எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இப்ப நான் எழுதறேன்றதுக்காக சொல்லலை.என் பெருமைகளை நானே தம்பட்டம் அடிச்சிக்கறேன்னு நினைக்காதீங்க.நாலு பேர் பொது இடத்துல பாத்தா நமஸ்காரம் போடறாங்க, பெருமாள் கோவில் போனாதனி மரியாதை கொடுத்து கைல தீர்த்தம் கொடுத்து, கிரீடமெல்லாம் வைக்க முயற்சி பண்ணுவார் அர்ச்சகர்.நான் பெருந்தன்மையா வேண்டாம்னுடுவேன். நான் என்னதான் பெரிய புகழ் பெற்ற எழுத்தாளர்னாலும் கடவுளுக்கு முன்னால சாதாரண மனுஷன்தானே சார்.
சுசிலாவுக்கு பொறாமை “அது ஒண்ணும் உங்களுக்கு கிரீடம் இல்லை,சாமியோட சடாரி எல்லார் தலைலயும்தான் வச்சி ஆசீரவாதம் பண்ணுவா.”
போன ஞாயித்துக் கிழமை சலூனுக்கு ஹேர் கட்டிங்குக்கு போனேன் சார்.சலூன்ல எப்பவும் கூட்டம் இருக்கும் அதுவும் சண்டேன்னா வரிசைல 10 பேராவது உக்காந்திருப்பாங்க.இந்த தடவையும் அப்படிதான்.
ஆனா அதிசயமா அத்தனை பேரையும் விட்டுட்டு என்னை முத ஆளா கூப்டான். எனக்கே சங்கோஜமா இருந்தது, ஆனா யாரும் எதிர்ப்பும் சொல்லலை.எல்லாருக்கும் தெரியும் போல நான் செலிப்ரிடி ரைட்டர்னு. அதுல ரெண்டு பேர் நியூஸ் பேப்பரை மடக்கி எதோ சொல்ல முயற்சி செய்தார்கள்.பார்பர் அவர்களை சைகையாலயே “சுப்”னு அமர்த்தி விட்டான். பாவம் என் ஆட்டோகிராஃப் கேட்டிருப்பாங்கனு நினைக்கிறேன்.
சந்தேஷ் பய்யா எப்பவும் எனக்கு முடி வெட்டறவன்தான், உத்திரப் பிரதேசத்துல இருந்து வந்தவங்கதான் இங்கே பார்பர் எல்லாருமே.
கொஞ்சம் கொஞ்சம் தெரியும்னு சொல்லிட்டு, புரியற அளவு தமிழ் பேசுவாங்க.நான் மும்பைல முப்பது வருஷத்துக்கு மேல இருந்ததால எனக்கும் ஹிந்தி நல்லாவே தெரியும்.ஆனா எனக்குத் தெரியும்னு அவங்களுக்குத் தெரியாதே.அதனால என்னாச்சா, அவங்க ஹிந்தி சம்பாஷனையை தமிழ்ல கீழே கொடுக்கறேன் பாருங்க,மனசு உடைஞ்சு போச்சு சார்.
பக்கத்துல ஒரு முற்றிலும் வழுக்கையான தலைக்கு முடி வெட்டிட்டிருந்த ரூபேஸ் பய்யா,”ஏண்டா சந்தேஷ் வரிசைல உக்காந்திருக்கற எல்லாத்தையும் விட்டுட்டு இந்த ஆளை சேர்ல ஏத்தினே,துட்டு எச்சா கொடுப்பாரா”
ரூபேஷ்,”இதுவா பாக்கி வேணா வச்சிட்டுப் போகும்,எச்சா கொடுக்கறதாவது”தலைல தண்ணி ஸ்பிரே பண்ணி கோவத்தையெல்லாம் கைல திரட்டி தபதபனு அடிச்சான்.
“பின்ன எதுக்கு இந்த முன்னுரிமை”
“வேற ஒண்ணும் இல்லை இந்த ஆள் லிகக்காம்(writer),கொஞ்ச நேரம் உக்கார விட்டா கதை கதையா சொல்லி எல்லாத்தையும் அறுத்து தள்ளிடுவான்.நம்ம கஸ்டமர் எல்லாம் ஓடிருவாங்க. இந்த மண்டைல என்ன இருக்கு அஞ்சே நிமிஷத்துல முடிச்சு அனுப்பிடுவேன்”
“அப்ப இந்தாளு உண்மையான லிகக் இல்லையா?”
“எவன் போடுவான் இவன் கதையெல்லாம்? ஏதோ ஒரு 100ரூபாயை விட வேண்டாமேனு சில சமயம் கேக்கற மாதிரி நடிப்பேன் காதுல இயர்ஃபோனை அடைச்சிட்டு”
இப்ப முடிஞ்சிருச்சாம் கட்டிங் டகடகனு தலையைத் தட்டி சீப்பை கைல கொடுத்து மேலே போத்தியிருந்த துணியை எடுத்து உதறி மடிச்சு வச்சிட்டான்.
உள்ளே பொங்கற கோபத்தோட கண்ணாடியைப் பாத்தேன். வீட்டுக்குப் போனா சுசிலா கத்தப் போறா.”என்னத்தை வெட்டிண்டு வந்தேள், முடி அப்படியே இருக்கே,தண்டத்துக்கு மாசா மாசம் 100 ரூபா அழுதுட்டு வரணும்”
இருக்கற முடியே முக்கா இன்ச்சு,இன்னும் எப்படிவெட்டிக்கறது,மொட்டைதான் போட்டுக்கணும்.
“சுசீ, தெரியுமோ விஷயம் உனக்கு வெயிட் பண்ணிண்டுருந்த 20 பேரையும்(10 சேத்துச் சொன்னா என்ன கெட்டுப் போச்சாம் இப்ப)விட்டு எனக்கு முதல்ல இடம் கொடுத்தாளாக்கும். உக்காந்திருக்கறவா பாதிக்கு மேலே கைல கிடைச்ச பேப்பரை நீட்டி என் ஆட்டோகிராஃபுக்கு பறக்கறா. இந்த சந்தேஷ் பய சேர்ல உக்கார வச்சு கைகளையும் சேத்து உள்ளே வச்சு துணியை சுத்திட்டான்.எப்படி சைன் பண்றது.ஒரு ஸ்மைல் பண்ணினேன் அதுலயே எல்லாரும் மகிழ்ந்துட்டா.”
“ஆமாம் இதுல ஒண்ணும் குறைச்சலில்லை, ஒரு கல்கி,விகடன், கலைமகள் எதுலயாவது ஒரு கதை வந்திருக்கோ. இந்த ஸ்கூல் பசங்க நடத்தற கையெழுத்துப் பத்திரிக்கைல கூட உங்க கதை வேண்டாம் மாமா புரியலை ஒண்ணும்னு போயிடறா”
“என்னோட கதையெல்லாம் ஹை ஸ்டான்டர்ட் ,இந்தக் கால பசங்களுக்கு புரியலை. சாவி, மணியன், சுஜாதா இவாள்லாம் இப்ப இருந்தா தலைல தூக்கி வச்சு கொண்டாடியிருப்பா”
“சரி, கனவு உலகத்துல சஞ்சரிக்காம குளிச்சிட்டு ஒரு எட்டு இந்தக் கடைக்கு போய் கொத்தமல்லியும், பச்சைமிளகாவும் வாங்கிண்டு வந்துடுங்கோ, சுத்தமா இல்லை”
“சுத்தமா இல்லைன்னா குழாயடில காட்டி அலம்பேன்னு” சொல்லி என்னோட ஜோக்குக்கு நானே சிரிச்சிண்டேன்.
சுசிலா முகத்தை தோள் பட்டைல இடிச்சிண்டு பேசாம போயிட்டா.
குளிச்சு முடிச்சு ஒரு அரைக்கால் பேன்ட் ஒரு மேல் சட்டை துணிப் பையோட கடைக்கு கிளம்பினேன் மறக்காம பர்சை நிக்கர் பாக்கெட்ல போட்டுண்டேன்.
ஒரு பெரிய மர பெஞ்ச்ல கீரை ,காய்கறி,நியூஸ் பேப்பர் எல்லாம் வச்சு வித்துண்டிருந்த வள்ளியம்மா கடைக்கு போய் நின்னேன்.சுசிலாவுக்கு இந்த கடையைக் கண்டாலே பிடிக்காது. ஊர்ல காய்கறிக் கடையா இல்லை ஆ..ஊ..ன்னா இவ கடைல வந்து நிக்கறேளே அவ ஈன்னு இளிக்கறதும், நீங்க அவளைப் பாத்து வழியறதும் வயசென்ன ஆச்சு உங்களுக்கும்பா.
