in

மஞ்சள்பட்டி மர்மம் (சிறுகதை) – ✍ கோபாலன் நாகநாதன், சென்னை

மஞ்சள்பட்டி மர்மம் (சிறுகதை)

நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

தொலைக்காட்சியில் முக்கிய  செய்தி ஒன்று scroll ஆக ஓடிக் கொண்டிருந்தது

மஞ்சள்பட்டி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அங்கீகரிக்கபட்ட கட்சியான மக்கள் முன்னேற்ற முன்னணியின் வேட்பாளர் கந்தசாமி அகாலமரணம் அடைந்ததால் ரத்து செய்யப்படுகிறது. தேர்தல் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ் நாடு தேர்தல் அலுவலர் அறிவிப்பு.

மக்கள் முன்னேற்ற முன்னணியின் வேட்பாளர் கந்தசாமி தேர்தல் பிரச்சாரம் முடிந்து முதல்நாள் இரவு சுமார் 12 மணியளவில் வீட்டுக்கு    திரும்பி கொண்டிருந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் கூட்டு ரோடு அருகில் வந்தபோது எதிர் திசையில் வந்த லாரி ஒன்று காரின் மீது மோதியதில் கார் கவிழ்ந்து காரில் இருந்த கந்தசாமி, அவரது உதவியாளர் முருகன் ,கார் ஓட்டுநர் ஜெகன் மூவரும் படுகாயம் அடைந்தனர்.

மோதிய லாரி நிற்காமல் ஓடி மறைந்தது. அந்த நடுஇரவிலும், விபத்தை பார்த்த சிலர் காவல்துறைக்கும், ஆம்புலன்ஸ்க்கும் போன் செய்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த கிராமத்து மக்கள், காரிலிருந்து அனைவரையும் வெளியே கொண்டுவந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கந்தசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கந்தசாமியின் உதவியாளர் முருகனும், டிரைவர் ஜெகனும் அவசரசி கிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. பிரேத பரிசோதனைக்கு பின், கந்தசாமியின் உடல் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கந்தசாமி, மக்கள் முன்னேற்ற முன்னணியின் ஒரு முக்கிய புள்ளியாக இருந்ததால், கட்சித்தலைவர் தர்மலிங்கமும், இதர முக்கிய பிரமுகர்களும் இறுதிசடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்களுக்கு பிறகு கந்தசாமியின் மகன் மனோகரன், மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த டிரைவர் ஜெகன் மற்றும் உதவியாளர் முருகனையும் பார்த்து வர சென்றான். அவர்கள் இருவரும் தற்போது உடல்நிலை தேறி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

மனோகரன் அவர்களை சென்று பார்த்தபோது, அவர்கள் மனோகரனிடம்,  “ஐயா நடந்தது விபத்து இல்லை, திட்டமிட்டு லாரியை நம் கார் மீது மோதி விட்டார்கள்” என்றனர்.

டிரைவர் ஜெகன் தொடர்ந்து கூறுகையில், “நான் இடதுபுறமாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்போது கூட்டு ரோடு சந்திப்பில் நம் கார் வரும்போது வலதுபுறம் நின்றிருந்த லாரி ஒன்று வேகமாக வந்து நம் கார் மீது மோதியது. இதனால் நமது கார் தலைகுப்புற கவிழ்ந்தது. எனவே இது திட்டமிட்ட சதி” என்றான்.

முருகனும் “ஆமாண்ணே, யாரோ  வேணுமின்னு  லாரியை கொண்டு வந்து மோதிட்டாங்க” என்றான்.

இதைக் கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்த மனோகரன்,  உடனே காவல் நிலையத்திற்கு சென்று ஆய்வாளர் ராஜேந்திரனிடம் புகார் செய்தான்.

விவரங்களை கேட்டுக் கொண்ட ஆய்வாளர் ராஜேந்திரன், அதனை புகாராக எழுதி தரும்படி மனோகரனிடம் கேட்டுக் கொண்டார். அவனும் தன் தந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அதனை தீவீரமாக  விசாரிக்க வேண்டும் எனவும்  எழுதிக் கொடுத்தான். ராஜேந்திரன், உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூறினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் ராஜேந்திரனிடம், “கேஸ் சிக்கலா போய்டும் போல இருக்கே. நீங்க கேஸ் ரிப்போர்ட்ல விபத்து மரணம் என்பதை சந்தேகத்துக்குரிய மரணமுன்னு மாத்தி ரெகார்ட் பண்ணுங்க. நாளைக்கு விசாரணை அலுவலர் சங்கரை அனுப்பறேன், இந்த கேஸ் தொடர்பான எல்லா ஆவணங்களையும் கோப்பினையும் அவர்கிட்ட கொடுத்திடுங்க. விசாரணையில அவருக்கு தேவையான எல்லா உதவியும் செய்யுங்க” என்றார் காவல் கண்காணிப்பாளர்

“சரி சார், அப்படியே செஞ்சுடறேன்” என்றார் ராஜேந்திரன்.

மறுநாள் காலையில் காலை காவல் நிலையத்துக்கு வந்த சங்கர், ஆய்வாளர் ராஜேந்திரனிடம் அனைத்து விவரங்களையும் கேட்டு அறிந்து கொண்டார்.

பிறகு அவரது உதவியாளர் தினேஷ் உடன், இறந்த கந்தசாமி வீட்டிற்கு சென்று விசாரணையை துவக்கினார்.

கந்தசாமியின் மகன் மனோகரனிடம், “அப்பாவுக்கு கட்சியிலோ, தொழிலிலோ எதிரிகள் யாராவது உண்டா?” எனக் கேட்டார்.

“அப்பாவுக்கும், மக்கள் முன்னேற்ற முன்னணி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ்’க்கும் இடையே ஆரம்பத்திலிருந்தே பகை இருந்து வந்தது. அதே போல ரியல் எஸ்டேட் அதிபர் வெங்கடேசனுக்கும் அப்பாவுடன் பகை இருந்தது”

இதை குறித்துக் கொண்ட சங்கர், “விசாரணை ரகசியமாக மேற்கொள்ள போவதால், யாரிடமும் எந்த  விஷயத்தையும்  வெளியில் கூற வேண்டாம்” என கேட்டுக் கொண்டார்.

மறுநாள் தனது உதவியாளர் தினேஷிடம், விபத்து ஏற்படுத்தி விட்டு சென்ற லாரி தொடர்பான விபரங்களை சேகரித்து வருமாறு கூறினார். இதனிடையே சங்கர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று ஜெகன் மற்றும் முருகனிடம் விபத்து எவ்வாறு நடந்தது என கேட்டு அவர்கள் கூறிய  விபரங்களை கேட்டு பதிவு செய்தார். பிறகு ரியல் எஸ்டேட் அதிபர் வெங்கடேசனின் அலுவலகத்திற்கு  சென்று அவரிடம் கந்தசுவாமி மரணம் குறித்து விசாரணை நடத்தினார்.

வெங்கடேசனிடம், “உங்களுக்கும் கந்தசுவாமிக்கும் இடையில் ஏதோ பிரச்சனை இருந்ததாமே?” எனக் கேட்டார்.

அதற்கு வெங்கடேசன், “எனக்கும் அவருக்கும் தொழில் முறையில் போட்டி இருந்ததே தவிர பகை இருந்தது கிடையாது. மற்றபடி நாங்கள் நண்பர்களாகவே பழகினோம். அவருக்கு நான் எந்தவித கெடுதலும் செய்ய நினைத்தது கூட கிடையாது” எனக் கூறினார்.

பிறகு கந்தசாமியின் உதவியாளர் முருகனிடம் மீண்டும் சென்று விசாரணை நடத்தினார் சங்கர். அப்போது கந்தசாமிக்கும் மாவட்ட செயலாளருக்கும் இடையே இருந்து வந்த பகை குறித்து கேள்விகள் கேட்டார்.

அதற்கு முருகன், “கந்தசாமியும், மாவட்ட செயலாளர் கோவிந்தராஜனும்  நேரில் சந்திக்கும் போது இருவரும் சந்தோஷமாக தான் பேசிக் கொள்வார்கள். ஆனால் இந்த முறை மஞ்சபட்டி தொகுதிக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன் வேறு ஒரு நபரை சிபாரிசு  செய்ததாகவும், கந்தசாமி கட்சி மேலிடத்தில் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி தானே மஞ்சள்பட்டி தொகுதிக்கு வேட்பாளராகி விட்டார். இது கோவிந்தராஜனுக்கு சற்று வருத்தத்தை அளித்தது. அதனால் கோவிந்தராஜன் ஆரம்பக் கட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் புறக்கணித்தார். பின்னர் கந்தசாமி கோவிந்தராஜனை சமாதானப்படுத்தியதாலும், கட்சி மேலிடம் அறிவுறுத்தியதாலும்  தொடர்ந்து அவருடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்” என தெரிவித்தான் முருகன்.

