in

மாலையில் யாரோ மனதோடு பேச (சிறுகதை) – ✍️ வனஜா முத்துகிருஷ்ணன்

மாலையில் யாரோ மனதோடு பேச (சிறுகதை)

ஜூலை 2022 சிறந்த படைப்பு போட்டிக்கான பதிவு

ஆதவன் தன் ஒளிக்கதிர்களைச் சுருக்கிக் கொண்டு சிறிது சிறிதாக மறையும் நேரத்தில், அலைபாயும் மனம் ஒரு நிம்மதியைத் தேடும் மாலைப் பொழுதை ரசித்துக் கொண்டே

சமையலறைக்குள் நுழைந்தாள் கோதை..

 ….”இத்தனை நேரமாச்சு. ஏன்  இன்னும் ஷோபா வரலை ? என்னன்னு தெரியல…. இந்தப் பொண்ணுங்களை வச்சுண்டு நான் படற பாடு அதுங்க மூணும் வர கொஞ்சம் லேட்டானாலும் மனசு படபட ன்னு இருக்கு… என்று புலம்பிய படியே பாத்திரங்களைத் தேய்த்து கொண்டிருந்தாள் கோதை..

…”அம்மா…. என்னம்மா புலம்பறே? அவளோட வேலை அப்படி.

திடீரென புதுசா யாராவது நோயாளிங்க வந்திருப்பாங்க.. பாதியில விட்டுட்டு வரமுடியுமா? வருவாம்மா”.. என்றாள் ரூபா கோதையின் இரண்டாவது மகள்.

“என்னடி பண்றது? நான் பெத்தது மூணும் பொண்ணுங்க. ஆம்பளை இல்லாத வீடுன்னா பயமாத்தானே இருக்கும்?”

“ஏன்.? ஆம்பளை இல்லாத வீடுன்னா பெண்கள் தனியா வாழவே முடியாதா என்ன?” என்றாள் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்த மூன்றாவது மகள் சுபா.

கோதையின் பக்கத்தில் வந்து நின்று அவள் தலையைக் கோதி விட்ட ரூபா.

“..அம்மா….. ஏன் அடிக்கடி ஆம்பளை இல்லாத வீடுன்னு சொல்றே. உன் ஆம்பிளை இருந்த போது என்ன செஞ்சார்? காலை ஆட்டிண்டு படுத்துண்டு ஒரு வேலைக்கும் போகாமல் ஊர்வம்பு பேசிண்டு உட்கார்ந்து இருந்தார். படிக்காத நீதானே காலையில் எழுந்தா ராத்திரி வரை ஒவ்வொரு வீடா போயி சமையல் செஞ்சு எங்களைக் காப்பாத்தினே. அந்த ஆம்பள மூணு பொண்ணுங்களைப் பெத்துட்டு ஓடிட்டார். இருக்கிற இடமும் தெரியல. அவர் உசிரோடு இருக்காரான்னும் தெரியலை”.

அதற்குள் தன் உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு டவலால் முகத்தை துடைத்தப்படியே வந்த சுபா,

“அம்மா….ஒண்ணு சொல்றேன். யானை இருந்தாலும் ஆயிரம் பொன். இறந்தாலும் ஆயிரம் பொன். ஆனா உன் புருஷன் இருந்தாலும் இல்லைன்னாலும் ஒண்ணுதான். இருந்த போது ஒண்ணும் சாதிக்கலை. இப்போ எங்கேயோ இருக்கும் அவரை நினைச்சு எப்போ பார்த்தாலும் இந்த ஒரு வார்த்தைதான் உன் வாயில வருது”

அதற்குள் வாசல் கேட் திறக்கும் சப்தம் கேட்டது.

“அப்பாடி….ஷோபா வந்துட்டாடி..”

என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி , வெளியே ஓடி வந்து கதவைத் திறந்த கோதை,’ ‘ஏம்மா… இத்தனை நேரம்? பயந்தே போயிட்டேன். இப்படி லேட்டா வந்தா அக்கம் பக்கத்தில் இருக்கிறவா எல்லாம் இந்த வீடு பொம்பளைங்க ராஜ்யம்.

அதது இஷ்டப்பட்ட நேரத்துக்கு வரதுகள் என்று வம்பு பேச மாட்டாளா? என்று ஓடிப்போய் அவளது பைகளை வாங்கிக் கொண்டு வந்தாள் கோதை.

“அம்மா….பாவம் இப்போதான் அவ ஹாஸ்பிடலில் இருந்து களைச்சுப் போய் வரா. வரும்போதே எத்தனை கேள்வி….?” என்றபடியே ஷோபாவிற்கு குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து தந்தாள் ரூபா..

