in

வல்லபி ❤ (பகுதி 9) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வல்லபி ❤ (பகுதி 9)

செப்டம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7  பகுதி 8

சுகந்தியும், வல்லபியும் விஷ்ணுவிற்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவரிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, விஷ்ணுவின் நிலைமையைக் கேட்டனர்.

அவர் வல்லபியை உறுத்துப் பார்த்து விட்டு, “உங்கள் பெயரைத் தான் அட்மிட் செய்ததிலிருந்து சொல்லிக் கொண்டே இருந்தார். இப்போது எந்தப் பேச்சும் இல்லை. நீங்கள் இங்கேயே அவருடன் இருந்தால் கொஞ்சம் நம்பிக்கைக்கு இடம் இருக்கிறது. ஆனால் எதுவும் இருபத்தி நான்கு மணி நேரம் கழித்துத் தான் உறுதியாகக் கூற முடியும்” என்றார்.

“விஷ்ணு பார்டர் செக்யூரிட்டி போர்ஸில் வேலை செய்கிறான். ஆனால் லடாக் பகுதியில் மலைமேல், ரோடு கட்டுமானப் பணியில் இருக்கும் போது யாரோ எதிரி நாட்டு சிப்பாய் அவனை சுட்டிருக்கிறான். குண்டு தோளில் பாய்ந்திருக்கிறது. ஆனால் அந்த அதிர்ச்சியில் அவன் மலையிலிருந்து கீழே விழுந்ததால் கையிலும் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. நல்லவேளையாக தலையில் லேசான அடிதான் என்றார்கள்” என்று விவரித்தார் மூர்த்தி.

“தோளில் இருந்த குண்டை எடுத்து விட்டார்களா?” என்றாள் வல்லபி.

“அதை எடுத்து விட்டார்கள். அது ஒரு வலி. மேலும் மலையில் இருந்து கீழே விழுந்ததில் முன் கை எலும்பும், காலில் ஒரு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. தலையில் ஏற்பட்ட அடிக்கும் மருத்துவம் செய்கிறார்கள். நிறைய ரத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கடவுள் புண்ணியத்தில் விஷ்ணு பிழைக்க வேண்டும்” என்றார் ராமச்சந்திரன் கவலையுடன்.

இதற்கிடையில் மல்லிகா, வல்லபிக்கு போன் செய்து விஷ்ணுவின் நிலைமையை விசாரித்தாள். வல்லபி முழுவிவரமும் கூறினாள். இந்த விவரங்களைக் கேட்ட பிறகு மனம் நிலை கொள்ளாமல் ஒரு வாடகைக் காரைப் பிடித்துக் கொண்டு அங்கே வந்து விட்டாள் மல்லிகா.

இரண்டு நாட்களில் விஷ்ணுவிற்கு நினைவு திரும்பியது. வல்லபியை வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் கலங்கின.

சுகந்தி தான் கண்டித்தாள். “ரொம்பவும் உணர்ச்சி வசப்படாதே விஷ்ணு, பிறகு தலை வலிக்கும். இப்போது தான் நினைவு திரும்பி இருக்கிறது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”

“அண்ணி, நீங்கள் கொஞ்ச நேரம் விஷ்ணுவுடன் இருங்கள். நானும் விஷ்ணுவின் அப்பாவும் உங்கள் வீட்டிற்குப் போய் கொஞ்சம் குளித்து விட்டு, ஓய்வெடுத்து வருகிறோம்” என்றாள் மரகதம்.

“விஷ்ணுவிற்கு இப்போது தான் நினைவு திரும்பியிருக்கிறது. இந்த நிலையிலா அவனை விட்டுப் போகிறாய்? இங்கு தான் பாத்ரூம் முதல் எல்லா வசதிகளும் இருக்கிறதே” என்றார் மூர்த்தி.

“அண்ணா, இப்போது அவனுக்கு வல்லபி அருகில் இருந்தால் அதுவே பெரிய மருந்து. வல்லபியும், சுகந்தியும் கூட டாக்டர்கள் தானே. அவர்களே கூட போதும். இருந்தாலும் அண்ணியும், நீங்களும் கூட அவனுடன் இருங்கள்” என்றாள் மரகதம்.

மல்லிகாவை உறுத்துப் பார்த்தார் மூர்த்தி. அன்றொரு நாள் பெரியகுளம் மருத்துவமனையில், மல்லிகா மூர்த்தியின் கைகளைப் பிடித்து கொண்டு, “உங்கள் மல்லிகா வந்திருக்கிறேன்” என்றாளே தவிர, அதன் பிறகு இருவருக்கும் எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை.

இப்போதாவது அவள் தன்னுடன் பேசுவாளா என்று மூர்த்தி ஆவலுடன் மல்லிகாவைப் பார்த்தார். மல்லிகா எந்த உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாக இருந்தாள். ஆனால் வீட்டுச் சாவியை எடுத்து மரகதத்திடம் கொடுத்து விட்டு, தன் செல்போனில் வாடகைக் காருக்கு ஏற்பாடு செய்து கொடுத்தாள்.

வல்லபியோ மதுரை போய் டியூட்டியில் சேர்ந்து விட்டு, அடுத்த வாரம் முழுவதும் விடுமுறை எடுத்துக் கொண்டு வருவதாக விஷ்ணுவிடம் கூறிவிட்டு கிளம்பினாள்.

“இப்போதே போக வேண்டுமா வல்லபி?” என்றான் விஷ்ணு பரிதாபமாக, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு.

“ஆமாம். நான் ஒரு  வாரம் முக்கியமான வேலைகளைப் பார்த்து விட்டு அடுத்த வாரம் முழுவதும் விடுமுறை எடுத்துக் கொண்டு வருகிறேன். கை, கால்களில் உள்ள கட்டுக்களைப் பிரிக்க வேண்டும், ஒரு வாரம் ஆகும் என்று நினைக்கிறேன். இல்லையா சுகந்தி?” என்று அபிப்பிராயம் கேட்டாள் தோழியிடம்.

“ஆம், எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தால் தான் உண்மை நிலவரம் தெரியும்” சுகந்தி.

“வல்லபி, நம் காரை எடுத்துச் செல்லுங்கள். நம் டிரைவரும் நல்லவர்” என்றார் மூர்த்தி.

“வேண்டாம் சார். நாங்கள் டீலக்ஸ் பஸ்ஸில் போய்க் கொள்கிறோம், அதுதான் வசதி. மேலும் இங்கே உங்களுக்கு கார் தேவைப்படும்” என்றாள் வல்லபி, எங்கோ பார்த்துக் கொண்டு.

மூர்த்தியின் முகம் சுருங்கியது. தன்னை அப்பா என்று கூப்பிடாமல் இன்னும் சார் என்றே வல்லபி கூப்பிடுவது, அவர் மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது. தான் செய்த வினை தன்னைச் சுடுகிறது என்று நினைத்துப் பெருமூச்சு விட்டார்.

இருவரும் பஸ்ஸில் போகும் போது, சுகந்தி அவளை உறுத்துப் பார்த்தாள்.

“என்ன சுகந்தி அப்படிப் பார்க்கிறாய்?”

“எனக்கு ஒரு சந்தேகம் வல்லபி” சுகந்தி.

“கேள், எதையும் மனதில் பூட்டி வைக்காதே. எனக்கு பதில் தெரிந்தால் சொல்லுகிறேன்”

“விஷ்ணுவிடம் கோபித்துக் கொள்ளுகிறாய். அவன் அம்மாவிடம் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. உன் அப்பாவை இன்னும் சார் என்றே கூப்பிடுகிறாய். ஆனால் இந்த விஷ்ணு அடிபட்டு ஆபத்தில் இருக்கும் போது நீ அப்படியே துவண்டு கொடிபோல் ஆகி விட்டாய். உண்மையில் சொன்னால் பைத்தியக்காரி போல் இருந்தாய். ஏன் இந்த இரட்டை வேடம் வல்லபி?” சுகந்தி.

“எனக்கு அவர்கள் எல்லோரிடமும் கோபமும் வெறுப்பும் இருக்கிறது சுகந்தி. ஆனால் நான் என்ன செய்வேன்? என் உள்ளத்தில் அந்த விஷ்ணு நீங்காத இடம் பிடித்து விட்டான். இந்த மூர்த்தி சாரும், மரகதம் ஆன்ட்டியும் என் அம்மாவை ஒரு டிரைவரோடு சம்பந்தப்படுத்தி, அவமானப்படுத்தி அனுப்பி விட்டார்கள் பார். அதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மரகதம் ஆன்ட்டிக்கு அவர்கள் அண்ணாவிடம் பொஸஸிவ்னெஸ். மூர்த்தி சாருக்கோ வேலைக்காரியிடம் மோகம். இவர்கள் இருவரின் சுயநலத்திற்கு என் அம்மா பலி. அதனால் தான் இந்த இரண்டு வல்லபி, புரிந்ததா?” என்றாள் வெறுப்பாக.

ஒரு வார விடுமுறையில் மீண்டும் வல்லபி சென்னை வந்தாள். மருத்துவமனையில் கட்டுகளோடு படுத்திருந்த விஷ்ணுவின் முகம் இவளைப் பார்த்தவுடன் மலர்ந்தது.

“இன்னுமா கட்டுகளைப் பிரிக்கவில்லை. ஏன் எலும்புகள் இன்னும் கூடவில்லையா? எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தார்களா?” வல்லபி.

“எக்ஸ்-ரே எடுத்தார்கள். ஆனால் ஒன்றும் சரியாகப் பதில் சொல்லவில்லை. அடுத்த வாரம் பார்க்கலாம் என்று சொல்லி விட்டார்கள்” விஷ்ணு.

எக்ஸ்-ரேவை எடுத்துப் பார்த்தாள் வல்லபி. எலும்பு சரியாகக் கூடவில்லை. மருந்துகள் லிஸ்ட்டைப் பார்த்தாள். எல்லாமே சரியாக இருந்தது. அடுத்த வாரம் கட்டைப் பிரித்தார்கள். தலையில் இருந்த காயம் சுத்தமாக ஆறிவிட்டிருந்தது. கைகளிலும், கால்களிலும் எலும்புகள் நன்றாகக் கூடி விட்டிருந்தது. பிசியோதெரபிஸ்டும், டாக்டர்களும் வந்து பரிசோதனை செய்து விட்டுச் சென்றனர்.

இரண்டு கால்களும், இடது கையும் மட்டும் நன்றாக வேலை செய்தன. வலது கை மட்டும் ஓரளவிற்கு மேல் தூக்க முடியவில்லை. டாக்டர்கள், ஏதோவொரு ஆயுர்வேதிக் தைலத்தை எழுதிக் கொடுத்தார்கள். பிசியோதெரபிஸ்டின் உதவியுடன் வல்லபி அந்தத் தைலத்தை விஷ்ணுவின் கைகளில் மென்மையாகத் தேய்த்து விட்டாள்.

“வல்லபி, கால்களிலும், இடது கையிலும் எலும்பு நன்றாகக் கூடி, நல்ல மூவ்மென்ட்டும் இருக்கும் போது, இந்த வலதுகை மட்டும் ஏன் சரியாக வேலை செய்யவில்லை தெரியுமா?” என்றான் விஷ்ணு மெதுவாக சிரித்தபடி.

“ஏனாம்?” என்றாள் வியப்புடன்.

“இந்தக் கை தான் என் வல்லபியின் பட்டுக் கன்னத்தை அறைந்தது, அதற்குக் கடவுள் கொடுத்த தண்டனை” விஷ்ணு.

“கடவுள் யாரையும் தண்டிக்க மாட்டார். நாம் செய்யும் தவறுக்கு நாமே வருந்துவதுதான் தண்டனை. ஆதலால் அமைதியாக இருங்கள். பிசியோதெரபியில் எல்லாம் நன்றாக விடும்” என்றாள் வல்லபி அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு.

ஒருவாரம் மருத்துவமனையில் வைத்திருந்து விட்டு,  தனியாக பிசியோதெரபிஸ்ட் வைத்து பார்த்துக் கொள்ளும்படி டிஸ்சார்ஜ் செய்து விட்டனர். அவர்கள் கொடுக்கும் பயிற்சியில் தான் கை குணமடையும் என்று அறிவுறுத்தினர்.

“நான் மல்லிகா அத்தையின் வீட்டில் ஒரு வாரம் இருந்து விட்டு, வல்லபியுடன் மதுரைக்கு வந்து, பிறகு வீட்டிற்கு வருகிறேன். நீங்கள் போங்கள்” என்று தன் பெற்றோரையும், மூர்த்தியையும் அனுப்பி வைத்தான்.

மல்லிகாவுடன் தங்குவதற்கு விஷ்ணு ஏற்கனவே அவளிடம் அனுமதி வாங்கி விட்டான்

“இவன் ஏனம்மா நம் வீட்டில் தங்க வேண்டும்?” என்று வல்லபி கூட சீறினாள்.

“இந்த விஷ்ணு, குழந்தையில் என்னிடம் அவ்வளவு பிரியமாக இருப்பான். அவனுடைய சின்னச் சின்னத் தேவைகளுக்குக் கூட என்னிடம் ஓடி வருவான். நான் பெற்ற பெண் என்பதால் உன்னிடம் மிகவும் ஆசையாக இருப்பான். இப்போதோ உன்னுடைய அம்மா என்பதால் என்னிடம் பிரியமாக இருக்கிறான். தலைகீழ்…” என்று சொல்லிச் சிரித்தாள் மல்லிகா.

அந்தச் சிரிப்பில் விஷ்ணுவிடம், அவளுக்கிருந்த பாசம் அவள் கண்களில் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் வல்லபிக்கு எரிச்சல் தான் வந்தது.

“ஆடு பகை குட்டி உறவு” என்று முணுமுணுத்தாள். விஷ்ணு எதையும் கண்டு கொள்ளவில்லை. தன் அத்தையின் மனதில் நல்ல எண்ணத்தை வளர்த்து, அவளிடம் தன் உறவின் ஆழத்தை அதிகப்படுத்திக் கொண்டான்.

ஒரு வாரம் முடிந்தவுடன் வல்லபியுடன் மதுரைக்கு அவள் காரிலேயே சென்றனர். விஷ்ணுவின் மெடிக்கல் ரிப்போர்ட்படி அவனது வலதுகை சரியாக நீட்டி மடங்காததால், அவனைப் பழையபடி மதுரை அலுவலகத்திற்கே பணியில் சேரும்படி உத்தரவு வந்தது. விஷ்ணுவிற்கும் இப்போது வல்லபியைப் பிரிந்து எங்கும் போக விருப்பமில்லை. ஆதலால் அவன் பழையபடி அங்கேயே பணியில் சேர்ந்து விட்டான்.

வல்லபி ஒரு பிசியோதெரபிஸ்டை அனுப்பி அவன் கைகளுக்குப் பயிற்சி கொடுக்க வைத்தாள். கால்களும் ஆபரேஷனுக்குப் பிறகு அவ்வளவு வேகமாக நடக்கவோ, ஓடவோ முடியவில்லை. அதனால் தினமும் அதிகாலையில் ஓடும் பயிற்சியை மேற்கொண்டான். என்றாவது ஒரு நாள் வல்லபியும் அவனுடன் சேர்ந்து ஓடிக் கொண்டிருந்தாள்.

அப்படி ஓடும் போது ஒருநாள் யாரோ ஒருவன் வல்லபியை விட இரண்டு அல்லது மூன்று வயது சிறியவன் அவர்களை வழிமறித்தான். இப்போதைய இளைஞர்கள் போலவே தாடியும், மீசையுமாக இருந்தான். ஒரு காதில் சிறிய கடுக்கன். கையின் மணிக்கட்டில் பலவித நிறங்களில் விதவிதமான மந்திரித்த கயிறுகள்.

“ஏண்டி எங்கள் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் குறுக்கிடுகிறீர்கள்? என் கையால் தான் நீ சாகப் போகிறாய்” என்று வல்லபியைப் பார்த்து உறுமினான்.

“ஏய் யார் நீ? என்ன உளறுகிறாய்? நான் ஏன் உன் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டும்?  இடியட், வழியை விடு” என்றாள் லேசாக பயந்தவாறு.

“டேய் நீ பாலாஜி தானே? ஏண்டா இப்படி ரௌடி மாதிரி இருக்கிறாய்? குடித்திருக்கிறாயாடா? நீ நல்ல பையனாயிற்றே” என்றான் விஷ்ணு ஆச்சரியமாக.