பிறகு சங்கர் ஊர்தி ஓட்டுநர் ஜெகனிடம் ரகசியமாக, “கந்தசாமிக்கு வேறு ஏதாவது தொடர்புகள் உண்டா? உனக்கு ஏதாவது தெரியுமா?” எனக் கேட்டார்.

அதற்கு ஜெகன், “எனக்கு தெரிந்து அய்யாவிற்கு அந்த மாதிரி வேறு எந்தவிதமான தொடர்பும் இல்லை” என தெரிவித்தான்.

மறுநாள் காலை அலுவலகத்திற்கு வந்த சங்கர், தனது உதவியாளர் தினேஷை அழைத்து, “மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரி தொடர்பான விபரங்கள் ஏதும் கிடைத்ததா?” என கேட்டார்.

“அந்த லாரி கொடைக்கானல் செல்லும் வழியில் நிறுத்தப்பட்டு இருந்ததாகவும், அதனை கைப்பற்றிய கொடைரோடு போலீசார் உசிலம்பட்டி ஸ்டேஷனில் கொண்டு சேர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது” எனக் கூறினார் சங்கர்.

உடனே,  சங்கர்  ஆய்வாளர் ராஜேந்திரனுக்கு போன் செய்து, “விபத்தை ஏற்படுத்திய லாரி கைப்பற்றப்பட்டு நமது காவல் நிலையத்திற்கு  கொண்டு வரப்பட்டு விட்டதா?’”  என வினவினார்.       

அதற்கு ஆய்வாளர் ராஜேந்திரன், லாரி கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உடனே சங்கர் தனது உதவியாளருடன் உசிலம்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று அந்த லாரியை ஆய்வு செய்தார்.  பிறகு தனது உதவியாளரிடம் அந்த லாரி நம்பரை குறித்துக் கொண்டு, மண்டல போக்குவரத்து அலுவலகம் சென்று அந்த லாரி தொடர்பான விவரங்களை சேகரித்து வருமாறு அறிவுறுத்தினார்.

திரும்பி வந்த அவரது உதவியாளர் தினேஷ், “அந்த லாரியின் நம்பர் பிளேட் போலியான ஒன்று, அது தமிழ்நாட்டைச் சார்ந்தது அல்ல. அதாவது மேலே ஒட்டப்பட்டிருந்த நம்பர் பிளேட் போலியாக ஒட்டபட்டுள்ளது, அதனை நீக்கிவிட்டு பார்க்கும் போது அதன் கீழே இருந்த நம்பர் கர்நாடகா ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர்” எனவும் தெரிவித்தார்.

மறுநாள்,  மக்கள் முன்னேற்ற முன்னணியின் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ்-ஐ சென்று பார்த்து விசாரணை நடத்தினார் சங்கர்.

அவரிடம், “உங்களுக்கும் கந்தசுவாமிக்கும் இடையே பகை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறதே?” எனக் கேட்டார்.

அதற்கு கோவிந்தராஜன், “பகை எல்லாம் ஒன்றும் கிடையாது. சில நேரங்களில் எனக்கும் அவருக்கும் கட்சி விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும், அதுவும் சில நாட்களில் சரியாகிடும். நாங்கள் தொடர்ந்து நட்புடனேயே பழகுவோம், மற்றபடி அவரை கொலை செய்யும் அளவிற்கு எனக்கும் அவருக்கும் எந்தவித விரோதமும் கிடையாது. அவர் இறந்தது எனக்கு மிகவும் வருத்தமாகதான் இருக்கிறது” என தெரிவித்தார்.

மறுநாள் சங்கர் தனது உதவியாளருடன் பெங்களூருக்கு பயணமானார். அங்கு மாநில போக்குவரத்து துறை அதிகாரிகளை சந்தித்து அந்த கர்நாடக ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரை கொடுத்து அது தொடர்பான முழு விவரங்களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

கர்நாடக போக்குவரத்து அதிகாரிகள் அந்த எண்ணை ஆய்வு செய்து, “அது மல்லேஸ்வரம் பகுதியை சேர்ந்த சீனிவாசராவ் என்பவருக்கு சொந்தமான லாரி” எனக்கூறி அவரது முழு முகவரியையும் அளித்தனர்.

உடனே சங்கர் தனது உதவியாளருடன் மல்லேஸ்வரம் நோக்கி விரைந்தார். மல்லேஸ்வரத்தில் சீனிவாச ராவ் என்பவரை சந்தித்து விசாரணை செய்தபோது, அவர் அந்த லாரி ஆறு மாதம் முன்பே கங்கப்பா என்பவருக்கு விற்று விட்டதாக கூறி அவரது முகவரியையும் அளித்தார்.

சங்கருக்கு  விசாரணை முடிவடையாமல் சங்கிலித் தொடர் போல நீண்டு கொண்டே செல்வது மிகவும் அலுப்பாக இருந்தது. பிறகு அவர் கர்நாடக காவல்துறை உதவியுடன் சீனிவாசராவ் அளித்த முகவரிக்கு சென்று பார்த்த போது, அது ஒரு வாகனங்கள் பழுது பார்க்கும் இடமாக இருந்தது.

அதன் உரிமையாளர் கங்கப்பா என்பவர் “தனக்கு எதுவும் தெரியாது, அந்த லாரி காணாமல் போய் விட்டது என்று காவல் நிலையத்தில் மூன்று மாதம் முன்பே புகார் அளித்துள்ள”தாகவும் தெரிவித்தார்.

அவர் பேசும்போது மிகவும் பதட்டத்துடன் பேசுவதை  கவனித்த சங்கர், உடன் வந்த காவலர்களிடம் கங்கப்பாவை உடன் கைது செய்து காவல் நிலையத்திற்கு கூட்டி சென்று விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

காவலர்கள் கங்கப்பாவை கைது செய்து காவல்நிலையத்திற்கு கூட்டிச் சென்று உரிய முறையில் விசாரணை செய்த போது அவர் உண்மைகளை கூற ஆரம்பித்தார்.

“தமிழ்நாட்டில் இருந்து வந்த இரண்டு நபர்கள் தன்னை சந்தித்து தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட நபரை, லாரியை அவரது கார் மீது மோதவிட்டு கொலை செய்ய வேண்டும், பின்னர்  இதை விபத்தாக மாற்றி விடலாம் எனவும் தெரிவித்தார்கள். இதை செய்வதற்கு ரூபாய் 10 லட்சம் அளிப்பதாக ஒத்துக்கொண்டு அட்வான்ஸாக ரூபாய் 5 லட்சம் அளித்தார்கள்” எனக் கூறினார்.

“அந்த நபர்கள் யார் அவர்கள் பெயர் என்ன?” என்று சங்கர் அவரிடம் கேட்டார்

அதற்கு கங்கப்பா, “அவர்களில் ஒருவரின் பெயர் நாகராஜ், மற்றொருவரின் பெயர் மலையாண்டி” என்றுக் கூறினார்.

“அவர்களின் முகவரி இருக்கிறதா?” என சங்கர் கேட்டார்.

“முகவரி தெரியாது, அவர்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நம்பரில் இருந்து பேசுவார்கள்” என்று தெரிவித்தார்.

அந்த போன் நம்பர்களை கேட்டுப் பெற்ற சங்கர், உடனடியாக மதுரைக்கு போன் செய்து அந்த போன் நம்பர்களை trace செய்து அதன் விவரங்களை சேகரிக்கும்படி அறிவுறுத்தினார்.

பிறகு சங்கர் “லாரியின் டிரைவர் யார்?” என கேட்டார்.

“டிரைவர் பெயர் தேவராஜ், கிளீனர் பெயர் ஜோசப். இருவரும் பெங்களூர் மல்லேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள்” என்று தெரிவித்தார்.

உடனே போலீஸ் படை ஒன்று மல்லேஸ்வரத்தில் சென்று டிரைவர் தேவராஜையும், கிளீனர் ஜோசப்பையும் கைது செய்து அழைத்து வந்தனர். பிறகு சங்கர், பெங்களூர் நகர காவல்துறை உதவியுடன் மூவரையும் கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்தார்.

பிறகு அவர்கள் மூவரையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அனுமதியுடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உசிலம்பட்டி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தார்.

டிரைவர் நாகராஜிடமும், கிளீனர் ஜோசபிடமும், விசாரித்த பொழுது அவர்கள், “சம்பவம் நடந்ததற்கு இரண்டு நாட்கள் முன்பாக மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து தங்கள் இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் தொகையாக வழங்கப்பட்டது. விபத்து நடந்து முடிந்தவுடன் மீதி தொகை கங்கப்பா மூலம் பெங்களூரில் வழங்கப்படும் என தெரிவித்தார்கள். அதன்படி நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி விபத்தை நிகழ்த்தியவுடன், லாரியை கொடைக்கானல் செல்லும் வழியில் ஓரிடத்தில் நிப்பாட்டி விட்டு பெங்களூருக்கு தப்பி சென்று விட்டோம். பிறகு  பெங்களூரில் கங்கப்பாவை  சந்தித்து விவரங்களை கூறிய பின் அவர் எங்கள் இருவருக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தார். எங்களை கொஞ்ச நாட்களுக்கு தலைமறைவாக இருக்கும்படியும் அறிவுறுத்தினார்” என்றார்.

“மதுரையில் உங்களுக்கு அட்வான்ஸ் தொகை கொடுத்தவர்களை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?” என சங்கர் அவர்களிடம் கேட்டார்.

“அடையாளம் காட்ட முடியும்” என டிரைவர் தேவராஜ் கூறினார்.

அப்போது, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து ஒரு போன் வந்தது.

அதில் பேசிய காவல் ஆய்வாளர், “கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய நாகராஜ் மற்றும் மலையாண்டி இருவரையும் சோழவந்தான் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் இருந்து கைது செய்து விட்டதாக” தெரிவித்தார்.

அதைக் கேட்டவுடன் மிகவும் சந்தோஷம் அடைந்த சங்கர், அவர்களிடம் நன்றி தெரிவித்து விட்டு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக உசிலம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். விசாரணை அலுவலர் சங்கர் வழக்கின் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டதாக நினைத்தார்.

கைது செய்யப்பட்டுள்ள நாகராஜ், மற்றும் மலையாண்டி இருவரையும் விசாரணை செய்தால், உண்மையான குற்றவாளி யார் என்பது தெரியவரும் என சங்கர் ஊகித்தார்.

விசாரணை அலுவலர் சங்கரை உடனடியாக வந்து பார்க்கும்படி மாவட்ட கண்காணிப்பாளர் போன் மூலம் அறிவுறுத்தினார். அதை ஏற்றுக் கொண்ட சங்கர், உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்திக்க புறப்பட்டு சென்றார்.

மாவட்ட கண்காணிப்பாளரை சந்தித்த சங்கரிடம், காவல் கண்காணிப்பாளர், “கந்தசாமியின் விபத்து வழக்கு  விசாரணை எந்த நிலையில் உள்ளது?” என கேட்டார்.

அவரிடம்,  இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் விபரங்களை தொகுத்து கூறிய சங்கர், குற்றவாளிகளை நெருங்கி விட்டதாகவும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்து விடுவதாகவும் தெரிவித்தார். அதை கேட்ட காவல் கண்காணிப்பாளர் விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சங்கரை கேட்டுக் கொண்டார்.

பிறகு அலுவலகம் திரும்பிய சங்கரிடம், அவரது உதவியாளர் தினேஷ் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் போன் செய்ததாகவும், கைது செய்யப்பட்ட நாகராஜ் மற்றும் மலையாண்டி இருவரும் காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாக கூறினார். உடனே,  தனது உதவியாளருடன் காவல் நிலையத்திற்கு புறப்பட்ட சங்கர், அங்கு சென்றவுடன் மலையாண்டி மற்றும் நாகராஜிடம் காவல் ஆய்வாளர் உதவியுடன் விசாரணையை துவக்கினார்.

நாகராஜிடம், “கந்தசாமியை ஏன் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினீர்கள்? கந்தசாமியை கொலை செய்ய சொல்லி உங்களை அமர்த்தியது யார்” எனக் கேட்டார்

அதற்கு இருவருமே, “கந்தசாமியா, கொலையா, எங்களுக்கு எதுவும் தெரியாது” என ஒருசேர கூறினார்கள். அப்போது ஆய்வாளர் ராஜேந்திரன் அவர்கள் இருவரையும் பளார் என்று அறைந்தார்.

“என்னங்கடா ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கறீங்க?” என கேட்டார். அப்போதும் கூட அவர்கள் கந்தசாமி கொலை தொடர்பாக எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்கள். உடனே சங்கர் அருகில் இருந்த காவலர்களைப் பார்த்து கண் ஜாடை காட்டினார்.

பக்கத்து அறையில் வைக்கப்பட்டிருந்த டிரைவர் தேவராஜ் மற்றும் கிளீனர் ஜோசப் இருவரையும் காவலர்கள் அழைத்து வந்தார்கள். அவர்கள் இருவரையும் பார்த்த நாகராஜ் மற்றும் மலையாண்டி இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

“இப்போது சொல்லுங்கள், உங்கள் இருவருக்கும் கந்தசாமி கொலை பற்றி எதுவும் தெரியாதா?” எனக் கேட்டார் சங்கர். அவர்கள் இருவரும் பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தார்கள்.

சங்கர் டிரைவர் தேவராஜிடமும், கிளீனர் ஜோசப்பிடமும், “இவர்களை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?” எனக் கேட்டார்.

அவர்களை பார்த்தவுடன் டிரைவர் தேவராஜ் மற்றும் ஜோசப் இருவரும், “இவர்கள்தான் விபத்து மூலம் கந்தசாமியை கொல்வதற்கு, மதுரையில் வைத்து எங்களுக்கு முன் பணம் வழங்கினார்கள்” என தெரிவித்தார்கள்.

அப்போது ஆய்வாளர் ராஜேந்திரன் அவர்களிடம், “இப்போதாவது உண்மையை ஒத்துக் கொள்ள போகிறீர்களா இல்லையா?”  எனக் கேட்டார்.

நாகராஜனும் , மலையாண்டியும்  இனிமேலும் மறைக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டனர் , இருவரும் உண்மையை கூறி விடுகிறோம் என தெரிவித்தார்கள்.

சங்கர் , தனது உதவியாளரிடம் அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்ய அறிவுறுத்தினார்.

நாகராஜனும் மலையாண்டியும்,  “இந்த கொலையை செய்ய சொன்னது சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட புயல் பொன்னுசாமி தான்” என தெரிவித்தார்கள். இதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

உடனே ஆய்வாளர் ராஜேந்திரன் “நீங்கள் தப்பித்துக் கொள்வதற்காக பொன்னுசாமி செய்ய சொன்னார் என கதை  விடுகிறீர்களா?” எனக் கேட்டார்.

“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, உண்மையிலேயே இதை செய்ய சொன்னது புயல் பொன்னுசாமி தான்” என நாகராஜ் தெரிவித்தான்.

“எதற்காக இந்த கொலையை செய்ய சொன்னார்?”

“எங்களுக்கு காரணம் எதுவும் தெரியாது, எங்களிடம் 15  லட்சம் ரூபாய் பணம் தருகிறேன், கந்தசாமியை விபத்து போல செட்டப் செய்து கொலை செய்து விடுங்கள் என கூறினார்”

உடனே சங்கர் அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டரிடம், “இவர்கள் அனைவரிடமும் ஸ்டேட்மென்ட் எழுதி வாங்கிக்கொண்டு காவலில் வைத்து விடுங்கள்” என்று கூறினார். பின்னர் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன்,மற்றும் காவலர்களுடன் தேனிக்கு விரைந்தார் சங்கர்.

அங்கு சுயேச்சை வேட்பாளர் புயல் பொன்னுச்சாமியின் வீட்டிற்கு சென்றார். ஆனால் அவர் தோட்டத்திற்கு சென்று விட்டதாக வீட்டில் உள்ளவர்கள்  தெரிவித்தார்கள். உடனே தோட்டத்திற்கு விரைந்து அங்கிருந்த புயல் பொன்னுசாமியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

புயல்  பொன்னுசாமியும் எல்லோரையும்  போல, கந்தசாமியின் விபத்து மரணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்தார். பிறகு இவ்வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் அவர் முன்பாக  கூட்டிவந்து  காண்பித்தவுடன், உண்மையை ஒத்துக் கொண்டு கொலைக்கான காரணத்தை சொல்ல ஆரம்பித்தார் பொன்னுச்சாமி.

கந்தசாமிக்கும் தனக்கும் வெகுகாலமாக, அதாவது அவர் அரசியலில் பிரபலம் அடைவதற்கு முன்பாகவே அவருடன் நட்பாக பழகி கொண்டிருந்ததாகவும், அவர் அரசியலுக்கு வந்த பின்னும் அந்த நட்பு தொடர்ந்தது என்றும் கூறினார்.

“அவரிடம் நீ அரசியலில் பிரபலமாக இருப்பதனால் உனது கட்சியில் சொல்லி எனக்கு எம்எல்ஏ சீட்டு வாங்கி கொடு என்று கூறினேன். எனக்கு கட்டாயம் வாங்கித் தருவதாக கூறி கடந்த முறை தேர்தலின் போது என்னிடம் ரூபாய் 25 லட்சம் வாங்கிக் கொண்டார். ஆனால் கடந்த தேர்தலின் போதும் எனக்கு அவர் சீட் வாங்கி கொடுக்கவில்லை. கந்தசாமியிடம்  நான் கேட்ட போது கவலைப்படாதே இந்த முறை என்னால் வாங்கி தர முடியவில்லை, அடுத்த முறை கண்டிப்பாக உனக்கு சீட் வாங்கி தருகிறேன் என கூறி சமாதானம் செய்தார். 

என்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை நான் கேட்ட போது உனக்கு விரைவில் எம்எல்ஏ சீட்டு வாங்கிக் கொடுக்கிறேன் என சமாதானம் செய்தார். பிறகு, இந்த முறை தேர்தல் அறிவித்த உடன் நான் கந்தசாமியிடம் எனக்கு இந்த முறையாவது கண்டிப்பாக சீட் வாங்கி கொடுங்கள் என கூறினேன். அவரும், இந்த முறை கண்டிப்பாக உனக்கு சீட்டு வாங்கிக் கொடுக்கிறேன்.  ஆனால், அதற்கு கட்சி தலைமைக்கு ஐம்பது லட்ச ரூபாய் அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்றார்.

நானும் சரி என்று சொல்லி ரூபாய் 50 லட்சத்தை எனது ஒரு சொத்தினை விற்பனை செய்து அதன் மூலம்  அவரிடம் கொடுத்தேன். ஆனால், கந்தசாமி இந்த முறையும் எனக்கு எம்எல்ஏ சீட்டு வாங்கிக் கொடுக்காமல், தனக்கு சீட் வாங்கிக் கொண்டார். இது எனக்கு மிகவும் கோபத்தை அளித்தது.

நான் கந்தசாமியிடம் சென்று கேட்டபோது, இந்த முறை சீட்டு என்னால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை இருப்பினும் எப்படியாவது ஏதாவது ஒரு தொகுதியில் உனக்கு சீட் வாங்கி கொடுத்து விடுகிறேன் என்று கூறினார். நான் அவரிடம் எனக்கு சீட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நான் கொடுத்த ரூபாய் 75 லட்சத்தையும் உடனடியாக எனக்கு திருப்பி கொடுத்து விடுங்கள் என கேட்டேன்.

அதற்கு அவர் தற்போது தன்னிடம் பணம் இல்லை என்றும் கட்சி தலைமைக்கு நீங்கள் கொடுத்த பணத்தை கொடுத்து விட்டேன்,  ஏதாவது ஏற்பாடு செய்து பணம் தருகிறேன் சிறிது காலம் பொறுத்துக் கொள்ளுங்கள்  என்று சமாதானம் கூறினார். இதற்கிடையில் எனக்கு அவர் மீது இருந்த கோபத்தை  காட்ட  நானும் சுயேட்சையாக நிற்கலாம் என முடிவு செய்தேன்.  

ஏனென்றால் எனக்கும் என் சமூக மக்களிடம் ஓரளவு செல்வாக்கு உண்டு, நான் தேர்தலில் நிற்பதன் மூலம் அவருக்கு கிடைக்க கிடைக்க கூடிய ஓட்டுக்களை பிரிக்க முடியும் என நான் நினைத்தேன். நான் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்ததை கேள்விப்பட்டவுடன் கந்தசாமி என்னை கூப்பிட்டு அனுப்பினார். நான் அவரை சென்று சந்தித்தபோது உடனடியாக உன் வேட்புமனுவை வாபஸ் வாங்கிக் கொள் என்று கூறினார்.