….”அம்மா.. பக்கத்தில் இருக்கிறவங்க என்ன வம்பு பேசினா நமக்கென்ன? ஆனானப்பட்ட சீதையைப் பத்தியே வம்பு பேசிய உலகம் இது”… என்றாள் சுபா.

…..”அம்மாக்கு எல்லாமே பயம்.. ஆனா இப்படி பயந்தவங்க

எப்படித்தான் நம்ம மூணு பேரையும் தைரியசாலிகளாக, எதையும் எதிர் கொள்ளும் வீரப் பெண்களாக வளர்த்து இருக்கான்னு தெரியலை..”

“ஆமாம் ஷோபா… நாம எல்லோரும் பாரதியின் ரசிகைகள். அவரோட கவிதைகளும் பாட்டுக்களும் நமக்கு புத்துணர்ச்சி தரும் பரிசு. பெண்களை பத்தி எத்தனை உயர்வா எழுதி இருப்பதோடு அவங்களை மதிக்க தெரிந்தவர். அதுதான் நம்மை தைரியசாலியா ஆக்கி இருக்கோ..”என்றாள் சுபா..

“சரிம்மா….வா.. பசிக்கிறது. இன்னிக்கு என்ன சமையல்? வாசனை மூக்கை துளைக்கிறது.” என்று குளித்துவிட்டு வெளியே வந்தாள் ஷோபா..

“நான் சொல்லட்டுமா.இன்னிக்கு சுண்டைக்காய் வற்றல் குழம்பு வெண்டைக்காய் பொரியல். சீரக ரசம். சுட்ட அப்பளம்.. ஷோபா… ரூபா… வாங்கோ. ஒரு வெட்டு வெட்டலாம்.” என்றாள் சுபா.

… “சரி.சரி‌ . இன்னைக்கு உங்க ரெண்டு பேர் ஆபீஸில் என்ன புதுசா செய்தி? என்றபடியே மூவரும் மகிழ்ச்சியுடன் அரட்டை அடித்துக் கொண்டு சாப்பிட உட்கார,

“அம்மா… இத்தனை நேரமாச்சு. நீ சாப்பிட்டயா?. காலைல இருந்து சமையல் வேலை ஏன்தான் இப்படி இருக்கயோ தெரியலே..நீ கஷ்டப்படாதே.. வேண்டாம் நாங்க மூணு பேரும் நன்னா சம்பாதிக்கிறோம்ன்னா ,

“பாவம் அடுத்தாத்து பட்டுமாமி மாமா வயசானவா. அவாளுக்கு எதுவும் ஒத்துக்காதுன்னு சொல்றே.

சரின்னு சொன்னா., பாவம்டி எதிராத்து மாலா இப்பத்தான் குழந்தைப் பொறந்து இருக்கு. அவளுக்குச் சொந்தம்னு சொல்லிக்க ஒருத்தரும் இல்லைன்னு பரிதாபப்பட்டு அவாத்துக்கு போய் சமைச்சு தரே.

….அதோட விட்டதா ஷோபா.‌ எதிர் ஆத்துல பசங்க “பாவம் அவனுங்க… அப்பா அம்மாவை விட்டுட்டு வந்து சாப்பாட்டுக்கு அல்லாடறது. அவாளுக்கு ஒரு வாய் நல்லதா சமைச்சு போடறேன்னு போறே…” என்றாள் ரூபா..

“ஆமாம்.யாரைப் பார்த்தாலும் பாவம்தான். ஆனா நம்மளை பார்த்து பாவப்பட ஒருத்தரும் இல்லை.” என்றாள் சுபா தன் பங்குக்கு.

“பொண்ணுங்களா.. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் னு பழமொழி. உங்க மூணு பேரையும் சமையல் வேலை செஞ்சு தான் ஷோபாவை சேவைகள் செய்யும் செவிலியராக, ரூபாவை நல்லவைகளை அநீதிகளை எதிர்த்துப் போராடும் வக்கீலாக, சுபாவை ஆதரவில்லாத முதியோர்களையும், குழந்தைகளையும் பராமரிக்கும் வேலையிலும் சேர்த்து இருக்கேன். ஒரு மனித ஜென்மமாக பிறந்தவர்கள் ஏதோ ஒரு வகையில் பொறந்த பூமிக்கு நன்றிக்கடன் செலுத்துவது முக்கியம். ஆமாம். பாரதி நாட்டை மட்டுமே மனசுல நெனச்சு வாழ்ந்தார். ஆனா நம் நாட்டு சுதந்திரத்திற்காக எத்தனை கஷ்டப்பட்டிருக்கார்.? சரி விடு. தூக்கம் வரது “

கோதை தூங்கப் போனபிறகு,

“ரூபா…சுபா.. இன்னிக்கு எங்க ஹாஸ்பிடலுக்கு ஒரு வயசானவர் வந்திருந்தார். அவருக்கு குஷ்டரோகம் . கையெல்லாம் சுருங்கி இருந்தது. அவரைப் பார்த்தா நம்ம அம்மாவின் புருஷர் மாதிரி இருந்தது.”

“அப்படியா…அவருக்குச் சரியான தண்டனை தான் கெடச்சிருக்கு.” என்றாள் ரூபா.

“சும்மா. இருடி”… என்றாள் ஷோபா.

“போங்கப்பா.. நான் பொறந்து மூணு வருஷத்தில போனவர். அப்பாங்கற ஸ்தானத்தில இருந்து என்ன செஞ்சுருக்கார்?.நம்ம மூணு பேரும் எத்தனை வில்லன்கள்கிட்ட இருந்து தப்பிச்சு பாடாப் பட்டிருக்கோம். படிக்க பணம் கட்ட எத்தனை பேர் கிட்ட “பவதி பிஷாம் தேஹி”ன்னு  கையேந்திருக்கோம். எனக்கு அவரோட முகம் கூட நினைவில்லை. எத்தனை பேரை ஏமாத்தி பணம் வாங்கியிருக்காரோ? அந்தப் பகவானுக்கே வெளிச்சம்..” என்றாள் சுபா..

இந்த உரையாடல்களை தூங்குவது போல பாவனை செய்து அத்தனையும் கண்களில் நீர் வழியக் கேட்டுக் கொண்டு இருந்தாள் கோதை.

மறுநாள் காலையில்,. “அம்மா… இன்னிக்கும் வர லேட்டாகும். நிறைய வேலை இருக்கு” என்று மருத்துவமனைக்குக் கிளம்பினாள் ஷோபா..

“எனக்கும் கொஞ்ச நாளா உடம்பு என்னமோமாதிரிஇருக்கு . நானும் வரேன்” என்றாள்.,கோதைக்குப் பின்னால் நின்று கொண்டு “வேண்டாம்” என்று கண் ஜாடையாலும் கைகளையும் அசைத்த ரூபா..சுபா.

‘என்னடி…ஷோபா.. உனக்கு இஷ்டமில்லையா? வேண்டா வெறுப்பா திருதிருன்னு முழிக்கிறே? இதோ பாருங்கடி. .உங்க மூணு பேரையும் வளர்த்து ஒருத்தியா நின்னு படிக்க வச்ச எனக்கு, உங்களை மாதிரி எத்தனை பேரைப் பார்த்து இருப்பேன். எனக்குத் தெரியும். ராத்திரி நீங்க பேசிண்டு இருந்ததைக் கேட்டுண்டுதான் இருந்தேன் ‌”.

“ஐய்யோ…அப்போ அவரை இங்க அழைச்சிட்டு வரப் போறயா?” என்றார்கள் மூவரும் ஒருமித்தக் குரலில்..

புன்னகை தவழும் முகத்துடன் ஷோபாவுடன் ஹாஸ்பிடலுக்குச் சென்றாள் கோதை..

மருத்துவமனையில் விடுவிடுவென்று உள்ளே புகுந்த கோதை, தன் கணவர் ராமனை உற்றுப்பார்த்தாள். மனதில் பொங்கி எழும் கேள்விகளை அடக்கிக் கொண்டு, ஒரு நிமிடம் மெய்மறந்து நின்று, திரும்ப வெளியே வந்து தன் வீட்டினுள் நுழைந்தாள் கோதை.

பின்னால் வந்த மூவரும், “என்னம்மா….. திடீரென வந்தே. ஒண்ணுமே பேசாமல் வந்துட்டே.” என்று கேட்கவும் குளியலறைக்குள் சென்ற கோதை ‌அழுதுகொண்டே,

“போறும்டி…. இத்தன வருஷமா மூடிமறைச்ச ஒரு விஷயம் இன்னைக்கு சொல்றேன்… வேலை பார்க்காம ஜடம் மாதிரி இருந்த ஒருத்தருக்கு எங்கிருந்து தான் ஒருத்தி வந்தாளோ? அவளுக்கு அடங்கி ஒடுங்கி சேவகம் செஞ்சு இப்போ இந்த வியாதியோட வந்திருக்கார். அப்போ நீ எதுக்கு அவரைப் பார்க்க ஓவந்தேன் னு கேட்பேள்?.

அடிக்கடி ஆம்பள இல்லாத வீடுன்னு சொல்றேனே. எதுக்குத் தெரியுமா? இந்த வார்த்தை என் புருஷன் நம்மை விட்டுட்டு போகும் போது, “ஆம்பளை இல்லாத வீடு. மூணுபொண்ணுங்களை வச்சுண்டு எப்படி குப்பைக் கொட்டப் போறே.”? என்று பெண்களைக் கேவலமா பேசிட்டு போனார். அந்தச் சொல் திரும்ப திரும்ப நானே சொல்லிண்ட போது என் மனசுல ஒரு சக்தி, வைராக்கியம் வந்தது. நான் பழைய காலத்து மனுஷியாக இருந்தாலும் ,

“பாதகஞ் செய்பவரைக் கண்டால்

முகத்தில் மோதி உமிழ்ந்து விடு பாப்பா”

என்று அவர் முகத்தில் உமிழத்தான் போனேன்.ஆனால் நான் இத்தனை நாளா உங்களுக்கு சொல்லித் தந்த நல்ல பண்புகள் என்னைப் பண்ணவிடாமல் தடுத்துது.  அந்த மனுஷனை கடைசியா அவர்தானா…. என்று பார்க்கப் போனேன். அவர் கட்டின தாலி வேண்டாம். அதை நான் எப்பவோ கழட்டி வச்சாச்சு. ஆனா நான் பொறந்ததில் இருந்து கூடவே பூவையும் பொட்டையும் ஒரு ஏமாற்றுக்காரருக்காக எதுக்கு விடணும்?’

அமைதியின் இருப்பிடமான நம் அம்மாவா இப்படி பேசறது ?மாலை வேளையில் துளசி மாடத்தின் பக்கத்துல ‌,தினமும் அம்மா மனசோடு பேசி நமக்கு எதுவும் தெரியாம மறைச்சு வச்சிருக்கா. அடிக்கடி அந்தப் பாட்டை ” மாலையில் யாரோ மனதோடு பேச “என்ற பாடுவதும் அதனால் தானா.? என்று மூவரும் ஆச்சரியமாகக் கண்கள் இன்னும் அகலமாக விரியப் பார்த்தார்கள்..

“ஆனா அவர் தந்த நல்லது எது தெரியுமா?மூணு ரத்தினங்களை எனக்கு தந்ததுதான். நீங்க மூணு பேரும் இல்லாமல் இருந்தா, நான் போன இடம் புல்லு மொளச்சிருக்கும்… உங்களுக்காகத்தான் நான் உசிரப் பிடிச்சுண்டு இருக்கேன். உங்க மூணு பேரையும் நல்லவாளாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சா நான் நிம்மதியா கண்ணை மூடுவேன்.” என்று நெகிழ்ச்சியுடன் கூறிய கோதை,

சரி.சரி….விடுங்கோ…இன்னும் அரைமணியில சமையல் ஆயிடும். பசியா இருப்பேள்…நீங்களே போட்டுண்டு சாப்பிடுங்கோ..பாவம் பட்டு மாமி மாமாக்கு பசி தாங்காது. வயசானவா. நேரமாச்சு நான் கிளம்பறேன்” என்றபடியே நிமிர்ந்த நடையுடனும்,நேர் கொண்ட பார்வையுடனும் கிளம்பினாள் கோதை.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. “UthaaraNaththiRku, naduththara kudumbam onRin chanGadanGaLai inthach chiRu kathai azhagaach chuttik kaattuGinRathu. Athu ennavO uNmai thaan. KaviGnar Sri Bharathiyin paadalGaL ellOrukkum, mukkiyamaagap pEN vargaththiRku, puththuNarchiyaiyum, chiRantha vazhiyaiyum kaattuGinRathu. Avar cholliya paathaiyil chenRu ellOrum munnERRamum,mana nimmathiyaiyum kaNdu peedu nadai pOduvOm.

    – “M.K. Subramanian.”

  2. “UthaaraNaththiRku, naduththara kudumbam onRin chanGadanGaLai inthach chiRu kathai azhagaach chuttik kaattuGinRathu. Athu ennavO uNmai thaan. KaviGnar Sri Bharathiyin paadalGaL ellOrukkum, mukkiyamaagap peN vargaththiRku, puththuNarchiyaiyum, chiRantha vazhiyaiyum kaattuGinRathu. Avar cholliya paathaiyil chenRu ellOrum munnERRamum, mana nimmathiyaiyum kaNdu peedu nadai pOduvOm. Tamizhil ezhuthaathaRku ennai mannikkavum.

    – “M.K. Subramanian.”

  3. அருமையான கதை! தன் காலில் நின்று வாழ்க்கையை நிமிர்த்திக் கொண்டிருக்கும் அம்மாவும், பெண்களும் பாரதியின் புதுமை பெண்கள் தான்!!

  4. மிகவும் அருமையான கதை.வைராக்கியம்
    தன்னம்பிக்கை தைரியம் நேர்மை போன்ற பண்புகள் பெண்ணுக்கிருந்தால் போதும்.வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என அழகாக உணர்த்தும் யதார்த்தமான கதை 👏👏

காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 3) – ✍ விபா விஷா, அமெரிக்கா

வல்லபி ❤ (பகுதி 1) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை