in

வல்லபி ❤ (பகுதி 4) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வல்லபி ❤ (பகுதி 4)

ஆகஸ்ட் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

“ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்கறது விஷ்ணு. கொஞ்சம் பெரிய ஆக்ஸிடன்ட் தான். பேஷன்டை இந்த மருத்துவமனையில் வைத்து வைத்தியம் பார்ப்பது முடியாது. ஆதலால் மதுரையில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்” என்று கூறியவாறு ICUவில் இருந்த விஷ்ணுவிடம் அழைத்துச் சென்றாள்.

ஏதோ ஒரு பாண்டேஜ் மூட்டை போல் கட்டிலில் கிடந்தான் விஷ்ணு, பிரமித்து நின்றாள் வல்லபி. அதிர்ச்சியில் லேசாகத் திறந்த வாய் மூடவில்லை, கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.

சிரித்து சிரித்துப் பேசும் அவன் வாயும், கண்களும், அடர்த்தியான புருவங்களும் தான் பேண்டேஜில் இருந்து தப்பியிருந்தன. அவளைப் பிடித்து உலுக்கினாள் சுகந்தி.

“நீ ஒரு டாக்டர் என்பதை மறந்து விடாதே. நான் ஆம்புலன்ஸில் பேஷண்டோடு மதுரை போகிறேன். உனக்கு என் காரை டிரைவரோடு ஏற்பாடு செய்து விட்டேன். உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் சீக்கிரம் கிளம்பு, ஹரி அப்” என்று கூறி விட்டு வல்லபியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள்.

“சுகந்தி, அவன் பெற்றோருக்கும் மூர்த்தி சாருக்கும் தெரிவிக்க வேண்டாமா?” வல்லபி.          

“அதெல்லாம் மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்து விட்டது, அவர்களை நேரே மருத்துவமனைக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள்”

இருவருக்கும் பிளாஸ்க்கில் இருந்த காபியை ஊற்றிக்  கொடுத்தாள் நர்ஸ். முதலில் மறுத்த வல்லபி, சுகந்தி விட்ட டோஸில், வாயை மூடிக் கொண்டு குடித்தாள்.

‘இவனுக்கும் நமக்கும் என்ன உறவு? இவன் உயிருக்குப் போராடினால் நம் இதயம் ஏன் அழ வேண்டும்?’ என்று தன்னைத் தானே தேற்றிக் கொள்ள முயற்சித்தாள்.

காரில் போகும் போதும், விஷ்ணுவைப் பற்றி நிறைய யோசிக்கக் கூடாதென்று வேறு விஷயங்களில் மனம் செலுத்த முயற்சித்தாள்.

யாமினியின் போட்டோ பற்றி, மூர்த்தி சாரின் வலிப்பு வியாதியைப் பற்றி, விஷ்ணுவின் பெற்றோர் பற்றி நினைக்க முயற்சித்தது. ஆனால் மனம் எல்லா விஷயங்களையும் உதறிவிட்டு மீண்டும் விஷ்ணுவின் மேலேயே சென்றது. போகும் வழியில் உள்ள எல்லா கோயில்களிலும் விஷ்ணுவிற்கு ஒன்றும் ஆபத்து நேரக் கூடாதென்று கும்பிட்டுக் கொண்டே போனாள்.

வல்லபி போய்ச் சேரும் முன்பே, சுகந்தி சென்ற ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்திருந்தது. விஷ்ணுவை ஆபரேஷன் தியேட்டரில் வைத்திருந்தனர், பேஷண்ட்டோடு வந்த சுகந்தியை மட்டும் தங்களுடன் அனுமதித்தனர்.

தியேட்டரை விட்டு ஆறு மணி நேரம் கழித்துத் தான் வந்தாள் சுகந்தி. உள்ளேயும், வெளியேயும் தியேட்டரை விட்டு வந்த நர்ஸுகள் யாரும் வல்லபியின் கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை. மூர்த்தியும், விஷ்ணுவின் பெற்றோர்களும் வந்து சேர்ந்து விட்டனர். மரகதம் கொஞ்சம் விட்டால் கதறி அழுது விடுவார் போல் இருந்தது

ஒரு வழியாக ஆபரேஷன் தியேட்டரிலிருந்து சுகந்தி கைகளில் இருந்து கிளவுஸ்களைக் கழற்றிக் கொண்டு வல்லபியிடம் வந்தாள்.

“தலையில் ஹெல்மெட் போட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டியதால் தலையில் காயம் பெரியதாக இல்லை. ஆனால் கை கால்களில் எலும்பு முறிவு ஆகியிருக்கிறது”

“உயிருக்கு?” என்றாள் வல்லபி கலங்கிய குரலில்.

“ஆபத்தில்லை, ஆனால் நினைவு திரும்பிய பிறகு தான் வலியின் முழு அளவு தெரியும்” என்றாள் சுகந்தி.

இரவெல்லாம் மருத்துவமனையின் பெஞ்சில் உட்கார்ந்து மூர்த்தி, மரகதம் அவள் கணவர் யாவரும் மிகவும் களைத்துக் காணப்பட்டனர். அதனால் ஒரு நல்ல ஹோட்டலில் ரூம் ஏற்பாடு செய்து அவர்களை ஓய்வெடுக்க வைத்தாள் வல்லபி.

மூர்த்தியும், விஷ்ணுவின் அப்பாவும் பசி மிகுதியாலும், விஷ்ணுவிற்கு ஆபத்து நீங்கிவிட்ட நிம்மதியாலும் நன்றாகச் சாப்பிட்டார்கள். ஆனால் மரகதம் மட்டும் சாப்பிட மறுத்து விட்டாள்.

“மரகதம் தினம் காலையில் ஒரு டம்ளர் காபி குடிப்பதோடு சரியம்மா, மதியம் ஒரு வேளை தான் சாப்பிடுவாள்” என்றார் அவள் கணவர்.

“ஏன் அங்கிள், ஏதாவது விரதமா?” வல்லபி.

“ஒரு பெரிய தவறு செய்து விட்டேன் வல்லபி. அதற்கு எப்படிப் பிராயச்சித்தம் செய்வது என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்த முறையில் பரிகாரம்” என்றாள் மரகதம்.

“ஆன்ட்டி, யாருக்கு தவறு செய்தீர்களோ அவர்களிடமே மன்னிப்பு கேட்டால் முடிந்து விடுகிறது. அதற்கு ஏன் இந்த உபவாசம்?” வல்லபி.

“என்னால் பாதிக்கப்பட்டவள் எங்கே இருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை. பாதிப்பு மிக அதிகம். ஒருவேளை அவளையே நேரில் பார்த்தாலும், மன்னிப்பு கேட்டாலும் என்னைப் பார்க்கப் பிடிக்காமல் விலகி ஓடி விடுவாள்” என்ற மரகதம் நீண்ட பெருமூச்சு விட்டாள்.

மேற்கொண்டு அதைப் பற்றி விவாதிக்கப் பிடிக்காமல் மருத்துவமனைக்குச் சென்று விஷ்ணுவைப் பார்க்கப் போவதாகக் கூறி, அவர்களிடம் விடைபெற்றுச் சென்றாள் வல்லபி. இவளுக்கு முன்பே சுகந்தி அங்கிருந்தாள்.

விஷ்ணுவிற்கும்  நினைவு திரும்பியிருந்தது. சுகந்தியிடம் நன்றி தெரிவித்தான். வல்லபியைப் பார்த்த அவன் கண்கள் கலங்கின. கலங்கிய கண்களை அவனால் துடைக்க முடியவில்லை. கைகளுக்கு கட்டுப் போடப்பட்டிருந்தது.

வல்லபி குனிந்து அவன் கண்களைத் துடைக்கும் போது குறும்புடன் லேசாகக் கண்ணைச் சிமிட்டினான், வாய் முழுவதும் சிரிப்பு. வல்லபிக்குத் தான் கண்கள் கலங்கின.

கொடுக்கப்பட்ட மருந்துகளைப் பரிசோதித்துக் கொண்டிருந்த சுகந்தி, இவர்களைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகை செய்து கொண்டாள். விஷ்ணுவை ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி விட்டார்கள்.

வல்லபி, சுகந்தி இருவருமே மருத்துவர்கள் ஆனதால், தேவையான அறிவுரைகளோடு விஷ்ணுவைத் தாமரைக் குளத்தில், அவன் வீட்டில் அவன் படுக்கையில் சேர்த்தனர். மூர்த்தியும் விஷ்ணுவின் அப்பாவும் அவனுடனே இருந்தனர். மரகதம் இப்போது கொஞ்சம் தைரியமாக இருந்தாள். இப்போது தான் அவள் சிரிப்பைக் காண முடிந்தது.

அவர்களிடம் விடைபெற்று வல்லபி தன் வீட்டிற்குத் திரும்பினாள்.

கனகா தெருக்கதவைத் திறந்து போட்டுவிட்டு, யாருடனோ சமையல்கட்டில் மிக உற்சாகமாகப் பேசிக் கொண்டும், உரக்க சிரித்துக் கொண்டும் இருந்தாள். எப்போதுமே கனகா அப்படிச் செய்ய மாட்டாள். என்ன ஆயிற்று இவளுக்கு? என்று யோசித்துக் கொண்டு, “கனகா” என்று குரல் கொடுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்.

“வாங்க டாக்டரம்மா! உங்கள் கிராமத்துப் பணிகள் முடிந்ததா?” என்று கிண்டலாக கேட்டுக் கொண்டே வரவேற்றாள் மல்லிகா.

மல்லிகா எப்போதும் இப்படித்தான், சந்தோஷம் மிகுதியானால் தன் மகளிடம் சுத்தத் தமிழில் பேச ஆரம்பித்து விடுவாள்.

“வாங்கம்மா, எப்போது வந்தீர்கள்?  ஒரு போன் கூட செய்யவில்லையே, லீவ் தொடங்கி விட்டதா?” என்றாள் வல்லபி தன் அம்மாவின் அருகில் வந்து.

“இப்போது தான் வந்தேன். நீ போய் முதலில் குளித்து விட்டு வா, பிறகு மற்றதெல்லாம் பேசிக் கொள்ளலாம்” மல்லிகா.

அதே நேரத்தில் கனகா ஒரு டபரா செட்டில் சூடாக ஆவி பறக்கும் காபி கொண்டு வந்து வல்லபியிடம் கொடுத்தாள்.

“பெரியம்மா, டாக்டரம்மா இதைக் குடித்துவிட்டுப் போய் குளிக்கட்டும். ரொம்ப களைப்பாக இருக்கிறார்கள்” என்றாள் கனகா.

குளிக்கும் போதும், குளித்து விட்டுக் காலை உணவு சாப்பிடும் போதும் வல்லபிக்கு மூர்த்தி வீட்டில் பார்த்த அந்தக் குழந்தையின் புகைப்படம் பற்றியே யோசனையாக இருந்தது. அதைப் பற்றி அம்மாவிடம் கேட்கலாமா என்று கூட நினைத்தாள்.

“வல்லபி, நான் வந்ததிலிருந்தே மிக அமைதியாக இருக்கிறாயே, என்ன விஷயம்?” மல்லிகா.

“ஒன்றுமில்லையம்மா! ஒரு மேஜர் ஆக்ஸிடன்ட். இங்கே தேவையான பிளட் பேங்க் இல்லாததால் மதுரை அரசாங்க மருத்துவமனையில் சேர்த்து ட்ரீட்மென்ட் கொடுத்து முடித்து விட்டு சுகந்தியுடன் இப்போது தான் திரும்பினேன்.”

“அப்படியா? அப்படியென்றால் நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு. இன்று வேலைக்குப் போக வேண்டாமா?”

“கட்டாயம் போக வேண்டும், ஆனால் கொஞ்சம் லேட்டாகப் போனால் பரவாயில்லை. அம்மா, என்னோடு ஒரு பத்து நிமிடம் படுத்துக் கொள்கிறாயா? உன்னுடன் ஒரு அரைமணி நேரம் தூங்கினால் கூட போதும், என் களைப்பு பறந்து விடும்” என்றாள் வல்லபி கெஞ்சும் குரலில்.

மல்லிகா சிரித்து விட்டாள். “ஒரு மாஸ்டர் டிகிரி கைனகாலஜிஸ்ட், தூங்குவதற்கு குழந்தை போல தன் அம்மாவைத் தேடுகிறது” என்றாள்.

“பொம்மை” என்று சிணுங்கிக் கொண்டு அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே தன் படுக்கையறைக்கு அழைத்துச் சென்றாள் வல்லபி.

அரைமணி நேரத்தில் தூக்கத்திற்கு அலாரம் செட் செய்து விட்டு, அம்மாவின் இடுப்பைக் கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்த கொஞ்ச நேரத்தில்  தூங்கி விட்டாள். வாயைக் கொஞ்சம் லேசாகத் திறந்து கொண்டு மிகுந்த களைப்புடன் தூங்கும் மகளைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மல்லிகா.

ஒரு வாரம் மருத்துவமனைக்கு செல்லாததினால் வேலைகள் குவிந்திருந்தன. அந்த வேலைகளை முடித்து விட்டு, விஷ்ணுவின் வீட்டிற்குச் சென்று அவனுக்கு வேண்டிய உதவி செய்து விட்டு, வல்லபி வீட்டிற்குத் திரும்ப இரவு மணி ஏழாகி விட்டது.

விஷ்ணுவை சந்தித்தது பற்றியும் அவன் மாமா மூர்த்தியின் வியாதியைப் பற்றியும் அம்மாவிடம் லேசாக விவரித்தாள் வல்லபி. ஆனால் அங்கே பார்த்த யாமினி பாப்பாவின் போட்டோ பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

கை கால்களில் எலும்பு முறிவு இருந்தாலும் வலியைத் துளியும் வெளிக்காட்டாது, இவளைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்த விஷ்ணுவின் முகம் தான் அடிக்கடி மனதில் தோன்றியது.

“வல்லபி, நான் ஒன்று கேட்டால் தவறாக நினைக்க மாட்டீர்களே?” என்றான் படுக்கையில் கட்டுகளோடு இருந்த விஷ்ணு.

“நீங்கள் சரியாகக் கேட்டால் நான் ஏன் தவறாக நினைக்கப் போகிறேன். சரி, என்ன கேட்க வேண்டும்?” என்றாள்.

“நான் மதுரை ஆஸ்பத்திரியில் இருந்த போது உங்கள் முகம் எப்போதும் கலவையாகவும், கண்களில் கண்ணீராகவுமே இருந்தது. ஏன் வல்லபி?” என்றான் குறுகுறுத்த விழிகளோடும், குறும்புப் புன்னகையோடும்.

வல்லபி அவனை முறைத்தாள்.

“நீங்களும் தான் வல்லபி என்றும் யாமினி என்றும் உளறிக் கொண்டே இருந்தீர்கள் என்று சுகந்தி சொன்னாள்” என்று பதிலுக்குக் கூறினாள் வல்லபி.

“எனக்கு அந்த இரண்டு பெயர்களும் மிகவும் பிடிக்கும், அதனால் தான் மயக்க நிலையிலும் என் வாய் அந்தப் பெயர்களைக் கூறியிருக்கிறது” என்று கலகலவென்று சிரித்தான்.

“தலையைத் தவிர மீதி இடமெல்லாம் கட்டுக்களோடு இருக்கும் போதே இவ்வளவு கொழுப்பு” என்று கூறி விட்டு திரும்பி சிரித்துக் கொண்டு வந்து விட்டாள்.

இப்போதெல்லாம் விஷ்ணுவின் ஞாபகம் அவளைத் தடுமாற வைத்தது. நிமிர்ந்து பார்க்க வைக்கும் அவன் உயரமும், சுருண்ட அடர்த்தியான தலைமுடியும், பரந்த நெற்றியும், தெற்றுப் பற்களையும், சிரித்தால் கொள்ளை கொள்ளும் அழகான அவன் முகமும் அவள் தூக்கத்தை ரொம்ப கெடுத்தது.

விஷ்ணுவின் கட்டுக்கள் பிரிக்கும் முன்பே போலீஸ் விசாரணைக்கு வந்து விட்டது. விஷ்ணுவிற்கு விவரமாக ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. ஆனால் செக்-போஸ்ட்டில் இருந்த போலீஸ், ரோடில் கடந்து போகும் லாரிகளின் எண்களை குறித்து வைத்து இருந்தது. கூடவே CCTV கொண்டும் குற்றவாளியைக் கண்டுபிடித்து விட்டது. கல்வெர்ட் கட்ட ஒப்பந்தம் செய்திருக்கும் ராஜாபாதர் தான் அது என்று போலீஸ் அறிக்கை கொடுத்தது.

அந்த ஊரின் மிகப்பெரிய பணக்கார கான்ட்ராக்டர்களில் ராஜாபாதரும் ஒருவன். எல்லா இலக்கு ஒப்பந்தங்களையும் எடுப்பான். முக்கியமாக நெடுஞ்சாலைத் துறையின் எல்லா ஒப்பந்தங்களும் அவனுக்குத் தான் கிடைக்கும், அதாவது கிடைக்கும்படி செய்து விடுவான்.

ரோடே போடாமல் போட்டதாக எம் – புக் எழுதச் சொல்வான். வரும் லாபத்தில் எண்பது சதவிகிதம் அவன் எடுத்துக் கொண்டு மீதி உள்ள இருபது சதவிகிதத்தை அந்தத் துறை அரசாங்க அதிகாரிகளுக்குப் பிச்சை போடுவான். இப்படித்தான் ரோடோரம் டீக்கடை வைத்திருந்த ராஜாபாதர், பணத்தாலும் அரசியல் அந்தஸ்தாலும் பெரிய மனிதன் ஆகிவிட்டான்.

விஷ்ணுவின் மேற்பார்வையில் இருந்த கல்வெர்ட் கான்ட்ராக்ட்டும் அவனுக்கே தான். சின்ன சின்ன கான்ட்ராக்ட்கள் தான், ஆனால் எல்லாவற்றிலுமே கட்டாயம் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பது அவன் கொள்கை.

விஷ்ணுவிடம் அவன் திமிரும் ஜம்பமும் பலிக்கவில்லை, அதனால் அவன் ஒரே மகள் காமாட்சியை எப்படியாவது விஷ்ணுவிற்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பலவித முயற்சிகள் செய்தான். ஆனால் விஷ்ணுவோ அவன் பணத்திற்கும் அதிகாரத்திற்கும் மயங்கவில்லை, அதனால் தான் அந்த லாரி ஆக்ஸிடன்ட்.

விஷ்ணுவிற்குத் திருமணம் என்று நினைத்தாலே யாமினி பாப்பா தான் மனதில் சிரித்துக் கொண்டு ஓடுவாள். சின்ன வயதில் தேவி அத்தை “இந்தப் பாப்பா உனக்குத் தான்” என்பாள்.

இவனும் அந்தக் குழந்தையைத் தனக்கு மட்டுமே சொந்தமான பொம்மை போல் வைத்துக் கொண்டு விளையாடி செல்லம் கொஞ்சுவான். ஆனால் திடீரென்று அந்தக் குழந்தைத் தன் தாயுடன் காணாமல் போனது அவன் மனதை மிகவும் பாதித்தது. எங்கு போனாலும் கண்களும், உள்ளமும் அவளைத் தேடியே அலைந்தது.

இந்த “வல்லபி” நாவல், நம் ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் மூலம் அச்சுப் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள், 77082 93241 என்ற WHATSAPP எண்ணில் மெசேஜ் அனுப்பி ORDER செய்யலாம். நன்றி

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நட்பின் மேன்மை (சிறுவர் கதை) – ✍ கவிஞர் இரஜகை நிலவன், மும்பை

    ‘இதயக்குரல்’ & ‘செல்லுலாய்ட் செல்வங்கள்’ – எழுத்தாளர் குரு நாகராஜன் (Books for Sale)