நான் கந்தசாமியிடம் நான் கொடுத்த ரூபாய் 75 லட்சத்தை உடனே திருப்பிக் கொடுத்து விடுங்கள், நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினேன். அவர் மிகவும் கோபமடைந்து மரியாதையாக வேட்புமனுவை வாபஸ் வாங்கிவிடு நீ கொடுத்த பணத்தை நான் கொடுக்க முடியாது, உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள். நீ வேட்புமனுவை வாபஸ் வாங்காவிட்டால் உன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்.

நான் மீண்டும் அவரிடம் நான் கொடுத்த பணத்தை மட்டுமாவது திருப்பிக் கொடுத்து விடுங்கள், நான் வேட்பு மனுவை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினேன். அவர் நான் ஒன்றும் கொடுக்க முடியாது உன்னால் ஆனதைப் பார்த்துக் கொள் என்று கூறிவிட்டார். அவமானத்துடன் வீடு திரும்பிய நான் மிகவும் மனஅழுத்தத்தில் தவித்தேன். நீண்ட நாள் பழகிய நண்பர் கந்தசாமியே என்னை இப்படி ஏமாற்றி விட்டாரே என மிகவும் வருத்தமாகவும், கோபமாகவும் இருந்தது.

என்னிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல், என்னை  கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிய கந்தசாமியை  நான் முந்திக்கொண்டு கொலை செய்துவிட வேண்டும் என வெறியுடன் தீர்மானித்தேன். பிறகுதான், நாகராஜன், மலையாண்டி இருவரும் கூலிப்படையாக செயல்படுவது அறிந்து அவர்களை வரவழைத்து திட்டத்தை கூறினேன். அவர்களுக்கு ரூபாய் 15 லட்சம் கூலியாக கொடுப்பதாக ஒத்துக் கொண்டேன். அவர்களும் திட்டம் தீட்டி  கந்தசாமியை விபத்தில் சிக்க செய்து   விபத்தில் மரணம் அடைந்தது போல செட்டப் செய்து அவரை கொலை செய்தார்கள்” என புயல் பொன்னுசாமி தனது ஸ்டேட்மெண்டை கொடுத்து முடித்தார்.

கந்தசாமி கொலையில் ஈடுபட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்கள். விசாரணை அலுவலர் சங்கருக்கு இந்த வழக்கு ஒரு வழியாக முடிவுக்கு வந்ததில் மிகவும் திருப்தியாக இருந்தது.

கந்தசாமியின் மகன் மனோகரனுக்கும், கந்தசாமியின் மனைவி கலையரசிக்கும் கந்தசாமியுடன் நீண்ட காலமாக  நட்புடன் பழகிய பொன்னுசாமியே கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி உள்ளார் என்பதை அறிந்து மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. கந்தசாமி விபத்தில் மரணம் அடையவில்லை, சதி செய்யப்பட்டு விபத்தின் மூலம் கொலை செய்யப்பட்டார் என்பதை அறிந்து அனைவரும் அதிர்ந்தனர்.

மறுநாள் மாவட்ட கண்காணிப்பாளர் விசாரணை அலுவலர் சங்கர் மற்றும் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் உடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது தீபிகா என்ற  பத்திரிக்கையாளர், “ஏன் விசாரணையை வெளிப்படையாக நடத்தாமல் ரகசியமாக நடத்தினீர்கள்?” எனக் கேட்டார்.

“இக்கொலைச் சதியில் பலரும் சம்பந்தப்பட்டிருப்பதால், வெளிப்படையாக விசாரணை நடத்தினால் மற்றவர்கள் தப்பித்துக் கொள்வதற்கு அல்லது தப்பித்து செல்வதற்கு வாய்ப்பு இருந்ததனால் விசாரணை ரகசியமாக நடைபெற்றது” என சங்கர் பதில் கூறினார்.

“விரைவில் குற்றத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வாங்கி தரப்படும்” என தெரிவித்தார் சங்கர்.

ஒருவழியாக மஞ்சள்பட்டி விபத்தின் மர்மம் விலகியது. காவல்துறை உயர் அதிகாரிகளும், மற்ற அனைவரும் ஒரு சிக்கலான வழக்கினை விரைவாக விசாரித்து விரைவில் முடிவுக்கு கொண்டு வந்ததற்காக சங்கரை மிகவும் பாராட்டினார்கள்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பாட்டி (சிறுகதை) – ✍ பெருமாள் நல்லமுத்து

    விதை (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு