in

பாட்டி (சிறுகதை) – ✍ பெருமாள் நல்லமுத்து

பாட்டி (சிறுகதை)

நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதி

“என்ன செல்லம்மா நேத்து நைட்டு பேத்திய ஆஸ்பித்ரிக்கு கூட்டிட்டு போனீங்க நீ மட்டும் திரும்பி வந்திருக்க என்னாச்சி?” என்றாள் பக்கத்து வீட்டு சொர்ணா. 

“ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணச் சொல்லிட்டாங்க, அதான் வீட்டுக்கு வந்து சாப்பாடு செஞ்சி எடுத்துட்டு போலாம்னு வந்தேன்”னாள் செல்லம்மா.                                                       

“ஏன் எங்கிட்ட சொன்னா செஞ்சிக் குடுக்க மாட்டேனா?’’                                             

“அப்படில்லாம் ஒன்னுமில்லக்கா ஏன் சும்மா தொந்தரவு பண்ணனும்னுதான், நானே சமைச்சிட்டேன். அடுத்து வர்ற பஸ்சப் புடிச்சி கெளம்ப வேண்டியதுதான்” என்று சொல்லிக் கொண்டே கிளம்ப ஆரம்பித்தாள் செல்லம்மா.                              

“சரி சரி இருடி நானும் கிளம்பி வர்றேன் ரெண்டு பேருமா சேர்ந்துப் போலாம்”னு சொன்னாள் சொர்ணா.

“இல்லக்கா நீ வேற ஏன் செரம்பப்படணும் வீட்டுக்கு வந்தவுடனே பாத்துக்கிடலாம்க்கா” என்று சொர்னாவிடம் சொன்னாள் செல்லம்மா.                                           

அடுத்த நாள் செல்லம்மா தன் மகன், மருமகள், மற்றும் பேத்தியுடன் வீட்டுக்குள் வந்து நுழைவதற்குள் ஓடோடி வந்தாள் சொர்ணா.

“என்ன செல்லம்மா, பாப்பா நல்லா இருக்காளா?’’

நகரமென்றால் நலம் விசாரிப்பு என்பது நகர்ந்து கொண்டே செல்லும்போதே கேட்டுவிட்டு போய்விடுவது, கிராமம் என்பதால் வூட்டுக்குள் வந்து நலம் விசாரித்தாள் சொர்ணாக்கா.

“என்ன செல்லம்மா, ஏன் அழற?”                                                                                                                                           

“சொர்ணாக்கா என் நிலமைய பாத்தீங்களா, நானும் எம்பையனும் என்ன பாவம் செஞ்சோம்னு தெரியல, எங்களுக்குப் போய் இந்த மாதிரி குழந்தை பிறந்திருக்கு”ன்னு அழ ஆரம்பித்தாள்.

“அழாத செல்லம்மா, நீ கவர்மெண்ட் ஆஸ்பிடல்லுக்குதானே எப்பையும் குழந்தைய கூட்டிட்டு போற. பிரைவேட் ஆஸ்பிடல்லதான் இப்ப பெரிய பெரிய டாக்டர்லாம் இருக்காங்களாம், அதனால நீ ஒன்னும் கவலப்படாத. நான் நம்ம ஊரு பிரசிடெண்ட் ஐயாக்கிட்ட சொல்லி உதவிப் பண்ணச் சொல்றேன்”னாள் சொர்ணாக்கா.

“இல்லக்கா நாங்களும் பூமிகா பிறந்ததிலயிருந்து அங்க, இங்கன்னு எல்லா டாக்டர்களுக்கிட்டேயும் கேட்டுட்டோம், ஆனா ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்கக்கா”

“சீதா, நானும் ஒங்கத்தையும் பாப்பாவ பாதுக்கறோம், நீ மத்த ரெண்டு குழந்தைகளையும் பாத்துக்கோம்மா” என்றாள் சொர்னாக்கா.                  

சீதாவுக்கும், குமாருக்கும் பதினோரு வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. குமார் சாதாரண மெக்கானிக்தான். சீதாவின் சொந்த அத்தைதான் செல்லம்மா, சொந்த அண்ணன் பொண்ணையே தன் பையனுக்கு கட்டிவைத்தாள் செல்லம்மா.

நெருங்கிய சொந்தங்களுக்கிடையே கல்யாணம் பண்ணினா இந்த மாதிரி உடல் ஊனங்கள் ஏற்படும்னு அறிவியல் சொன்னாலும் இன்னமும் நம்ம மக்கள் இந்த உண்மையை உணர்வதில்லை.

முதல் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தாள், ஆனால் வாய் பேசாத ஊமைக் குழந்தையாக பிறந்தாள். காதும் கேட்கவில்லை, கண்ணும் தெர்யவில்லை.

இப்போது வயது பனிரெண்டாகி விட்டது வீசிங் ப்ராப்ளம் வேற அதான் ரெண்டு நாளா ஆஸ்பிடலும், வீடுமா அழைஞ்சிட்டு இருந்தாங்க. அவர்கள் சக்திக்கு மீறி எல்லா ஆஸ்பிடல்களிலும் காட்டி விட்டார்கள். ஆனால் எந்த பலனும் கிடைக்கல.

சம்பாத்யம் எல்லாம் பொண்ணுக்கே செலவழித்ததுதான் மிச்சம். அடுத்த நாள் காலை.

“சீதா குழந்தைகளை அழைச்சிட்டு வா நான் ஸ்கூல்ல விட்டுட்டு அப்படியே கடைக்கு போறேன்”னான் குமார்

முதல் குழந்தை பூமிகாவுக்குப்பின், இரண்டு குழந்தைகள் பிறந்தார்கள். ஒரு பையன் நான்காம் வகுப்பும், இரண்டாவது பொண்ணு ரெண்டாம் வகுப்பும் படிக்கிறார்கள்.

அம்மா செல்லமாதான் “பூமிகாவை நான் பாத்துக்கறேன் கவலப்படாதீங்க அவளுக்குன்னு தம்பி, தங்கச்சிங்கன்னு கூட பொறந்த பொறப்புங்க இருந்தாதானே நம்ம காலத்துக்குப்பிறகு பூமிகாவை கவனிச்சிக்க முடியும்”னு சொன்னாள்.

அதனால்தான் ரெண்டு புள்ளைகளை பெத்துக்கிட்டாங்க குமாரும் சீதாவும். குமார் குழந்தைகளை பைக்கில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். வீட்டில் மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள் சீதா.

பூமிகாவின் மீது பெத்த தாயாய் ஆரம்பத்தில் பாசம் காட்டியவள் நாட்கள், செல்லச்செல்ல விரக்தியில் வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தாள். ஆனால் செல்லம்மா தன் பேத்தியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வாள்.

கார்பரேசனில் ப்யூனாக வேலைப் பார்த்து இறந்துப் போன தன் கணவரின் பென்ஷன் பணத்தை தன் பேத்திக்கே முழுவதுமாக செலவு செய்வாள். நாளடைவில் சொந்த வீட்டிலேயே நாலாவது மனிதர்களாக ஆகிப் போனார்கள் செல்லம்மாவும், பூமிகாவும்.

வீட்டில் உள்ள வராண்டாவில் படுத்துக் கொள்வார்கள். பேச்சித் தொணைக்கு பக்கத்துவீட்டு சொர்ணாக்கா அப்பப்போ வந்து செல்வாள். நாட்கள் நகர்ந்துக் கொண்டே சென்றதில் பூமிகாவும் வயதுக்கு வந்து விட்டாள். ஆனால் ஊரைக்கூட்டி எந்தவொரு காரியமும் செய்யமுடியாத சூழ்நிலை.

“என்ன செல்லம்மா பேத்தி பெரியபுள்ளையா ஆயிட்டா தாய்மாமன்னு ஒருத்தரும் இல்லையா?’’                                                                                      

“எல்லாம் இருக்காங்க, ஆனா எங்க ரெண்டு பேரையும் தான் சுமையா நினைக்கிறாங்களே. இதுல யாரு வந்து என்ன செய்ய போறாங்க. நான் நம்ம பூசாரியம்மாகிட்ட சொல்லி தீட்ட கழிச்சி விட்டுட்டேங்கா”

“போற போக்கப்பாத்த நீ இருக்கிற வரைக்கும்தான் இந்தப் புள்ளைக்கு பாதுகாப்பு போல”

“ஆமாக்கா நீ சொல்றது உண்மைதான் அத நெனைச்சா தான் எனக்கு பயமா இருக்குக்கா”

“பயப்படாத செல்லம்மா, கடவுள் இருக்காரு”னு ஆறுதல் சொன்னாள் சொர்ணாக்கா.

”அதான் நான் அப்பவே சொன்னேனே நீதான் கேட்க மாட்டேன்னுட்ட?’’                                 

செல்லம்மாவின் முகம் சற்றென கோபக்கணலாய் மாறிப்போய், “மொதல்ல நீ இடத்தை காலிப் பண்ணு, ஒன்னையெல்லாம் ஒரு மனுசியா நெனைச்சி இத்தனை வருஷமா பழகிட்டு இருக்கேன்ல என்னைய செருப்பால அடிக்கனும்”னாள்.            

“என்ன செல்லம்மா நெருப்புன்னு சொன்னா வாய் சுட்டுடும்மா? நீ நெனைக்கிறா மாதிரி நான் பழைய சொர்னாக்கா இல்ல, அவ என்னைக்கோ செத்துப் போயிட்டா. ஏதோ வாய் தவறி சொல்லிட்டேன் கோபிச்சிக்காத”ன்னு செல்லம்மாவை சாந்தப்படுத்தினாள் சொர்ணாக்கா.

சொர்னாக்கா பேச்சைக்கேட்டு செல்லம்மா ஏன் கோபமடைந்தாள் என்றால், கிராமத்தில் கள்ளிப்பால் கொடுத்து பல பெண் குழந்தைகளை கொன்றவள் சொர்ணாக்கா. அந்த பாவம்தான் வயசான காலத்தில் அவளை கவனிக்க கூட யாருமே இல்லாம அனாதையா கெடக்குறா. அதனால்தான் செல்லம்மா எப்போதுமே சொர்னாக்காகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருப்பா.

பூமிகா பொறந்தவுடனேயே, “எதுக்கு இந்த குழந்தைய வச்சிட்டு காலம் முழுசும் கஷ்டப்படணும், கள்ளிப்பால ஊத்தி கொன்னுடலாம்”னு சொன்னவத்தான் இந்த சொர்ணாக்கா.

ஆனா அதுக்கு செல்லம்மா ஒத்துக்கவே இல்ல. அதான் அன்னையிலயிருந்து இன்னைக்கு வரைக்கும் செல்லம்மா சொர்ணாக்காவிடம் பாத்துப் பாத்து தான் பழகுவா.

நாட்கள் நகர்ந்தன.                                       

கடந்த ஒருவாரமாக விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்தது. வழக்கமாக வீட்டு திண்ணையில் பூமிகாவோடு படுத்திருக்கும் செல்லம்மாவை இன்னைக்கு காணாததால் மருமகள் சீதாவிடம் வந்து, “எங்க சீதா ஒங்கத்தைய காணாம், ஊருக்கு ஏதும் போயிருக்காளா?” என்று கேட்டாள் சொர்ணா.                                                                           

“ரெண்டு நாளா ஒடம்பு சரியில்லம்மா, லேசா மழை பெஞ்சாலே வீசிங் ப்ராப்ளம் வந்திடுமே அதான் ஆஸ்பிடலுக்கு போயிருக்காங்க” என்றாள் சீதா.

சீதா சோறு கொடுத்தாலும் பூமிகா சரியாக சாப்பிடுவதில்லை பாட்டியின் அரவணப்பிலே வளர்ந்தவள்தானே.

 எதிர்வீட்டு சொர்ணா வந்து, “யம்மாடி பூமிகா, பாட்டி ஆஸ்பிடல்ல இருந்து நாளைக்கு வந்திடுவா, அதுவரைக்கும் நான் ஒன்னைய பாத்துக்கிறேன்மா. கொஞ்சூன்டு சாப்பிடுடி தங்கம்” என்று கெஞ்சிப் பார்த்தாள். ஆனால் பூமிகா எதனையும் கேட்டபாடில்லை

பூமிகாவுக்கு காதும் கேட்காது, கண்ணும் தெரியாது. ஆனால் அவளைச்சுற்றி நிகழும் எல்லா விசயங்களையும் உணர்ந்துக் கொள்வாள். சிறுவயது முதலே அவளுக்கு என்ன தேவை என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கேற்ப செல்லம்மா கவனித்துக் கொள்வாள்.

இரவு வீட்டிற்கு வந்த குமார், ”பாப்பா எதாவது சாப்பிட்டாளா சீதா?” என்றான்.                                                                              

“இல்லங்க நானும் எவ்ளோ தடவை முயற்சிப்பண்ணி பாத்தேங்க சாப்பிடல”

“அம்மா ஞாபகமாவே இருக்குதுப் போல” என்றான் குமார்.             

வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்துக் கொண்டு பாட்டி வருவாளா என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள்

பூமிகா அப்போது அவள் அங்கு இருப்பதையே மறந்து,” பேசாம ஏதாவது அனாதை விடுதியில சேத்துட்டா என்னங்க?” என்று சீதா சொல்லி முடிப்பதற்குள், அவள் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான் குமார்.                 

“பெத்த தாய் மாதிரியாடி பேசற நீ”

“என்னங்க என்னோட நிலமையிலிருந்து கொஞ்சம் யோசிச்சி பாருங்க, மத்த ரெண்டு பசங்களையும் பாத்துக்கிட்டு, இவளையும் எப்படிங்க நான் ஒருத்தியால பாத்துக்க முடியும், அத்தையும் போய்ச் சேர்ந்த்திட்டா நான் எப்படிங்க சமாளிப்பேன்” என்றாள் சீதா.

“பேசாம கருணைகொலை செய்யறாமாதிரி நாமும் பண்ணிடலாம் போல” மீண்டும் கையை ஓங்கியவன் இந்தமுறை அடிக்கவில்லை.

“என்ன பாக்குறீங்க நம்ம காலத்துக்குப் பிறகு இந்தப் புள்ளைய யாருங்க பாத்துப்பாங்க கொஞ்சம் யோசிச்சி பாருங்க”ன்னாள்.

கோபத்தில் சாப்பிடாமலே தன் அம்மவைப் பார்க்க ஆஸ்பிடலுக்கு கிளம்பி சென்று விட்டான் குமார்.   

பொழுது விடிந்தது. மருத்துவமனையிலிருந்து பிணமாக வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் செல்லம்மா. குமார் சீதாவை கோபமாக பார்த்தான்.

“அய்யோ அப்படி என்னைய பாக்காதீங்க, ஏதோ வேதனையில நைட்டு அப்படி பேசினேங்க” என்று சொல்லியவாறு அழ ஆரம்பித்தாள். வந்த ஆம்புலன்சிலேயே பூவிகாவை ஏற்றினான் குமார். 

“என்னப்பா என்ன செய்யறே நீ?” என்று சொர்ணாக்கா கேட்டாள்.                                

“அம்மா இறந்துப் போறதுக்கு முன்னாடி தன்னோட கண்ணு ரெண்டையும் பூமிகாவுக்கு கொடுக்கணும்னு தானம் பண்ணிட்டு போயிட்டாங்கம்மா” என்று சொல்லிக் கொண்டே அழ ஆரம்பித்தான்.  

“போகும் போதுக்கூட நல்லது செஞ்சிட்டுதாம்பா போயிருக்கா. நீ இங்கயிருந்து ஒங்கம்மாவுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்யுப்பா, நான் பூமிகாவ ஆஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறேன்”னு பூமிகாவை ஆம்புலன்ஸ்ல ஏற்றினாள்.

தன் பாட்டி இறந்துக் கிடப்பது அங்கு நிகழ்வது என்று அனைத்தையும் புரிந்துக் கொண்ட பூமிகா அழ ஆரம்பித்து ஆம்புலன்சில் ஏற மறுத்தாள். வலுக்கட்டாயமாக குமார் அவளை ஏற்றி விட்டான். மழைவேறு வழகத்துக்கு மாறாக அதிகமாக பெய்தது.

செல்லம்மாவிற்காக அழுவதெற்கென்று யாரும் இல்லாததால் மழையே அவளுக்காக ஓவென்று அழுததாகவே தோன்றியது.

பக்கத்து ஊரிலிருந்து ஒருசில நெருங்கிய உறவுகளும், ஊள்ளூர்காரர்களும் சேர்ந்து இறுதியாக செல்லம்மாவை அடக்கம் செய்தார்கள். நடந்த முடிந்த எந்த நிகழ்வும் பூமிகாவுக்கு தெறியவில்லை. சாவுக்கு வந்திருந்தவர்கள் இனிமேல் பூமிகவாவின் எதிர்காலம் குறித்தே கவலைப்பட்டார்கள்.                                                               

தான் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக செல்லம்மா இடத்திலிருந்த்து சொர்ணாக்கா பூமிகாவை ஆஸ்பிடலில் கவனித்துக் கொண்டாள். கண் அறுவைச்சிகிச்சை முடிந்து சிலநாட்கள் கழித்து கண்கட்டை மருத்துவர்கள் அவிழ்த்து விரல்களை காட்டியும், அம்மா, அப்பாவை காட்டியும் தெரியுதா என்று கேட்டார்கள். தெரியவில்லை என்பதைப்போல் தலையசைத்தாள் பூமிகா.

முதன் முதலில் தன் அப்பாவையும், அம்மாவையும் பார்த்தாள் பூமிகா ஆனால் அவள் பார்க்க விரும்பிய பாட்டி அங்கில்லை.                                                            

சீதாவின் முகத்தில் விரக்தியின் உச்சம் இரண்டு நாட்கள் கழித்து மருத்துவமனையிலிருந்து யாருக்கும் தெரியாமல் புதிய விடியலை நோக்கி வெளியேறினாள் பூமிகா. தன் பாட்டி கொடுத்த கண் அவளுக்கு நன்றாகவே தெரிந்தது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. “மிகவும் உணர்வு பூர்வமான சிறு கதையே ஆகும். அவள் ‘பாட்டி’, ஒரு மிகவும் உயர்வான தியாகச் செயலைச் செய்து விட்டுத்தான் உயிர் நீத்தாள். பாட்டி அளித்த ‘கண்’ அவளுக்கு ஒரு வரப்பிரசாதமே ஆகும். செத்தும் கொடுத்தான் ‘சீதக்காதி’யைப் போல், தன் இரு கண்களையும் கொடுத்தது பாட்டியின் தியாகம் அல்லவா? நிச்சயமாக.

    -“மண்டகொளத்தூர் சுப்ரமணியன்.”

வல்லபி ❤ (பகுதி 14) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

மஞ்சள்பட்டி மர்மம் (சிறுகதை) – ✍ கோபாலன் நாகநாதன், சென்னை