in

காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 3) – ✍ விபா விஷா, அமெரிக்கா

காதலாய் ❤ (பகுதி 3)

ஜூலை 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1

பகுதி 2

கோபம் களைந்து,

தயக்கம் தவிர்த்து ,

நாணம் துறந்து

என் நெஞ்சம் மீது

மஞ்சம் கொள்ளடி பெண்ணே

இவ்வுலகம் காணாத

உட்சபட்ச காதெல்லாம்

மிச்ச சொச்சம் ஏதுமின்றி

உனக்கள்ளித் தருவேன்

உனதன்பன் நானே!!

நித்தமும் கனவில் வந்து அவளுக்கு உயிர் காற்று அளிக்கும் அவன், இன்று கண் முன்னே வந்தும் கூட, அந்தக் கன்னிகைக்கு அவன் கானலெனவே தெரிந்தான்.

ஆனாலும் அவனைத் திடுமெனக் கண்ட அதிர்ச்சியினால், மயக்கத்தில் சரிந்தவளை தாங்கிப் பிடித்தவன், அவளை அந்த நாற்காலியிலேயே அமர வைத்து விட்டு செவிலியரை அழைக்க, அவர் வந்து சிறிது நேரத்திற்குள்ளாகவே அவளுக்கு மயக்கம் தெளிவிக்கப்பட்டது.

மயக்கம் தெளிந்த பின்னே அவன் வரவின் விளைவு அவளது மூளையில் சுரீரென உரைக்க, மேகக் கூட்டம் உரசி வானம் இடிக்கும் விண்ணேறாய் மனம் பதட்டமடையத் தொடங்கியது.

உடலெல்லாம் விதிர் விதிர்த்துப் போக, “வம்சி கிருஷ்ணா” என்று உதடுகள் முணுமுணுக்க, உடலில் நடுக்கத்துடன் எழுந்து அமர்ந்தவளைப் பார்க்கையில் அவனுக்கும் மனதுள் சிறுஅதிர்வு தான்.

தனது அத்தை மகள் அவளாக இருப்பாள் என்று அவன் கனவிலும் கருதவில்லை. எனவே அவளது சிறு முணுமுணுப்பிற்குக் கொஞ்சம் தயக்கத்துடன், “ஆமா அபி.. நான் வம்சி கிருஷ்ணா தான். அஞ்சு வருஷம் கழிச்சு நீயே என்கிட்டே வருவனு சவால் விட்ட அதே வம்சி தான். ஆனா.. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில நீ என்கிட்டே வருவனு நான் நினைக்கல அபிரதி ..” என்று அவன் கூறினான்.

தன்னை அபிரதி என்று அவன் விளிக்கவும், சரேலென விழி உயர்த்திப் பார்த்தாள் அவள்.

‘என்ன?’ என்று பார்வையாலேயே வினவியவனிடம், “என்… என்னோட பேர் எப்படி உங்களுக்குத் தெரியும்?” எனக் கேட்டாள்.

அதற்குச் சிறு வருத்தம் கலந்த முறுவலே முதல் பதிலாய் அவனிடம். பின்பு, “எனக்கு உன்னோட பேர் முழுசா தெரியாது. உன்ன எல்லாரும் அபின்னு கூப்பிடக் கேட்டிருக்கேன். ஆனா நீ உன்னோட பேர என்கிட்டே சொல்ல மறுத்துட்ட. சோ, வேற யார்கிட்டயும் கேட்கறதுக்கு எனக்குப் பிடிக்கல. இங்க ஹாஸ்பிடல்ல தான் உன் பேர் சொல்லி… அதாவது என் அத்தை பொண்ணு பேர் அபிரதி, அவளும் என் அத்தையும் தான் உயிர் பிழைச்சு இருக்காங்கன்னு சொன்னாங்க.இப்போ இங்க வந்து பார்த்தா தான் தெரிஞ்சுது அந்த அபிரதி நீ தான்னு” என்று கூறி சிறு பெருமூச்சொன்றை வெளியிட்டவன்,

மீண்டும் அவளிடமே திரும்பி.. “இப்போ கூட உன்னோட பேர் எனக்குத் தெரிஞ்சுடுச்சேனு தான் நீ கவலைப்படற இல்ல?” என்று குரலில் வேதனையும் கோபமும் போட்டி போட கேட்டான்.

“அப்படி இல்ல கிருஷ்ணா.. நான் அப்படி நினச்சு கேட்கல” என்று ஏதோ கூறி அவள் சமாளிப்பதற்குள், கதவை மெல்லத் தட்டி திறந்து கொண்டு அவர்கள் இருந்த அறைக்குள் ஒரு செவிலியர் வந்தார்.

 வந்தவர் வம்சி கிருஷ்ணாவிடம், “சார்… மிஸ்டர்.செழியனுடைய உடலும், மிஸ்.அபி லயாவுடைய உடலும் போஸ்ட்மார்ட்டம் செஞ்சாச்சு. இனி நீங்க வீட்டுக்கு எடுத்துட்டு போய்டலாம்” என்று கூறவும், அதைக் கேட்டுக் கட்டுப்படுத்தவியலாத கண்ணீர் அவளிடம்.

தனது கண்ணுக்கினியவளின் கண்ணீரைச் சகியாமல், அவளைக் கட்டியணைத்து ஆறுதல்படுத்த முடியாத கையாலாகாத்தனம் அவனுள்.

மெளனமாக அவள் அருகில் சென்றவன், அந்தச் செவிலியரிடம், “நீங்க எல்லாம் ரெடி பண்ணிடுங்க, நாங்க பின்னாடியே வரோம்” என்று கூறி அவரை வெளியே அனுப்பிவிட்டு…

“உனக்கு நடந்துருக்கறது ரொம்பக் கொடுமையான விஷயம் தான் அபி. ஆனா உனக்காக எப்பவும் நான்.. நாங்க இருப்போம். அந்தத் தைரியத்தை மட்டும் எப்பவும் நீ கை விட்டுடாத…” என்று அவன் அவளது கை பிடித்து ஆறுதலாகக் கூறினான்.

ஆனால் அப்பொழுதும் கூட அவள் பதிலேதும் பேசாமல் திரும்பி தன் அன்னையைப் பார்த்தபடியே நின்றாள்.

“ஒன்னும் பயப்பட வேண்டாம் அபி. இது என் தங்கை தன்யாவோட கணவரோட ஹாஸ்பிடல் தான். அதனால அவங்க அம்மாவை ரொம்ப நல்லா பார்த்துப்பாங்க. அதுமட்டுமில்லாம, இது I.C.U. இங்க நீ இருபத்து நாலு மணிநேரமும் இருக்க முடியாது. அதைவிட இப்போ ரொம்ப முக்கியமானது என்னன்னா.. உன் அப்பாவுக்கும் அந்த இன்னொரு பொண்ணு.. அபி லயாவுக்கும் இறுதி சடங்கு செய்யணும். அதுக்கு நாம போகணும்ல?” என்று அவன் கேட்கவும்.. அவளது கண்ணீரின் வேகம் அதிகரித்தது.

“ப்ளீஸ் கண்ட்ரோல் பண்ணிக்கோ டா அபி…” என்று குரல் கரகரக்க அவனும் கூறினான். பின்பு சற்று நேரத்திலேயே அவர்கள் இருவரும் மருத்துவமனையிலிருந்து அவனது இல்லத்திற்குக் கிளம்பி விட்டனர்.

அங்கே அவனது இல்லத்திற்குக் காரில் சென்றனர். ஆனால் அந்தக் கார் ஒரு பெரிய மாளிகையின் முன்பு நிற்கவும், அவளது மனதின் படபடப்பு மேலும் அதிகரித்தது. அவன் பணக்காரன் என்று அவளுக்கு முன்னமே தெரியும் தான். ஆனால், இவ்வளவு பெரிய ஆளாக இருப்பானென்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவனது அந்த வளமை, அவளை அந்தச் சூழலிலும் மிரட்டியது.

பின்பு அந்த மாளிகையில்… அதன் பாதுகாப்பு வேலியைத் தாண்டி வீட்டிற்குச் செல்லவே ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் போல இருந்தது. ஆனால் அந்தத் தூரம் அனைத்தும் அங்குப் பற்பல கார்களின் அணிவகுப்பால் நிரம்பி வழிந்தது.

அதைக் கண்ட அபியின் கண்களிலோ கேள்வி.. அதைப் புரிந்து கொண்ட கிருஷ்ணா, “இவங்க எல்லாரும் நம்ம சொந்தங்கள் தான். இத்தனை வருஷம் கழிச்சு உங்கள எல்லாரையும் பார்க்கறதுக்காக வந்துருந்தாங்க” என்றான்.

பிறகு வீட்டின் வாசலருகே கார் நிற்கவும், மருண்டு போய் மிரட்சியுடன் காரிலிருந்து கீழே இறங்கியவளை அனைவரும் ஒரு பரிதாபத்துடன் நோக்க, ஒரு சிலரது கண்கள் மட்டும் வன்மத்துடனும் இளக்காரமாகவும் அவளைப் பார்த்தன.

அவளருகே வர மற்ற பெண்கள் தயங்கினார்களா, அல்லது கிருஷ்ணாவின் பார்வையில் தள்ளி நின்றார்களா என்பது தெரியவில்லை. ஆனால் அவளைக் கைபிடித்துக் கிருஷ்ணா உள்ளே அழைத்துச் செல்ல, அதைக் கண்டு சிறுஅதிர்ச்சி சிலரிடம்.

கிருஷ்ணாவும், அபியும் வந்த விஷயமறிந்து உள்ளறையிலிருந்து வந்தார் கொஞ்சம் மத்திய வயதுடைய பெண்மணி.

வந்தவர் கண்களில் வேதனையுடன், கண்ணீரின் சாயல். அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “அபி.. நான் உன் அத்தை மா.. நளினி. உன்ன எப்படி எப்படியோ வரவேற்கணும்னு நாங்க எத்தனையோ திட்டம் போட்டு வச்சுருந்தோம். ஆனா..” என்று அவர் கூறி முடிப்பதற்குள்… “அம்மா” என்று அழுத்தமாக அழைத்தான் கிருஷ்ணா.

“ம்மா.. நாம அவளுக்கு இந்த நேரத்துல ஆறுதலா இருக்கணுமே தவிர.. மேலும் அழவைக்கக் கூடாது. நீங்களே இப்படி இருந்தா அப்பறம் மத்தவங்கள யார் ம்மா பார்த்துப்பாங்க.” என்று அவன் கூறவும்

சிறிது தெளிவடைந்த நளினி, “ஆமா டா கண்ணா… எனக்கும் புரியுது. ஆனா துளசி என்னோட நாத்தி மட்டும் இல்ல.. சின்ன வயசு தோழியும் கூட. அது தான் மனசு தாங்கல” என்று அவர் கூறி முடிப்பதற்குள், முத்து முத்தாய் கண்ணீர்ச் சரம் அவரின் கன்னத்தில்.

பின்பு ஒரு முடிவுக்கு வந்தவராய் அந்தக் கண்ணீரை அழுந்த துடைத்துவிட்டு, “இங்க பாரு டா அபி.. உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம். எந்தச் சூழ்நிலையிலும் உனக்கு நாங்க துணை இருப்போம். இது உன் வீடு. இது இந்த வீட்டுக்கு நீ காலடி எடுத்து வச்சதுல இருந்து ஒரு அம்மாவா.. உனக்கு நான் தர்ற உறுதி… சரியா?” என்று அவர் அவளது கையைப் பிடித்துக் கொண்டு கேட்கவும், வெறுமனே தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் அபி.

அவளது மனநிலையை உணர்ந்து கொண்டவராக வேறெதுவும் கேட்காது, “இப்போ முதல்ல நாம தாத்தாவை பார்த்துட்டு வந்துடலாம்” என்று அபியிடம் கூறிவிட்டு, கிருஷ்ணாவிடம் மற்ற வேலைகளைக் கவனிக்கும்படி பணித்தும் விட்டு அபியை அழைத்துக் கொண்டு தான் வெளிவந்த அறைக்குளேயே சென்றார்.

அங்கே கிருஷ்ணாவின் தாத்தா அரங்கநாதன், பார்ப்பதற்கு அவ்வளவு பழம் கிழவராகத் தோன்றாவிட்டாலும் அவர் படுக்கையில் ஏதோ உடல் முடியாதவர் போலக் கண்மூடிப் படுத்திருக்கவும் சிறு யோசனை அபிக்கு.

அவளது சிந்தனை சென்ற திசையைச் சரியாகக் கணித்தவராக நளினி, அபியின் காதுக்குள், “தாத்தா அந்தக் கால ஆளு. நல்லாவே திடகாத்திரமாத் தான் இருந்தார். ஆனா… இந்த விஷயம் கேள்விப்பட்டு மயங்கி விழுந்துட்டார். இரத்த அழுத்தம் அதிகமாகிடுச்சு. மாப்பிள்ளை தருண் டாக்டர்ன்றதால அவரே கவனிச்சுட்டு இருக்கார். பயப்படற மாதிரி எதுவும் இல்ல, ஆனாலும் கூட நீ கொஞ்சம் சாதாரணமாவே பேச முயற்சி செய்டா..” என்று அங்குள்ள நிலைமையையும் அவளுக்கு விளக்கினார்.

அவளுக்கும் அது புரிந்துவிடவே, தானாகவே சென்று தாத்தா அரங்கநாதனின் அருகில் அமர்ந்தாள். அவள் வந்து விட்டதைத் தருண் மெதுவே அவருக்குத் தெரிவிக்க, மூடியிருந்த அவரது கருவிழிகள் மேல் சிறு அசைவு.

கலங்கிய கண்களுடன் விழித்தவர், அவளைக் கண்டதும், எழுந்து உட்கார முயல, அவரை அப்படியே படுத்துக் கொண்டே பேசும்படி கூறினான் தருண்.

அவர் மீண்டும் சிரமப்பட்டுப் பேசுவதற்குள், “தாத்தா.. நடந்த விஷயம் ரொம்பவே வேதனையானது தான். யாராலயும் தாங்க முடியாது தான். ஆனா அத நினச்சு நினச்சு நாம நம்மளையும் அழிச்சுக்கக் கூடாது. இத அப்பாவும் விரும்ப மாட்டார். ஏன்னா அப்பா…” என்று அதுவரை திடமாகப் பேசிக் கொண்டிருந்தவள், இறுதி வார்த்தை கூறும்போது துக்கம் தொண்டையை அடைத்துவிட, சற்று செருமி அதைக் கட்டுப்படுத்தினாள்.

பின்பு , “அப்பா அடிக்கடி சொல்லற விஷயம் என்னன்னா.. நமக்குப் பிடிச்சவங்க நம்மள விட்டுட்டு போய்ட்டா அவங்கள நினச்சுட்டே நம்ம வாழ்க்கையை அழிச்சுக்கணும்னு இல்ல. அது உண்மையான பாசமும் இல்ல. அவங்க நாம எவ்வளவு நல்லா வாழணும்னு நினச்சங்களோ அப்படிப்பட்ட வாழ்க்கையை நாம வாழறது தான், நாம அவங்க நம்ம மேல வச்ச அன்புக்கு, நேசத்துக்குச் செய்யற அதிகபட்ச மரியாதை. அப்படின்னு சொல்லுவார். அதனால நாம இப்படி அழுது கரைஞ்சு நம்மள வருத்திக்கறத அவரு என்னைக்கும் விரும்ப மாட்டார்” என்று கூறியவளுக்கு, அவர் எந்தச் சூழ்நிலையில் அதைக் கூறினார் என்பதும் நினைவு வந்தது.

அது அபிலயாவின் அம்மா இறந்து சில நாட்களில் நடந்த விஷயம்… எப்பொழுதும் அழுகையில் கரைந்து கொண்டிருந்த அவளை அழைத்துத் தன்னருகே அமர்த்திக்கொண்டு அவர் கூறியது.

“உன்னோட அம்மா இல்லாம போய்ட்டாங்கன்னா, அவங்க நினைவுகள்லயே நீ உன் வாழ்க்கையைக் கழிச்சுடணும்னு இல்ல. அவங்க நீ எப்படி வாழணும்னு ஆசைபட்டங்களோ, அப்படிப்பட்ட நல்ல வாழ்க்கையைச் சந்தோசமா வாழறது தான் அவங்களுக்கு நீ செய்யற மிகப்பெரிய கடமை. அப்போதான் அவங்க உன்ன பார்த்து சந்தோசப்படுவாங்க” என்று அவர் கூறியது அப்பொழுது தான் சொன்னது போல அவள் காதில் ஒலித்தது.

தந்தையின் நினைவில் இருந்து மீண்டவள், அவர் வார்த்தை கொண்டே தாத்தாவுக்கு ஆறுதல் அளிக்க, கூடவே தன் மனமும் சற்றேனும் ஆறுதலடைவதை உணர்ந்தாள்.

ஆனால் அதெல்லாம் செழியனின் உடலைப் பார்க்கும் வரையில் தான். அவள் தாத்தாவிடமும், பாட்டி வெண்மணியம்மாவிடமும்  பேசிவிட்டு வெளியே வரும்பொழுது செழியனின் உடலும், ரதியின் உடலும் கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தது. அதைக் கண்டு உடைந்து கதறிவிட்டாள் அபி.

அங்கிருந்த அனைவரும் அந்தத் துக்கத்தில் பங்கெடுத்தாலும், சிலருக்கு செழியனுடன், இருக்கும் இன்னொரு பெண் யாரென்ற சந்தேகம் மனதில் ஓடியது. அந்தச் சந்தேகத்திற்கு விடை கேட்டு அனைவரின் பார்வையும் கேள்வியாய் அபியை நோக்கியது.

(தொடரும் – சனிக்கிழமை தோறும்)

பகுதி 1

பகுதி 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️
    அந்த வாய்ஸ் மெசேஜ் ல அபிரதி, அபிலயா கிட்ட தன்னோட இடத்துல இருந்து அம்மாவை பார்த்துக்க சத்யம் வாங்கிருப்பாளோ 😳😳😳😳😳😳

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 15) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

மாலையில் யாரோ மனதோடு பேச (சிறுகதை) – ✍️ வனஜா முத்துகிருஷ்ணன்