என்ன ஒரு சகோதர பாசம்தான்னு சொன்னா நம்ப மாட்டா.
இன்னிக்கு போய் “என்ன வள்ளி இன்னிக்கு பளிச்னு இருக்கே, புருஷன் புதுப்புடவை வாங்கிக் கொடுத்தானா”
“ஆமாம் கொடுக்கறான் புதுப் புடவை, சாராயத் தண்ணி குடிக்கவே என்னாண்டை காசுக்கு தினம் மல்லுக் கட்டறான் . சரி சாமி என்ன வேணும் சொல்லு”
வாங்கிண்டு ஷார்ட்ஸ்ல இருந்து கஷ்டப்பட்டு பர்ஸை எடுத்து பணத்தை கொடுத்துட்டு வீட்டுக்கு கிளம்பினேன்.
பின்னாலயே சார்,சார் னு யாரோ ஒத்தர்.திரும்பினா டீசன்டா டிரஸ் பண்ணின ஒரு ஆள் ”நீங்கதானே பிரபல எழுத்தாளர்?”
நான் பெருமைல பொங்கி பூரிச்சுப் போயிட்டேன்,ரொம்பவே பிரபலம் ஆயிட்டோம் போலயேனு ,”எஸ் சொல்லுங்க ஆட்டோகிராஃபா? பேனா இருக்கா”
“அதில்லை சார் யுனிவர்சல் டூர்ஸ்ல இருந்து வரேன்,உங்களை மாதிரி ஒரு பிரபலத்தை சண்டே மீட்டுக்கு அழைச்சிண்டு வரச் சொல்லி எங்க பாஸ் அனுப்பினார் அதான் சண்டே ஒரு 10 மணிவாக்குல ஒய்ஃபோட எங்க ஆஃபிசுக்கு வரணும்.”
“சரி பாக்கறேன் வேற அப்பாயின்ட்மென்ட் இல்லைன்னா வரேன், ஆமாம் என்னை எப்படித் தெரியும் உங்களுக்கு”
“என்ன சார் உங்களைத் தெரியாதவங்க யார் இருக்க முடியும், நீங்க பெரிய ஆள் ஆச்சே ஊர்ல.”
சிரிச்சிண்டே வீடு திரும்பினேன்.ஒரு பையன் ஓடி வந்தான் பின்னாலயே. மாமா உங்க டிரவுசர்ல இருந்து இதெல்லாம் விழுந்ததுனு என்னோட அஞ்சாறு விசிட்டிங் கார்ட் (நிறைய அடிச்சு வச்சிருக்கேன் எழுத்தாளர்னு கலர்ல பாக்கறவங்களுக்கெல்லாம் எடுத்து நீட்டுவேன். என் தலை மறைஞ்சவுடனே பாக்காம கூட தூக்கிப் போட்டுறுவான்க) ஏதோ உபயோகமில்லாத பேப்பர். அந்தப் பையன் சொன்னான் இப்ப உங்க கூட பேசிட்டிருந்தாரே ஒரு மாமா அவர் கூட இந்த கார்டை பொறுக்கி எடுத்து பாத்துட்டுதான் உங்க கூட பேச வந்தார்”
“ஓ அதானா நான் கூட நிஜமாவே பிரபல முகம் ஆயிட்டேனோனு பெருமைப் பட்டுண்டேனே”
இதோ ஒத்தர் போறாரே புது ஆள் போல இருக்கே இந்த ஏரியாவுக்கு.
“சார் நீங்க இந்த ஏரியாக்கு புதுசா? இந்தாங்க என் விசிட்டிங் கார்ட். நான் பிரபல தமிழ் ரைட்டர். எனக்கு தற்பெருமை சுத்தமா பிடிக்காது. டயம் இருக்கறப்ப என் எழுத்தைப் படிங்க.சரியா”
படு பாவி கார்டை கசக்கி போடறதைப் பாரு முகத்தை சுண்டைக்கா மாதிரி வச்சிண்டு்
எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings