்ந்தது.

சிவன் கோவிலுக்கு வந்த அமைச்சரும் அதிகாரிகளும்,கோவிலை புனருத்திராணம் செஞ்சு, கும்பாபிஷேகம் பண்ணணும்னு நல்ல முடிவுதான் எடுத்தாங்க. ஆனா அதுல வந்தது சேதுராமனுக்கு  சங்கடம்.

கோவில் இடத்துல ஆக்ரமித்து கட்டியிருந்த சுற்றியுள்ள இடங்களை உடனடியாக கைப்பற்ற முடிவு செய்யப்பட்டது. அதுல சேதுராமனோட கடை வாடகைக்கு எடுத்து இருந்த, முதலியார் கட்டிடமும் ஒண்ணு. உடனே காலி பண்ணச் சொல்லி நோட்டீஸ் வந்திருக்கு. இதை வீட்ல சொல்லாம தானே மறுகி மறுகி சங்கடப்பட்டார் சேது.

குருநாத சாஸ்திரிகள் மனைவி,மாலதி மாமி அம்மாவை வேலை மெனக்கெட்டு தேடி வந்து, ”ஏண்டி சுப்பு குழந்தைக்கு வாரா வாரம் விளக்கெண்ணை போட்றயோ?இப்பல்லாம் யாரு பழைய வைத்யம்லாம் பண்றா? சரி சரி ரெண்டு தக்காளிப் பழம் இருந்தா கொடேன் ரசத்துக்கு பருப்பு வச்சிட்டு பாத்தா தக்காளி இல்லை அப்படியே கொத்தமல்லி, கருவேப்பிலையும் இருந்தா கொடுத்துடு”

எனக்கு கொஞ்சம் வாய்த் துடுக்காச்சே, ”மாமி கூடவே, புளி ஒரு எலுமிச்சம் பழ சைஸ்ல வேணுமா, பெருங்காயம்?”

“நான் பாக்க சுண்டெலியாட்டம் பிறந்த குழந்தை என்னையே கிண்டல் பண்றதைப் பாரேன், பெருங்காயம், புளியெல்லாம் எங்காத்துலயே எதேஷ்டத்துக்கு இருக்கு, நீ உன் படிப்பைப் பாரு”

தக்காளிப் பழத்தை வாங்கிட்டு பேசாம போயிட முடியுமா, ”ஆமாம் கோவிலை சுத்தி கடையெல்லாம் இடிக்கப் போறாளே, உங்க கடைக்கு என்ன கதி” சொல்லிட்டே,காரியம் முடிஞ்சதுனு, மாமி நடையைக் கட்டினார்.

துணுக்னு போச்சு எங்களுக்கெல்லாம்,அப்பா சொல்லவே இல்லையே!

அதுதானா நாலஞ்சு நாளா, சரியா சாப்பிடாம கொள்ளாம தவதாயப் படறார். ராத்திரி அம்மா கேட்டவடனே குழந்தை மாதிரி அப்பா கண்ல ஜலம். ”என்ன பண்ணப் போறேன் தெரியலையேடி சுப்புலட்சுமி எப்படி ஓடப் போறது சொச்ச காலம் தெரியலையே”

கடைல இருந்த புஸ்தகங்கள் சாமான்களை ஒரு புண்ணியவன் சுமாரான விலை கொடுத்து வாங்கினார். அந்தப் பணம் சில மாதங்களை சமாளித்தது. அம்மாவோட 3 பவுன் கொடி சில மாதங்களை ஓட்டியது.

அடுத்த மாசம் வீட்டு வாடகை எப்படிக் கொடுக்கறது, மின்சார பில் எப்படி கட்டறதுன்ற நிலமை வந்தாச்சு. எனக்கு ஸ்கூல்ல மதிய உணவு கிடைக்கறது, குழந்தைக்கு பால், மத்த செலவுக்கு எவ்வளவு நாள் கடன் வாங்க முடியும்.

அம்மா சொன்னா “நீங்க ஒரு தடவை திருமழிசைப் பெரியவரைப் பாத்துட்டு வாங்களேன், ஏதாவது வழி காட்டுவார்.”

திருமழிசைல ஒத்தாண்டார் கோவில் எதிர்ல ஒரு சின்ன சந்துல குடிசை போட்டுட்டு குடியிருப்பவர் இந்தப் பெரியவர், யாருக்கும் அவரோட இயற்பெயர் கூடத் தெரியாது. ஆனா கூட்டம் கூட்டமா அவரை பக்தர்கள் பாக்க வரது தவறாது. அவரைப் பாத்துட்டு வந்தாலே நல்லது நடக்கும்ன்றது பலரது நம்பிக்கை.

அப்பாவும் போனார், தரிசனம் பண்ணினார். இவர் எதுவும் கேக்கறதுக்கு முன்னாலயே அந்தப் பெரியவர், இவரை தீர்க்கமா பாத்தார், ஒண்ணும் பேசலை. கண்ணை இருக்கமா மூடிண்டு வாய்க்குள்ளே தனக்குத்தானே ஏதோ பேசிண்டார். அஞ்சு நிமிஷத்துக்கு அப்பறம் கண்ணைத் திறந்து,”புத்திர தானம் பண்ணு சுபிட்சம் தானே வரும்னுட்டார்.”

ஸ்வாமிகளோட உதவியாளர், ”ஆண்குழந்தை இருந்தா யாருக்காவது தானம் பண்ணிடுங்கோ,அதைத்தான் பெரியவா சொல்றார்.”

அப்பா வீடு வந்து அம்மாகிட்ட விவரத்தை சொன்னார். அம்மாவுக்கும் திகைப்பு,”என் குழந்தையைக் கொடுத்துதான் விடியல் வரும்னா அது வேண்டவே வேண்டாம். கூண்டோட செத்துப் போயிடலாம்”

அப்பாவுக்கு என்ன செய்றதுனு புரியலை, ”சீ அசத்து அவர் சொன்னார்ன்றதுக்காக என் குல வாரிசை யாருக்காவது தூக்கிக் கொடுத்துடுவேனா! சிவனையே நம்பி அவன் பக்கத்துலயே கடை வச்சு நேரம் கிடைச்சப்பல்லாம் போய் அவன் எதிர்ல நின்னு தேவாரம் ,திருவாசகம்னு ஓதுவேனே என்னையா கஷ்டப் படுத்துவான் அவன்”

பாட்டிதான் ஒரு யோசனை சொன்னா, ”புத்திரதானம்னா குழந்தையைத் தூக்கி அப்படியே கொடுத்துடுவாளா என்ன, அதுக்கு வழி இருக்கு என் ஒண்ணுவிட்ட தம்பி முறை ஸ்வாமிநாதன் அவனுக்கு இந்த மாதிரி ஒரு இக்கட்டு, என்ன பண்ணினான் தெரியுமோ?” கொக்கி போட்டு நிறுத்தினா பாட்டி.

ஆவலோட அவ முகத்தையே எல்லோரும் பாத்தோம்.

“இந்த வெள்ளிக் கிழமை இந்த குருநாத சாஸ்திரிகளைக் கூப்பிடு, செலவெல்லாம் என்து, முறைப்படி பாலுக் குட்டியை எனக்கு ஸ்வீகரம் பண்ணிக் கொடுத்துடு, அவ்வளவுதான். நான் இன்னும் எத்தனை வருஷம் இருக்கப் போறேன்.” சொல்லிட்டே சிரிக்கற பாலுவைத் தூக்கிண்டா.

வெள்ளிக்கிழமை விடியக் கார்த்தால குருநாத சாஸ்திரிகள் மனைவி மாலதி மாமியோட வந்து விஸ்தாரமா கணபதி ஹோமம் பண்ணிட்டு,பாலுவை பாட்டியோட ஸ்வீகரப் புத்திரன் ஆக்கியாச்சு.

சாயந்தரம் எல்லாருமா சிவன் கோவிலுக்குப் போனோம்.என்னை அறியாமல் என்னிடமிருந்து பாட்டு பிறந்தது ராமதாஸ க்ருதில இருந்து எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு,மெல்ல ஆரம்பிச்சேன் ”இக்ஷ்வாகு குலதிலக இதமய்ன பலுகிதி ராமசந்திரா” ஆண்டவனுக்கு கற்பூர ஆரத்தி எடுத்துட்டு குருக்கள் கூட அப்படியே நின்னார். கற்பூரத் தட்டு உள்ளே நின்ற சுமார் 25,30 பேருக்கு காட்டப்பட்ட போதும் ஒரே அமைதி.“பரதடுகி சேயிஸ்தி பச்சாலு பதக்கமு ராமசந்திரா,ஆ பதகமுனுகி பட்டே பதி வேலு வராகாலு ராமச்சந்திரா”

குருக்கள் மெளனமாக என் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் பண்ணி, நிறுத்தாம பாடுன்ற மாதிரி சைகை பண்ணிட்டு போனார்.

“அப்ப திட்டித்தினனி ஆயாசப் படவொத்து ராமசந்திரா,நீ தெப்பலு கோர்வக அப்ப திட்டித்தினய்யா ராமசந்திரா” பாடறப்ப பலர் கண்களைத் துடைத்துக் கொண்டது அந்த ராமதாஸுக்கு வெற்றி. அர்ச்சகர்   ஒரு பெரிய கதம்ப மாலையை பகவான் மேலே இருந்து கழட்டி என் கையில் கொடுத்தார்.

பிரகாரம் சுத்தி அம்பாளை தரிசிச்சிட்டு வரப்ப பின்னால வந்த ஒரு மனிதர், அப்பா கிட்ட, ”சார் இது உங்க பொண்ணா”

அப்பா “ஆமாம்”

“நான் கதிர், சுமா டி.வி.ல இருக்கேன், நாளைக்கு காலைல உங்க பெண்ணை எங்க ஸ்டுடியோக்கு ஆடிஷனுக்கு கூட்டிட்டு வாங்க மாநில அளவுல சிறந்த குரல் தேடல் நிகழ்ச்சி நடத்தறோம்.”

விலாச அட்டை கொடுத்துட்டு, ”கண்டிப்பா வாங்க உங்க பொண்ணுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு”

அடுத்தடுத்து நடந்ததெல்லாம் என்ன சொல்ல, முதல் நாள் ஆடிஷன்லயே செலக்‌ஷன் மெம்பர்ஸ் மூணு பேரும் என்னுடைய குரலைக் கேட்டு கட்டித் தழுவிக் கொண்டனர். டி.வி.ல பாடறதுக்கு ஏத்த மாதிரி ஜனரஞ்சகமான பாடல்களை தேர்ந்தெடுக்க,குரல் பயிற்சினு கிட்டத்தட்ட 10 நாள் பயிற்சி அந்த சினிமா புகழ் பாடகி கூடவே இருந்து கத்துக் கொடுத்தா.

பிறகு போட்டி நிகழ்ச்சிகள்ல பெரிய அறிமுகம், பணப்பரிசுகள்,இறுதில வெற்றிப் பரிசாக சென்னை புறநகரில் ஒரு வீடு.வெளிநாடுகளில் இருந்து தொடர் அழைப்புகள்னு 5 மாசத்துல வாழ்க்கை முறையே திடீர்னு மாறிப் போச்சு.

அப்பா இப்பெல்லாம் ரொம்ப பிசி. என் படிப்பு கெடாமல் என் புரொக்ராம்களுக்கு நேரம் ஒதுக்கறது.வெளியூர் நிகழ்ச்சிகளா இருந்தால் அவங்க கூட பேசி போக வர டிக்கட் புக்கிங் மத்த விஷயங்களை முடிவெடுப்பதுனு சுறுசுறுப்பாய் செயல் படறார். அம்மாவுக்கு ஒரே பெருமை தன்னால் முடியாததை தன் பெண் சாதிக்கறாளேனு.

இப்பவும் மாலதி மாமி எங்க புறநகர் வீட்டை தேடிண்டு வந்துட்டா, பாட்டிகிட்டயும் அம்மா கிட்டயும், ”எனக்கு எப்பவோ தெரியும் இந்த ஷர்மிளாக் குட்டி பாட்டுப் பாடியே உலகை கட்டி ஆளப் போறானு.அதுவும் அந்தக் குட்டிப் பையன் பொறந்த வேளை லட்சுமி கடாட்சத்தையே கூடக் கூட்டிண்டுன்னா வந்திருக்கான்.”

நான்,”என்ன மாமி அடுப்புல ரசத்துக்கு பருப்பு வச்சிட்டு வந்திருக்கேளா?”

“இன்னும் அந்த விஷமப் பேச்சு போகவே இல்லை. சினிமாக்கு பாடப் போறயாமே, நன்னா சுசிலா மாதிரி, ஜானகி மாதிரி பேர் வாங்கி சுபிட்சமா இருடி கண்ணா”

அம்மா,”எல்லாம் உங்க ஆசீர்வாதம் மாமி”

“இப்ப தைரியமா உன்னைக் கேக்கலாம், இப்பல்லாம் யாரு வைதீகாளைக் கூப்டு சுப காரியம் பண்றா, என் ஆத்துக்காரர் பூஜை புனஸ்காரம்னு போய் நாலு நாளாச்சு. ஆத்துல தேங்கா மூடி கூட இல்லை. உன்னைக் கேட்டு ஒரு 500 ரூபா வாங்கிண்டு போலாம்னுதான் பஸ் ஏறி வந்தேன்.”

அம்மா ஒரு கூடை நிறைய பலசரக்கு சாமான்களும் காய்கறிகளோட பணம் 500 ரூபாயும் மாமிகிட்ட கொடுத்தா.மாமி கண்ல கண்ணீர், “வரேண்டி அம்மா ரொம்ப நன்னா இருப்பேள். ஷர்மிளாக் குட்டி லட்ச லட்சமா சம்பாரிச்சு கொட்டப் போறா பாரு. அப்ப இந்த ஏழை மாலதி மாமியை மறந்துடாதேள்.”

“காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்” டி.எம்.எஸ். குரல் கம்பீரமா எங்கிருந்தோ ஒலி பெருக்கியில் கேட்கிறது.

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தொலைஞ்சது யார் (சிறுகதை) – சுஶ்ரீ

    அவரவர் நியாயங்கள்!! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்