“நான் நல்லவனாகத்தான் இருந்தேன். தப்பான என் அப்பாவாலும், பணத்தாசையால் வழி மாறிய என் அம்மாவாலும் தான் இப்படி ஆனேன். இந்தப் பெண் வல்லபி மட்டும் தான் என் அப்பாவின் சொத்துக்களை நான் அடைவதற்கு இடைஞ்சலாக இருக்கிறாள். இவள் போட்டோவும் இவள் அம்மாவின் போட்டோவும் தான் வீடு முழுவதும். இவளை இப்போதே தீர்த்து விடுகிறேன். பீடை ஒழிந்தால் எல்லாம் சரியாகி விடும்” என்று கத்திக் கொண்டே ‘டக்’கென்று வல்லபியின் கழுத்தில் கை வைத்து பலம் கொண்ட மட்டும் அழுத்தத் தொடங்கினான்.

அவளால் கத்தக் கூட முடியவில்லை, விழிகள் பிதுங்கின. விஷ்ணுவிற்கு கோபம் தலைக்கேறியது. தன் வலது கை மடக்க முடியாதென்பதை மறந்தான். கால்கள் கொஞ்ச நேரம் நடந்தால் கூட நடுங்கும் என்பதையும் நினைக்கவில்லை. வலது கையை மடக்கி, முஷ்டியை இறுக்கி, பாலாஜியின் முகத்தில் ஒரு குத்து விட்டான். ஒரு காலால் அவனைக் கால் பந்தை உதைப்பது போல் எட்டி உதைத்தான்.

பாலாஜி எங்கோ தூரத்தில் போய் விழுந்தான்.

“முட்டாள், யார் மேல் கை வைக்கிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று சொல்லிக் கொண்டே இரண்டு கைகளாலும் அவனைத் தூக்கி பந்து போல் வீசினான்.

வல்லபி தனக்கு ஏற்பட்ட வலியைக் கூட மறந்து விஷ்ணுவை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். விஷ்ணுவின் அடியைத் தாங்க முடியாமல் பாலாஜி ஓட்டம் பிடித்தான். நன்றாகக் குடித்திருந்ததால் அவனால் ஓடக் கூட முடியவில்லை.

விஷ்ணு அவளிடம் ஓடி வந்தான். கழுத்தை நீவி விட்டான். கையில் இருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து மெதுவாக அவளுக்கு வாயில் ஊட்டி விட்டான்.

“தொண்டை வலிக்கிறதா வல்லபி? முட்டாள், எப்படி அழுத்தி விட்டான் பார், கழுத்தெல்லாம் சிவந்து விட்டது” விஷ்ணு.

வல்லபி அவனைப் பார்த்து சந்தோஷத்தாலும். ஆச்சர்யத்தாலும் பேச வாய் வராமல் கண்களில் கண்ணீர் பெருக நின்றாள்.

“வல்லபி ரொம்ப வலிக்கிறதாடா கண்ணா?” என்றான் விஷ்ணு கண்ணீர் கண்களில் தேங்க.

அவனைப் பார்த்து மயங்கி  நின்றவாறு, “இல்லை விஷ்ணு, சந்தோஷமாக இருக்கிறது” என்றாள் கிசுகிசுத்த குரலில்.

“என்ன உளறுகிறாய்?” விஷ்ணு.

“நானா உளறுகிறேன். உங்கள் வலது கையைப் பாருங்கள். எவ்வளவு அழகாக நீட்டி மடக்குகிறீர்கள். கொஞ்ச தூரம் நடந்தாலே உங்கள் காலெல்லாம் உதறும். அந்தக் கால்கள் அவனை எப்படி உதைத்தன? இப்போது எவ்வளவு பலமாக நிற்கிறது. அதிசயம் ஆனால் உண்மை” என்றாள் கண்களும், முகமும் மலர.

இந்த “வல்லபி” நாவல் அச்சுப் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள், கீழே பகிர்ந்துள்ள ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் QR Code Scan செய்து தொகையை செலுத்தி Screen Shot எடுத்து, 77082 93241 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியுடன் பகிருங்கள். விரைவில் புத்தகம் உங்களை வந்து சேரும். அல்லது 77082 93241 என்ற எண்ணில் அழைத்தும் ORDER செய்யலாம். நன்றி

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பிரசவத்தில் மரணித்த ஒட்டியாணம் (சிறுகதை) – ✍ மரு. உடலியங்கியல் பாலா

    கொடிக்கு காய் பாரமா (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி.