in

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 15) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்... (அத்தியாயம் 15)

ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

15. விடை தெரியா கணக்கு                    

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இணைப்பு

ர்வோதய சங்கம் – சிதம்பரம்..! 

கிருஷ்ணன் வெகு வேகமாக செக்ஷனிலிருந்து வந்து, “என்னோட லெட்டர்..” என்றான்.

அதற்கு அவர், “அது உனக்கில்ல பா.. நம்ம கோபி கிருஷ்ணனுக்கு. சரி வா.. கிளம்புவோம். ஒரு முக்கியமான வேலை இருக்கு..” என்று சொல்லி அவசரமாக அவனைக் கிளப்பினார்.

அவனும் ஆர்வம் அடங்காமல், “இனிக்கு எந்த ஊருக்கு போறோம்?” என்று கேட்க, “நான் எங்க கூப்பிட்டாலும் என்னோட வருவல்ல..” என்று கொக்கிப் போட்டார்.

கிருஷ்ணன் ஏனோ கண்கள் கலங்கினான். “நா உங்கள வெறும் மேலதிகாரிய மட்டும் நினைக்கலங்க. வேலை பாக்குற இடத்துல எனக்கு அப்பா, அம்மா, அண்ணன், தோழன் இப்படி எல்லாமவு நினைக்குறேன்..” என்றான்.

இதைக் கேட்ட பாலச்சந்தர், தன் விழிகள் பனித்து விடாமல் பார்த்துக் கொண்டார். “சரி.. வா போகலாம்..” என்று அவனைத் தன் காரில் ஏற்றினார்.

கிருஷ்ணன் வேலை அலுப்பில் தூங்கி விட்டான். பாலச்சந்தருக்கு உறக்கம் வரவே இல்லை. வண்டி எங்கேயும் வழியில் நின்றபாடில்லை. நேரே கிருஷ்ணன் வீட்டு வாசலில் தான் நின்றது. 

குடியேற்றம் – கிருஷ்ணன் வீடு..!

கிருஷ்ணனுக்குப் பெரும் அதிர்ச்சி. “என் வீட்டுக்கா? நல்லதா போச்சு. உங்கள நானே கூப்பிட்டு வரணும்னு யோசிச்சேன். அப்ரோ உங்களுக்கு இதுலாம் வசதிப்படாதுன்னு அந்த யோசனையை விட்டுருவேன்..” என்று பேசிக்கொண்டே கீழிறங்க, அவன் வீட்டின் முன் நிறைய பேர் நின்றிருந்தனர். மாமா, அக்கா, ராதா எல்லாம் வாசலில் நின்றிருந்தார்கள். 

பாலச்சந்தர் அவனைக் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார். அதற்கு முன்னமே கிருஷ்ணனுக்குப் புரிந்து விட்டது. விழிகள் பயந்து, நீர் சுரக்கத் தயராகிக் கொண்டது.

வாசலில், மணல் குவித்து ஊதுபத்தி ஏற்றி வைத்திருந்தார்கள். உள்ளே சென்றதும் அது ஊர்ஜிதமாகி விட்டது. அங்கே அவன் பார்த்த காட்சி, அவன் காதுகளில் சில வாக்கியங்களைத் திரும்ப திரும்ப ஒலிக்கச் செய்தன.

“உன்ன கணக்குப் படிக்க வெச்சவன், இந்த பழனி கணக்கு முடிஞ்சிடும்”

“போ..போ எனக்கு அந்தப் பழக்கம்லா இல்ல”

“உன் அம்மா நினைக்குற மாறி நீ கெட்டுப் போயிட மாட்ட..”

இப்படியெல்லாம் வாழ்க்கையைத் தன் கைவிரல்களால் அளந்தவனுக்கு இன்று ஆறடி அளந்து வைத்து விட்டார்கள்” என்று கிருஷ்ணனுக்குத் தோன்றியது.

அவன் அப்படியே பாலச்சந்தரின் தோள் மீது சாய்ந்து அழுதான். தேம்பிப் தேம்பி அழுதான். அதில், “ஏம்பா..? எல்லாத்துயு சொன்னியே.. இத்த ஏன் மறச்ச..,? என்னாண்டா முன்னாடியே சொல்லிருந்தா நா இங்கேயே இருந்திருப்பேனே? வேலை போனா வரும்.. நீ இருந்திருப்பல்ல..?” என்ற கேள்வி, வேள்வியாய் எரிந்து கொண்டிருந்தது.

வாழ்வில் முதல் முறையாக “அப்பா….” என்று அலறினான் அவன்…………

கிருஷ்ணனை, பாலச்சந்தர் அப்படியே விட்டுவிட்டு செல்லவில்லை. அன்று இரவு அங்கேயே இருந்து, சாப்பிட்டு விட்டுத் தான் கிளம்ப எத்தனித்தார்.

கிருஷ்ணனின் கையில், 5 – ஆயிரம் ரூபாய் தாளைத் திணித்து, “செலவுக்கு வெச்சிக்கோப்பா..! வருத்தப்படாதனு சொல்றதுக்கு நா ஒன்னு கல் நெஞ்சத்தான் இல்ல.. இந்த ஒரு வாரத்துல நீ என்ன உணருறியோ அதான் இனிமே உன் வாழ்க்கைக்கு..! ஒன்னும் அவசரப்படாம, காரியம் முடிஞ்சே வாப்பா….” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். 

அந்த இரவு அவனுக்கு ரொம்பவும் பயமூட்டுவதாக இருண்டிருந்தது. அப்பாவின் அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டு, அந்தக் கட்டிலைத் தொட நினைத்தான்.

அவர் சவத்தை, இடுகுழியில் போடுகையில், கைகள் எப்படி நடுங்கியதோ, அப்படி ஒரு நடுக்கம். கண்களில் கண்ணீர் ஆறு பெருக்கெடுத்தது. அவன் மனம் அவரை நினைத்து ஏங்கியது.  

‘இந்த இடத்துல, எனக்கு எத்தனை சொல்லிருப்பாரு நைனா.. யாருமே இந்த பூமில ஒட்டுப்பத்து இல்லாம வாழ்ந்திட முடியாது..  அவராண்ட நா அடிக்கடி பேசனது இல்ல. ஆனாலு, அவரில்லாம இருக்குற இந்த வெறிச்சோடிய கட்டில் என்ன அழ வைக்குது.. இப்போ கூட அவர் சித்து வேலைப் பண்ணி எழுந்து வந்துட மாட்டாரான்னு மனசு கடந்து அடிச்சிக்குது…! கணக்கு கணக்குன்னு, இப்படி விடை தெரியா, கணக்காயிட்டியே நைனா’ என்று நினைத்து, உடனே ஜன்னல் கதவுகளைத் திறந்தான்.

‘இந்த வழியா பேய் பிசாசுங்ககிட்டலாம் நைனா பேசுமே..! அதுங்களுக்குக் கூட தெரிஞ்சிருக்கும். ஒருவேல இப்போ வந்தா, அவரு எங்க இருக்காரு? எப்டி இருக்காருன்னு கேட்டுக்கலாம்.. ஒரு ஆறுதலா இருக்கும்..’ என்று சிறுபிள்ளை போல யோசித்தான்.

பின்பு, அப்படியே கட்டிலைக் கட்டிக்கொண்டு, அங்கேயே படுத்துக் கொண்டான்.  அவனை அண்ணன் ராதா வந்து உலுக்கினார்.

“உன்ன கொண்டாந்து வுட்டாரே..? அவுரு தா உங்களுக்கு மேலதிகாரியா?” என்று ராதா கேட்டதற்கு, கிருஷ்ணனிடம் ஆம் என்றவாறு ஒரு தலையசைப்பு.

ஆம்..! அதற்கு மேல், அவரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? ஏனெனில், அவர் கிருஷ்ணனோடு வந்து, வேலைகளை இழுத்துப் போட்டு செய்து, சொந்தத்தைப் போல கடைசி பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுச் சென்றதை ஊரே அல்லவா பார்த்தது? இதிலிருந்தே அவர் பெரிய மனுஷத்தனம் புலப்பட்டு விட்டது. அதற்குப் பதவி ஒன்றும் அவசியமிருக்காது. 

கிருஷ்ணனுக்கு, பாலச்சந்தர் ஐயாவைப் பற்றிப் பேசும் போது தான் பொறி கலங்கியது போல் ஒரு நினைவு.

‘கடைசியா சார் ஏதோ சொன்னாரே? இதுக்கு அப்ரோ நான் எடுக்கப் போற முடிவுன்னு சொன்னாரே..!’ என்று நினைத்தான்.

அதே நேரம், “ஏன்யா.. இன்னு தூங்கல?” என்றபடியே அம்மா பார்வதி அங்கு வந்தாள். தலை இங்கும் அங்கும் ஆடியது. தோலில் சுருக்கம். மனதில் கணவனை இழந்த இறுக்கம். எல்லாம் அவளை வாட்டி எடுப்பது போல் உணர்ந்தான். எடுக்க வேண்டிய முடிவு என்னவென்று விளங்கி விட்டது.

“மா.. நா இதுக்குமேல இங்கேயே இருந்துடறேன்மா.. வேலை வரப்போ வரட்டும்..! நா இங்கே ஏதாவது கடைல கிடைல நாலு காசு சேத்து, உங்கள பாத்துக்குறேன்..” என்று சொல்லவும் அம்மா அவனை ஏசினாள்.

“டேய்.. சும்மா இருடா..! ஒன்னுல.. நீயாவது போய் அங்க நல்லாருடா…! அதுக்கு மேல நீ அங்க இருக்குறதுதா நல்லது.! பொண்ணு பாக்குற இடத்துலலாம் நா அப்டித்தான் சொல்லி வெச்சிருக்கேன். எப்படியோ உன்ன ஒரு நல்ல பொண்ணுகிட்ட புடிச்சி கொடுத்துட்டா, எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்..” என்று சொல்லிக் கொண்டே போய் படுத்துக் கொண்டாள்.

கிருஷ்ணனும் அதற்கு மேல் அவளிடம் பேச விரும்பவில்லை. நடக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான்..

குடியேற்றம் – லட்சுமி வீடு..! 

நாமே வேண்டாம் என்று நினைத்தாலும், விதி இருந்தால் விடாது என்று சொல்வார்கள் அல்லவா? அது போலவே லட்சுமிக்கும் நடந்தது. அன்று போனில் பேசிய ஜோசியர், ஏதோ ஒரு எண்ணத்தில், இந்த ஊரில் இருக்கும் ஜோசியரிடம் கிருஷ்ணன் ஜாதகத்தைப் பற்றி கூறியுள்ளார்.

லட்சுமியின் அப்பா, எதேச்சையாக, “எம் பொண்ணுக்கு வரன் பாத்துட்டு இருக்கே.. நீங்க கொஞ்ச பாத்து சொல்றீங்களா..? இதுக்கு முந்தி சிதம்பரத்துல விருப்பாச்சாரியர்னு ஒருத்தர்கிட்ட பாத்துட்டு இருத்தோம். ஊர் மாறி, இப்போ இங்க வந்தாச்சு. கொஞ்ச நல்ல இடமா பாத்துட்டா நல்லா இருக்கும்..” என்று சொல்லி வைத்தார்.

விருப்பாச்சாரியர் பெயரைக் கேட்டவுடன் அந்த ஜோசியர் மகிழ்ச்சி அடைந்து, “நா பாத்து கொடுக்குறேங்க. விருப்பாச்சார்யார் கிட்ட தான், நா ஜோஸ்யமே கத்துண்ட; இன்னு ஒரு வாரத்துல பேஷா பாத்துண்டு வந்துடறேன். நீங்க உங்க வீட்டு அட்ரஸ், பொண்ணு போட்டோ.. மத்த விவரங்களெல்லாம் கொடுங்கோ..” என்று பளிச்சென்று சொன்னார்.

லட்சுமியின் தந்தைக்கு அவர் பேசியது ரொம்பவும் பிடித்து விட்டது…! 

ஒரு வாரம் சென்றபின், ஜோசியர், சொன்னது போலவே ஒரு வாரம் கழித்து நேரே வீட்டிற்கு வந்து, சில பொருத்தமான ஜாதகங்களை நீட்டினார். ஜாதகத்தின் மேலேயே பெயர், ஊர், விலாசம் எழுதி நான்கு மூலையிலும் மஞ்சள் இடப் பட்டிருந்தது.

லட்சுமி தூணில் நின்றவாறே அவைகளைப் படித்தாள். அதில் கிருஷ்ணனின் ஜாதகமும் இருந்தது. சந்தோஷம், மனசெல்லாம் சிறகடித்து பறந்தாலும், அப்பா அம்மா முடிவு என்னவாக இருக்குமோ என்ற வேதனைப் பறவையும், மனதில் கூடு கட்டி அமர்ந்து கொண்டது. இதற்கு முன் அவளுள் சில கேள்விகளும் அவ்வப்போது எழுந்தன.

‘அப்பா ஒருவேளை மாட்டேன்னுட்டாருனா..? அவரு அந்தஸ்து, பெருமை எல்லாம் நினைக்குறவராச்சே..! பாப்போம்..!’ என்று கேள்விகளைப் புறந்தள்ளி, ‘இவளோ தூரம் எங்கள சேத்து வெச்ச கடவுள் கண்டிப்பா பிரிச்சிட மாட்டார்..! இது காதல் தான்.. ஆனா, பெற்றோர் சம்மதமில்லாம மோதிக்குற காதல் இல்ல.. இத நானும் அவர் கண்ணுல பாத்தேனே..’ என்று பூரித்துக் கொண்டாள். 

இதில் லட்சுமிக்கு இன்னோரு சமாதானம் வேறு.

‘இந்த ஜோசியர்கிட்டயும் இவரோட ஜாதகம் இருக்குன்னா, அவருக்கு இன்னு கல்யாணம் ஆகல. நல்லவேள.. ஊருக்கு வந்து ரெண்டு மாசம் ஆயிடுச்சே.. அவர் எங்க என்ன மறந்துடுவாறோன்னு நினைச்சேன்..!’ என்றவாறெல்லாம் யோசித்து, ‘சே.. இதென்ன இந்தப் பாழப்போன மனசு, அவரேயை சுத்தி சுத்தி வருது..? பி.எட்ல கடைசி வருஷம் வேற.. படிடி லட்சு.. இலனா அம்மா வருத்தப்படும். எம்புட்டு கஷ்டப்பட்டு என்னை படிக்க வைக்குது..’ என்று புத்தகத்தை எடுத்தாள். 

புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொண்டு, மோட்டுவளையைப் பார்த்து சிந்தித்தவாறு இருந்தாள் லட்சுமி. அவள் சிந்தனை அலைகளைக் கிழித்துக்கொண்டு அண்ணனின் குரல் கேட்டது.

“ஏய்… லச்சு..! உனுக்கு எக்ஸாம் வருதுடி.. டைம் டேபிள் வந்துருச்சு பாரு. எப்போ போனும் காலேஜூக்குன்னு பாரு..” என்றவுடன் லட்சுமி விறுவிறுவென்று எழுந்து வந்தாள்.

அண்ணனின் கையிலிருந்த டைம் டேபிளை வாங்கிப் பார்த்தாள். அவளுக்கு திக் என்றது. ‘ச்சே.. இன்னு ரெண்டு நாள்ல எக்ஸாமா? நா பாதிக்குப் பாதி இன்னு படிக்கலயே..’ என்று நொடித்துக் கொண்டாள்.

“சரி..சரி.. மொத எக்ஸாம்க்கு கிளம்பு… இங்கேர்ந்தே எழுதுவியா? நாளைக்குச் சாயங்காலமே போனாத்தான் டைம்கு போக முடியும்..” என்று அண்ணன் சொன்னான். 

அதற்கு சுருதி சேர்க்க வேண்டும் என்று நினைத்த அம்மா, சமையலறையிலிருந்து வெளிப்பட்டு, “ஒழுங்கா போய் எடுத்து வை.. அண்ணனோட போய்ட்டு வந்துடு என்ன..? காசுகடத் தெரு பாட்டி வீட்ல தங்கிக்கோங்க..” என்றாள்.

அப்பாவும் அதை ஆமோதித்தார். லட்சுமிக்கு அடி வயிற்றில் பயம் தொற்றிக் கொண்டாலும், மறுபக்கம் கிருஷ்ணன் இருக்கும் ஊருக்குச் செல்லப் போகிறோம் என்ற மகிழ்ச்சி மேலிட்டு இருந்தது.

‘நடராஜா.. எக்ஸாம்மு நல்லா பண்ணனும். முடிஞ்சா.. அவரப் பாக்குற அருள் குடுக்கணும்..’ என்று வேண்டிக் கொண்டாள். 

லட்சுமி கொஞ்சம் வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு, வேண்டிய துணிமணிகளை எடுத்து வைத்தாள். அப்போது டெலிஃபோன் மணி அடித்தது.

அப்பா எடுத்து, “ஹலோ..” சொல்லவும்

“நா ஜோசியர் பேசிறெங்க..! அனிக்கு காட்டுன ஜாதகத்துல, உங்க மனசுக்கு ஒத்துப்போற ஜாதகத்தை எடுத்து வைங்கோ..! நாளைக்கு சாயங்காலம் வரலாங்களா வீட்டுக்கு..?” என்று கேட்டார்.

“ஹான் நல்லது வாங்க..” என்றபடியே இணைப்பைத் துண்டித்து, தன் மனைவியை அழைத்தார் கோவிந்தன்.

“மா..புனிதா நாளைக்கு ஜோசியரு வறாராம். சாயங்காலம்..” என்று தகவலைத் தெரிவித்தார்.

இதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த லட்சுமி, “நடராஜா.. நல்லது பண்ணுப்பா..” என்று முணுமுணுத்துக் கொண்டாள். 

தேர்வுக்குக் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது. அன்று காலை லட்சுமியையும் வேலுவையும் நல்லபடியாக பேருந்து ஏற்றிவிட்ட அப்பா, அதே மாலை வேளையில், ஜோசியக்காரரையும் வரவேற்றார்.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காக்க! காக்க! ❤ (பகுதி 3) – ✍ விபா விஷா, அமெரிக்கா

    காதலாய்த் தூறுதே வான் மேகம்!!! ❤ (பகுதி 3) – ✍ விபா விஷா, அமெரிக்கா